Tuesday, September 27, 2011

போராட்டங்களுடன் ஒரு போராட்டம்!!!!!!!!!

இன்றோடு பதினைந்தாவது நாளை அடைந்திருக்கிறது தெலங்கானா போராட்டம்.
தனித்தெலங்கானா கேட்டு தெலங்கானாவாதிகள் நடத்தும் இந்தப் போராட்டத்தால்
மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.

அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், சிங்கரேனி ஊழியர்கள் என
மெல்ல ஆரம்பித்த போராட்டம் மெல்ல மெல்ல மற்றவர்களையும் உள்ளே
இழுத்தது. கட்டாயமாக வேலை நிறுத்தம் செய்தே ஆகவேண்டும் என
நிர்ப்பந்தப்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் தெலங்கானா
ராஷ்ட்ரிய சமிதியும் ஜேயிஸி ஆட்களும்.

செப்டம்பர் 16 முதல் பள்ளிகளில் முதல் டர்ம் பரிட்சைகள். பள்ளிகளையும்
மூடவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு பள்ளிகள் அல்லது
ஸ்டேட் போர்ட் சிலபஸை பின்பற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்தார்கள்.
அதுவும் தசரா விடுமுறை என கூறி. அக்டோபர் 9க்கு பிறகு பள்ளி
திறக்கப்படும் என அறிவிப்புடன் மூடப்பட்டது. ஆனால் செண்ட்ரல் போர்ட்
பள்ளிகள் அப்படி செய்யவும் முடியாது. பரிட்சை நடத்தியே ஆகவேண்டிய
கட்டாயம்! சில பள்ளிகள் மாணவர்களை யூனிபார்ம் இல்லாமல் சாதாரண
உடையில் பள்ளிக்கு வருமாறு சொல்லியிருந்தன. புத்தகப்பை இல்லாமல்
கேரி பேக் போன்ற சாதாரண பையை கொண்டு வரச்சொல்லி வகுப்புக்கள்
நடந்தன.

என் பிள்ளைகளின் பள்ளி ஒரு படி மேலே போய் விட்டது.
யூனிபார்ம் உண்டு, புத்தகப்பை உண்டு. ஆனால் பரிட்சை எழுதும் நேரம்
அதிகாலை 7.15 முதல் 10.15 வரை. அதாவது தெலங்கானா அண்ணாக்கள்
மெல்லத் துயிலெழுந்து 11 மணிக்கு மேல்தான் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்
என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் சில இடங்களில் ஸ்கூல் பஸ்ஸையும்
மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் நாமே கொண்டு போய் விட்டு அழைத்து
வரும் சூழல்.

20ஆம் தேதி பரிட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தால் மகள். முதல் நாள்
இரவு 9.30 மணிக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. நாளை நர்சரி முதல் 8ஆம்
வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை என்று.பரிட்சைக்கு
தயாராகி அதை எழுத முடியாத ஒரு டென்ஷன் பிள்ளைகளிடம்.
9 & 10 மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அந்தந்த தேதிகளில்
பரிட்சை வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் மேலே சொல்லியிருந்த
நேரப்படி பரிட்சை முடிந்தது. இந்த சூழலில் அயித்தான் வளமை போல்
டூர்!!! எப்படி இருந்திருக்கும் பாருங்கள். அயித்தான் ஏர்போர்ட்டிற்கு
கிளம்பும் முன் 6.30மணிக்கே மகனை அழைத்துச் சென்று பள்ளியில்
விட்டு வந்து பிறகு ரெடியாகி ஏர்ப்போர்ட்டுக்கு ஓடியிருக்கிறார்! 2 அல்லது
3 பிள்ளைகள் சேர்ந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். பிள்ளைகள்
வீடு வந்து சேரும் வரை டென்ஷன் தான்.

மற்ற வகுப்புக்கள் எல்லாம் பரிட்சை அக்டோபர் 9க்கு மேல்!! ஆன்லைனில்
பாடங்களை டவுன்லோட் செய்து வீட்டிலேயே பிள்ளைகளைத் தயார்
செய்யும் நிலை பெற்றோர்களுக்கு. பல பள்ளிகள் ஆன்லைன் கோச்சிங்
அளித்து பாடத்தில் இருக்கும் டவுட்களை க்ளியர் செய்தது தனிக்கதை.
இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே பெட்ரோல் பங்க் பந்த், ஆட்டோ
ஸ்ட்ரைக், ஆர்டீசி பஸ்(மாநகரப்பேருந்து) ஸ்ட்ரைக் என ஓடியது.

