Friday, April 06, 2012

பயண அனுபவம்!!!!

எப்பொழுதும் அலுக்காத ஒரு விஷயம் பயணம். பிள்ளைகளுக்கு
விடுமுறை விட்ட உடன் ஏதாவது ஒரு ஊருக்கு பயணிக்கும்
அளவுக்கு நாங்கள் விடுமுறை ப்ரியர்கள். :)) ஆனால் எங்களுடைய
ஒரு விடுமுறை பயண அனுபவத்தைப் பற்றி இங்கே சொல்லியே
ஆகவேண்டும். பீடிகை பலமா இருக்கேனு கேக்கறீங்களா??!!!
வாங்க என்னன்னு பாக்கலாம்.

இது நடந்தது 2003. ஆமாம் களம் இலங்கை. அயித்தானின் நண்பர்
தன் குடும்பத்துடன் இலங்கைப்பயணம் செய்யனும்னு ஆசைப்பட்டு
மடல் அனுப்பியிருந்தார். பிள்ளைகளுக்கும் விடுமுறையாக இருக்கவே
திட்டம் போட்டு எல்லாம் ரெடி செஞ்சாச்சு.அயித்தானின் நண்பர், அவரது மனைவி, 5 வயது மகன்,
9 மாத குட்டி பாப்பா இவர்களுடன் நாங்கள் நால்வரும் கிளம்பினோம்.
காலை 7 மணிக்கு கிளம்பவேண்டும் என்ற திட்டம் சொதப்பப்பட்டு
8 மணிக்குத்தான் கிளம்பினோம். காரணம் அயித்தானின் நண்பரின்
மகனுக்கு லேசா ஜுரம் இருந்தது. அவங்க கையில மருந்து ஏதும்
கொண்டு வரலை!! (ஊரிலிருந்து கிளம்பும் அன்று லைட்டா ஜுரம்
இருந்திருக்கு) என் கையில் இருந்த மருந்தைக்கொடுத்து கிளம்பினோம்.
(ஊருக்கு கிளம்பறோம்னா ட்ரெஸ் எடுத்துவைப்பதோடு இப்ப
வரைக்கும் அவசர தேவைக்கு மருந்து கிட்டையும் எடுத்து வைப்பது
என் பழக்கம்)

2 மணிநேரப் பயணத்தில் 4 தடவை நிப்பாட்டி ஒரு ஊரை அடைந்தோம்.
விடுமுறை சமயம் (தமிழ்-சிங்கள புத்தாண்டு சமயம்) என்பதால்
ஆஸ்பத்திரிகூட இயங்கவில்லை. ஏதோ ஒரு ஆஸ்பத்திரி திறந்திருக்க
அங்கே கூட்டிப்போய் காட்டினால் அவர்கள் மருந்து கொடுத்தார்கள்.
பயணத்தை நிறுத்தவும் முடியாது. அடுத்த நாட்களில் செல்ல இருந்த
ஹோட்டல்களில் புக்கிங், அட்வான்ஸ் என எல்லாம் கட்டியாகி
இருந்தது. தவிர நண்பரும் 15நாள் டிரிப்பில்தான் வந்திருந்தார்.

மருந்து கொடுத்ததில் குழந்தை உறங்க ஆரம்பித்திருக்க, மெல்ல
பயணம் செய்தோம். பொலன்னருவ எனும் ஊருக்கு போய்ச் சேர்ந்தோம்
ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
பொலன்னருவ முன்பு தலைநகரமாக இருந்த இடம். சிதிலமான
கோவில்கள் இருக்கின்றன என்றாலும் பார்க்க வேண்டிய முக்கியமான
இடம். நண்பரின் கமெண்ட்,” உடைஞ்சது, மிச்சம் மீதி இருக்கறதை
பார்க்கவா இவ்வளவு நேரம் பயணம் செஞ்சோம்!!!”

முன்பே எங்கே போகலாம் என அவரிடம் கேட்டு (நாங்க ஏற்கனவே
ஒரு சின்ன ரவுண்ட் அடிச்சிருந்தோம்) அவர்கள் சொன்ன இடங்களுக்குத்
தான் புக்கிங் செய்திருந்தோம்!!! அயித்தானுக்கும் எனக்கு ஷாக்.
அடுத்த நாள் பின்னவல் யானைகள் சரணாலயத்துக்கு போனோம்.
அங்கேயும் அவர்கள் திருப்தி படவில்லை!!!

