Tuesday, April 17, 2012

பெத்தகடன்??!!!!

இந்த அப்பார்மெண்டுக்கு குடி வந்து 3 மாசமாச்சு. எதிர்வீட்டுல
வயதான தம்பதிங்க இரண்டு பேர் மட்டும் இருக்காங்க. எனக்கும்
பேச்சுத்துணைக்கு ஆள் இருக்காங்க. சிரிச்ச முகமா இரண்டு
பேரும் பேசுறதை கேட்க அவ்வளவு நல்லா இருக்கும்.

வயசானவங்க தனியா இருக்கறதால சில சமயம் நான் செஞ்ச
குழம்பு, கூட்டுன்னு கொண்டு போய் கொடுப்பேன். அவங்களும்
மருந்துக்குழம்பு, பூண்டு சூப்ன்னு செஞ்சு அனுப்புவாங்க.

அன்னைக்கும் அப்படித்தான் கத்திரிக்காய் கெட்டிக்குழம்பு செஞ்சு
எடுத்துகிட்டு வந்து கொடுத்தவங்க முகம் வாட்டமா இருந்துச்சு.

“ஏன்? என்னாச்சு? உடம்பு ஏதும் சரியில்லையாம்மா உங்களுக்கு”ன்னு
கேட்டேன். “அதெல்லாம் இல்லம்மான்னு” சொன்னவங்க ஏதோ
சொல்ல தயங்கற மாதிரி இருந்துச்சு... தயக்கமா உக்காந்திருந்தாங்க.

“என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க. என்னால ஆன உதவியைச்
செய்யறேன்னு” சொல்லவும், “அவர் சாப்பிட்டு 3 நாளாச்சு. விதமா
செஞ்சாலாவது சாப்பிடறாருன்னு நானும் செஞ்சு பாத்தேன். மனுஷன்
சாப்பிடலை!! அவர் சாப்பிடாம எனக்கும் சோறு உள்ள இறங்க
மாட்டேங்குது”. மனசுக்குள்ள வருத்தமா இருக்கு அவருக்கு அப்படின்னு
நிப்பாட்டினாங்க. நானும் விருந்தாளிக வந்திருந்ததால் பிசியா இருந்தேன்.
அதனால அவங்க கூட போய் பேச முடியலை. நேத்து ராத்திரிதான்
விருந்தாளிக கிளம்பினாங்க.

“எனக்கும் வேலை முடிஞ்சிடிச்சு! வாங்க வீட்டுக்கு போய் பேசலாம்”
அப்படின்னு சொல்லிட்டு அவங்க கை பிடிச்சு வீட்டுக்கு கூட்டி போனேன்.

ஹாலில் டீவி முன்னாடியே எப்பவும் உக்காந்திருப்பவர். அங்கயும்
காணம். “அப்பா எங்க இருக்காங்க?” அப்படின்னு கேட்டேன். எனக்கு
அவங்க இரண்டு பேரும் என் பெத்தவங்க மாதிரி இருந்ததால அப்படியே
கூப்பிட பழகிட்டேன். “ரூம்ல படுத்திருக்காரு!!” அப்படின்னு சொல்ல
அங்கே போனேன்.

ஜன்னல் எல்லாம் மூடி வெச்சிருந்தாங்க. சத்தமே இல்லாம எதையோ
வெறிச்சு பாத்துகிட்டு இருந்தாங்க. “அப்பா! எப்படி இருக்கீங்கன்னு?”
கேட்டதும்,” வாம்மா, மாலா.” அப்படின்னு வாய்தான் கூப்பிட்டது.
முகம் வாடிப்போய் உக்காந்திருந்தாரு.

“என்னப்பா! 3 நாளா சரியா சாப்பிடலைன்னு அம்மா வருத்தப்படறாங்க!
ஏன் என்ன பிரச்சனை? உடம்பு ஏதும் சரியில்லையா? ரவிகிட்ட சொல்லி
டாக்டரைக்கூப்பிடவா!”ன்னு கேட்க,

அதெல்லாம் இல்லம்மா. உடம்புக்கு என்ன? கல்லு மாதிரி நல்லாத்தான்
இருக்கு. மனசும் அதே மாதிரி கல்லா இருந்தா நல்லா இருக்கும்னு”
சொன்னார். வயதானவங்களுக்கு தனிமை ஒரு சாபம்.

