Tuesday, September 17, 2013

எங்க ஊரு ”கடப்பா”

எங்க ஊர்ல ரோட்டோர கடைகள் ஏராளம். போனவாட்டி ஊருக்கு போனப்ப வீதிக்கு 4 சாப்பாடுக்கடை இருப்பதை பார்த்தேன். இப்ப ஊர்ல யாரும் சமைப்பது இல்லையோன்னு டவுட்டே வந்திருச்சு.

ஆனாலும் பாருங்க எங்க ஊர்ல இந்த சாப்பாட்டு ஐட்டங்கள் வித்தியாசமா இருக்கும். ”முட்டைமாஸ்னு ஒரு அயிட்டம் ரொம்ப நல்லா இருக்கும்.” அக்கா. ஊருக்கு போகையில போட்டோவாவது பிடிச்சு கொண்டாந்து போடுங்கன்னு”!!! தம்பியோட நட்பு சிங்கையிலிருந்து மெயில் அனுப்பியிருந்தாப்ல.  அவருக்காகவே அந்த கடை பக்கம் போய் போட்டோ எடுத்தாந்து ஃபேஸ்புக்ல போட்டேன். ரொம்ப சந்தோஷ்ம்க்கான்னு ஏதோ பார்சல் சிங்கைக்கு அனுப்பி வெச்சாப்ல சந்தோஷப்பட்டார்.

முட்டை மாஸ் புதுகை ஸ்பெஷல்






அதுவும் இந்தக் கடையிலதான் கிடைக்கும். இதுக்காகவே ஞாயிறு கூட்டம்....
திலகர் திடல் எதிரில் இந்த கடை இருக்கு. அதே மாதிரி எங்க ஊர்ல பரோட்டா, இடியாப்பம் எல்லாமே சூப்பரா இருக்கும். கடப்பான்னு ஒரு ஐட்டம் கொடுப்பாங்க பாருங்க. செம ருசி. 4 பரோட்டா வாங்கினாலும் கடப்பா கட்டினீங்களான்னு கேட்டு வாங்கிகிட்டு போவாங்க.

பரோட்டாவுக்கு குருமாவும் நல்லா இருக்குன்னாலும் கடப்பாவோட ருசியே ருசிதான். ஊருக்கு போகும்போதெல்லாம் பசங்க கண்டிப்பா ஒரு கை பாத்துடுவாங்க. எங்க ஊர்ல ராதாகபேன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, பிருந்தாவனம் ஸ்டாப் பக்கத்துல இருக்கு. அங்கே ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் இட்லியோட சட்னி, சாம்பார் ஏதும் கிடையாது. கடப்பா மட்டும்தான் தருவாங்க. இங்கயும் கூட்டம்னு சொல்லணுமா என்ன?

ஊருக்கு போனாத்தான் கடப்பாவான்னு பசங்க கேப்பாங்க. அதெப்படி. வூட்டுலயே கடப்பா போடுவோம்னு களத்துல இறங்கி கடப்பா செஞ்சு கொடுப்பது பழக்கமாகிடிச்சு.   அந்த கடப்பா இன்னைக்கும் செஞ்சேன். அந்த செய்முறை எல்லாம் ரொம்ப சிம்பிள் தான். வாங்க எப்படின்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1கப்
உருளைக்கிழங்கு - சின்னது 2
வெங்காயம் - நீள்வாக்கில் அரிந்தது 1
பச்சைமிளகாய் - 4
தேங்காய் -  1/4 மூடி
சோம்பு - கொஞ்சம்,
பூண்டு - 2 பல்
எலுமிச்சம் பழம் - 1
உப்பு, கொத்தமல்லி தேவைக்கேற்ப

தாளிக்க:
கறிவேப்பிலை, கொஞ்சம் பட்டை, கொஞ்சம் பிரிஞ்சி இலை, ஏலக்காய் 1.

முதல்ல பாசிப்பருபை குழைய வேக வெச்சு வெச்சுக்கோங்க. உருளைக்கிழங்கை பொடியா அரிஞ்சு தனியா வேக வெச்சாலும் சரி. இல்லாட்டி வேகவெச்சு  தோலுரிச்சு மசிச்சு வெச்சுக்கிட்டாலும் சரி.

தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு இவைகளை மைய அரைச்சு வெச்சுக்கணும்.




1 ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிச்சுக்கணும். அரிஞ்சு வெச்சிருக்கற வெங்காயத்தை போட்டு வதக்கணும்.


மசிச்சு வெச்சிருக்கற உருளைக்கிழங்கை அதுல கொட்டி கொதிக்க விடணும். 2 நிமிஷம் கழிச்சு அரைச்சு வெச்சிருக்கற மசாலாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நல்லா கொதிக்க விடணும்.


தேங்காய் மசாலா
 உப்பு போட்டு கொதிச்சதும் குழைய வேக வெச்சு வெச்சிருக்கற பாசிப்பருப்பையும் போட்டு நல்லா கொதிக்க வைக்கும்போதே வாசனை வீடு ஃபுல்லும் நிறைஞ்சிடும். 

