Monday, October 24, 2011

மத்தாப்பு சுத்தி சுத்தி போடட்டுமா!!????

நினைக்கும்பொழுதே மனம் மகிழும் பண்டிகை தீபாவளி.
குழந்தை, பெரியவர் அனைவருக்கும் தீபாவளி ஷ்பெஷல்.
வயது ஏற ஏற அந்தந்த வயதிற்கு தகுந்த மாதிரி தீபாவளி
கொண்டாடிக்கொள்வோம் தானே...

தீபாவளி பற்றிய கொசுவத்திகள் எத்தனையோ பதிவாகி இருக்கின்றன.
சமீபகாலமாக தீபாவளி என்றதும் நினைவலைகள் இலங்கைக்கு
செல்கிறது. :))

நாங்கள் குடியிருந்த வீடு இருந்த இடம் ஹை செக்யூரிட்டி ஜோன். பக்கத்துவீட்டில்
அமைச்சர் சரத் அமுனுகம. எதிரில் ரனில் விக்ரமசிங்கே அவரின்
சகோதரி என கொஞ்சம் ப்ராப்ளமேட்டிக் ஏரியாவில் வீடு. தீபாவளியின்
போது வெடி வெடிக்க மட்டும் கொஞ்சம் பயம் தான். ரோஜா படத்தில்
மது சதுர் தேங்காய் உடைக்க போலீஸ் சூழ்ந்து கொள்ளுமே அதுமாதிரி
ஏதும் ஆகிவிடும் என்ற டென்ஷன். முன்பே அனுமதி பெறலாம் என்றாலும்
எதுக்கு வம்பு என? கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்றே நினைத்திருந்தோம்.

வெள்ளவத்தை தமிழர்கள் ஏரியா. அங்கேயும் பெட்டா பகுதியிலும்
பட்டாசு கிடைக்கும். வெள்ளவத்தையைவிட பெட்டா பகுதியில்
விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். தோழிகள் 4 பேர் சேர்ந்து
பெட்டா பகுதி சென்று பட்டாசு வாங்குவோம்.

இலங்கையில் இடியாப்பம், புட்டு செய்வார்கள் என்பதால் அருமையான
இடியாப்பம் மாவு வாங்கிவந்து, ரெடியாக இருக்கும் உளுந்தமாவு
(இதுவும் கடையில் கிடைக்கும்) கலந்து, வெண்ணெய், கொஞ்சமாக
புளிக்காத தயிர் எல்லாம் சேர்த்து சூப்பராக தேன்குழல் செய்துவிடுவேன்.
முள்ளுமுறுக்கு, மைசூர்பா, குலாப்ஜாமுன் வீட்டில் செய்துவிட்டு
ஒரு குஜராத்தியினர் வீட்டில் சமைக்கும் மஹராஜிடம் முன் கூட்டியே
சில ஐட்டங்கள் ஆர்டர் செய்து விடுவோம். தீபாவளி பலகாரம் ரெடி.
தீபாவளி லேகியத்திற்கு பதில் ஜிஞ்சர் பியர். :)) (பேருதான் பியர்
உண்மையில் இஞ்சி சொரசம்.)


காலையில் எழுந்து கங்கா ஸ்நானம் முடித்து ஒரு சின்ன சரக்கட்டாவது
போடலாம் என நினைப்பேன்.(முதலில் வெடிவெடிக்க வேண்டும் என்பது
அவ்வாவின் கொள்கை.) அயித்தான் வேண்டாம் ரிஸ்க் என்று
சொல்லிவிடுவார். ஆகவே விளக்குகள் ஏற்றி பிள்ளைகள் மத்தாப்பு,
கொம்புவானம் ஆகியவைகள் விடுவார்கள். அந்தப்புகையே ரொம்ப
ஜாஸ்தியாக கஷ்டப்படுத்துவது போல அக்கம் பக்கத்துக்காரர்கள்
நினைப்பார்கள். பட்டாசு புகையே புதிது போல நமக்கும் அந்தக்
கார வாசனையில் தும்மல் வர ஆரம்பிக்கும். வீட்டுக்குள் வந்து
இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்கு போன் போட்டால்
பேசவே முடியாது. டமால்,டுமீல் சத்தங்களுக்கு இடையே கஷ்டப்பட்டு
வாழ்த்தை சொல்லும் அதே வேளையில் சந்தடியே இல்லாமல்
தீபாவளி கழிவதை நினைத்து ஒரு மாதிரியாக இருக்கும்.

எதுக்குமே ஒரு தீர்வு இருக்கும்ல. இந்த மாதிரி வெடி வெடிக்கத்
தடை பல இடங்களில் இருக்கும். வெள்ளவத்தையில் மட்டும்
சும்மா சூப்பராக பட்டாசு சத்தம் கேட்கும். என் தோழி அன்னபூர்ணா வீடு
வெள்ளவத்தைக்கு கொஞ்சம் அருகில். அவர் வீட்டுக்கு எதிரில்
ஒரு கால்வாய் ஓடும். தனி வீடு என்பதால் பட்டாசு வெடித்தாலும்
பிரச்சனை ஏதும் இருக்காத இடம். அமைச்சர்கள், பெரிய தலைகள்
என யாரும் அருகில் இல்லாத ஒரு சூழல்.

