Thursday, January 06, 2011

குருவே சரணம்!!!!!

மாதா, பிதாவுக்கு அடுத்து குரு. அவருக்கும் அடுத்துதான் தெய்வம்.
நம்மக்கு அறிவு பிச்சை இடுபவர்கள் குரு. நம் ஊனக்கண்ணை திறந்து
ஞானப்பார்வை கொடுப்பவர்கள் குரு. சிலர்தான் மகானாக முக்திக்கு
பிறகும் அருள் பாலிப்பார்கள். ஸ்ரீராகவேந்திரர்,ஷீரடி சாயி போல.
நான் இவர்களின் தீவிர பக்தையல்ல. சென்றவருடம் கொஞ்சம்
பிரச்சனைகள்(உடல்பிரச்சனை, அதனால் வந்த மனப்பிரச்சனை)
இருந்த பொழுது பலரும் எனக்குச் சொன்னது வியாழக்கிழமைகளில்
சாயி சந்நிதிக்குச் சென்று பிரசாதம் பகிர்ந்து கொடு என்பதுதான்.

பகிரும் பொழுது மனதுக்கு இதம். கோவில் வாசலில் கொடுக்க
வேண்டும் என்பதால் முடியாத என் கைகளாலேயே செய்து கொண்டு செல்வேன்.
அப்படியே பழகி பழகி எனக்குள் என்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை
வந்தது. அப்பொழுது வியாழக்கிமைகளில் கோவிலுக்கு வரும்
கூட்டத்தை பார்த்து பிரமித்திருக்கிறேன். ரெய்கி செய்யும் பொழுது
எங்கள் குருவை அழைப்பது வழக்கம். அப்படி அழைக்கும் பொழுது
நான் அழையாமலேயே வரும் ஷீரடி பாபாவை பார்த்து வியந்து
என் ரெய்கி ஆசிரியரைக்கேட்ட பொழுது தானகவே வந்து அருள்
புரியும் பொழுது தடுக்காதே! அவரும் ஒரு குருதான் என்றார்.
எனக்கும் ஷீரடி சாயிக்கும் உள்ள உறவு அவ்வளவே!!

ஆஷிஷ் 4மாத குழந்தையாக இருந்த பொழுது ஷீரடி போனது.
பிள்ளைகளுடன் போய் காட்ட வேண்டும் என்ற எண்ணம். அதுவும்
ஷீரடி கோவிலில் வியாழக்கிழமை தரிசனம் என்பது பாக்கியம்தான்.
சென்ற வியாழக்கிழமை அதாவது 30ஆம்தேதி ஷனி சிங்கநாபூரிலிருந்து
நேராகச் சென்றது ஷீரடிக்கு. சிங்கநாபூரிலிருந்து 80கிமீட்டர் தூரத்தில்
ஷீரடி. இரவு 8 மணிக்கு ஷீரடி சென்றடைந்தோம். நாசிக்கில் இருக்கும்
அயித்தானின் அக்கா மகள் தன் கணவர் மற்றும் மகளுடன் மதியமே
வந்திருந்தார். எங்களுக்காக ஹோட்டல் புக் செய்து காத்திருந்தார்கள்.
கோவிலுக்கு மிக அருகிலேயே அந்த ஹோட்டல். ரூம்கள் பரவாயில்லை.
சர்வீஸ்தான் கொஞ்சம் வீக். கோவிலுக்கு மிக மிக அருகில் என்பதாலேயே
ரொம்ப பிடித்திருந்தது. அந்த கூட்டத்திற்கு அந்த ஹோட்டலாவது
கிடைத்ததே.

கார் பார்க்கிங்கிற்காக கீழே எடுத்துச் செல்கிறார்கள்.அன்று வியாழக்கிழமை என்பதால் கோவில் தரிசனம் செய்து
விட வேண்டும் என்று சொன்னதும் 1/2 மணியில் தயாராகு
என்றார் சித்தப்பா. 15 நிமிடத்தில் ரெடியாகி போனோம். எங்கெங்கிருந்தோ
மக்கள் பல்லக்கில் பகவானைத்தூக்கிக்கொண்டு பாதயாத்திரையாக
கோவிலுக்கு வருவது பழக்கமாம். அப்போதும் நிறைய்ய பேர்
கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். அப்படி ஒரு கூட்டம் துவாரகமயிக்கும்
எங்கள் ஹோட்டலுக்கு இடைப்பட்ட தூரத்தில் நடனமாடிக்கொண்டிருக்க
அந்த வழியை அடைத்துவிட்டார்கள். 4ஆவது கேட்வழியாகச் சென்று
அங்கிருந்து 2ஆவது வழியாக கோவிலுக்குள் விட்டார்கள். சுரங்கப்பாதை
மாதிரி செல்லும் வழியில் ஸ்டீல் கம்பிகளால் தடுத்திருக்கும் இடத்தில்
வியர்க்காமல் இருக்க ஏசி இருந்தது எனக்கு சரி ஆச்சரியம்!!