கண்டியா, நுவரேலியாவா என நினைவில்லை.. இந்த இரண்டும்
இலங்கையின் எழில் கொஞ்சும் மலைப்பிரதேசம். இதைக்கூட
ஓகே!!! ரகத்தில் வைத்துவிட்டார்கள். அங்கேயிருந்து மழை
எங்களை துரத்திக்கொண்டே வர நாங்கள் கதிர்காமத்தை அடைந்தோம்!!

சிலை வழிபாடு இல்லை!! அதனால மனசுக்கு பெருசா ஒட்டவில்லை
என்று கமெண்ட் எங்களை ரொம்பவும் பாதித்தது. எங்கே, என்ன
பார்க்கலாம் என விவரமாக சொல்லி மடல் அனுப்பி எல்லாம் செய்து
அவர்கள் விருப்பப்படியே பயண ஏற்பாடு செய்திருந்தோம். செலவு
இருகுடும்பத்தினரும் பகிர்ந்து கொள்ள திட்டம்.

சுற்றி பார்த்த இடங்களுக்குத்தான் இப்படி கமெண்ட்ஸ் என்றால்,
ஹோட்டலில் தங்கியதும் கூட எங்களுக்கு மனது வருத்தமாகிவிட்டது.
சிங்கள புத்தாண்டு சமயத்தில் அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளுக்கு
ஏற்பதான் ஹோட்டல் கூட இயங்கும். நல்ல நேரத்தில்தான்
அடுப்பு பற்ற வைப்பார்கள். விடுமுறை சமயத்தில் பலரும் லீவில்
சென்றுவிட இருக்கும் பணியாளர்களை வைத்து ஒப்பேற்றுவது
எங்கும் பழக்கம். அதனால் சேவை கொஞ்சம் தாமதமாகத்தான்
இருக்கும். ஆனா நண்பருக்கோ சட்டு சட்டென்று கோவம்!!!

கொழும்புவிலிருந்து கிளம்பும்பொழுதே ஒரு பையில் என் கிச்சனை
கட்டி கொண்டு வந்திருந்தேன். அந்த பேக் நிறைய்ய அரிசி, பருப்பு
பொடி, நெய், இன்ஸ்டண்ட் ரச மிக்ஸ், கறிவேப்பிலைக்குழம்பு
இவற்றுடன் என்னுடைய சின்ன ரைஸ் குக்கர். தவிர குழந்தைகளுடன்
பயணம் என்பதால் சிறுதீனி என பக்காவாக திட்டம் போட்டு
கிளம்பியிருந்தேன். இரவும் ஹோட்டல் அறையில் சோறு
வைத்து சாப்பாடு!!!

ஒவ்வொரு ஹோட்டலில் காலை உணவு மட்டும் சாப்பிடுவோம்.
மதியத்துக்கு ஹோட்டல் அறையிலேயே அரிசி சோறு சமைத்து
எடுத்துக்கொண்டு டப்பாவில் போட்டு வழியில் பசி நேரத்தில்
சாப்பிடலாம் என்பது ப்ளான். நண்பரின் குடும்பத்தினர்
ஹோட்டலில் காலை உணவை சரியாக சாப்பிட மாட்டார்கள்.
வெஜ் ,நான் வெஜ் இரண்டும் பக்கத்தில் வைத்திருப்பதால்
அந்தக்கரண்டி இதில் பட்டிருக்குமோ என சந்தேகம் நண்பரின்
மனைவிக்கு!!! போகட்டும் ப்ரெட் இருக்கிறதே அதையாவது
சாப்பிடலமே என்றால்.. ப்ரெட் ஜுரம் வந்தால்தான் சாப்பிடுவேன்!!
என்றார்.