குழைய வேகவெச்ச பா.பருப்பு

தேவைப்பட்டா கொஞ்சம் தண்ணீர் சேத்து கொதிக்க விடணும். 5 நிமிஷம் போல கொதிச்சதும் அடுப்ப ஆஃப் செஞ்சிட்டு எலுமிச்சம் ரசம், கொத்தமல்லி சேர்த்து கலக்கினா சுவையான கடப்பா ரெடி. இட்லி தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் சூப்பர் ஜோடி.

இன்னைக்கு காலேல கடப்பா செய்யும்போதே வாசனைக்கு பசங்க பசிக்குதுன்னு சாப்பிடலாமான்னு கோரஸ் போட்டாங்க. :))

கடப்பாவில் மிதக்கும் இட்லி :)




13 comments:

Geetha Sambasivam said...

அநியாயமா இல்ல இருக்கு?? கடப்பாவுக்கு நாங்க தான் சொந்தம்னு கும்பகோணத்துக்காரங்க பெருமையடிச்சுட்டு இருக்கிறச்சே நீங்க வந்து புதுகை தான்னு சொன்னா எப்பூடியாம்? :)))

ஹிஹிஹி, ஆனால் எனக்கு என்னமோ கடப்பா பிடிக்காது. பூண்டு நீங்க சொல்றாப்போல 2 பல்லெல்லாம் இல்லை; நம்ம 32 பல்லை விடக் கூடுதலாப் போடுவோம்னு நாகைப்பட்டினம் லக்ஷ்மிவிலாஸ் ஹோட்டல்காரங்க ஒருதரம் சொன்னாங்க. (அவங்க சொந்தம் எங்களுக்கு) :)))) ஹிஹிஹி அன்னிக்கே கடப்பாவுக்கு ஜூட் சொல்லியாச்சு. :)))) நாலுபேருக்கான கடப்பாவுக்கு 50 கிராமுக்குக் குறையாமல் பூண்டு சேர்ப்பாங்களாம். :)))

Geetha Sambasivam said...

நான் சரியான தீனி தின்னி பாருங்க! சரியா கடப்பாப் பதிவுக்கு வந்துட்டேன். :)))) மத்ததெல்லாம் விட்டுட்டு! :)))

மங்களூர் சிவா said...

கடப்பா கல்லுதான் தெரியும் இப்பிடி ஒரு சாப்பாடு ஐட்டமா??

Jaleela Kamal said...

கடப்பா ரொம்ப நல்ல இருக்கு, முன்பு ஒரு முறை செய்தது, இப்ப ஞாபகப்படுத்திட்டீங்க.

இராஜராஜேஸ்வரி said...

கலக்கலான கடப்பா///

pudugaithendral said...

வாங்க கீதா மேடம்,

கடப்பா கும்பகோணத்துக்குத் தான் சொந்தம். ஆனா நாங்க எங்க ஊர்ல தான் அதிகம் கடப்பா சாப்பிட்டுருக்கேன். அதனால எங்க ஊர் கடப்பா. :))

நிறைய்ய பூண்டு வெச்சு செய்வதனால வாசனை தூக்கலா இருக்கும். ஆனா நான் கொஞ்சமாத்தான் சேர்ப்பேன். ஆனாலும் எங்க வீட்டுல அரைக்கிலோ பூண்டு போட்டு மிளகு ரசம் வெச்சாலும் பத்தாதுன்னு வெச்சுக்கோங்க. :)

இந்த பதிவுக்காவது வந்தீங்களேன்னு சந்தோஷப்படறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிவா,

சின்ன வயசுல எனக்கும் கடப்பான்னா கடப்பா ஷ்டேஷன், கடப்பா கல்லுதான் தெரியும். அப்பா ஒரு முறை வாங்கிவந்து பழக்க படுத்தினாங்க. அம்புட்டு ருசி.

எங்க ஊர் திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடிக்கு பக்கத்துல இருப்பதால பக்கத்து ஊர்லேர்ந்து வாக்கப்பட்டு வந்தவங்க, வந்து போனவங்க இருப்பதால செட்டிநாட்டு உணவுகளும் நல்லா இருக்கும். தஞ்சாவூர் கும்பகோணம் அயிட்டங்களும் ருசிக்க கிடைக்கும்.

அசோகா அல்வா, அக்காரவடிசல், குழிப்பணியாரம்.... இப்படி பெரிய்ய லிஸ்டே இருக்கு. இன்னைக்கும் ஹோட்டல்களில் இடியாப்பம் கிடைக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஜலீலாக்கா,

உங்க பதிவுகள்ல கடப்பா பத்தி பாத்திருக்கிறேன். :)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கு மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

கடப்பா நல்லாருக்கு. இது பூரி மசாலுக்கு தூரத்துச் சொந்தம் போலவும் இருக்கு :-))

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம்ல. :)

வருகைக்கு மிக்க நன்றி

ADHI VENKAT said...

நல்லா இருக்கே. இதுவரை சாப்பிட்டதில்லை. செய்து பார்க்கிறேன்.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ருசிச்சு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

வருகைக்கு மிக்க நன்றி