Friday, October 04, 2013

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி.........

இந்த ஜல்ஜல் சலங்கை ஒலி வியாழக்கிழமை மதியம் முதலே கேட்க ஆரம்பிச்சிடும். கொம்புகளை ஆட்டி ஆட்டிக்கிட்டு மாடுகள் போகும் அழகே அழகு. எங்க புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை சந்தை. அந்த சந்தைக்கு மாடு,ஆடு எல்லாம் பக்கத்து கிராமத்திலிருந்து வரும்.எங்க வீடு அப்ப வடக்கு 4ஆம் வீதியில் இருக்கும்.  கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி எல்லாம் ரிப்பன் வெச்சு அளந்தாப்ல இருக்கும். ராஜா காலத்துல அம்மன் வீதி உலாவா இல்ல ராஜா பவனி வரும் காரணத்திற்காக இப்படி அழகா திட்டம் போட்டி கட்டிருப்பாங்க.

வடக்கு 4 அப்படின்னா ஐயர்குளம் இறக்கத்துலேர்ந்து தஞ்சாவூர் ரோட் தாண்டி அப்புறம் நீள்ள்ள்ள்ளமா வடக்கு 4 தான்.  தஞ்சாவூர் ரோட் தான் மெயின் ரோட். அங்கே நெய்க்கொட்டான் மரம் ஸ்டாப்பிங்கில் ரைட் திரும்பினா வடக்கு 4. இந்த பாதையில போனா மெயின் ரோட் கரைச்சல் இல்லாம ஆடு,மாடை கூட்டிகிட்டு போகலாம்னு சந்தைக்கு போறவங்க இந்த வீதியை தேர்ந்தெடுப்பாங்க. அதென்னமோ வடக்கு3, வடக்கு 2க்கெல்லாம் இந்த பாக்கியம் கிடைக்காது. சில சமயம் பிருந்தாவனம் ஸ்டாப்பிங் பக்கம் ஏதும் மீட்டிங், தர்ணான்னா பஸ் ரூட்டாவும் மாறிடும் எங்க வீதி.

சரி மேட்டருக்கு வருவோம். எங்க வீட்டு வாசல்ல ஒரு முருங்கை மரம் உண்டு. வடக்கு 4 திருப்பம் திரும்பினதும் எங்க வீடு தான் முதல் வீடுன்னு சொல்லலாம். எதிர் வரிசையில் வீடுகள் இருந்தாலும் கொஞ்சம் உள்ளே தள்ளி எங்க வீடு ஆரம்பிச்சதும் வலது பக்கத்துல வேற வீடுகள் இல்லாததாலும் எங்க வீடு தான் முதல் வீடு கணக்கு. வாசலில் காத்தாட உட்காற கட்டை கட்டி வெச்சிருப்போம். எங்கம்மா நல்லா மெழுமெழுன்னு சாணி தெளிச்சு எங்க வீடு எவ்ளோ அகலமோ அவ்ளோ அகலதுக்கு மெழுகினாப்ல வாசற் தெளிச்சு சுத்தமா வெச்சிருப்பாங்க. (அந்த வாச தெளிக்க ரெண்டு தேக்சா தண்ணியும் 1 சட்டி சாணமும் தேவைப்படும் என்பது தனிக்கதை. அவங்க மாதிரி நாம வாச தெளிக்காட்டா கோவப்படுவாங்க, நமக்கு டென்ஷனாகும் இந்த கொடுமை எதுக்குன்னு ராத்திரி தண்ணி தவலையை கொண்டாந்து வைப்பதோட நம்ம கடமை முடிஞ்சிடும்.) :))

எங்கம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு செஞ்சு வெச்சா காத்தாட உட்கார வசதியா இருக்குன்னு மாட்டை மரத்துல கட்டிட்டு அதுக்கு பக்கத்துலேயே துணியை விரிச்சு சாப்பிடுவாங்க, இல்ல தூங்கியே போயிடுவாங்க. மாடு சும்மா இருக்குமா.  அதோட காலால அசஞ்சுகிட்டே இருக்கும். எங்கம்மா கஷ்டபட்டு வாசல் தெளிச்ச இடம் கொஞ்சம் பள்ளமாயிருக்கும். :(( வேலை முடிஞ்சு வந்து அம்மா பாத்துட்டு கோவ படுவாங்க. ஆனாலு இதையெல்லாம் ஒண்ணும் சொல்லிட முடியாது பாருங்க.