5நிமிடத்தில் முகதுவாரத்தில் நாங்கள்! 10 நிமிடத்தில் தரிசனம்
முடிந்துவிட்டது அதை விட ஆச்சரியம்!!! இரவு உணவு முடித்து
போய்ப் படுத்ததுதான் தெரியும்! அடுத்த நாளும் தரிசனம் செய்து
விட்டு கிளம்பத்திட்டம். காலையில் குளித்து காலை உணவுகூட
சாப்பிடாமல் ஓடினோம்.

செருப்புக்களை வாங்கி வைத்துக்கொள்ளும் இடத்தில் அவற்றை
ஒரு பையில் போட்டு கட்டிவைத்தல் என ஒவ்வொன்றிலும்
படு நேர்த்தி. கோவிலுக்கு அருகிலேயே ரயில்வே ரிசர்வேஷன்
கவுண்டரும் இருக்கு. ரயில்களின் விவரம் அடங்கிய பலகைகளும்
இருப்பது நல்ல வசதி.

அன்று 31ஆம் தேதி ஆகையால் செம கூட்டம். இரவு ஆக
ஆக இன்னமும் கூட்டம் வரும் என்பதால் அன்றைய தினம்
இரவு முழுதும் சமாதி திறந்திருக்கும் என அறிவிப்பு இருந்தது.

“சாயிநாத் மஹராஜ்க்கீ ஜெய்”எனும் கோஷங்களுடன் கூட்டம்
அதிகமாகவே இருந்தது. ஆனாலும்  தரிசனம் செய்து விட
வேண்டும் என்று கங்கணம் கட்டி 3ஆவது கேட் அதாவது
முகத்துவாரத்துக்கு அருகில் வந்து இப்படி போகலாமா என்று
கேட்க அங்கே காவலுக்கு இருந்த பெண் அதிகாரி அனுமதித்தார்.
ஓடினோம். பார்த்தால் அது சமாதிக்கு நேர் எதிரில் இருக்கும்
பகுதி. (வீல் சேரில் வரும் பெரியவர்களுக்கு வரிசையில்
நிற்காமல் செல்ல பாஸ் கொடுப்பார்களாம்) அங்கே நின்று
பார்த்துக்கொண்டிருந்த பொழுது வெள்ளை உடையில் இருந்த
கோவில் அதிகாரி ஒருவர்,” காணிக்கை பணங்களை சரியாக
பண்டில் செய்து தரவேண்டும்! வருகிறீர்களா?”” எனக்கேட்க
நாங்கள் 7 பேரும் போனோம். அந்த மகானுக்கு பக்தர்கள்
உண்டியலில் போட்ட காணிக்கை பணத்தை நீட்டாக
500,100,50,20,10 என அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டு சேவை
செய்யும் பாக்கியம் கிடைத்தது. (நம்மிடம் இருக்கும் பர்ஸ்,
பணம் ஆகியவற்றை அவர்களிடம் இருக்கும் பை ஒன்றில்
கட்டி வைத்துக்கொண்டு நமக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.
சேவை முடித்ததும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்)

அவ்வளவுதான். அங்கிருந்து வரிசையில் நிற்காமல்
நேரடியாக அவனைச் சென்று தரிசிக்கும் பாக்கியம்.
இதைவிட ஆனந்தம் ஏது என்று குருவை தரிசித்து
இப்படி ஒரு பாக்கியம் கொடுத்ததற்கு நன்றி சொல்லி
மனதார அனைவருக்கும் பிரார்த்தனை செய்து அந்த
வியப்பு நீங்காமல் வெளியே வந்தோம். (அன்று அங்கே
இருந்த கூட்டத்துக்கு 1 மணிநேரமாவது வரிசையில்
நின்றிருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் விடுமுறையில்
சென்றிருந்த எங்கள் நண்பருக்கு தரிசனம் கிடைக்க
4மணிநேரம் ஆனதாம்!!!)

