Thursday, November 17, 2011

பக்கத்து வீட்டு “பரு”வ மச்சான்!!!

பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு ரகமாக பிரச்சனைகள்
அதான் உடல் உபாதைகள் வரும். பதின்ம வயதில் ரொம்ப முக்கியமானது
“பரு”. இது பெண்குழந்தைக்கு மட்டுமில்லாது ஆண்குழந்தைகளுக்கும் வரும்.

அதுவரை உலர்ந்த சருமமாக இருந்த குழந்தைக்கு அடலஸன்ஸ் வயதில்
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பருவை வரவழைக்கிறது.
இதே ஹார்மோன் மாற்றங்களால் வேறு சில பிரச்சனைகளும் வருகிறது,

அடலசன்ஸ் வயதில் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் அதே சமயம்
சுகாதாரமாகவும் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வயதில்
வியர்வை துர் நாற்றம், வாய் துர்நாற்றம் எல்லாம் தலை எடுக்கும்.
இவற்றிற்கு நல்லதொரு சரும மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்வது
அவசியம். இதெல்லாம் இந்த வயசுல சகஜம் தான் என்று சொல்லி
தீர்வு காணாமல் விட்டால் ரொம்ப கஷ்டம்.

வாரம் இரு முறை முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது
பொடுகை தூரத்தில் வைக்கும். வாரத்திற்கு ஒரு முறை ஹாட் ஆயில்
மசாஜ் வீட்டிலேயே செய்விக்கலாம். சூடான எண்ணெய் மசாஜ் கொடுத்து
ஸ்டீமரால் மயிர்கால்களுக்கு ஆவி கொடுத்து, 30 நிமிடம் கழித்து
நல்ல தரமான ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு கழுவ வேண்டும்.
முக்கியமாக கண்டீஷனர் உபயோகிக்க தவறக்கூடாது. கண்டீஷனர்
உபயோகிக்கும் பொழுது மயிர்க்கால்களில் படாமல் கூந்தல் மேல்
மட்டும் படும்படி தடவி 10 நிமிடங்கள் ஊறி பின் அலசுவதனால்
கூந்தல் பராமரிக்க ஈசியாக இருக்கும்.

சில குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் நிறம் மங்க ஆரம்பிக்கும்.
டேனிங் என்பார்கள். நீச்சல் பழகும் பிள்ளைகளுக்கு உடல் நிறம்
மாறுவதுபோல இருக்கும். இதற்கு வீட்டில் தயிரில் கடலைமாவு,
எலுமிச்சை ரசம் சேர்ந்து கலந்து உடல் முழுதும் தடவி ஊறவிட்டு
குளித்தால்மாற்றம் தெரியும். பெண் குழந்தைகள் ஸ்நானப்பவுடர்
தயாரித்து அதை உபயோகிக்கலாம். இங்கே ஆந்திராவில் நலுகுபொடி
என்று கிடைக்கும். அதில் வேப்பிலை எல்லாம் சேர்த்து தயாரிப்பார்கள்.
நம் ஊரில் ஆண்டாள் ஸ்நானப்பவுடர் கிடைக்கும். அத்துடன் கொஞ்சம்
கடலை மாவு கலந்து உபயோகிக்கலாம்.

பரு விஷயத்துக்கு வருவோம். அழகான முகத்தில் இந்த பரு ஒரு
வடுவையே தந்து விடும். பரு, பால் உண்ணி எல்லா வற்றிற்கும்
சிறந்த தோல் மருத்துவ நிபுணரிடம் அழைத்துச்செல்வது மிக முக்கியம்.

பரு என்றாலே நாம் உடன் கடைக்கு ஓடி கிளியரிசல் வாங்கி வருவோம்.
அதானெல்லாம் சரியாகாது. ஒரு வகை பேக்டேரியாவால் உருவாவதுதான்
பரு. (பொடுகு கூட அப்படித்தான்) சரும நிபுணர் அதற்கு சில மாத்திரை
கொடுத்து நல்ல ஃபேஸ்வாஷ் (மெடிகேடட்) க்ரீம் கொடுப்பார்.

நம் முகத்தில் நமக்குத் தெரியாமல் கிருமிகள் இருக்கும். வெளியே
சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஹேண்ட்வாஷால் கைகளை
கழுவிய பிறகு தரமான ஃபேஸ்வாஷ் கொண்டு முகம் கழுவுவது
அவசியம்.

எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் 4 முறை கூட கழுவலாம்.
பருவை எந்தக்காரணம் கொண்டும் கையால் கிள்ளிவிடக்கூடாது.
இது பேக்டேரியாவை பரப்பிவிடும்.

பரு தழும்பு போக முள்ளங்கி ரசத்தை தடவுவது, பூண்டு ரசம்
தடவுவது எல்லாம் கூடாது. சிலர் நான் இப்படி செய்தேன் என்பார்கள்.
உண்மையில் இந்தப் பொருட்களில் இருக்கும் காரம் முகத்தை
பதம் பார்த்து பரு தழும்பை நீங்காமல் செய்துவிடும்.

10 நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்து கொள்வது அவசியம்.
க்ளன்சிங் மில்க் கொண்டு முகத்தை துடைத்து, ஃபேஸ்வாஷால்
கழுவி, ஸ்க்ரப் செய்யாமல், முகத்தை கொஞ்சம் தூரமாக வைத்துக்
கொண்டு ஆவி பிடித்து, முல்தானி மட்டி அல்லது துளசி பேக்
அல்லது நீம் பேக் போட்டுக்கொண்டால் பருவினால் அதிகம்
தொல்லை இல்லாமல் இருக்கும்.