சிங்க்ரேனி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தல் மின் தட்டுப்பாடு
அமோகமா இருக்கிறது. அதனால் இப்பொழுது எங்களுக்கு அறிவிக்கப்பட்டு
2 மணிநேரம் கட்டாயம் மின் வெட்டு. அது இல்லாமல் அவர்கள்
விரும்பும் நேரத்திலும் மின் வெட்டு. இருக்கும் மின்சாரத்தை சிக்கனமாக
உபயோகிக்க வேண்டிய சூழல். மாநகரப்பேருந்து ஸ்ட்ரைக், சிங்க்ரேனி
ஸ்ட்ரைக் என பல ஸ்ட்ரைக்குகளால் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் பல
கோடிகள். இதெல்லாம் எங்கள் தலையில்தான் வந்து விடியும் என்ற
எண்ணம் இல்லாமல் நாட்டை கூறுபோட கூப்பாடுபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.



48 மணிநேர ரயில்ரோக்கோவை சக்ஸச்புல்லாக நடத்தி முடித்தார்கள்
தெலங்கானா அண்ணாக்கள். ரயில்வே ஷ்டேஷனில் தனித்தெலங்கானா
வேண்டி ஹோமம், ஸ்டேஷனில் கபடி ஆடுதல், ரயில் ட்ராக்கில்
ஆர்ப்பாட்டம் என ஆடியது போதாமல் தேசிய நெடுஞ்சாலையிலும்
மறியல் ஆர்ப்பாட்டம் என ஒரு மார்க்கமாக இருந்தது. ட்ரைவிங்
லைசன்ஸ் டெஸ்ட் என எதுவும் நடக்கவில்லை. ஊழியர்கள் இருந்தால்தானே!
இந்த மாதம் வேலை செய்த நாட்கள் மொத்தம் 12. அந்த நாட்களுக்கு
மட்டுமே சம்பளம் என அரசு அறிவித்திருக்கிறது. அதை கையெழுத்து
போட்டு சலான் பாஸ் செய்து எல்லாம் செய்யக்கூட அரசு அலுவலகத்தில்
ஆள் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் கிடையாது.

இலங்கையில் இருந்த பொழுது மங்களூர் சிவாதம்பி கலவர பூமியில்
எப்படிக்கா இருக்கீங்க? சீக்கிரம் வாங்க இந்தியாவுக்குன்னு சொல்வாரு!
நம்ம இந்தியா மட்டும் நலமான்னு கேப்பேன். இப்ப அது பக்காவா
ஆயிடிச்சு. பாக்யநகரம் இப்பொழுது பாக்யங்களை இழந்து விடும்
சூழல். ஐடி கம்பெனிகளால்தான் ஹைதை இவ்வளவு வளர்ச்சி
பெற்றது. அவர்கள் மூடிக்கொண்டு போய்விடும் சூழல் இருப்பதால்
புதிதாக எந்த ப்ராஜக்ட்டும் இல்லையாம்!!!

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட
புழிதியில் எறிவதுண்டோ!! சொல்லடி சிவசக்தி!!”

என அவளிடம் கேட்கலாம் என்றால் பாவம் அவள்.
பந்த் கோவில்களுக்கும் தான்.
கிட்டத்தட்ட 1500 கோவில்களுக்கு மேல் கடந்த 15 நாட்களாக
கோவில் திறந்த உடன் அபிஷேகம், நைவேத்யம் முடித்து உடன்
கோவிலை மூடிவிடவேண்டுமென கண்டீஷன் போட்டிருக்கிறார்கள்
தெலங்கானா வாதிகள். அதுவும் இன்று மஹாளய அமாவாசை.
இன்று முழு அடைப்பாம்!!!!!!!!! பூஜாரிகளையும் பந்தில்
ஈடுபடுத்தும் வேலை நடக்கிறது.

சாமியே நடந்து போகுதாம்! இதுல பூசாரிக்கு புல்லட் கேக்குதோன்னு!
சொல்வது போல இருக்கு நிலமை.

