Tuesday, August 20, 2013

சீதா கல்யாண வைபோகமே - 4

பானுபின்னி குளித்து ரெடியாகி வெளியே வரும்போது சீதா துளசி பூஜை செய்துகொண்டிருந்தாள். பார்த்ததும் பானுபின்னிக்கும் ரொம்ப சந்தோஷம். பூஜை முடித்து வந்தவளை கண்ணம் வழித்து முத்தமிட்டார். ”என்ன ஸ்லோகம் சொன்ன?” என்றதும் “அம்மம்மா சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் தான்.

 தேவேந்த்ரானி நமஸ்துப்யம், தேவேந்திர ப்ரியபாமினி ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யம், பத்ரு லாபம்ச தேஹிமே” இதை சொல்லிட்டு துளசிக்கு தண்ணீர் ஊத்துவேன் என்றாள்.

அப்பொழுது அந்த பக்கம் வந்த ராஜி அம்மம்மா, ”கல்யாணத்தன்னைக்கு கொளரிபூஜை செஞ்சு எனக்கு நல்ல புருஷனைக்கொடுன்னு கேட்பதைவிட அந்த பூஜை என்னவோ அதை முன்னாடியிருந்தே ச்ரத்தையா செஞ்சா நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தேன். துளசி பூஜையும் ஆச்சு, கொளரி பூஜையும் ஆச்சு” என்றார். ரொம்ப நல்ல விஷயம்மா என்றார் பானுபின்னி.


 சீதா இந்தக்காலத்து பெண் தான். படித்தவள், நல்லவேலையில் இருக்கிறாள். ஆனால் பூஜைகள் ரொம்ப பிடிக்கும். சமையலிலும் கை தேர்ந்தவள். ”நீ என்ன படித்து, வேலை பார்த்தாலும் சமையலையும் கத்துக்கறது அவசியம்னு “ அவங்க அம்மா பத்மா வளர்த்திருக்காங்க. குளிச்சுட்டு சமயலறைக்கு போகப்போன அம்மாவை தடுத்து நிறுத்தி,” நீங்க நேத்து நிறைய்ய வேலை செஞ்சுட்டீங்க. இன்னைக்கு சமையல் நான் பாத்துக்கறேன். அம்மம்மா சாயந்திரம் ஊருக்கு போறாங்க. உக்காந்து பேசுங்கன்னு” அனுப்பி வெச்சுட்டு. காலையில் டிபன் வேணாம்னு எல்லோரும் சொல்லிட்டதால சூப்பரா டீ போட்டு பிஸ்கட்டோட எல்லோருக்கும் கொடுத்திட்டு சமையலை ஆரம்பிக்க போனாள் சீதா.

தியாகுவின் செல்போன் அழைக்கவே போய் எடுத்து பார்த்தார். நேற்று பெண் பார்த்துவிட்டு போன ரகுராமின் அப்பா மணிதான் அழைத்திருக்கிறார். “சொல்லுங்க சார்!” என்றதும் எதிர் முனையிலிருந்த மணி,” சில விவரங்கள் உங்க கிட்ட பேசணும். எங்கம்மா சொல்ல சொன்ன விஷயங்களை சொல்லணும்.  அந்த பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு.நானும் என் மனைவியும்  வர்றோம். ஓகேயான்னு” கேட்க வாங்க சார் என்றார் தியாகு.

என்னவாக இருக்கும்? என்று பெரியவர்கள் கொஞ்சம் குழம்பினாலும் சரி வரட்டும் பார்த்துக்கலாம் என்று யோசனை ஒரு பக்கம் இருக்க பெரியவர்கள் மத்த கல்யாண விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தார்கள். விவரங்கள் அனைத்தையும் குறிப்பாக எழுதிக்கொண்டால் நல்லது என ஷ்யாமிற்கு தோன்றியது. ஒரு புது நோட்புக்கை சாமியிடம் வைத்து எடுத்துக்கொண்டு ,” அப்பா பிள்ளையார் சுழி போட்டு எல்லா விவரத்தையும் இதுல எழுதிக்கோங்க. நான் அப்புறம் இதை லேப்டாப்பில் எக்ஸல் ஷீட்டாக போட்டு வைக்கறேன். உதவியாக இருக்கு என்று சொல்ல, “அதுவும் சரிதாம்பா என தியாகு எழுத ஆரம்பித்தார்.

