Monday, October 11, 2010

அம்மம்மா வீடு

அம்மம்மா... இந்த பெயரை உச்சரிக்காத நாளே இருக்காது
எனக்கு. ஒவ்வொன்றுக்கும் அம்மம்மாவுடன் ஏதோ லிங்க்
இருக்கும். என் அம்மாவுக்கு தாய்வீடும் உள்ளூரிலேயே
அமைந்துவிட நான் எப்போதும் இருந்தது அம்மம்மாவிடம் தான்.
அது ஏதோ ஒரு அதீத அன்பு அம்மம்மா மேல். ”அம்மம்மா வீடு”
என எனக்கு நினைவு இருப்பது எல்லாம் புதுகை தஞ்சாவூர் ரோடில் மச்சுவாடி
தாண்டி சென்றால் வரும் ஸ்ரீநிவாஸ நகர் வீடு. நான் சின்ன
பிள்ளையாய் இருந்த பொழுது அங்கே வீடு கட்டினார்கள்.
6 அல்லது 7 வயதிருக்கலாம்.

அம்மம்மா அங்கே இடம் வாங்கிய பொழுது சுத்தி பொட்டல்காடு.
செம்மண் சாலைதான் இருக்கும். வீடு கட்டும்பொழுதே
நரியை பார்த்திருப்பதாக சொல்வார்கள். அம்மம்மா வீடு
கட்டி முடித்த பொழுது  அதி தொலைவில் ஏதோ இரண்டு
அல்லது மூன்று வீடுகள் இருக்கும். அம்மம்மாவீட்டுக்குச்
சென்றால் நிஜமாகவே நரி முகத்தில் முழிக்கலாம்.

நல்ல தண்ணிக் குழாய் கிடையாது. கிணற்றில் கொஞ்சம்
உப்புத் தண்ணீர்தான். கொஞ்ச தூரம் சென்று அங்கே
இருக்கும் குளத்தில் குடிதண்ணீர் கொண்டு வந்து
அதிலும் படிகாரம் போட்டு வைக்க வேண்டும். கலங்கலாக
இருக்கும் தண்ணீரை தெளியவைத்து வடிகட்டி குடி
தண்ணீர் ரெடி செய்வார் அம்மம்மா. கடை ஏதும் கிடையாது.
பஸ்ஸுக்கு பிரச்சனையில்லை. டவுன் பஸ் இருக்கும்.

அப்புறம் சில வீடுகள் வந்தன. கிணற்றில் தண்ணீர் இறைக்கும்
பொழுது சித்தியின் காலின் மேலேறி பச்சைப்பாம்பு செல்லும்!
ஓலைப்பாம்பு நெளிந்து நெளிந்து போய்க்கொண்டிருப்பதை
பார்த்துக்கொண்டிருப்பேன். நானும் சின்ன மாமாவும்
எத்தனை பாம்புகள் பார்த்தோம் என கணக்கு வைத்துக்
கொள்வோம். ஒரு முறை பிரண்டை செடியில் பச்சைப்
பாம்பு சுத்திக்கொண்டு கிடந்தது. துவையலுக்கு பிரண்டை
பறிக்க போன அம்மம்மா சொன்னார்.

அம்மம்மா வீட்டு கிணற்றை வெட்டும்பொழுது, அதில்
உரை இறக்கியது என எல்லாமே அதிசயம் எனக்கு.
ஊற்றில் தண்ணீர் குபு குபுவென வந்து கிணறு
நிறைவதை பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனால்
ரொம்ப தண்ணீர் இருக்காது. தேவைக்கு இருக்கும்.

சமையலறையை ஒட்டியவாரே சாமி அறை.
அம்மம்மா ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல்
செய்யும் அழகே அழகு. எல்லா வேலைகளையும் முடித்து
விட்டு பின் கதவுபக்கம் பலகையை தலைக்கு வைத்துக்
கொண்டு அம்மம்மா கதை புத்தகங்கள் படிப்பார்,
ஸ்வெட்டர் பின்னுவார், அரிசியில் நெல் எடுப்பது
எல்லாம் அப்போதுதான். மதியத் தூக்கம் கிடையாது.


அம்மம்மாவீட்டுக்கு மிக அருகில் ஸ்ரீநிவாஸா தியேட்டர்
கட்டியபொழுது போட்ட ஆழ்குளாய் கிணறை வாய்பிளந்து
பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் பீய்ச்சி அடித்து
வந்ததை இப்போதும் மறக்க முடியாது.

அதன் பிறகுதான் பல வீடுகள் வந்தன. நிறைய்ய
நட்புக்கள். ஆனாலும் செம்மண் சாலைதான். கால்வாய்
கிடையாது. மழை பெய்தால் சாலை கொழ கொழவென
கால் வைக்க முடியாத படி ஆகிவிடும். ஆனால்
அம்மம்மாவீடு என்றால் இவைகளைத்தவிரவும்
வேறு சில ஞாபகங்கள் உண்டு. அம்மம்மா அந்த
வீட்டை விற்று 20 வருடங்கள் ஆன பிறகு என்
நினைவு விட்டு அகலாத அந்த வீட்டின் அழகு....
அவை அடுத்த பதிவில்




8 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! மண் வாசனையோடு மீண்டும் தொடரா ... :)

எஸ்.கே said...

உணர்வை தூண்டும் கட்டுரை! நன்றி!

pudugaithendral said...

ஆமாம் ஜமால்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி எஸ்.கே

துளசி கோபால் said...

அம்மம்மான்னதும் ஆசையுடன் ஓடிவந்த என்னை நீங்க ஏமாற்றவில்லை:-)

அவ்ளோ பாம்பா!!!!!!!!!!!!

Thamira said...

நல்லாருந்தது ஃபிரெண்ட். நானும் அப்படியே ஆச்சி வீடு பற்றி ஒரு கொசுவத்தியை சுத்திடுறேன். இது மாதிரி எழுதி ரொம்ப நாளாவுது.

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

பொட்டல் காட்டில் பாம்பு இல்லாமலா!!

pudugaithendral said...

ஆமாம் ஃப்ரெண்ட்

சீக்கிரம் போடுங்க வர்றேன்.
வருகைக்கு நன்றி