ப்ரெட்டை டோஸ்ட் செய்தோ செய்யாமலோ தேங்காய்ப்பால்
சேர்த்து செய்த பருப்புக்கறி, பொல்சம்பலுடன் வைத்து
சாப்பிட்டால் தெரியும் அந்த உணவின் அருமை.
இலங்கையில் பொதுவாக ஹோட்டல்கள் காலை உணவு
இடியாப்பம் அல்லது ஆப்பம், புட்டு, ப்ரெட், கார்ன்ஃபெள்க்ஸ்
என எல்லாமே இருக்கும்படிதான் அமைப்பார்கள். தினத்துக்கு
ஒரு வகை என்று சாப்பிட்டாலும் நல்லா சாப்பிடலாம். தவிர
தங்கும் ஹோட்டல்களும் மாறுவதால் உணவின் சுவையும்
மாறலாம்!!! அழகாக நறுக்கி வைக்கப்பட்ட பழங்கள்,
பழரசங்கள் என எல்லாமே வயிறு நிறைக்க இருந்தும்
அவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள். (பெட்&ப்ரெக்ஃபாஸ்)
முறையில் ஹோட்டல்கள் புக்கிங் செய்திருந்தோம்.

இத்தனை இருந்தும் சாப்பிடாமல் இருக்க சொன்ன காரணம்
நான்வெஜ்ஜும் இருந்தது என்பதோடு அங்கேயே சுடச்சுட
ஆம்லெட் போடுவதால் எழும் வாசம்!!!! என் குழந்தைகள்
இதைப்பற்றில் எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கும்
வகையில் அவர்களை வளர்த்திருந்ததால் ஆனந்தமாக
அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். நானும் அயித்தானும்
கூட வயிற்றுக்குத் தேவையானதை சாப்பிட்டோம்.
ஆனால் அயித்தானின் நண்பர் குடும்பத்தினர் சரியாக
சாப்பிடாமல் 10 மணிக்கே தயாராக்கி வைத்திருக்கும்
மதியச்சாப்பட்டை சாப்பிட நேர்ந்தது. எங்களுக்கு
ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அதற்கு பிறகு வழியில்
ஏதும் கிடைக்காது. இப்படியாக கஷ்டப்பட்டு எங்கள்
பயணம் இனிதாக(!!!!) கொழும்புவை அடைந்ததும்
வண்டியை நேராக விட்டது mathura Hotel க்கு!!!அங்கே இந்திய உணவு கிடைக்கும். வுட்லண்ட்ஸ் குழுவினரின்
ஹோட்டல் அது. (அங்கே ராமகிருஷ்ணா என்று ஒரு மேனெஜர்
இருந்தார். ரொம்ப இனிமையாக பேசுவார். ஒரு பிரபல
டைரக்டரின் ஒன்று விட்ட சகோதரர்)
அங்கே போய் இட்லி, தோசை ஆர்டர் செய்து அதை மிகவும்
விரும்பி சாப்பிட்டனர். “இப்படி கொடுத்தா எங்க பசங்க
சாப்பிடுவாங்க, அதை விட்டு ப்ரெட், ஜாம், கார்ன்ஃபேள்க்ஸுன்னா””!!
என்று நானும் அயித்தானும் ஏதோ தவறு செய்தது போல
குற்றம் சுமத்தினார்கள்!!!!!!

நம் வீட்டு சாப்பாடு வெளியே கிடைக்காது என்பதால் வெளியே
கிடைப்பதையும் சாப்பிட பழக வேண்டும் அல்லது எந்த
ஊருக்கு சுற்றுலா செல்லாமல் நம் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
அதே போல செல்லும் இடத்துக்கு, சூழலுக்கு தக்கவாறு
நடந்துகொள்வது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே
இருக்கிறது!!! குழந்தைகளுடன் செல்லும் பொழுது அவர்களுக்கு
வளமையாக கொடுக்கும் மருந்துகள் எடுத்துச் செல்வதும்
அவசியம் என்பது ஏனோ தெரிவதில்லை!!!

என்னடா இப்படி கமெண்ட் அடிக்கிறோமே!! கூட
இருப்பவர்கள் மனது பாதிக்குமே என்று வருத்தம் கொஞ்சம்
கூட இல்லை. இப்படியும் சிலர்.

இன்னொரு தடவை இன்னொரு தோழியுடன் ஒரேகாரில்
பயணம் போனோம். பெட்ரோலுக்கான பணத்தை சமமாக
பகிர்ந்துகொள்வது, உணவு, தங்கும் வசதியும் அப்படியே
என்று சொல்லித்தான் கிளம்பினோம். ஆனால் அவர்கள்
கணக்கை சரியாக புரிந்துகொள்ளாமல் நாங்கள் குறைத்து
கொடுத்துவிட்டதுபோல பேசிவிட்டார்கள். அப்புறமாக
புரிந்துக்கொண்டு பலதடவை மன்னிப்பு கேட்டது தனிக்கதை.