எங்க ஊரு டவுன் தாங்கறதால கிராமத்துக்கான அழகும் இருக்கும், அதே சமயம் கொஞ்சம் பெரிய ஊருக்கான சாயலும் இருக்கும். வியாழக்கிழமை எங்க வீதி ரொம்ப பிசியா இருப்பதில் எனக்கென்னவோ ரொம்ப பெருமையா இருக்க்கும். புதுக்கோட்டை சந்தை பெருசு, எங்க கிராமத்துலேர்ந்து அங்க தான் வருவோம்னு பக்கத்து கிராமத்துலேர்ந்து வந்து படிக்கற பசங்க பெருமையா சொல்வாங்க. ஆனா இப்ப வரைக்கும் சந்தையை போய் பாத்தது இல்லை.  மந்தை மந்தையா ஆடுகள் போகும். கருப்பு ஆடுகளா ஒரு தடவை போகும். அடுத்து வெள்ளாடு. அதுல ஏதாவது ஒரு குட்டி பள்ளத்துல இறங்கிரும். அதை மேலே எழுப்பி கூட்டிகிட்டு போவாக.  அந்த ஓடிபிடிச்சு வெளையாட்டுல ஆட்டோட சத்தம் கூட இப்பவும் என் காதுல கேட்டுகிட்டுத்தான் இருக்கு. பெரிய பெரிய கொம்புகளோட மாடுகள், வெள்ளை வெளேர்னு சில, பழுப்பு கலர்லன்னு பார்க்க ஆனந்தமா இருக்கும்.

ஹேய்,ஹோய்னு சத்தம்..... ஆடு கத்துற சத்தம், மாட்டோட ஜல் ஜல் சத்தம் இதெல்லாம் என்னவோ எங்க வீதிக்கு ஒரு புனிதத்தை கொடுக்கறாப்ல ஒரு ஃபீலிங்க்ஸாஃப் வடக்கு4 தான் போங்க. கோழிகளை சைக்கிளில் வெச்சு கட்டி எடுத்து போவாங்க அதான் கஷ்டமா இருக்கும். மாட்டு வண்டிகளில் சாமான்கள் எடுத்துக்கிட்டு போவாங்க. அப்பவும் ஜல் ஜல் தான். மெயின் ரோட்டில் வண்டிகளுக்கு பயந்து எங்கயும் ஒதுங்காம தடிகொண்ட ஐயனார் மேட்டுல சல்லுன்னு இறங்கி வந்து நம்ம வீதியிலதான் இளப்பாறல். பல சமயம் “கொஞ்சம் தண்ணி கொடுங்கம்மா!!” நீச்சத்தண்ணி இருக்கு கொஞ்சம் உறப்பா ஏதாவது இருந்தா கொடுங்கன்னு” கதவை தட்டி கேப்பாங்க.

வியாழக்கிழமை ஆரம்பிக்கும் இந்த ஜல்ஜல் சலங்கை ஒலி வெள்ளிக்கிழமை சாயந்திரம் திரும்ப கேட்கலாம். சந்தை முடிஞ்சு வியாபாரம் ஆகாத மாடோ, இல்ல வியாபரம் முடிஞ்சதையோ இந்த பக்கத்தான் திரும்ப கூட்டி போவாக. 5.30 மணிக்கு மேலே ஆரம்பிக்கும் இந்த சத்தம் பல சமயம் ராவு வரைக்கும் இருக்கும். வடக்கு 3ஆம் வீதியில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு. அந்த சாமிக்கு பூச்சொரிதல் விழா நடக்கும். காப்பு கட்டு அம்மன் புறப்பாடு, மஞ்சத்தண்ணி ஊத்த வர்றது இப்படி அந்த சமயத்துல வடக்கு 2, வடக்கு3, வடக்கு4 ரொம்ப புனிதமா இருக்கும். அதுக்கு இணையா ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இந்த பிராணிகள் எங்க வீதியில் போவதும் எனக்கு
புனிதம்.

