Tuesday, January 20, 2015

என்ன தலைப்பு வைக்கன்னு தெரியலை!!!!!

சமீபகாலமாவே சில விஷயங்கள் என்னை ரொம்ப பாதிக்குது அதுல முக்கியமான விஷயம் முதுமை. வயசான என்னாவோம்னு பயம்லா இல்லீங்க. வயதானவர்களுக்கான சலுகைகள், உரிமைகள், அவர்களை பார்த்துக்கொள்ளும் விதம், அவங்க சின்னவங்க கிட்ட நடந்துக்கும் விதம்னு இப்படி நிறைய்ய விஷயங்கள்.

சிலருக்குதாங்க அந்த கொடுப்பினை இருக்கு! எந்த கொடுப்பினைன்னு கேக்கறீங்களா? அது முதுமையிலும் கூட தன் இஷ்டத்துக்கு இருப்பதற்கு.  யாரைப்பத்தியும் எனக்கெந்த கவலையும் இல்லை. என் வழி தனி வழின்னு எந்த பொறுப்புலையும் சிக்காம தாமரை இலைமேல தண்ணியா வாழ்றாங்க. அப்படில்லாம் யாருமில்லைன்னு மட்டும் சொல்லாதீங்க. என் அனுபவத்துல கண்டிருக்கிறேன்.

ஆனா பலருக்கு வயோதிகம் ஒரு வியாதி மாதிரி இருக்கு. மருந்தில்லா நோய்னு கூட சொல்லலாம். இளவயதில் பம்பரமா சுத்திட்டு உடம்புல தெம்பில்லாம போறவங்க சிலர். ஆனா எனக்கு தெரிஞ்சு நமக்கு முன்னால இருக்கும் ரோல் மாடல்களை பார்த்து தான் நாம நம்மளை மாத்திக்கிறோம். அந்த வகையில் வயசானா இப்படித்தான் இருக்கனும்னு யாரோ தப்பா சொல்லிக்கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுலயும் குறிப்பா பெண்களுக்கு ரொம்பவே வரைமுறைகள்.

பெண்ணீயம்லாம் பேசலீங்க. ப்ராக்டிகலா பாருங்களேன். ஆண் எப்ப வேணாம் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கிக்க முடியும். ஆனா பெண்ணுக்கு அப்படியா? குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்பு, அடுப்பாங்கரைன்னே பாதி வாழ்க்கை ஓடிடுமே!! காலையில் எந்திரிச்சதும் பொறுமையா காஃபி குடிக்க நேரமில்லாம எத்தனை பேர் அடுப்பாங்கரையில் வேலை பாத்துக்கிட்டே காப்பி குடிக்கறாங்க! நிலமை அப்படி இருக்க காலை நேர வாக்கிங்குக்கு பெண் ஆசை பட முடியுமா??? (வாக்கிங் போயிட்டு வந்து உடன் சமைக்கறதோ அல்லது சமைச்சு வெச்சிட்டு  வாக்கிங் போற பெண்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன். சமையல் கட்டில் வேலை முடிப்பதே எனர்ஜி ட்ரையினாகும் விஷயம்.  அதுக்கு முன்னயே பின்னயோ வாக்கிங் செஞ்சா குறைஞ்சது ஒரு மணிநேரமாவது கேப் இருக்கணும். இல்லாட்டி அந்த உடற்பயிற்சி உதவாதுங்கோ.)

என் கல்யாணத்துக்கு நகை வாங்கும்போது கல் வெச்ச தோடு வேணாம்னு கறாரா இருந்தேன். ஏனோ எனக்கு அது பிடிக்காது. ஆனா உறவுக்காரம்மா ஒருத்தவுங்க கேட்டது நாப்பது வயசானா கல்தோடுதான் போடணும் அப்ப என்ன செய்வ!!!???? யாருங்க சொன்னா 40 வயசானா கல்தோடுதான் போடணும்னு. போடாட்டி என்ன குத்தமாகும்??    தெற்குல தான் இந்த மாதிரி விஷயங்கள் இருக்குன்னு எனக்கு தோணுது. வடக்குல 40ன்னாலும் ஒண்ணுதான் 60ன்னாலும் ஒண்ணுதான். இப்பதான் நம்ம ஊர்ல கூட 60 வயசு காரங்க கூட சுடிதார் போடறாங்க. அட இந்த ஒரு விஷயத்துலயாவது மாற்றம் வந்திருக்கேன்னு அல்ப சந்தோஷப்பட்டுக்கறேன்.

