Tuesday, April 10, 2012

ஆலய தரிசனம்

”ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே,
அதை செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே”!!
இப்படி பாட்டாலே ராமனின் புகழ் பாடினார்கள்
லவனும் குசனும். தங்கள் தந்தைதான் இராமன் என்பதே
தெரியாமல் அவரது புகழ் பரப்பினவர்கள். இந்த லவனும்
குசனும் பூஜித்த சிவன் கோவில், தங்கள் தந்தையுடன்
போராடிய இடம் இதெல்லாம் எங்கே இருக்கிறது தெரியுமா?


ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். தமிழகத்தின் தலைநகராம்
சென்னையில் கோயம்பேடு பகுதியில் தான் இருக்கிறது
இந்தக்கோவில். குறுங்காலீஸ்வரர் அல்லது குசலவபுரீஸ்வரர்
கோவில் என்றழைக்கப்படுகிறது இந்தக்கோவில். அன்னை
தர்மஸம்வர்த்தனி (அறம் வளர்த்த நாயகி)யாக அருள்பாலிக்க
குறுங்காலீஸ்வரராக சிவ பெருமான். இங்கே அன்னை
ஈசனுக்கு வலப்புறமாக இருக்கும் சந்நிதியில் அருள் பாலிக்கிறார்கள்.
தன்னை நாடும் பக்தர்களின் குறையை கேட்டு தீர்த்துவைக்க
இடதுகாலை ஊணிக்கொண்டு தயாறாக இருக்கிறாள்.

கோவிலின் சுற்றுபிராகாரத்தில் பிள்ளையார், வள்ளிதெய்வயானைசமேத
முருகன், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்திகளும் அருள்பாலிக்கிறார்கள்.
நவக்கிரஹங்களில் சூரியபகவான் தனது குதிரைகளுடன்
காட்சிஅளிக்கிறார்.

வண்ணானின் பேச்சைக்கேட்டு கர்ப்பிணியான சீதையை
கானகத்துக்கு அனுப்புகிறார் ராமன். தனது ஆஸ்ரமத்தில்
அடைக்கலம் கொடுக்கிறார் வால்மீகி முனிவர். அந்த
ஆஸ்ரமம் இருந்த இடம்தான் கோயம்பேடு. லவகுச எனும்
இரட்டைக்குழந்தைகளை பிரசவிக்கிறாள் சிதாபிராட்டி.
அவர்களும் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திலேயே
வளர்கிறார்கள். வால்போர், வில்போர் ,கல்வி கற்கிறார்கள்.

அஸ்வமேத யாகத்துக்காக அனுப்பிய குதிரையை இந்த
இரு சிறுவர்களும் கட்டிப்போட்டுவிடுகிறார்கள்.
அதாவது அம்பாலேலே வேலி அமைக்கிறார்கள். அதான்
கோ+அம்பு+ ஏடு.(கோ-குதிரை, அம்பு, ஏடு -வேலி)
இதுதான் தற்போது கோயம்பேடு.
குதிரக்காக லட்சுமணனை அனுப்ப அவனையும் மயக்க
மடைய செய்கிறார்கள் சிறுவர்கள். இராமரே நேரில்
வந்து போர் புரிய, தகப்பன் என்று தெரியாமல் இரு
குழந்தைகளும் அம்பு தொடுத்து போரிடுகிறார்கள்.
வால்மீகி முனிவர் வந்து இடைமறித்து அறிமுகம்
செய்து வைக்கிறார்.


தகப்பனுடனே போரிட்டதால் பித்ருசாபம் தீர குழந்தைகளை
சிவ பெருமானை வணங்கச் சொல்கிறார் வால்மீகி முனிவர்.
தங்கள் உருவத்துக்கு தகுந்த மாதிரி சிறிய லிங்கத்தை
பிரதிஷ்டித்து பூஜிக்கிறார்கள். 1500 வருட பழைய
கோவில் இப்போதும் இங்கே இருக்கிறது. கோயம்பேடு
பஸ்ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது
இந்த கோவில். பிரதோஷ வழிபாடு இங்கேதான் துவங்கப்பட்டது
என்று சொல்கிறார்கள். அதனால் இந்த கோவிலுக்கு
ஆதிபிரதோஷபுரி என்றும் பெயர் உண்டாம்.