தெலங்கானா அமைப்பு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
நாளை ரஸ்தா ரோக்கோ, 29 ராஜினாமா செய்யாத அமைச்சர்கள், எம்பிக்கள்,
வீடுகளைத் தாக்குதல், 30 பந்த், 2 ஆம்தேதி டோல்கேட்டுகள் முற்றுகை,
அக்டோபர் 9,10,11 ரயில்ரோக்கோ. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில்
சட்டம் ஒழுங்கே இல்லை. இத்தனை கூத்துக்கள் நடந்தும் அதை
போலீஸ் கைகட்டி பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.
144 தடை மட்டும் போட்டால் போதுமா? மக்களின் இன்னல்களுக்கு
தீர்வு இல்லையே!

மத்தியில் இருக்கும் அரசு ஏதேனும் விரைவான முடிவு எடுத்தால்தான்
உண்டு. மாநிலத்திற்கு பொருளாதாரா ரீதியாக ஏற்பட்டிருக்கும் நஷ்டத்துடன்
பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். வகுப்புக்கள் முறையாக
நடக்காவிடில் பரிட்சை எழுதி பாஸ் செய்வது எப்படி? எனும் கேள்வி
எல்லா பெற்றோர்கள் மனதிலும் இருக்கிறது.

தீர்வு என்ன? விஜயதசமி அன்று அன்னை அசுரனை அழித்து
நல்லது செய்தாள் என்று சொல்வார்கள். இந்த பிரச்சனையை ஒழித்து
அன்னை தன்னையும் காத்து எங்களையும் காத்தருள வேண்டும்!!


10 comments:

Appaji said...

இந்தியாவில் எல்லா இடத்திலும் ...அமைதி இல்லா நிலைமை உள்ளது..என்ன செய்வது?
இப்படி ஒரு யுகத்தில் பிறந்திருக்கிறோம். அச்சமில்லை..அச்சமில்லை என தைரியம் சொல்ல இன்னொருமுறை
மீசை வைத்த பாரதி பிறக்க கூடாதா?
பரீட்சை போகட்டும்.....பிள்ளைகளை பார்த்து கொள்ளுங்கள்....இந்த நவராத்திரியில்..
தாங்கள் கூறி உள்ளது போல் ..புதுச்சேரி அன்னை வந்து காப்பாற்றுவாங்க....நம்புவோம்.

ADHI VENKAT said...

ரொம்ப கொடுமையா இருக்கேங்க..:(
பள்ளிக் குழந்தைகள் தான் பாவம்...

கோவிலும் மூடப்படுகிறதா!!!!

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

எத்தனை மகான்கள் வந்தாலும் அசுரர்கள் அதிகமாகிவிட்டார்களே!!

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

வருகைக்கு நன்றி அப்பாஜி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ரொம்பவே கொடுமையா இருக்கு. கோவிலும் தான். கோவிலுக்கு கூட பந்துன்னு வித்தியாசமா யோசிக்கிறாங்க. :((

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இந்த பந்த் பிரச்சனை கொஞ்சம் ஓவர்தான்.. எல்லோரையும் பாதிக்கும் இதெல்லாம் தேவையா... புரிந்து கொள்ள மறுக்கிறார்களே இவர்கள்....

ஹுஸைனம்மா said...

ரொம்பத்தான் இழுக்குது இந்தப் பிரச்னை... ஒண்ணு கொடுத்திரணும், இல்ல முடியாதுன்னு உறுதியா சொல்லிரணும். இதுவுமில்லாம, அதுவுமில்லாம, நடுவில கிடந்து அவஸ்தப்படுறது பொதுமக்கள்தான்!! :-((((

KSGOA said...

கோவிலும் மூடப்படுவதை படிக்கும்
போது ஆச்சர்யமாக உள்ளது.

pudugaithendral said...

வாங்க சகோ,

புரிதல் இருந்தா வம்பே ஏது? மத்திய அரசு ஏதும் சொல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும்னு சொல்லியிருக்காங்க. அக்டோபர் 10 ஸ்கூல் திறக்க வேண்டியது ஆனா மூடப்படும்னு தோணுது.
:(

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் ஹுசைனம்மா,

இந்த அரசியல்வாதிகளின் சதுரங்கத்தில் பலிகடா பொதுமக்கள்தான்.:(

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கேஎஸ்கோ,

அது அப்படித்தான் !! :))
:((

வருகைக்கு நன்றி