இப்பவும் வியாழக்கிழமை வந்தா  என் மனசு இன்னமும் எங்க வடக்கு4ஆம் வீதி வீட்டுக்கு போயிரும் !!! வாசல்ல உட்கார்ந்து படிச்சிகிட்டோ, ரேடியோ கேட்டுக்கிட்டோ மாடுகள் போவதையும், வருவதையும் நான் பார்த்துக்கிட்டு இருப்பது போலவே இருக்கும். இப்ப சந்தை அந்த அளவுக்கு நடக்குதுன்னும் தெரியாது, அந்த வீதி பக்கம் தான் மாடுகளும், ஆடுகளும் போகுதான்னும் தெரியாது. ஆனா பாருங்க என் நினைவுகளில் சந்தை, ஜல்ஜல் ஒலி இதெல்லாம் ரிங்காரம் மீட்டிக்கிட்டு இருக்கு.



13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் பாடல்... பதிவும்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

AKM said...

அழகான நினைவு கூறல்.. எப்போதுமே சில நினைவுகள்
நினைத்தாலே இனிக்கும்
வாழ்த்துக்களுடன்
ஏகேஎம்.

கீதமஞ்சரி said...

பசுஞ்சாண வாடையோடு மண் மணம் கமழும் அழகிய கிராமிய நினைவுகள். வாசிக்கும்போதே நிகழ்வுக்குள் ஈர்த்துக்கொள்கின்றது எழுத்து. பகிர்வுக்கு நன்றி புதுகைத் தென்றல்.

இராஜராஜேஸ்வரி said...

தென்றலின் சலங்கை ஒலி ரசிக்கவைத்தது..

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ரொம்ப நன்றிங்க. என்னவோ தமிழ்மணத்துல இணைக்கும் ஞாபகமே இருப்பதில்லை.

ரசிப்புக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

வாங்க ஏகேஎம்,

நலமா?? நினைவுகள்தானே நம்மை தாலாட்டிகிட்டு இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கீதமஞ்சரி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

தங்களின் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி

Pudukairavi said...

நானும் புதுகையைச் சேர்ந்தவன். உங்கள் வலைப்பூவில் புதுகையைப்பற்றி எழுதும்போது ஆர்வமாக படிப்பேன். நீங்கள் எழதிய புதுகையில் உள்ள இடங்கள் பிருந்தாவனம், கீழராஜவீதி, ஜயர்குளம், போன்ற பகுதிகளில் வசித்து இருக்கிறேன். மாரியம்மன் பூச்சொரிதல் விழாவை நானும் கண்டு இருக்கிறேன். என்னுடய பழைய நினைவுகளை மீட்டுகொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. நான் சில மாதங்களுக்கு முன்புதான் வலைப்பூவை தொடங்கி இருக்கிறேன். புதுகைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.

pudugaithendral said...

வாங்க நம்ம ஊர்க்காரரே,

கண்டிப்பா எழுதறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி எல்லாம் ரிப்பன் வெச்சு அளந்தாப்ல இருக்கும்.
//////////

ஒருவரும் இது மாதிரியான உவமையைக் கொடுத்ததில்லை. பலே.

பாண்டியன்

pudugaithendral said...

வாங்க பாண்டியன்,

நம்ம ஊர் ஒரு அழகு. அந்த நேர்த்தி வேற எங்கயும் பார்க்க முடியாது என்பது என் அபிப்ராயம். :))

வருகைக்கு மிக்க நன்றி