கோவிலுக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தின் தூண்களில்
பல தெய்வங்களின் சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் சிறப்பானதாக இருப்பது ப்ரத்யங்கராதேவியை
ஆலிங்கனம் செய்தபடி இருக்கும் சரபேஸ்வரர். யார்
இந்த சரபேஸ்வரர்?

நரசிம்மாவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை கொன்றபிறகு
கோவம் தணியவில்லை மஹாவிஷ்ணுவுக்கு. அந்த
உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானை
வேண்ட அவர் சரப பட்சியாக உருமாறுகிறார்.
சிம்ஹமுகம், மானிட உடல் ஏற்று துர்கையும்,
காளியும் இறக்கைகளாக அவதாரமெடுத்து நரசிம்மரை
விண்ணுலகத்துக்கு எடுத்துச் சென்று அவரது உடலில்
இருக்கும் இரத்தத்தை உதறி எடுத்து சாந்தப்படுத்துகிறார்.

அரக்கனின் இரத்தம் பூமியில் விழுந்தால் கெடுதி என்பதால்
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்ணுலகத்துக்கு சரப
பறவையாக சிவன் எடுத்துச் சென்றதாக சொல்கிறது
இந்து புராணம். சரபேஸ்வரர் என்பது சிவன்,விஷ்ணு,
துர்கா,காளி ஆகியோரின் அம்சம். அவிட்ட நட்சத்திரக்காரர்கள்
வழிபட வேண்டிய தெய்வம் சரபேஸ்வரர்.

கோயம்பேட்டில் இருக்கும் இந்தக்கோவில் ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் இராகுகாலத்தில் (4.30-6)
சரபேஸ்வரர் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது.

இந்த சிவன்கோவிலுக்கு அருகிலேயே விஷ்ணுகோவில்
ஒன்று இருக்கிறது. வைகுண்ட பெருமாள் எனும்
பெயரோடு அருள்பாலிக்கிறார். இங்கே மரவுரி தரித்த
கோலத்தில் அருள்பாலிக்கிறார். இராமன் சீதாபிராட்டியுடன்
எப்போதும் காட்சி தரும் லட்சுமனரும் இல்லை. அவர்தான்
மயக்கமாகி இருந்தாரே!! வால்மீகி முனிவருக்கு தரிசனம்
அளித்த இடம் இது. இந்தக்கோவிலில் அனுமானும் இல்லை.

லவகுச, மற்றும் கர்ப்பிணியான சீதாபிராட்டியின் சிலைகளுடன்
வால்மீகி முனிவரின் சிலையையும் காணலாம். இந்த
விஷ்ணுகோவிலை சுற்றி வரும்பொழுது அதிசயம் ஒன்றைக்
காணலாம். வேப்பமரமும்,வில்வமரமும் பின்னி பிணைந்து
காட்சி தரும். அதாவது விஷ்ணுகோவிலில் மீனாட்சி
சுந்தரேஸ்வரர் கல்யாணம்!!!

விஷ்ணுகோவிலுக்கு எதிரில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.
ஒரே இடத்தில் அருகருகே சிவன் கோவில், விஷ்ணுகோவில்.
லவனும் குசனும் பூசித்த இடத்தையும், வால்மீகி முனிவரின்
ஆஸ்ரமமாம இருந்த இடத்தையும் தரிசித்து பேறு பெறுவோம்.


8 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆலய தரிசனம்" சிறப்பான தரிசன்ப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்... நன்றி சகோ

கோமதி அரசு said...

வால்மீகி முனிவரின்
ஆஸ்ரமமாம இருந்த இடத்தையும் தரிசித்து பேறு பெறுவோம்.//

பேறு பெற்றோம் தென்றல்.
ஆல்ய தரிசனம் அருமையாக இருந்தது.

pudugaithendral said...

இராஜராஜேஸ்வர், வெங்கட் சகோ, கோமதி அரசு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ADHI VENKAT said...

இதுவரை அறியாத கோவில். நல்லதொரு பகிர்வுக்கு நன்றிங்க..

pudugaithendral said...

எதேச்சையாக அங்கே போயிருந்த பொழுது இந்தக்கோவிலுக்கு போனேன் கோவை2தில்லி,

அப்பதான் விவரங்கள் தெரிஞ்சது

வருகைக்கு நன்றி

தினேஷ்குமார் said...

நல்ல தரிசனம் ...

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி தினேஷ் குமார்