Monday, October 21, 2013

இட்லி மஹாத்மியம்.......

 இட்லி இந்த ஞாபகம் வந்தாலே என் மனசுல கொசுவத்தி சுத்தி ஓடும் இடம் “தனம் அத்தை” வீடு. எங்க பக்கத்து வீட்டுக்காரங்க. தினமும் மாமாவுக்கு இட்லிதான் வேணும்னு அத்தை மெத்மெத்துன்னு இட்லியும் தொட்டுக்க அம்மியில் அரைச்ச காரச்சட்னியும் செஞ்சு வெச்சிருப்பாங்க. நமக்கு காலை சாப்பாடு அத்தை வீட்டுல தான். மாமா சாப்பிடும்போது மறக்காம “மருமவளை கூப்பிடுன்னு” அழைப்பு விட்டு நடராஜ் அண்ணா (தனம் அத்தை மகன்) வந்திருவாங்க.  இப்ப வரைக்கு என் ஞாபகத்துல அந்த சூப்பர் இட்லிதான்!!
   
பிறந்த வீட்டில் காலை டிபன்லாம் கிடையாது. டைரக்ட்டா லன்ஞ் தான். காலையும் மதியமும் சாப்பாடு. ராத்திரி இட்லி!!! தினம் தினம் தினம் இட்லி.... அலுப்பா இருக்கும் இந்த அரிசிகட்டியை சாப்பிட. ஆனா வேற டிபன்லாம் எப்பவாவதுதான் என்னா? அம்மா வேலைக்கு போறவங்க. அவ்வாவால இட்லிதான் அடுக்கு தீபாரதனை மாதிரி ஏத்தி வெக்க முடியும். தொட்டுக்கவா இருக்கவே இருக்கு கன்பவுடர்!!!!

நமக்கு சூடா இருந்தாத்தான் பிடிக்கும் என்பதால ஆறிபோன சோறு சாப்பிட இட்லி எம்புட்டோ தேவலாம்னு ஓட்டுவேன்.  இந்த இட்லிக்கு மாவரைக்கற வேலை இருக்கே!!!! அப்பப்பா..... கஷ்டம். அம்மா வேலைக்கு போவதால இட்லிக்கு அரைக்கபோடுவது என்னவோ பெரிய விஷயமா இருக்கும். அம்மாம் பெரிய கல்லை எடுத்து கழுவணுமே!! அதைவிடவும் கொடுமை அரிசியை களைவது. இல்லாட்டி அரைக்கும்போது கல்லு கல்லுல பட்டு நரநரன்னு சத்தமா இருக்கும்.


மும்பை போனப்பறம் இந்த வேலையெல்லாம் எனக்கு  வைக்காம அம்மம்மாவும், அத்தையுமே செஞ்சிடுவாங்க.  கல்யாணம் ஆகி ஹைதைக்கு வந்ததற்கப்புறம் தான் ”காலைச்சாப்பாடு என்ன??!!”” எனும் பிரச்சனையை நேரடியா சந்திக்கும் வாய்ப்பு. அப்ப எங்க கிட்ட மிக்சிதான் இருந்தது. அந்த பெரிய  கல்லு இருக்கும் கிரைண்டர் வாங்கவேணாம்னு நானும் அயித்தானும் முடிவா இருந்தோம். மிக்சியில் இட்லிக்கு மாவரைச்சா தோதா வராது.


அரைக்கும்போதே மாவு சூடாகிடும். கிரைண்டரில் அரைப்பது போல உளுந்தை அழகா அரைக்க மிக்சியால் முடியவே முடியாது. (இல்ல எனக்கு தெரியாது!)  இங்கே ஆந்திராவில் இட்லிக்கு போடுவதுன்னு ரொம்ப சுலபமான வேலை அவங்களுக்கு. தோசைக்கு அரைக்கணும்னா தான் மெனக்கெடுவாங்க. அதாவது உளுந்து மட்டும் ஊறவெச்சு அரைச்சிட்டு, ஊற வெச்ச  இட்லி ரவையை சேர்த்து கலக்கிடுவாங்க. அவ்ளோதான் வேலை. ஆனா நம்ம தமிழகத்து இட்லி மாதிரி சாஃப்ட்டால்லாம் இருக்காது. ஏதோ ரவா இட்லி சாப்பிட்டாமாதிரிதான் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் ருசியில் அரிசி இட்லி சாப்பிட்டமாதிரி இருக்கும்.


ஆஷிஷ் சின்ன குழந்தையா இருந்த பொழுது இட்லிதான் தினமும் தருவேன். உளுந்து உடலுக்கு பலம்னு தினம் காலை இட்லி. ஆனா அது  தயிர் வெச்சு கொடுப்பேன் என்பதால ஒண்ணும் பெருசா தெரியலை ஆஷிஷுக்கு. ஆனா அயித்தானுக்கு இட்லி ரவாவில் செஞ்ச இட்லி விரும்பி சாப்பிட மாட்டார். சரின்னு அந்த ரவையை ஊற வெச்சு அதை திரும்ப மிக்சியில் அரைச்சுன்னு என்னன்னவோ செஞ்சு பாத்தேன்..... ம்ஹூம் இட்லின்னு சொல்லிகலாம். ஆனா டிகிரி காபி மாதிரி “டிகிரி இட்லியா” வந்ததே இல்லை.


