அம்மா செய்யும் பக்குவங்களுக்கு நான் அடிமை.
கண்ட திப்பிலி தேசாவரம், பூண்டு போட்டு
ரசம் ஒண்ணு செய்வாங்க. அதைச் சாப்பிட்டா அடிச்சுப்
போட்டாப்ல தூக்கம் வரும். உடம்புல இருக்கும் அசதியெல்லாம்
போயிடும். (எண்ணெய் தேச்சு குளிச்சு இந்த ரசம் சோறு
மட்டும் சாப்பிட்டு பாருங்க அப்புறம் தெரியும் மகத்துவம்)
சரி சரி.... ரெசிப்பி சீக்கிரம் போடுறேன்.
அதுக்கு முன்னாடி இந்த வாட்டி அம்மா செஞ்சு
கொடுத்த (அம்மா கைபக்குவ) டிபன் ஒண்ணு. அதைப்
பத்தி சொல்லாட்டி எப்படி.
அரிசி மாவு கொண்டு செய்யப்படும் புளி உப்புமாவில்
வேலை அதிகம். மணல் மாதிரி உப்புமா செய்வதற்குள்
கை வலி கண்டுவிடும். ஆனால் அதே டேஸ்ட்டில்
அதிகம் கைவலிக்காமல் செய்ய ஈசியா இருப்பது
ரவை புளி உப்புமா.
தேவையான பொருட்கள் பாப்போமா!!
வறுத்த ரவை - 2 கப்
புளித்தண்ணிர் - (எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து
வடிகட்டி வைத்துக்கொள்ளவும்)
தாளிக்க -கடுகு, உளூத்தம் பருப்பு, மிளகாய்-2
கறிவேப்பிலை, பெருங்காயம்.
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 கரண்டி (ந.எ பெஸ்ட்)
செய்வது எப்படின்னு சொல்றேன்:
வறுத்து வெச்சிருக்கும் ரவையை ஒரு அகலமான
பாத்திரத்தில் போட்டு,அதில் உப்பு, மஞ்சள் தூள்
சேர்க்கவும். கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை
ஊற்றி நன்கு கலந்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
(ரவை ஊறவும் + புளிப்பு ரவையில் பிடித்துக்கொள்ளவும்
இந்த நேரம் அவசியம். 2 மணி நேரம் ஊறவைத்தாலும் சரி)
வாய் அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி (விரும்புபவர்கள்
மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் சேர்க்கலாம். ருசி தூக்கலாக
இருக்கும்)தாளிக்க கொடுத்திருக்கும் சாமான்களை சேர்த்து
கலந்து வைத்திருக்கும் ரவையை போட்டு நன்கு கிளறவும்.
உதிரி உதிரியாக வரும் வரை கிண்டி இறக்கினால் சுவையான
மொறு மொறு ரவை புளி உப்புமா ரெடி. பக்குவம் ரொம்ப முக்கியம்.
அதனால் ரவையை ஊற வைக்கும் பொழுது அதிகம் தண்ணீர்
விடாமல் பக்குவமாக பார்த்து கலக்கவும்.
தொட்டுக்கொள்ள பெரிதாக எதுவும் வேண்டாம். கொஞ்சம்
கிரேவி வேண்டும் என நினைப்பவர்கள் நீர்க்க சாம்பார்
வைத்துக்கொள்ளலாம்.
17 comments:
ம்ம்ம்ம்ம்.
புளி உப்புமாவுக்கு நான் அடிமை,. அதுவும் நீங்க சொல்ல்லி இருக்கும் விதம் சூப்பர்.
வித்தியாசமான டிபன்..
வாங்க வல்லிம்மா,
உங்களுக்கும் புளி உப்புமா பிடிக்குமா? சேம் ப்ளட்.
வருகைக்கும் நன்றிம்மா
வாங்க அமைதிச்சாரல்,
வித்தியாசமா நல்லா இருக்கும். செஞ்சு பாத்து சொல்லுங்க
ஹ்ம்ம் அவல் வைத்து செய்து இருக்கிறோம் ,ரவையில் செய்தது இல்லை . செஞ்சு பார்க்கலாம் இந்த வாரம்
வாங்க எல்.கே,
டேஸ்ட் சூப்பரா இருக்கும். செஞ்சு பாத்து சொல்லுங்க.
வருகைக்கு நன்றி
my wife's instant tiffen is uppumaa
:-)
நான் சாதாரண உப்புமாவையே எலுமிச்சை பிழிஞ்சு புளி உப்புமாவாத் தின்னுருவேன்!
வாங்க ஷர்புதீன்,
அவசரத்துக்கு கை கொடுப்பது உப்புமா தான். எல்லா கிச்சன் கில்லாடிகளுக்கும் இது பொது. :)
வருகைக்கு நன்றி
வாங்க டீச்சர்
நான் சாதாரண உப்புமாவையே எலுமிச்சை பிழிஞ்சு புளி உப்புமாவாத் தின்னுருவேன்//
இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை தாளிதம் செய்து அதில் ரவை உப்புமா செஞ்சு அதில் எலுமிச்சை பழம் பிழிஞ்சு சாப்பிடும் சுகமே தனி. தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி இருந்தா சூப்பரா இருக்கும்.
ஆனா இந்த புளி உப்புமா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க. அப்புறம் ரவையைப் பார்க்கும் போதெல்லாம் புளி உப்புமாத்தான் கிண்ட தோணும். :))
வருகைக்கு நன்றி
எனக்கும் புளி உப்புமா ரொம்ப பிடிக்கும். அம்மா செய்வாங்க. சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. மாமியார் வீட்டில் புளித்தண்ணீருக்கு பதில் மோர் சேர்த்து பிசைந்து ஊறவைத்து உப்புமா செய்வாங்க.
ரவையில் வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.
வாங்க கோவை2தில்லி,
அது மோர்க்களின்னு நினைக்கிறேன். எனக்கு அதை செஞ்ச உடன் ஒத்தை விரலில் சாப்பிட ரொம்ப பிடிக்கும். :))
இந்த ரெசிப்பி செஞ்சு பாருங்க
வருகைக்கு நன்றி
மோர்க்களியும் செய்வாங்க. இது புளி உப்புமாவே தான். ஆனா புளிக்கு பதில் மோர். அவ்வளவுதான் வித்தியாசம்.
மைண்ட்ல வெச்சிக்கிறேன்.
செஞ்சி அசத்தீடறேன்.
:))
அந்த கண்டதிப்பிலி தேசாவரம் ரசம் ரெசிப்பி சொன்னால் புண்ணியாமாக போகும்.
நன்றி சிவா.
தாமதமான பதிலுக்கு மாப்பு கேட்டுக்கிறேன்
ராதாகிருஷ்ணன் கணபதி,
வருகைக்கு நன்றி. தாமதமான பதில்லுக்கு மன்னிக்கவும்.
ஜீரக மிளகு ரசத்துக்கு அரைப்பது போல சாமான்கள் எடுத்துக்கணும் (1 ஸ்பூன் தனியா, 1 ஸ்பூன் துவரம் பருப்பு, 2 காய்ந்த மிளகா, 1/2 ஸ்பூன் மிளகு, சீரகம், பூண்டு 5 பல் இதோடு 2 குச்சி அரிசிதிப்பிலி, 2 குச்சி கண்ட திப்பிலி, கொஞ்சமா இஞ்சி எல்லாம் வெச்சு அரைச்சு ரசப்பொடிக்கு பதில் இதை சேர்த்து ரசம் வைக்கணும்.
Post a Comment