Tuesday, January 10, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் - 10

ஆசை தான் அழிவுக்கு காரணம் அப்படின்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா எனக்கென்னவோ அதுக்கும் மேல முக்கிய காரணமா நினைப்பது எதிர் பார்ப்பு தான். இந்த எதிர்பார்ப்பு அப்படிங்கற ஒரு விஷயம் போதும் நம்மை முற்றிலும் அழிச்சிடுது. எதிர்பார்ப்பது கிடைக்காத போதுதான் கோபம், இயலாமை, ஆத்திரம் எல்லாம் வருது.

காசு பணம் எதிர்பார்த்து கிடைக்காததை விட அன்பை, அங்கீகாரத்தை எதிர்பார்த்து கிடைக்காம போவதுதான் மன உளைச்சலுக்கு காரணமாகுது. அன்பை கூடவா எதிர்பார்க்க கூடாதுன்னு நீங்க கேட்பது கேக்குது? ஆமாங்க. நாம எதை எதிர்பார்த்தாலும் அது பிரச்சனையைத்தான் உருவாக்கும். நம்மை புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பதையும் சேர்த்துதான்.

எதிர்பார்ப்பை குறைச்சுக்கிட்டே வந்து எதிர்பார்க்கும் பழக்கம் இல்லாமலேயே ஆக்கிகிட்டா நமக்கு மன அமைதி பக்கா கேரண்டி. இது செயல்படுத்த ரொம்பவே கஷ்டமான விஷயம். நம்ம பசங்க நம்மளை கவனிக்கணும்னு நினைக்கறதுலேர்ந்து எது வேணாம் வெச்சுக்கலாம். கோடிட்ட எல்லா இடங்களையும் நீங்க உங்க எதிர்பார்ப்புக்களை வெச்சு நிரப்பிக்கலாம். அவையெல்லாம் நம்மை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தும்.

எப்படி எதிர்பார்க்காம இருக்க முடியும்? கீதாசாரம் இதுக்கு பதில் சொல்லும். கடமையை செய் பலனை எதிர்பாராதே!.

நாம ஒருத்தருக்கு ஒரு உதவி செஞ்சிருக்கோம்னு வெச்சுக்குவோம். அவங்க வாழ்க்கையையே திருத்தி அமைக்க கூடிய ஒரு நேர்மறையான  நிகழ்வு அது. அது மட்டுமில்லைன்னா அவங்க நிலமை ரொம்ப மோசமா கூட ஆகிருந்திருக்கலாம். அப்படி ஒரு நேரத்துல நாம உதவி செஞ்சிருப்போம். நாம அதுக்கு அவங்க கிட்ட காசு பணத்தை எதிர்பார்க்காட்டியும் ஒரு அன்பை, பாராட்டை எதிர் பார்ப்போம். பாராட்டை விட அன்புன்னு வெச்சுப்போம்.  ஆனா உதவி வாங்கி கிட்டவங்க அதைப்பத்தி பெருசா எடுத்துக்காம இருப்பாங்க.

பல நேரத்துல உதவி தேவையா இருக்கும்னு நினைச்சா கேட்பதுக்கு முன்ன நாமளே போய் நின்னு உதவுவோம். “ உடுக்கை இழந்தவன் கை போல “ன்னு நாம படிச்சிருக்கோம். படிச்சதை செயலும் படுத்தும் ஒரு நற்பண்பு நம்ம கிட்ட இருக்கு. அதனால உதவி செய்வோம். ஏன் அவங்களுக்கு நம்ம உதவி பெருசா தோணலை. இதை பத்தி யோசிச்சா. தட்டுங்கள் கொடுக்கப்படும்னு சொல்லியிருக்காங்க. தட்டாமலேயே கொடுத்தா அதோட அருமை தெரியுமா? தெரியாது!  நானா கேட்டேன். நீ செஞ்ச நான் வாங்கிகிட்டேன் அப்படின்னு கூலா சொல்வாங்க. உதவி செஞ்ச நம்மகிட்டயே இப்படி பேசறாங்களேன்னு உள்ள ஒரு வலி வரும் பாருங்க. அது மரண வலி. நாம என்ன எதிர்பார்த்தோம்? “உடுக்கை இழந்தவன் கை போல” தக்க சமயத்துல நமக்கு உதவி செஞ்சிருக்காங்களேன்னு நம்மகிட்ட ஒரு பிரியத்தை. நாம கடமையை செஞ்சோம் ஆனா பலனை எதிர்பார்த்திட்டோம்னு ஒரு குற்றசாற்றை நம்ம மேல வெச்சிட்டு அவங்க பாட்டுக்கும் அவங்க வேலையை பார்க்க போயிடுவாங்க. கரெக்டுதான். எதிர் பார்த்தது நம்ம தப்பு தான?

