தரிசனம் செய்ய வேண்டுமென்று கோவில்வரை சென்று
தரிசனம் கிடைக்காமல் திரும்பி வந்த கதைகளும் உண்டு.
அவனருள் இல்லாவிட்டால் அவனை தரிசிக்க இயலாது.
இது எந்த தெய்வத்திற்கும் பொருந்தும்.
ஆசை இருக்கு தங்க ரதம் இழுக்க. அவனருள் இருந்தால்
நடக்கட்டும். இல்லாவிட்டால் தரிசனம் மட்டும் செய்து
கொள்வோம் என இருந்தோம். அயித்தானின் நண்பர்
போய் பேசி எல்லாம் செய்து 7 மணி தங்கரதத்திற்கு
6.45க்கு பணம் கட்டினோம். (மாலை 5 மணியோடு
பணம் வாங்கிக்கொள்வதை நிறுத்திவிடுவார்கள்)
பழனிமலையின் உள்வீதி ப்ராகாரத்தில் தங்கரதம்
பவனி வரும். 2000 பணம் கட்டவேண்டும்.
மொத்தம் 10 பாயிண்ட்கள் இருக்கும். கொடிமரத்திலிருந்து
துவங்கி முதல் பாயிண்ட் வரை ஒரு குருப் என
பத்து பாயிண்டுகள் வரை மக்களுக்கு ஒதுக்கி வைப்பார்கள்.
அன்று தள்ளு முள்ளு கூட்டம். ஐயப்ப பக்தர்கள்
தங்கரதம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்னரே
பஜனை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள்
பணம் கட்ட ஓடிக்கொண்டிருந்த பொழுதே மூலவர்
ரதமேற வந்து கொண்டிருந்தார். எங்களுக்கு 10ஆவது
பாயிண்ட் கிடைத்தது. அங்கேயிருந்து கொடிமரம்
வரை ரதம் இழுக்க வாய்ப்பு.
7.15 மணி வாக்கில் ரதம் வெளியே வந்தது.
காணக்கண்கோடி வேண்டும் என பக்தி பரவசத்தில்
ஊசியாய் குத்தும் குளிர் காற்றைக்கூட பொருட்
படுத்தாது நின்றிருந்தனர் பக்தகோடிகள்.
10ஆம் பாயிண்டுக்கு அரைமணிநேரத்தில்
வந்தார் பழனியாண்டவர். எங்களுடன் இன்னும்
5 குடும்பம் அந்த இடத்திலிருந்து தேர் இழுக்க
பணம் செலுத்தியிருந்தனர். ஆனந்தமாக
அவன் ரதத்தை இழுத்தோம்.
இந்த வாய்ப்பை கொடுத்ததிற்கு நன்றி சொல்லி தரிசனத்திற்கு
செல்லும் முன் தங்கரதத்திற்கு பணம்
கட்டியவர்கள் பிரசாதம் பெற்று செல்லுமாறு
அறிவிப்பு வந்தது. மொத்தம் 63 பேர் பணம்
கட்டியிருந்தார்கள். ஒரு கட்டைப்பையில்
ப்ளாஸ்டிக் வாளி அதில் லட்டு, தேன் குழல்,
புட்டமுது, புளியோதரை, ராஜ அலங்கார
திரு உருவப்படம், தங்கரத அமைப்பில் விளக்கு,
(காமாட்சி விளக்கு போல) பஞ்சாமிர்தம்
டப்பா 2 எல்லாம் கொடுத்தார்கள். அந்த
பணம் கட்டிய ரசீதை காட்டினால் 5 பேருக்கு
100 ரூபாய் சிறப்பு தரிசனம் இலவசமாக.
அயித்தானின் நண்பரின் உதவியோடு சிறப்பு
தரிசனமாக கந்தனின் கருவறைக்கு முன்பே
அமர்ந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
வெளியே வரும்பொழுது போகரின் சமாதியை
தரிசனம் செய்தோம். யார் இந்த போகர்.
இவர் ஒரு சித்தர். பிற்காலத்தில் மக்கள்
பலவித நோய்களால் அவதிப்படப்போவதை
அறிந்து அவற்றிலிருந்து மக்களை காக்கும்
அருமருந்தாக 4448 மூலிகைகளுடன், அகஸ்தியரின்
ஆலோசனைக் கேட்டு நவபாஷனம் தயாரித்து
அதையும் கலந்து மருந்து செய்கிறார். அதை
முருகன் வடிவாக அமைக்கிறார்.
அப்புறம் அந்த மருந்தை எப்படி எடுப்பது?
அதற்காக பாலையும், பஞ்சாமிர்தத்தையும்
அபிஷேகம் செய்து அதில் அந்த மருந்து
கலப்பதுபோல செய்கிறார் போகர். அன்றிலிருந்து
பஞ்சாமிர்தம் பழனியின் முக்கிய ப்ரசாதமாகவும்
நோய்காக்கும் அருமருந்தாகவும் ஆகிறது.