சுடிதார், புடவை ரெண்டும் உடைதான். ஆனா குழந்தை பிறந்திருச்சுங்கறதுக்காகவோ,  இத்தனை வயசாயிடுச்சுன்னோ, இதுதான் போடணும் அப்படின்னு யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. ஆனா மறா என்ன நடக்குது,” வயசாயிடிச்சு ஆனா போட்டிருக்கற ட்ரைஸ்ஸை பாரு!!! 
அப்படின்னு பேசறவங்க இருக்காங்க. நைட்டி போட்டு ரோட்ல அலைஞ்சா தப்பு. சுடிதார் போட்டுகிட்டா என்ன தப்பு? புரியலை.  வேலைக்கு போகும்போது அம்மாவோட புடவைகள் மேட்சிங்கா செட்டா எடுத்து கொடுத்து அனுப்புவேன். எங்க அம்மா வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டாங்க. நான் கல்யாணம் முடிச்சு, குழந்தைகளோட பிசியா இருந்ததுல அம்மா என்ன உடுத்தறாங்கன்னு சரியா கவனிக்கலை.  அம்மா , அப்பா லீவுக்கு இலங்கை வந்திருந்தப்பதான் கவனிச்சேன்  ஜரிப்புடவை, அப்படி இப்படின்னு ஒரு ஓல்டு லுக்குக்கு அம்மா வந்திருந்தது.

சரிப்படாதுன்னு களத்துல இறங்கி அம்மாவோட வார்ட் ரோபை மாத்தணும்னு ப்ளான் செஞ்சு இந்தியா வந்தப்ப அந்த வேலைகளில் இறங்கினேன். அந்த மாதிரி புடவைகளை கட்டி பழகிட்டவங்க கிட்ட உங்களுக்கு வயசாகலைம்மா, வேலைக்கு போயிருந்தா 58 வயசுல தானே ரிட்டயர்மெண்ட். அந்த வயசு கூட ஆகாம ஏன் இப்படி கிழவி வேஷம்னு புரிய வெச்சு ஜார்ஜட் புடவைகள் இல்லாம ஷிஃபான் புடவைகள் வாங்கி கட்ட வெச்சேன். விஷேசங்களுக்கு கட்ட ஜரியிலேயே அழகான கலர் புடவைகள் வாங்கி கட்ட சொன்னேன்.

சிலர் விஷேஷங்களில் துணிமணி எடுத்து கொடுப்பாங்க பாருங்க அவங்களே ஒரு முடிவுக்கு வந்து இவங்க இது கட்டினா போதும்னு நூல் புடவை, ஜரிப்புடவைன்னு கொடுப்பாங்க. அந்த மாதிரி நிறைய்ய சேர்ந்ததும் அம்மா அவைகளையே கட்ட ஆரம்பிச்சாங்க. அம்மா கட்டிக்க ஏதுவான புடவைன்னா இருக்கட்டும். இல்லாட்டி ரொட்டேஷன்ல  யாருக்காவது கொடுத்திட சொல்லி கொடுத்தேன். (பரிசு கொடுத்ததுன்னு பேசறவங்களுக்கு, நாம கொடுப்பதை அடுத்தவங்க உபயோகிக்கணும்னு நினைச்சா கொஞ்சம் தரமானதாத்தான் கொடுக்கணும். இல்லாட்டி பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது மாதிரி புடவைக்கு பதில் ஏதாவது ஒரு உபயோகமான பொருள் கொடுக்கலாம் தப்பில்லை)

அம்மாவோட வார்ட்ரோப் மாறினதுல அம்மாவுக்கு இன்னமும் வயசு குறைஞ்ச மாதிரி ஆகிடிச்சு. :)  சிக்குன்னு தெரிஞ்சாங்க. ஒரு நல்ல லுக்கும் வந்தது. தோல்கள் சுருங்க ஆரம்பிச்சிடும்னு எண்ணெய் தேய்ச்சு குளிக்கல்லாம் நேரமில்லாத காரணத்தால் கை,காலுக்கு க்ரீம் தடவச்சொல்லி வாங்கி கொடுத்தேன். முகத்துக்கு தனி க்ரீம்னு வாங்கி கொடுத்தேன். இதையே வாங்கி தடவிக்கணும்னு சொல்லிக்கொடுத்தேன். தம்பியை பார்க்க சிங்கை போனாங்கன்னா நல்ல புடவைகளா எடுத்துக்கிட்டு போகணும்னு கறாரா சொல்லியிருந்தேன். வீட்டுக்கு உடுத்தும் புடவைகள் கூட நல்லதா இருக்கணும்னு சொல்லி சொல்லி அனுப்புவேன்.  இப்ப எங்கம்மாவை பார்த்து மருமக ரொம்ப சந்தோஷ படறாங்க.” அத்தை நீங்ககட்டுற புடவைகள் அழகா இருக்கு. பாந்தமா கட்டுறீங்கன்னு” பாராட்டறாங்களும். “ எல்லாம் கலா சொல்லிக்கொடுத்ததுன்னு” அம்மா சொல்லிக்கறாங்க. :)