இட்லியில் என்ன இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு. மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேர்னோ, மெத்மெத்துன்னோ இட்லி சாப்பிட்டதான் இட்லி. மத்ததெல்லாம் இட்லி எனும் டிகிரிக்கு கீழ வராது. இட்லியே பிடிக்காதுன்னு சொன்னியே இப்ப என்ன?ன்னு கேக்கறவங்களுக்கு. தினம் இட்லி சாப்பிட்டா போரடிக்கும். ஆனா அதுவே சரியான கூட்டணியோட  வாரத்துக்கு 3 நாள் கூட சாப்பிடலாம். :))  மேலும் சில இட்லி ரெசிப்பிக்களுக்கு இங்கே


இட்லிக்கு பல வீடுகளில் சட்னி அரைக்க சோம்பிகிட்டு பொடியோட காலதள்ளுவாங்க. மிளகாய்ப்பொடி எண்ணெயில் கலந்து இட்லியை அதில் புரட்டி எடுத்துகிட்டு போவது டூருக்கோ, ட்ரையினுக்கோ ஓகே.... ஆனா வீட்டுல சாப்பிடும்போது சாம்பார், சட்னி தான் பெஸ்ட். இதுல வேர்க்கடலை சட்னி, புதினா சட்னி, வெங்காய சட்னி, காரசட்னின்னு எதுவும் சூப்பரா இருக்கும்.


ரவா இட்லிக்கு கொத்சு சூப்பர் காம்பினேஷன்.  பட்டன் இட்லி தட்டில்  இட்லி வார்த்து சுடச்சுட சாம்பார் செஞ்சு அதில் இந்த இட்லிகளை மிதக்க விட்டு கொடுத்தால் குட்லி ரெடி (எங்க வீட்டுல பட்டன் இட்லிக்கு பேரு குட்லி).  சட்னீஸுன்னு ஒரு ஹோட்டல் இங்கே ஹைதையில் அதை பத்தி சொல்லியிருக்கேன். அங்கே விஜயவாடா பாபாய் ஹோட்டல் இட்லின்னு ஒண்ணு கிடைக்கும். சூடான இட்லி தலையில வெண்ணெய் வெச்சு கொடுப்பாங்க. சும்மா........ சூப்பர் ருசி.

காஞ்சிபுரம் இட்லியோட ருசி சூப்பரா இருக்கும். இவ்ளோ சொன்னேனே எனக்கு இட்லி சரியா போட வந்ததா இல்லையா!!!


தொடரும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.


அடுத்த பதிவு நாளை....

23 comments:

இராஜராஜேஸ்வரி said...


"இட்லி மஹாத்மியம்.......
இனிமை..!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவைத்தேன்... தொடர்க... வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

சட்னீஸ்க்கு நீங்க கூட்டிப்போனதை மறக்கமுடியுமா!!!!!

அடடா..... என்ன ருசி:-)

எனக்கு இட்லி செய்யப்பிடிக்கும். சட்னி அரைக்கத்தான் சோம்பல்!

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

வருகைக்கும் ருசித்தமைக்கும் மிக்க நன்றி. (தமிழ்மண இணைப்புக்கும்)

புதுகைத் தென்றல் said...

வாங்க டீச்சர்,

சட்னீஸ் கொசுவத்தி சுத்துதா.. :))

எனக்கு வெறும் இட்லிபொடியோட ஒப்பேத்த பிடிக்காது. ஆனா ஆஷிஷுக்கு பொடி மட்டும் இருந்தாலே போதும் :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க டீச்சர்,

சட்னீஸ் கொசுவத்தி சுத்துதா.. :))

எனக்கு வெறும் இட்லிபொடியோட ஒப்பேத்த பிடிக்காது. ஆனா ஆஷிஷுக்கு பொடி மட்டும் இருந்தாலே போதும் :))

வருகைக்கு மிக்க நன்றி

Ambal adiyal said...

இட்லி என்றதும் இவ்விடத்துக்கு மனம் இழுத்து வந்து விட்டது தோழி :)))
எங்கே எனது பங்கைக் கொடுங்கள் ?....(சுவையான இந்த இட்லியை ஒரு
வழியா சாப்பிட்ட பின்னரும் கட்டிக் கொண்டு போக வேண்டும் ம்ம்ம்ம் ...)

ADHI VENKAT said...

எனக்கும் இட்லி சுடச்சுட சட்னி சாம்பாரோடு சாப்பிட பிடிக்கும். ஆனா என் பொண்ணுக்கு தலைகீழா நின்னாலும் பொடியோடு மட்டுமே பிடிக்கும்.....:))

இப்போ நாங்க இரண்டு பேர் மட்டும் என்பதால் நான் அவள் கட்சிக்கு மாறிடுவேன். யாராவது கம்பெனி கிடச்சா அன்று எனக்கு கொண்டாட்டம்...:))

உங்க இட்லியின் ரகசியத்தை தெரிஞ்சிக்க தொடர்கிறேன்....:)

Thanai thalaivi said...