அதனால் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டு ஒரு கெட்டுகதர்
வைத்துக்கொள்வோம். காலையில் அவரவர் வீட்டில் தீபாவளியை
மத்தாப்பு விட்டு கொண்டாடிவிட்டு, இரவு அன்னபூர்ணா வீட்டில்
சேருவோம். பாட் லக் முறையில் ஆளுக்கு ஒரு உணவு தயார்
செய்து எடுத்து சொல்வோம். பட்டாசுகள் எடுத்து செல்வோம்.
மொத்தமாக எல்லா பட்டாசையும் பாகம் பிரித்து கொடுத்துவிடுவோம்.
அனைவரும் வந்ததும் சேர்ந்து எல்லா பிள்ளைகளுடன், பெரியவர்களும் சேர்ந்து வெடி வெடித்து சந்தோஷமாக இருக்கும்.

இரவு அனைவரும் சேர்ந்து உண்டு ஆனந்தமாக இருக்கும் தீபாவளி.
சன் டீவி, ஜெயா டீவி தெரியாது. சக்தி டீவி மட்டும் தான். அதில்
தீபாவளி சிறப்புத் திரைப்படம் மட்டும் தான். டீவி முன்னால் அமர்ந்து
பண்டிகை கொண்டாடாமல், அனைவருடன் கலந்து ஒரு இன்பமயமான
தீபாவளியாக இருந்தது. அன்னபூர்ணா ஜப்பான் கிளம்பியதும் அவ்வளவு
சுவாரசியமாக இல்லை. அவர் அங்கேயிருந்து நைரோபி போய் இப்பொழுது
தருமமிகு சென்னைக்கு வந்துவிட்டார். நாங்களும் இந்தியா வந்து கொண்டாடும்
நான்காவது தீபாவளி இது. அதுவும் சொந்த வீட்டில்.


தீபாவளிக்கு எல்லாம் தயாரா என்பதை எங்கள் ஊர் பக்கம்
“தீபாவளி வந்திருச்சா? என கேட்பார்கள். “இதோ பக்கத்து தெருல இருக்கு,
வீதி முனையில இருக்கு, தீபாவளிக்கு அன்னைக்கு வந்திரும்”
என்பது போல சொல்வார்கள்.


தீபாவளி பலகாரங்கள் ரெடி, புத்தாடை ரெடி.
(என்னென்ன பலகாரம் என்பதை தனியா போட்டோ போட்டு
நாளைய பதிவுல சொல்றேன்.)
தெருமுனையில் காத்திருக்கும் தீபத்திருநாளுக்காக வெயிட்டிங்.

:))))))))))

உங்களுக்கு தீபாவளி வந்திருச்சா???

18 comments:

Appaji said...

தீவாளி வந்திருச்சு...அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்..(சீதை வனத்தில்...ஹனுமனை போல்...நீங்களும்...தீபாவளி கொண்டடி உள்ளீர்கள்..மிக மகழ்ச்சி..)

பால கணேஷ் said...

தீபாவளி வந்திடுச்சு தென்றல். உங்களுக்கு என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஷைலஜா said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்!

kaialavuman said...

//தீபாவளி பலகாரங்கள் ரெடி//

சாப்பிட நாங்களும் ரெடி மேடம். தங்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

நல்ல கொசுவத்தி... தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றல் பெற தங்கள் முகவரி வேண்டுமே...

Vidhya Chandrasekaran said...

அழகான பகிர்வு.

தீபாவளி வாழ்த்துகள் அக்கா.

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

தீபாவளி வந்திருச்சா சந்தோஷம். சீதை இருந்தது நுவேரேலியா பகுதியில். நான் இருந்தது கொழும்புவில் தான். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

தீபாவளி வந்ததில் சந்தோஷம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்

pudugaithendral said...

வாங்க ஷைலஜா,

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,

நாளைய பதிவைப்பாருங்கள். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க குடந்தை அன்புமணி,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
எனது வாழ்த்துக்களும்

pudugaithendral said...

வாங்க வித்யா,

நலமா? உங்களுக்கும் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கொசுவத்தி...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ....

சாந்தி மாரியப்பன் said...

எங்கூருக்கு தீவாளி வந்து ரெண்டு நாளாச்சே :-))

இராஜராஜேஸ்வரி said...

ஆஹா
தீவாளி வந்திருச்சு...
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

மாதேவி said...

கொழும்பு தீபாவளிபற்றி அழகாகக் கூறிவிட்டீர்கள். :)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க மாதேவி,

அழகென்ற சொல்லுக்கு முருகன் என்பது போல எனக்கு அழகு என்றால் அது இலங்கைதான்.

:)) வருகைக்கு நன்றி