அப்பா, அம்மான்னு நான் கூப்பிடற இந்த எதிர் வீட்டுக்கார தம்பதிகள்
பேரு ராமசாமி, கோகிலா. இவங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்.
மகளுக்கு திருமணமாகி குழந்தைங்க இருக்கு. 3 வருஷம் முன்னாடி
மகனுக்கும் திருமணமாகி அழகான ஆண்குழந்தைன்னு சந்தோஷமா
சொல்வாங்க. மருமகனுக்கு வேலை வெளிநாட்டில். மகனும் கூட
அமெரிக்காவில் இருப்பதா சொல்வாங்க. தன் கடமைகளை முடிச்சிட்ட
ஆனந்தமான தம்பதிகள்னு இவங்களை பாக்கும் போதெல்லாம்
சந்தோஷப்படுவேன்.

“ஏம்ப்பா, என்னாச்சு? என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க.
உங்க பாரத்தை இறக்கி வெச்ச மாதிரி இருக்கும்”னு சொன்னேன்.

“சொல்றேன்! எனக்கும் மன பாரம் குறைஞ்சா மாதிரி இருக்கும்”
என் பிள்ளைகளை படிக்க வெச்சு, நல்ல இடத்தில் செட்டில்
செஞ்சு கொடுக்கணும், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னே
ஒரு சராசரி தகப்பனா என் வாழ்க்கையை ஓட்டினேன்.
ரிட்டயர்மெண்ட்டுக்குள்ளேயே மகளுக்கு கல்யாணம், பிள்ளைபேறுன்னு
கடமை முடிச்சு, நான் ரிட்டயர்மெண்ட் ஆவதற்கு 4 மாசம் முன்னாடி
மகனுக்கு நல்ல வேலை கிடைச்சது. ஆறே மாசத்துல துபாய்
போகணும், போஸ்டிங் அங்கேன்னு வந்து நின்னான்!! தடுக்க
முடியலை.1 வருஷத்துல அவனுக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சு,
பேரப்பிள்ளையையும் பாத்திட்டோம். ரிட்டயர்மெண்ட்டுக்கு
அப்புறம் எனக்கும் பென்ஷன்
கிடையாது. அதனால அவன் அனுப்பி வைக்கும் பணத்துலதான்
நானும் என் பொண்டாட்டியும் குடும்பம் நடத்தறோம்.

எங்களால முடிஞ்சதை சேமிச்சும் வைக்கறோம். பணத்தட்டுப்பாடு
ஏதுமில்லை!” அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே
கோகிலாம்மா எலுமிச்சம் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து
“இதையாவது குடிக்க வைன்னு” கண்ணாலேயே கெஞ்சினாங்க.
அவருக்கும் கொடுத்து வற்புறுத்தி குடிக்க வெச்சு, நானும்
கோகிலாம்மாவும் ஜூஸ் குடிச்சோம்.

எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு? என்ன பிரச்சனைன்னு
கேட்க கோகிலாம்மா சொன்னாங்க,” மாசா மாசம் பணம்
கரெக்டா வந்திடுதும்மா, ஆனா மகன் பேசுறது குறைஞ்சு போச்சு.
ஆரம்பத்துல ஈமெயில் சாட்டிங், போனில் பேசுறதுன்னு இருந்தான்.
இப்ப 4 மாசமா போனும் செய்யறதில்லை, மெயிலும் அனுப்பறதில்லை.
அனுப்பின மெயிலுக்கு கூட,” பிசியா இருக்கேன்” முடியறபோது
சாட் செய்யலாம்னு! பதில் அனுப்பினான். மகளும் கூட பேசறதில்லை.
மனசுக்கு வருத்தமா இருக்கு!! தாங்க முடியலை! எந்தப் பசங்களே
என் வாழ்க்கைன்னு அவங்களுக்காக உழைச்சேனோ அவங்க
இப்படி முகம் காட்ட மறுக்கற அளவுக்கு இருக்காங்களேன்னு”தாங்க
முடியலைம்மான்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.

கூட்டில் இருந்து பிரிந்து போன பறவைக்குஞ்சுகளை நினைத்து
வருந்தும் தாய்ப்பறவைகளாக இருவரும் தெரிஞ்சாங்க. இறக்கை
முளைச்ச பறவைகள்!!! வயசானவங்களை இப்படியே விட்டுட
முடியுமா?? சோறு தண்ணி இல்லாம எத்தனை நாள் இப்படி?
இருப்பாங்க. மனசுல வலி இருந்தா சோறு இறங்காது. அவங்க
மகனுடைய மெயில் ஐடி என் கிட்ட இருக்கு. அவங்க அப்பா
உடல் நிலை சரியில்லாமல், இருப்பதை சொல்லி மெயில்
அனுப்பினேன்.