அம்மாவுக்கு அழகான நீள்ளமான முடி இருந்தது. ஆனா காலப்போக்குல எலிவால் மாதிரி ஆகிடிச்சு. அம்மாவை பார்லருக்கு கூட்டிகிட்டு போய் அழகா ட்ரிம் செஞ்சு விட்டேன். சின்னதா போனி போட்டுக்கும்போது நல்லா இருக்கும். சவுரி வெச்சு கொண்டைல்லாம் நோன்னு சொல்லிட்டேன்.  உறவுக்காரங்க என்ன சொல்வாங்க அப்படி இப்படின்னு அம்மா நினைச்சிருந்தா இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்காது.  அவங்கவுங்க சூழலை பொறுத்து இருந்துக்கலாம். ஆனா வயசாகுதுன்னு நம்மளை நாமே இப்படித்தான் இருக்கணும்னு சொல்லிக்கிட்டு வயசான லுக்குக்கு கொண்டு போக கூடாது.  இளமை மனசுல இருந்தா முதுமையே தெரியாது.  இந்த மாதிரி சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. உடம்பு கொஞ்சம் படுத்தினாலும் அம்மா தன்னை ஆக்டிவா வெச்சுக்க ஆரம்பிச்சாங்க.

 
வெளிநாடுகளில் வயசானாலும் அவங்க ஆக்டிவ்வா இருக்க பழகிக்கறாங்க. அதுமாதிரி நாமளும் இருக்கணூம்.  இலங்கையில நாங்க மொதல்ல குடியிருந்த வீட்டு ஓனர் மல்லு ஆண்ட்டி தான். அங்கயே செட்டிலாகினவங்க. 70வயசுக்கு மேல இருக்கும். தனியா அந்த வீட்டுல இருந்தாங்க. மகன் கண்டியில இருக்க இவங்க கொழும்புல இருந்தாங்க. தானே கார் ஓட்டிக்கிட்டு
போவாங்க. எனக்கு பிரமிப்பா இருக்கும். இந்த வயசுல நம்ம ஊர்ல எப்படி இருப்பாங்க. வயசான காலத்துல ராமா, கிருஷ்ணான்னு வீட்டுல இருப்போம்னு தானே நினைப்பாங்கன்னு தோணும். வயசு ஆகிடிச்சுங்கற நினைப்பை முதல்ல எடுத்து எறிங்க. அதுதான் தடை. மனது ஒத்துழைச்சா உடம்பு தானா ஒத்துழைக்கும். வயோதிகம் ஒரு வியாதி இல்ல. அது ஒரு பருவம் அம்புட்டு தான்.

ஆண்களில் பலரும் ரிட்டயர் ஆகிட்டாலே ஏதோ தள்ளாமை வந்தமாதிரி ஆகிடறாங்க. சொற்பமானவங்க தான் ஆக்டிவா இருப்பாங்க. சாயந்திரம் வாக் போகும்போது எனக்கு தெரிஞ்ச ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்.
அங்க அங்கிளுக்கு வயசு 80. 2 முட்டியும் ஆப்பரேஷன் செஞ்சிருக்கு. ஆனாலும் தினமும் சாயந்திரம் பார்க்குக்கு வந்து மெல்ல 8 ரவுண்ட் ஆவது வாக் செய்யறார். அவங்க மனைவிக்கும் மூட்டு பிரச்சனை என்பதால அவரால இயன்ற உதவியை வீட்டு வேலைகளில் செஞ்சு கொடுக்கிறார்.  நம்ம மனசுதான் காரணம்.  மனசை இளமையா வெச்சுக்கிடறதோடு, நமக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். அது குறைஞ்சா எல்லாமே குறைஞ்சிடும்.

நாம வாழும் வாழ்க்கை நமக்காக. அடுத்தவங்க பேசறதுக்காகல்லாம் நாம நம்மளை மாத்திக்காம தன்னம்பிக்கையோட ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சா முதுமையிலும் இளமைதான்.  இந்த பதிவை படிக்கற ஒவ்வொருத்தர்கிட்டயும் என் அன்பான வேண்டுகோள். “ இந்த எண்ணத்தை வயதான இளைஞர்களுக்கு புரிய வைங்க. அவங்களுக்கு துணையா இருங்க. நம்ம அப்பா, அம்மாவா மட்டும் இருக்கணும்னு இல்லை, அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களா கூட இருக்கலாம்.” செய்வீங்களா??!!1