இட்லிக்கு பேர் வாங்கினவங்க அப்பாவி தங்கமணி மட்டும் தான்னு நினைச்சேன். நீங்களுமா...!? :)) இட்லி கிரைண்டர் இல்ல கல்லுரல்ல அரைச்சா தான் நன்னா வரும். மிக்ஸில அரைச்சு சரியா வராததை பற்றி கவலை படாதீர்கள். ரொம்ப நாளா உங்களை காணோமேன்னு நினைச்சேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அம்பாளடியாள்,

இட்லி கட்டிபோக தோதான அயிட்டம் தான். கட்டி கொடுத்திடறேன். :)

வருகைக்கு மிக்க நன்றி

s suresh said...

எத்தனைதான் வித விதமான டிபன்கள் வந்தாலும் இட்லிக்கு எப்பவும் மவுசு அதிகம்தான்! சுவையான பகிர்வு! நன்றி!

புதுகைத் தென்றல் said...

வாங்க ஆதி,

ஆஷிஷும் அப்படித்தான் இருக்காப்ல. இட்லி, தோசைக்கு பொடி கொடுத்தா ரொம்ப குஷி.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தானைத்தலைவி,

இட்லி, காபி ரெண்டும் சரியா வந்திட்டா அவங்க சமையலில் எக்ஸ்பர்ட் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. :))

திடும் திடும்னு வேலை வந்து அப்ஸாண்ட் ஆயிடறேன். :)

வருகைக்கு மிக்க நன்றி

2008rupan said...

வணக்கம்

இட்லி சுவைத்தேன்......பதிவு அருமை மேலும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதுகைத் தென்றல் said...

வாங்க ரூபன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

காஃபின்னா நரசுஸ் காஃபி மாதிரி,
இட்லின்னா அப்பாவி தங்கமணிதான் ஞாபகம் வரும்!! இப்ப நீங்களும்!! :-)))

எங்கம்மா வீட்டிலயும், இட்லி பிடிக்கும்னாலும், கிரைண்டர் கழுவும் கஷ்டத்தாலதான் அடிக்கடி செய்வதில்லை. இப்ப டேபிள் டாப் கிரண்டர் + ஃப்ரிட்ஜ் புண்ணியத்தில் தினந்தினம் இட்லி/தோசை/ஆப்பம்தான்!!

ஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும் நாட்களில் மனசு என்னா ஃப்ரீயா இருக்கும் தெரியுமா!! பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது! :-))))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அது அப்படித்தான்.

ஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும் நாட்களில் மனசு என்னா ஃப்ரீயா இருக்கும் தெரியுமா!! பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது! :-))))))))//

சேம் ப்ளட்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அது அப்படித்தான்.

ஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும் நாட்களில் மனசு என்னா ஃப்ரீயா இருக்கும் தெரியுமா!! பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது! :-))))))))//

சேம் ப்ளட்.

வருகைக்கு மிக்க நன்றி

ADHI VENKAT said...

ஹுசைனம்மாவின் பின்னூட்டத்தை வெகுவே ரசித்தேன்....

இங்கயும் அதே கதை தான்....:)) மாவும், புளிக்காய்ச்சலும் இருந்து விட்டால் அதை விட நிம்மதி எதுவுமே இல்லை...

புதுகைத் தென்றல் said...

வாங்க ஆதி,

:))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Geetha Sambasivam said...

ஒரு நிமிஷம் எழுதி இருக்கிறது யாருனு பார்த்து அசந்துட்டேன். இட்லினாலே நம்ம ஏடிஎம் இருக்கிறச்சே நீங்க வேறே போட்டியா?? :))))) சரி, சரி, இப்போ இட்லி நல்லா வருதா இல்லையா? பச்சரிசியில் அரைச்சா மிக்சியில் அரைச்சால் கூட இட்லி நல்லா வரும். அரிசியைச் சூடு வரும் பதத்துக்கு வறுத்து வெந்நீரில் ஊற வைச்சுடணும். சரிக்குச் சரி உளுந்து போடணும். ஒரு தரம் முயற்சி செய்து பாருங்க.

Geetha Sambasivam said...

இதிலே விசித்திரம் என்னன்னா, எனக்கு இட்லிக்கு சாம்பார் தான் பிடிக்கும். ஆனால் அதே சாம்பாரில் சாதம் சாப்பிடப் பிடிக்காது. ஒரே ஓட்டம் தான், ஓடுவேன். இட்லிகளோ சாம்பாரில் குளித்து நீச்சலடிக்கணும். :))))

ஹோட்டல்களுக்குப் போனால் முதல் ஆர்டர் சாம்பார் இட்லி எனப்படும் மினி இட்லிதான். இட்லிகளை சாம்பாரில் மிதக்கவிட்டு அதன் தலைமேலே நல்ல நெய்யை ஊத்தித் தருவாங்க பாருங்க அந்த டேஸ்டுக்கு ஈடு, இணையே இல்லை. :)))))