அன்றிலிருந்து கூட்டாக பயணம் செய்வது என்றால்
பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்படி
பயணம் வேண்டுமா? என யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
அட்ஜஸ்மெண்ட் என்பது அனைவரிடமும் இருக்க
வேண்டும்!!!

என்னதான் பட்டாலும் கூட்டாக பயணம் செய்வதை
விட்டோமா???!!! :))) அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!

17 comments:

வெங்கட் நாகராஜ் said...

எந்த விஷயத்திலேயும் ஒரே Wave length உள்ளவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. பல விஷயங்களில் இந்த கூட்டு ஒத்துப் போவதில்லை!

பயணத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எனக்கும் கிடைத்திருக்கிறது! அதனால் அதன் வலி புரிகிறது!

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா இப்படியும் மனிதர்கள்..

ப.கந்தசாமி said...

நளனுக்கு சனி காலில் ஒரு இடத்தை சரியாகக் கழுவாததால் அந்த இடத்தைப் பிடித்தது என்று ஒரு கதை உண்டு. உங்களுக்குச் சனி உங்க அய்த்தான் ரூபத்தில் பிடித்திருக்கறது. இப்படிப்பட்ட ஆட்களுடன் பயணம் சென்றால் பைத்தியமே பிடித்துவிடும்.

ஆத்மா said...

மிக அருமையான பயண அனுபவம்...
எவ்வாறான பயணமாக இருந்தாலும் அப் பயணத்தில் பல சிக்கல்கள் வரவேண்டும் அப்போதுதான் அந்த பயணத்தினை நம்மால் மறக்கமுடியாமல் இருக்கும்...

pudugaithendral said...

வாங்க சகோ,
நீங்க சொல்லியிருப்பது ரொம்ப சரி.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

பறவகைள் பலவிதம் மட்டுமல்ல மனிதர்களிலும் பலவிதிம்தான்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கந்தசாமி ஐயா,

சனி எனக்கு மட்டுமா? அயித்தானுக்கும் சேர்த்தேதான். பாவம் ரொம்ப மனது வருத்தப்பட்டது அவர்தான்.

நடுவழியில் பயணத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு திரும்பி விடலாமா என்று கூட நினைத்திருந்தோம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிட்டுக்குருவி,

ஆனாலும் இந்த நிகழ்வு மனதில் ஒரு வடுவாகவே ஆகிவிட்டது.

வருகைக்கு மிக்க நன்றி

அன்புடன் அருணா said...

அட! எனக்கும் இதுமாதிரி நிறைய அனுபவம் உண்டுப்பா!!!

pudugaithendral said...

வாங்க அருணா,

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களில் வசிப்பவர்கள் பலருக்கு இப்படி அனுபவம் இருக்கும் போலிருக்கு. :))

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

இப்படியும் இருக்கத் தான் இருக்கிறார்கள்....:(

நான் இதுவரை குழந்தையின் மருந்து கிட்டை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வேன்.... அதுபோக எங்களுக்கும் அவசிய மேற்பட்டால் தேவையென்று....காய்ச்சல், தலைவலி, வாந்தி என்று எல்லாவற்றிற்கும்.

ஒருமுறை இரயில் பயணத்தில் அருகிலிருந்த குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, மருந்து அவர்களிடமும் இல்லை. நான் ரோஷ்ணிக்கு வைத்திருந்ததை கொடுத்தும் யோசித்து பின்பு வாங்கிக் கொண்டனர். டிஷ்யூ உள்பட....

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

மருந்து என்னாத்துக்குன்னு பலர் நினைக்கறாங்க. ஆனா புது இடத்துல புது மருந்து சாப்பிட்டு ரிஸ்க் எடுக்கக்கூடாதுன்னு புரிவதில்லை.

வருகைக்கு நன்றி

arul said...

better to go alone

pudugaithendral said...

வாங்க அருள்,

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு நம்ம பெரியவங்க சொல்லிக்கொடுத்திருக்காங்களே!! :))

வருகைக்கு மிக்க நன்றி

கீதமஞ்சரி said...

வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_25.html?showComment=1390607435662#c947129308205581039
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வலைச்சரம் மூலம் வந்தேன்...இதைப்போன்ற அனுபவம் எனக்கும் உண்டு...சிலமக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.