14 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் ,
மிக அழகான பதிவைக் கொடுத்திருக்கிறிர்கள். சென்னையாவது தேவலை. இன்னும் தெற்குப் பக்கம் போனால் 40 வயசிலேயே கிழம் தட்டிப்போன தோற்றத்தோடு பெண்களைப் பார்க்கலாம். வீட்டு வேலை,அதித சாப்பாடு மிச்சம் மீதி வீணாகக் கூடாதே , குழந்தைகள் கவலைன்னும் உடல்கவனத்தை விட்டுவிடுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும் உடற்பயிற்சி கவனம் வைத்தியரிடம் செல்லும்போதுதான் வருகிறது .என் பெண் நினைவுதான் வருகிறது. அவளும் இதே போல் என் மேல் கவனம் எடுத்துக் கொள்வாள் அக்கறையோடு எடுத்துச் சொன்ன விஷயங்களை கவனத்தில் கொள்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

மனதில் இளமை இருந்தால் முதுமை தூரப்போகும்....

பால கணேஷ் said...

எக்ஸலண்ட் தென்றல் மேம். வயசாறது உடம்புக்குத்தான், மனசுக்கு இல்ல. மனசை இளமையா வெச்சுகிட்டா, நாமளும் மனசுக்குப் பிடிச்சபடி அழகா வாழலாம். எத்தனை வயசானாலும் ஆண்கள் ஜீன்ஸ்ம் டீசர்ட்டும் போடலாம். பெண்களுக்கு மட்டும் வேலிகள். அதுவும் மத்த பெண்கள் விதிக்கறதுதான் (பெரும்பாலும்). மிக அழகா உண்மை பேசியிருக்கற உங்க பதிவுக்கு ‘உணர வேண்டிய உண்மைகள்’னே தலைப்பு வெச்சிருக்கலாம். கை கொடுங்க முதல்ல....

Geetha Sambasivam said...

ரேவதியை அழைச்சிருந்தீங்க, பார்த்தேன். உடனே வந்துட்டேன். காலம்பர யோகா பண்ணறதுக்காகவும், நடைப் பயிற்சிக்காகவுமே நான் சீக்கிரம் எழுந்துப்பேன். பொதுவாகவே சின்ன வயசில் இருந்து நாலரை மணிக்கு எழுந்து பழக்கம். அதே பழக்கம் இப்போவும் தொடர்ந்தாலும் அந்த நேரம் எழுந்தால் தான் காலை ஆறரைக்குள்ளாக யோகாசனம், நடைப் பயிற்சி இரண்டையும் முடிச்சுட்டுக் கொஞ்சம் ஓய்வுக்குப் பின்னர் வீட்டு வேலைகளை ஆரம்பிக்கச் சரியா இருக்கும். வீட்டு வேலைகளுக்கும் ஆள் எல்லாம் வைச்சுக்கலை. ஆகவே என்னை எப்போதும் பிசியாகவே வைச்சுக்கறதாலே வயசைப் பத்தின நினைப்பே வரதில்லை. :)))

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்களை நான் சந்திச்சது ஒரு முறைதான். ஆனா எனக்கு எப்பவும் நீங்க ஷ்பெஷல். :)) நீங்க எழுத்துல கலக்கறீங்க. உங்க பதிவுகள் படிக்கும்போது நிறைய்ய தெரிஞ்சுப்பேன். ஹாயா யூரோப் ட்ரிப் போய் பதிவு போடுங்க. காத்திருக்கேன்.

வருகைக்கு நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க சகோ,

அதே தான்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ (பால கணேஷ்)

மேம்லாம் வேண்டாம். (வயசான மாதிரி இருக்கு :)))) ) சும்மா சொன்னேன். ஆமாம் என் பொண்ணும் என்னை மிரட்டிகிட்டே இருக்கா. இப்ப இருக்காப்லயே எப்பவும் இருங்கம்மா வேற ஊருக்கு போனாலும்னு கொக்கி வேற.

அட நீங்க சொல்லியிருக்கற தலைப்பு சூப்பர் நன்றீஸ்

pudugaithendral said...

வாங்க கீதா சாம்பசிவம்,

உங்க கருத்துக்கள் பலருக்கும் உதவியாய் இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு அம்மா...
மனசை இளமையாக வைத்துக் கொண்டால் முதுமை தெரியாது....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் முதுமை நம்மை விட்டு அகன்றுவிடும்...நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனைக்கு வயது ஏது...?

"வயதாகி விட்டதே" என்று நினைப்பே கூடாது...

pudugaithendral said...

வாங்க குமார்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ரூபன்,

லிங்குக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
அவசியம் வருகிறேன்.

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ரசனைக்கு வயது ஏது...?//

அதானே. :)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி