Friday, November 04, 2016

ஏ சூப்பருப்பா!!!

பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிலையில என்னுடைய பழைய பதிவுகளை எடுத்து பாத்துக்கிட்டு இருந்தேன்.

ஒரு டயரியை புரட்டிப்பார்க்கறாப்ல  இருந்துச்சு. ம் பரவாயில்லை நல்லா தான் எழுதியிருக்கேன்னு எனக்கு நானே பாராட்டும் கொடுத்து கிட்டேன்.

பதிவுகளை படிக்கும் போது பல விஷயங்களில் என் மனசு மாறாம இப்பவும் அதே எண்ணம் இருப்பது புரிஞ்சது. சூப்பர்ல. வீக் எண்ட் ரவுண்டபெல்லாம் படிக்கும் போது ச்சே எவ்வளவு நல்லா இருந்துததுன்னு மனசு கொஞ்சம் வருத்தமாகுது. முன்ன மாதிரி எங்கயும் வெளிய போக முடியலை. பிள்ளைங்க படிப்பு, அதுவும் அம்ருதம்மா இந்த வருஷம் +2 எக்ஸாம் எழுதப்போறாங்க என்பதால வார இறுதியே இல்லாம போச்சு. :(
வெளில போகணும்னா ரொம்ப யோசிக்கணும். அம்ருதம்மாவுக்கு ஏதோ வேலை அது இல்லைன்னா ஆஷிஷ் அண்ணாக்கு, இவங்க ரெண்டு பேரும் ஃப்ரீன்னா அயித்தான் வேலைல பிசி இப்படி தான் இருக்கு. என்னுடைய பழைய பதிவுகளில் எனக்கு ரொம்பவே மனசுக்கு பக்கத்துல இருக்கறது இந்த பதிவு தான் அதை மீள் பதிவா போடறேன். சில மாறுதல்களுடன்:


எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே
இல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்
இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்
மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.

எது சாத்தியம்?
அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?
ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ள
எப்படி நேரம் இருக்கிறது?
இப்படி பலக் கேள்விகள்.

இவை எல்லாவற்றிற்கும் என் பதில் ஒன்றுதான்.
நான் நானக இருக்கிறேன். மகள், அக்கா, மனைவி,
தாய், ஆசிரியை இப்படி பல பதவிகள் வகித்தாலும்
என்னை நான் மறந்து விடவில்லை. எப்படி மேற்சொன்ன
பதிவிகளை சரியாக நான் வகிக்க தவறக்கூடாதோ
அதேபோல் நான் நானாக இருப்பதும் மிக அவசியம்
என்பது என் கொள்கை. (நான் மாண்டிசோரி
டிரையினிங் எடுத்துக்கொண்ட பொழுது மகள்
அம்ருதாவிற்கு 4 வயது. எப்படி சமாளிக்கிறாய்?
என்ற கேள்விக்கணை அனைவரிடமிருந்தும்
வந்தது)

நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்ட மிட்டுக்கொள்வேன்.
நாளை செய்யலாம் என்று தள்ளிவைப்பது என்பது
கிடையவே கிடையாது. (அதனால் தான் ஒரே நாளில்
4 பதிவு கூட போட்டு உங்களை கஷ்டப்படுத்துவேன் :) )

நேரத்தை திட்டமிட்டுக்கொண்டாலும்
அதை சரியாக நிறைவேற்றிக்கொள்ள குடும்பத்தவர்களின்
உதவி மிக மிக அவசியமாயிற்றே!


அலுவலகமோ, வீடோ நிர்வாகம் செய்வதில்
திறமை வேண்டும். அனைத்து வேலைகளையும்
நாமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிப்பது
நிர்வாகத்திறன் ஆகாது என்று எங்கோ படித்திருக்கிறேன்.

அயித்தானின் குணம் தன் வேலையை தானே செய்து
கொள்வது. அடிக்கடி அலுவலக டூர் போகும் அவர்
தனது பெட்டியைத் தானேதான் தயார் செய்து கொள்வார்.
துணிமணிகள் துவைத்து, உலர்த்தி இஸ்திரி போட்டு
வைப்பது வரை மட்டும் தான் என் வேலை. தான்
சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்துவிடுவார்.

இதே குணத்தையும் பிள்ளைகளிடமும் வளர்த்தேன்.
பள்ளிக்கு தயாராவது, 6 வயது
முதல் தானே குளிப்பது,(மகளுக்கு மட்டும்
வாரத்தில் ஒரு நாள் தலைக்கு குளிப்பாட்டுவேன்),
வீட்டில் சின்னச் சின்ன வேலைகள்
செய்வது, டைம் டேபிள் படி புத்தகங்களை அடுக்குதல்,
மடித்து வைத்திருக்கும் துணிமணிகளை அலமாரியில்
வைத்தல், வாரம் ஒருமுறை தனது அலமாரியை
சரி செய்து வைத்தல் என்று ஒரு டைம் டேபிள்
போட்டு கொடுத்து விட்டேன். அதை அவர்கள்
சரிவர செய்ய டிரையினிங் கொடுப்பது மட்டும்
தான் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்து.

பிள்ளைகளுக்கான டைம்டேபிள் குறித்த என்
பதிவு பேரண்ட்ஸ்கிளப்பில்.

அவரவர் வேலையை அவரவர் செய்வது
என்பது இப்போது பழக்கமாகிவிட்டது.தவிர
இருக்கும் நேரத்தில் சின்னச் சின்ன வீட்டு
வேலைகள் செய்து கொடுப்பார்கள்.

சமையற் வேலையை ஒரு சுமையாக நினைக்காமல்
வாரத்திற்கு தேவையான சமையலை முன்பே
திட்டமிட்டு (ஒரு முறை சமைத்த உணவு அந்த
வாரத்தில் மறுமுறை வராமல் திட்டமிட்டுக்கொள்வேன்)
அதை செயலாற்றுவதால் எனக்கு கணிசமான
நேரம் மிச்சம். என்ன சமைக்க?!! என்று குழம்ப
அவசியமே இல்லை. இதனால் நான் அதிக
நேரம் சமையற்கட்டிலேயே இருக்கவும் மாட்டேன்.

 எல்லாரும் ஒரு வேளை உணவாவது சேர்ந்து சாப்பிடணும்.  காலை பரபரப்புல அது முடியாது. இரவு உணவு சேர்ந்து தான் சாப்பிடணும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துல சாப்பிட்டு முடிச்சு என்னை ஃப்ரீயாக்கிடணும் :) பல வீடுகளில் இரவு 10 மணிக்கும் சாப்பிடுவாங்க. எங்க வீட்டுல லேட்டாவதுதான் பழக்கம்னு சொல்வாங்க. 8 - 1 - 8 இதுதான் டாக்டர்கள் சொல்லும் நேரம். காலை உணவு, மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு அந்த நேரத்தில் சாப்பிடணும்.  இரவு 7 .30 மணிக்கு மேலன்னா டீ/காபி கட். நேரடியா இரவு உணவு சாப்பிட வேண்டியது தான்.

எனக்கான நேரம் ஒதுக்கி என்னை ரெஃபிரஷ்
செய்து கொள்வது மிக அவசியம் எனக்கு.
காபி/தேநீர் அருந்தும் நிமிடங்கள் என் பொன்னான
தருணங்களாக நினைத்து மெல்ல ருசித்து பருகுவேன்.
பாடல் கேட்பேன், புத்தகம் வாசிப்பேன்.

டென்ஷனைக் குறைக்க காலையில் எழுந்த உடன்
இப்ப ஒரு ரேடியோ பெட்டி வாங்கியிருக்கேன் அதுல ஐபேட், பெண்ட்ரைவ் எல்லாம் போட்டு கேக்கலாம். அதுல  பக்தி பாடல்கள் கேட்பதால், வீட்டில்
இருப்பவர்கள் கூட டென்ஷன் இல்லாமல், வாக்குவாதம்
செய்து கொள்ளாமல் தயராகிறார்கள்.. பிள்ளைகளை எழுப்ப மாட்டேன். கிச்சன் வேலையை விட்டுட்டு அவங்களை எழுப்ப போய் அவங்க உடனே எந்திரிக்கலைன்னா டென்ஷனாகி கத்துறது அவங்களின் நாள் துவக்கத்தை மோசமாக்கிடும். (இத்தனை வருஷ பழக்கத்துக்கு அவங்களே சீக்கிரம் எந்திரிச்சிடுவாங்க.) அதனால என் வேலை சமைச்சு வைப்பது.
உங்க வேலைகளை முடிச்சு வந்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டேன்.
லேட்டா எந்திருச்சு அதனால அவசர அவசரமா கிளம்பினா அதுல என் தப்பு ஏதும் இல்லை :)

இப்படி சின்னச் சின்ன திட்டமிடல் தான்
எனக்கு அதிக நேரம் கிடைத்தது போல் இருக்கிறது.
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின் அதுவும்
என் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இல்லாமல்,
எந்த வேலையும் இதனால் நின்று விடாமல்
திட்டமிட்டு எழுதுகிறேன். ஃபேஸ்புக் பக்கம் போனப்ப கூட என்னுடைய எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு தான் போவேன். என்னுடைய மத்த வேலைகளும் கெடாம எனக்கான நேரத்தை ஒதுக்க ஆரம்பிச்சதுதான் எனக்கு அதிக நேரம் கிடைக்க உதவியா இருக்கு.

மிக முக்கியமாக எனக்கு ரேடியோ கேட்பது
பிடிக்கும். டீவி பார்க்க பிடிக்காது. அதாவது
நோ சீரியல்ஸ்.டீவி முன் அமராததால் பிள்ளைகளுடன்
நேரம் செலவிட முடிகிறது. வலைப்பூ போரடித்தால், புத்தகம், பாட்டு, க்ரோஷா பின்னுதல் என்று வைத்துக்கொள்வேன்.


என்னைவிடவும் மிக அழகாக திட்டமிட்டு
செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை நான் பகிர்வது சிலருக்கு கூடுதலாகஒரு ஐடியா கொடுத்தது போலிருக்குமே!
உங்களிடம் ஏதும் ஐடியா இருந்தா  சொல்லுங்க.அதையும் சேத்துக்குவோம்.


3 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடர்ந்து எழுதுங்க அம்மா...

pudugaithendral said...

nandri kandipa thodarven

varugaiku mikka nandri

கோமதி அரசு said...

நன்றாக சொன்னீர்கள் தென்றல்.
பாட்டு கேட்பது, எனக்கும் பிடிக்கும்.
பக்திபாடல், பழையபாடல் எல்லாம் கேட்பேன்.
நிறைய நல்ல விஷ்யங்களை எழுதுங்கள்.