போகர் நிர்விகல்ப சமாதி அடைவதற்குமுன்
தனக்கான சமாதியை முருகனுக்கு அருகிலேயே
அமைத்து சமாதி அடைகிறார். அந்த சமாதி
இன்றும் கோவிலுள் இருக்கிறது. மரகதலிங்கமாக
போகர் மாறிவிட்டதாகவும் சொல்கிறார். போகரின்
சமாதியில் அந்த மரகதலிங்கத்தைப்பார்க்கலாம்.
போகருக்கு அடுத்து முருகனை பூஜிக்கும் தொழிலை
புலிப்பானி சித்தர் ஏற்று தொடர்கிறார்.
ரதம் இழுத்தது, தரிசனம் கிடைத்தது எல்லாம்
2 மணிநேர்த்திற்குள். ஆனால் கந்தனுக்கு எங்களை
அவ்வளவு சீக்கிரம் அனுப்ப மனம் வரவில்லை போலும்.
ரோப் காருக்கு தாமதமாகிவிட, விஞ்சில் கீழே இறங்க
முடிவு செய்தோம். இருக்கும் கூட்டத்தில் முடியவே இல்லை.
2 மணிநேரம் காக்க வைத்து அயித்தானின் நண்பர்
ஷ்பெஷல் பாஸ் வாங்க அருள் புரிந்து 10.45க்கு கீழே இறங்கினோம்.
11மணிக்கு ஹோட்டல் திருப்பூர் லாட்ஜில் சுடச்சுட
கிடைத்த தோசையும், சாம்பாரும் தேவார்மிதமாக
இருந்தது. நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுதே
ஹோட்டலை மூடத்துவங்கிவிட்டார்கள். நல்லவேளை
இதாவது கிடைத்ததே என்று சந்தோஷத்துடன் அறைக்குச்
சென்று தூங்கினோம். அடுத்த நாள் எங்கே சென்றோம்?
அடுத்த பதிவில்
12 comments:
/ அன்றிலிருந்து
பஞ்சாமிர்தம் பழனியின் முக்கிய ப்ரசாதமாகவும்
நோய்காக்கும் அருமருந்தாகவும் ஆகிறது./
பஞ்சாமிர்தத்தைப் பற்றிய தகவலை இப்போதுதான் அறிகிறேன். நல்ல தரிசனம் கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி. அருமையான பகிர்வு. தொடருங்கள்.
Aanmeekap payanam...arumai yaa irukkunga.
எப்பவோ சின்ன வயசுல பிக்னிக் போயிருக்கேன். அப்ப அதிகமா கூட்டமில்லைன்னு ஞாபகம். யானைப்பாதை வழியா இயற்கையை ரசிச்சுட்டே நடந்து போயி தரிசனம் செஞ்சோம். இப்ப கூட்டம் அம்முது :-)
வாங்க ராமலக்ஷ்மி,
பஞ்சாமிர்தம் தான் அபிஷேகப்பொருள் என்பது மட்டும் தெரியும். ஆனால் அதன் பின் இப்படி பொருள் இருப்பது இப்போதுதான் தெரியும்.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
வாங்க மஹி,
வருஷத்துக்கு ஒரு வாட்டியாவது இப்படி பயணம் கிளம்பிடறது மனதுக்கு இதமா இருக்கும்.
வருகைக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
எல்லா கோவில்களிலும் இப்போ கூட்டம் தான். :))
வருகைக்கு நன்றி
அன்பு தென்றல், உங்களுடன் அருமையான தரிசனம் முருகன் கொடுத்தான். மிக உணர்ச்சி பூர்வமாக விவரித்து எங்களையும் அங்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.
பழனி - எனக்கும் சில நினைவுகள் இருக்கின்றன.... :)
நிம்மதியாய் சென்று ஒரு முறை ரசிக்க வேண்டும் முருகனின் அழகை........
வாங்க வல்லிம்மா,
உங்க வருகைக்கு மிக்க நன்றி
எனக்கும் சில நினைவுகள் இருக்கின்றன.... :)
ஆஹா. ஒரே ஒருஸ்மலி மட்டும்தானா இல்ல இன்னும் இரண்டு ஸ்மைலி போடலாமா சகோ. :))
உங்களுக்கு முருகன் சீக்கிரமே தரிசனம் தரட்டும். வருகைக்கு நன்றி
அழைப்பிதழ்:
இன்றைய வலைச்சரத்தில் உங்களது வலைப்பூவினை, வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
”செண்பகப்பூ - சுற்றுலாச்சரம்” என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் பற்றிய அறிமுகம் காணச் சுட்டி கீழே:
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_03.html
நன்றி சகோ :))
Post a Comment