உடனே தன் நண்பரை அனுப்பி மருத்துவரிடம் அழைத்துப்போகச்
சொன்னாங்க. உடல்நலம் நல்லாத்தான் இருக்குன்னு சொல்லி
மன நல மருத்துவரை ஆலோசிக்க சொல்லி எழுதி கொடுத்தாரு.
நானும் அவங்க கூடத்தான் இருந்தேன். இதமா பேச ஆரம்பிச்சாரு
மருத்துவர். அவர் பேச ஆரம்பிச்சதும் இரண்டு பேரும் அழவே
ஆரம்பிச்சிட்டாங்க. இருவருக்கும் பீபி வேற!! அதிலும் அப்பாவுக்கு
பீபி அதிகமாகி உடனடியா அதே ஆஸ்பத்திரில சேர்க்க வேண்டியதா
போச்சு. என் கணவர் ரவிக்கு போன் செஞ்சு வரச் சொன்னேன்.
அவர் வந்து அந்த வயதான தம்பதியரின் மகனுக்கு போன் போட்டு
மருத்துவமனையில் சேர்த்திருப்பதைச் சொல்லவும் உடனடியா
கிளம்பி வருவதா சொன்னார்.


அன்னைக்கு சாயந்திரமே கிடைச்ச ஃப்ளைட்ட பிடிச்சு மகன்,
மருமகள், பேரன் 3 பேரும் வந்திருந்தாங்க.

அப்புறம் என்ன நடந்தது?
தொடரும்..................

20 comments:

Ungalranga said...

நான் இப்பொழுதே மனதில் பட்டதை சொல்லிடவா? இல்லை அடுத்த பதிவில் நீங்கள் முடிக்கும் வரை காத்திருப்பதா?

Mahi said...

:-|
Enna solvathunnu therila..waiting for the next part!

pudugaithendral said...

ஆஹா கொஞ்சம் வெயிட்டுங்க ரங்கா :))

pudugaithendral said...

நன்றி மஹி. அடுத்த பார்ட் இன்னைக்கே கூட வரலாம்!!!

வல்லிசிம்ஹன் said...

அய்யடான்னு பெரு மூச்சு வருதுப்பா.
நேசமுள்ளாரை நெஞ்சில மட்டும் நினைச்சிட்டாங்க பிள்ளைங்க.

எத்தனை கதைகள் இதே போல.

ராமலக்ஷ்மி said...

காலத்துக்கு அவசியமான கரு. அருமையான நடை தென்றல். அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறோம்.

துளசி கோபால் said...

தொடர் முடியும்வரை தொடர்ந்துட்டு அப்புறம் சொல்வேன்.

pudugaithendral said...

அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன் வல்லிம்மா...

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி,

எப்பவுமே அவசியாமன ஒரு மேட்டர்தான்.

pudugaithendral said...

ரொம்ப பெரிய தொடர்லாம் இல்ல துளசி டீச்சர். அடுத்த பதிவுல முடிஞ்சிரும். :)

ஸாதிகா said...

இதை எல்லாம் பாடிக்கும் பொழுது முதுமையை நினைத்தால்...

Appaji said...

மகனை நேரில் பார்க்க ஆசையாக இருந்ததா...இல்லை...உண்மையிலேயே மனது பாரமாக இருந்ததா அந்த ராமசாமி பெரியவருக்கு!!!!!!!!!!!

பாச மலர் / Paasa Malar said...

நல்லபடியா முடியும்னு நினைக்கிறேன் ....நல்லா எழுதிருக்கீங்க கலா

KSGOA said...

நல்லா இருக்கு.அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

pudugaithendral said...

முதுமையையும் இனிமைதான் ஸாதிகா

pudugaithendral said...

அடுத்த பதிவு இதோ வருது அப்பாஜி

pudugaithendral said...

:)) நன்றி பாசமலர்

ADHI VENKAT said...

கதையின் நடை அருமையா போகுதுங்க. இன்று நிறைய இடங்கள்ல இப்படித் தானே நடக்குது.

பாவம் தான். அந்த வயதானவர்கள்.

pudugaithendral said...

அடுத்த பகுதி போட்டாச்சு அதையும் படிச்சு பாருங்க கோவை2தில்லி. மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

எந்தப் பசங்களே
என் வாழ்க்கைன்னு அவங்களுக்காக உழைச்சேனோ அவங்க
இப்படி முகம் காட்ட மறுக்கற அளவுக்கு இருக்காங்களேன்னு”தாங்க
முடியலைம்மான்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.

நினைத்தாலே வருத்தம் ..சோகம்..