அமர் அக்பர் ஆண்டணி எனும் ஹிந்தி படத்தில்
புகழ் பெற்ற சாயி பாபா பாடல் இது:


- - 12434 shirdie wale sai baba
Found at abmp3 search engine


மனதை வருடும் மெட்டில் கோவிலை தரிசிக்க இந்தப் பாடல்.
soothing song video:

பதிவு பெருசா போய்க்கிட்டிருக்கு. மிச்ச தகவல் அடுத்த
பதிவில்.


16 comments:

அமைதிச்சாரல் said...

நாங்க 2002ல் போனோம். அதுக்கப்புறம் இப்பத்தான் போகமுடிஞ்சது. இந்த காலகட்டத்தில் எக்கச்சக்க மாற்றங்கள். முந்தியெல்லாம் இந்த கேட் சமாச்சாரங்களும் கிடையாது. உள்ளேயும் திருப்பணி நெறைய செஞ்சுருக்காங்களா... மொதல்ல கொஞ்சம் அன்னியமா உணர்ந்தேன் :-))))

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல் 14 வருஷத்துக்கு முந்தி நான் போனபோது இம்புட்டு கிடையவே கிடையாது. கடைகளூம் ஹோட்டல்களுமா ரொம்பவே மாற்றம்.
கேட்டுக்காக சுத்துவது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இப்ப இந்த கேட்வழியா தரிசனம்னு ஒரு அறிவிப்பு செஞ்சா நல்லதுன்னு தோணிச்சு. வருகைக்கு நன்றி. (திருப்பதி ஜரகண்டி இங்கயும் ஆரம்பிச்சிடுமுன்னு தோணுது)

துளசி கோபால் said...

இந்தப் பக்கமெல்லாம் இதுவரை போகலை. இத்தனைக்கும் பூனாவில் அஞ்சு வருசம் இருந்தோம்.

சென்னை மயிலையில் இந்தக் கோவிலில் கூட்டம் நெரிவதை (வெளியில் இருந்து)ஏராளமான முறை பார்த்துருக்கேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

அதுக்கென்ன தனியா அதுக்காகன்னு ஒரு ட்ரிப் அடிச்சு பாத்திட்டா போகுது.

வருகைக்கு நன்றி

அமைதிச்சாரல் said...

//(திருப்பதி ஜரகண்டி இங்கயும் ஆரம்பிச்சிடுமுன்னு தோணுது)//

அது இப்பவே பாபாவோட சிலைக்குப்பக்கத்துல நடந்துட்டு இருக்கே :-)))))

புதுகைத் தென்றல் said...

அது இப்பவே பாபாவோட சிலைக்குப்பக்கத்துல நடந்துட்டு இருக்கே //

தள்ளிவிடும் நிலை இன்னும் வரலையே :))

Chitra said...

நல்ல பகிர்வு.... சுவாரசியமாக எழுதி இருக்கிறீங்க...

புதுகைத் தென்றல் said...

நன்றி சித்ரா

அமுதா கிருஷ்ணா said...

போனவருடம் ஜனவரி 26-ல் போனபோது செம கூட்டம்.3 மணிநேரமானது தரிசனம் கிடைக்க.லக் தான் நீங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா,

நிஜம் தான் அருமையான தரிசனம்

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. இன்னும் போக நேரம் வரவில்லை. அழைப்பும் வரவில்லை!

பகிர்வுக்கு நன்றி சகோ.

கோவை2தில்லி said...

இதுவரை போனதில்லை. உங்கள் தகவல்கள் போகும் ஆவலை தூண்டுகிறது.

புதுகைத் தென்றல் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


அழைப்பும் வரவில்லை! //
அது உண்மை. நானும் எத்தனையோ முறை நினைத்து, இருமுறை டிக்கெட் புக் செய்து அதை கேன்சல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு இந்த முறை சடனாக காரில் பயணம். உங்களுக்கும் தரிசன பாக்கியம் கிட்டும்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,
சமயம் கிடைக்கும்பொழுது தரிசனம் செஞ்சு வாங்க.

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

என்னையும் அழையுங்கள் சாயிநாதா.

Sivamjothi said...

காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-"ஆத்மதரிசனம்". இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.

காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-"ஆத்மதரிசனம்". இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.


http://sagakalvi.blogspot.in/2011/12/blog-post_01.html