பருவுக்கு ஆண்/பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
அதனால் ட்ரீட்மெண்ட் இருபாலரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள
வேண்டும். வீட்டுக்குறிப்புக்களுடன் முறையான மருத்துவ
பரிசீலனையும் அவசியம்.

முகம் நம் அகம் காட்டும் கண்ணாடி. “இந்த வயசுல படிப்புல
மட்டும் கவனம் செலுத்தினா போதும். அலங்காரம் வேண்டாம்”!!
என்று சொல்லாமல் தேவையான உதவிகளை பிள்ளைக்கு
செய்து கொடுப்பதால் குழந்தை தன்னம்பிக்கையுடன் வாழும்.






17 comments:

பால கணேஷ் said...

-அதிகமா ஸைட் அடிக்கறவனுக்குத் தான் முகத்துல பரு வரும்னு சொல்லி அந்த வயசுல என் நண்பர்கள் எனக்குள்ள ஒரு காம்ப்ளக்ஸையே உருவாக்கி விட்டிருந்தாங்க. அப்ப இப்படி தெளிவா விளக்க புதுகைத் தென்றல் இல்லாததால காம்ப்ளக்ஸிலருந்து மீண்டுவர ரொம்பவே கஷ்டப்பட்டேன். அவசியமான கருத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

raji said...

பயனுள்ள தகவல் பகிர்வு.இதை இதோட நிறுத்திக்காம இன்னும் உடல் மனம் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்.எல்லோருக்கும் பயனுள்ளதா இருக்குமே!

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

பெண் தோழிகளும் பல கட்டுக்கதைகளை அவித்து விடுவாங்கதான். அதெல்லாம் புரியாது. பயமா இருக்கும். இதெல்லாம் நாம பெத்தவங்க கிட்ட கேட்கவும் முடியாது. (அவங்களே அது பத்தி தெரியாது) அதனாலத்தான் இப்ப பெற்றோர்களுக்கு உதவியாய் இருக்கும்னு இந்தப்பதிவு.

பதின்ம வயதுப்பிள்ளையை வளர்ப்பதால் அங்கு கற்றதை இங்கே பகிர்கிறேன். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராஜி,

கருத்துக்கு மிக்க நன்றி. பர்சனாலிட்டி டிவலப்மெண்ட் பத்தி பதிவு போட்டிருக்கேனே. பதின்மவயதுக்குழந்தைகளுக்கான பதிவுகள்னு லேபிலில் பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றி

Appaji said...

யாருமே...கேர் எடுக்காத விஷயத்தை....மிகவும் கேர் எடுத்து விளக்கமாக...கூறி உள்ளீர்கள்...நிறைய அனுபவம் போல் இருக்கிறது...!!
தங்களது பிள்ளைகளை ..இதே போல் தான் கவனித்து கொள்வீர்கள்....போல் உள்ளது....!!!

ராமலக்ஷ்மி said...

அவசியமான பகிர்வு. விரிவாக விளக்கியுள்ளீர்கள்.தலைப்பையும் ரசித்தேன்:)!

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பருவால் பதினைந்து வயதிலிருந்து அவதிபட்டிருக்கிறேன். என்னென்னவோ மருந்துகள், ஆயின்மெண்ட்கள், சோப்பு மருத்துவரிடம் காட்டி உபயோகித்தேன். பலனில்லை. கை வைத்தியங்களும் செஞ்சாச்சு. இப்போ வரைக்கும் பரு தொடருது.

KSGOA said...

எனக்கும் பதின்ம வயதில் மகன் இருப்பதால் உங்கள் பதிவு உதவியாக
இருக்கும்.நன்றி.

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

என் அனுபவத்தைவிட என் பிள்ளைக்காக எனக்கு கிடைத்த அனுபவப்பாடமே இது.

என் பிள்ளைகளின் ஒவ்வொரு ஸ்டேஜிலும் அவர்களுக்கு என்னால் ஆன உதவியை செய்து அதை ஒரு இனிமையான அனுபவமாக இருக்க வைக்கவேண்டும் என்பதுதான் என் சங்கல்பமே :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

தலைப்பையும் ரசித்தேன்//

:)) நன்றி. வருகைக்கும் நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

மஹா அவஸ்தை நானும் பட்டேன். தலைக்கு தினமும் எண்ணெய் தடவுவதையும், அதிகம் எண்ணெயில் பொறித்த பதார்த்தையும் விட்டதற்கு பிறகுதான் முகப்பரு எனக்கு டாடா சொன்னது. (தலைக்கு குளிப்பதற்கு 30 நிமிடம் முன்னால் மட்டுமே தலைக்கு எண்ணெய் வைத்தால் போதுமானது. தினமும் எண்ணெய் தடவுவதால் நல்லதை விட கெடுதல் தான் அதிகமாம். வெளியில் செல்லும் பொழுது புகை, புழுதி ஆகியவை வந்து தலையில் சேர்ந்து அது வேறு அவஸ்தை கொடுக்கும் என தெரிந்தது முதல் இந்த பழக்கம். நோ ஆயிலிங் ஹேர்.)
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கேஎஸ்கோ,

ரொம்ப சந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி

சுரேகா said...

மிகவும் அக்கறையான பதிவு!

கலக்குங்க!

நட்புடன் ஜமால் said...

நான் இதை படிக்கும் வரை அப்படித்தான் நம்பி கொண்டிருந்தேன்

pudugaithendral said...

நன்றி சுரேகா. கலக்கிடுவோம்

pudugaithendral said...

வாங்க ஜமால்,

என்ன நினைச்சீங்க?!!! விவரமா சொல்லுங்க :))

வருகைக்கு நன்றி

கோமதி அரசு said...

நல்ல அவசியமான பதிவு தென்றல்.

பயனுள்ள குறிப்புகள்.