”வருங்கால சம்மந்தி வர்றேன்னு சொல்லிருக்கார். அவர் வந்ததுக்கப்புறம் மத்த விவரங்களை எழுதிக்கலாம். முதல்ல அழைப்பவர்கள் லிஸ்ட் எழுதுங்கோ. ஒவ்வொரு ஊரா ஆரம்பிச்சு அந்த ஊர்ல இருக்கற சொந்தக்காரங்க பேரை எழுதுங்க. அப்புறம் அந்த ஊர்ல ஏரியா வைஸ், சென்னைன்னா அங்கே கோடம்பாக்கம், மாம்பலம் இந்த ஏரியாவுல் இருக்கற சொந்தக்காரங்க, நட்புக்கள் இப்படி விடாம எழுதிக்கோங்க. அப்புறம் அதுல நீங்க யாரையெல்லாம் கூப்பிட நினைக்கிறங்களோ அதை தனியா எழுதலாம்” என ஐடியா சொன்னார் ராஜி அம்மம்மா. அம்மம்மா சொன்னமாதிரியே செஞ்சிடலாம் என்றான் ஷ்யாம். அவர்கள் லிஸ்ட் போட்டு முடிக்கவும் மணியும் அவர் மனைவிலீலாவும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வந்தவங்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரிப்பு நடந்தது. சீதா சமையலறையிலிருந்து வந்து வணக்கம் சொன்னாள். கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உள்ளே போய் வருங்கால மாமியாருக்கு டீயும், மாமனாருக்கு காபியும் கொறிக்க முறுக்கும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
தான் சமையலை பார்க்க போவதாக புன்முறுவலுடன் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

“பேசணும். வர்றோம்னு சொன்னதும்” பயந்துட்டீங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லை. சில விஷயங்களை நாம முன்னகூட்டியே பேசி முடிவு பண்ணிக்கறது நல்லது. அதான் நேரிலயே பேசிக்கலாம்னு வந்தோம் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்,”  நாங்க யஜுர் வேதம், நீங்க ரிக் வேதம். அதனால சில பத்ததிகள் (சடங்குகள்) மாற்றம் இருக்கு. அது இதுன்னு குழப்பிக்காம உங்க ரிக் வேத பத்ததி படியே இந்த கல்யாணம் நடக்கட்டும்னு அம்மா சொல்ல சொன்னாங்க. ஏதோ ஒரு வழியில எந்த சண்டை சச்சரவும் இல்லாம நல்லபடியா நடக்கணும் அதுதான் முக்கியம் “ என மணி சொன்னதும் ஆமாம், நீங்க சொல்றது சரிதான் என்றார் தியாகு.

“அப்ப சொன்னபடியே எங்களுக்கு வரதட்சணை வேண்டாம். இவ்வளவு நகை, இவ்வளவு வெள்ளிபாத்திரம் என எதுவும் நாங்க கேட்கலை. அது உங்க இஷ்டம். ஆனா எங்க மருமகளுக்கு நாங்க 5 பவுன் நகை போடறோம்.” என்றதும் ராஜி அம்மம்மா,” குறுக்க பேசறேன்னு தப்பா நினைக்காதீங்கோ
நல்ல பூசலு நீங்க வாங்கறீங்களா? இல்லை நாங்க வாங்கணுமா என்றார்.
“ 5 பவுன் நகை போடறோம்னு சொன்னதால நல்ல பூசலு வாங்க மாட்டோம்னு சொல்லலைம்மா. அது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் வாங்கணும். நாங்க நல்ல பூசலு, நெளிமோதிரம் (நிச்சயதார்த்திற்கு), ரெண்டு தாலி பொட்டு (சின்னது ஒண்ணு, பெருசு ஒண்ணு, ரெண்டும் சேர்த்து ஒரு பவுன்), நானுகோலு, குண்டு, மெட்டி, பில்லாண்ட்லு (சைட் மெட்டி), வாங்கறோம்.” இப்ப ஓகேவா என்றார் சிரித்துக்கொண்டே. சந்தோஷமென்றார் ராஜி அம்மம்மா.

நெளி மோதிரம்/வங்கி மொதிரம்



nallapusalu



thali bottu


metti/chuttu



pillandlu

மணி பானுப்பின்னியை பார்த்து, “மணப்பெண்ணிற்கு எடுக்க வேண்டிய புடவைகள் என்னென்ன உங்களையே கேட்டுக்க சொன்னாங்க அம்மா” என்றார். அப்படியா நல்லது எல்லாம் விவரமா சொல்றேன் என்றார் பின்னி.

 இப்ப நாங்க என்ன செய்யப்போறோம்னு சொல்றேன் என தியாகு ஆரம்பித்தார். எங்க பொண்ணுக்கு நாங்க 25 பவுன் நகை சேர்த்து வெச்சிருக்கோம்.  வெள்ளி பாத்திரங்களும் ரெடியா இருக்கு. அதைத் தவிர பொண்ணுக்கு நாங்க வேண்டிய ரெண்டு தாலி பொட்டு (சின்னது ஒண்ணு , பெருசு ஒண்ணு, ரெண்டும் சேர்த்து ஒரு பவுன்) மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், ப்ரெஸ்லெட், ரிஸ்ட் வாட்ச் போடறோம். மாப்பிள்ளை அழைப்பு (ஜானவாசத்திற்கு) கோட் சூட், ஷூ/ ஷர்வானி , ஷூ எது மாப்பிள்ளைக்கு இஷ்டமோ அந்த செலவு எங்களது. காசியாத்திரை செப்பல் அளவு பார்த்து வாங்கிக்கிடட்டும். அந்த பில்லும், ஜானவாச ஷூ பில்லும்  எங்க கிட்ட கொடுத்திடுங்க நாங்க பணம் கொடுத்திடறோம். கல்யாணத்திற்கு என்னென்ன வஸ்த்திரம் எடுக்கணுமோ அதையும் மாப்பிள்ளைக்கு நாங்க எடுக்கறோம்.” என்றதும். ரொம்ப சந்தோஷம் என்றார் லீலா. 

ராஜி அம்மம்மா , “ என்னுடைய அபிப்ராயத்தை சொல்லிடறேன். நெளி மோதிரம்,  மாப்பிள்ளைக்கு போடற மோதிரம் ரெண்டும்  ஒவ்வொண்ணும் ஒரு பவுன் இருக்கணும் என்பது சிலரோட பழக்கம். சைஸ் சரியில்லாம போயிடும் என்பதால பொண்ணுக்கு நாங்க நெளிமோதிரமும், அதே எடைக்கும் நீங்க பையனுக்கு பிடிச்ச மோதிரமும் வாங்கிகிட்டா அதை சபையில கொடுக்கும்போது மாத்திக்கலாம். என்றார். “ இந்த ஐடியா நல்லா இருக்கே.  அப்புறம் கல்யாண மோதிரம் சைஸ் சின்னதா போச்சுன்னு வருத்தப்பட வேண்டாமே! அப்படியே செஞ்சுக்கலாம்.” என்றார் மணி. “ சீதா விரல் சைஸுக்கு மெட்டியும், பில்லாண்ட்லுவும் நீங்க வாங்கிட்டு பில்லை எங்ககிட்ட கொடுங்க. நாங்க பணம் கொடுத்திடுவோம். அதுவும் சைஸ் பெருசா, சின்னதா ஆனா போட்டுக்க கஷ்டம் என்றார் லீலா.

(பதிவு பெருசாக போவதால் மீதி அடுத்த பதிவில்)

தொடரும்


8 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. இதுமாதிரி நெளிமோதிரம் எங்கிட்டயும் இருந்தது. விரலை மறைச்சாப்ல ரொம்பவும் பெரிசா இருந்ததால அழிச்சு ரெண்டு ஸ்லிம்மான மோதிரங்கள் செஞ்சுக்கிட்டேன்.

தொடர் அருமையாப்போகுது தென்றல்..

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்சது நெளி மோதிரம்.கல்யாணத்துக்கு வாங்கினது ரொம்ப சின்னதா போயிடிச்சின்னு கொடுத்துட்டு வேற வாங்கியதும் நெளிதான். :))

//“தொடர் அருமையாப்போகுது தென்றல்.”//

ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றிப்பா

Appaji said...

படிக்கும் போதே மிக சந்தோஷமாக உள்ளது ...எல்லார்க்கும் இப்படி அமைந்தால் எப்படி இருக்கும் !!!

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

22 வருஷமா எங்க வீட்டுல இதுதான் பழக்கம். நோ டொளரி, நோ வரதட்சணை, நோ கசக்கி பிழிதல். :))

வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

22 வருஷமா எங்க வீட்டுல இதுதான் பழக்கம். நோ டொளரி, நோ வரதட்சணை, நோ கசக்கி பிழிதல். :))

வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல் - மாப்பிள்ளை வூட்டாரும் சரி - இவங்களூம் சரி - ரொம்ப நல்லவங்க ரெண்டு பேருமே - பேசியே முடிச்சிடுறாங்க எல்லாத்தயும். துணி மணி - நகை விபரங்கள் - எத்த்னை பவுன் -வெள்ளிச் சாமான் - தாலிச் செயின் - மாப்பிள்ளைக்கு செயின் மோதிரம் ரிஸ்ட் வாட்ச் - பிரேஸ் லெட் இத்யாதி இத்யாதி - மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை வீட்டாரும் பெண்ணுக்கு பெண் வீட்டாரும் கை மோதிரம் வாங்கிக் கிட்டு - கல்யணாத்துக்கு முன்னாடியே ரெண்டு வீட்டாரும் பில்லையும் மோதிரத்தையும் மாத்திக்கணும்னு பேச்சு - விலை வித்தியாசம் இருந்த கொடுத்துடணூம் - ஆகா ஆகா என்ன அண்டர்ஸ்டாண்டிங்க் - நாம் எந்த ஒலகத்துல இருக்க்கோம்.

சுமுகமா முடிச்சிக்கிட்டாங்க - நாள் குறிச்சா வேலயத் தீயா ரெண்டு வீட்டாரும் செய்யப்போறாங்க -

நாம எல்லாரும் இப்பப் போய்ட்டு, பேப்பர் வருதோ இல்லையோ - கலயாணத்துக்கு மறந்துடாம மொய் எழுத வதுடுவோம்ல. என்ன நான் சொறது சரியா ? அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

என் கல்யாணத்தின் போது இந்த வழக்கம் தான் இருந்தது. அதைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். :))

தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

என் கல்யாணத்தின் போது இந்த வழக்கம் தான் இருந்தது. அதைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். :))

தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றி