கேக்காமலேயே செஞ்சான்னு இல்லை உதவி கேட்டு நாம் செஞ்சாலும் அதை பாராட்டும் நல்ல உள்ளம் எல்லாருக்கும் இருப்பதில்லை. அதனால நாம கத்துக்கிட்ட பாடம் என்ன “கடமையை செய் பலனை எதிர்பாராதே”. இந்த எதிர்பாராதே பல உறவுகளுக்கும் பொருந்தும். கணவன்/மனைவி எதிர்பார்ப்பு, பெற்றோர்/குழந்தை எதிர்பார்ப்பு, சகோதர/சகோதரி எதிர்பார்ப்புன்னு லிஸ்ட் ரொம்ப பெருசு. யாரும் யார்கிட்டேருந்தும் எதையும் எதிர்பார்க்காம நாம நம்ம வேலையை சிறப்பா செஞ்சிடணும். அது மட்டும்தான். செஞ்சு முடிச்ச திருப்தி நமக்கு இருக்கும் பாருங்க அது போதும்.

இன்னொரு வகை இருப்பாங்க. அவங்களுக்கு நீங்க எவ்வளவு செஞ்சாலும் பத்தாது. பணத்தால செய்யும் உதவி மட்டுமில்ல. உடலுழைப்பு நீங்க எவ்வளவு கொடுத்தாலும் சரி செஞ்சன்னு இருப்பது மட்டுமில்லாம இன்னும் இன்னும்னு எதிர்பார்ப்பாங்க. எவ்வளவு செஞ்சாலும் திருப்தி படுத்த முடியவே முடியாது. இப்படிப்பட்ட உறவு/நட்பு இவங்களுடன் பேசும்போது, தொடர்பில் இருக்கும் போது, நம்ம கடமையை செய்யும் போது அப்படின்னு எல்லா நேரத்துலயும் நம்ம சக்தி எல்லாத்தையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டாங்களோன்னு தோணும். அந்த அளவுக்கு நம்ம சக்தியை உறிஞ்சு எடுத்துக்குவாங்க.  எவ்வளவு செஞ்சாலும் அவங்களுக்கு அது கணக்குல சேராது. அப்படி பட்டவங்களுக்கு செஞ்சிட்டு நம்ம உடம்பும் மனசும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாவதுதான் நடக்கும்.

யாரையும் நாம திருப்தி படுத்தும் நோக்கத்துல எதையும் செய்யலை. ஆனாலும் இது முடிச்சிட்ட நெக்ஸ்ட்? அப்படின்னு எப்பவும் இருப்பவங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டு விலகிடுங்க. அந்த வார்த்தை “நோ”. என்னால இவ்வளவுதான் முடியும். முடிச்சிட்டேன். அப்படின்னு சொல்லிடலாம். நாம “நோ” சொன்ன அடுத்த நிமிஷம் அவங்க ரியாக்‌ஷன் பாக்கணுமே!! ஆகா!. இத்தனை நாள் நாம செஞ்சது எதுவும் நினைக்காம அப்படியே நம்மளைப்பத்தி தப்பா பேசுவாங்க. இல்லை நம்ம உறவையே துண்டிச்சுக்குவாங்க.  போன் வராது. தொடர்பு எல்லைக்கு அப்பால நம்மளை நிறுத்திடுவாங்க. நல்லதுதான் விடுங்க. நம்ம எனர்ஜி நமக்கு மிச்சம்.

ஆற்றில் மட்டும் அளந்து போடுவது பத்தாதுங்க. அன்பு செலுத்தும் இடத்திலும், கடமை செய்யும் , உதவி செய்யும் இடங்களிலும் அளந்து கொடுத்தால் போதும். அன்புக்கு இலக்கணம் தெரியாதவங்க சிலர் இருப்பாங்க. நான் உன்கிட்ட அன்பை கேட்டேனா? நீ கொடுத்த ஆனா எனக்கு அது தேவையில்லைன்னு சொல்வாங்க. பாத்திரம் அறிந்து பிச்சை போடாதது நம்ம தப்புத்தானே. அன்பால எல்லாத்தையும் சாதிக்கலாம். ஆனா அன்புன்னா கிலோ எத்தனைன்னு கேட்க கூடிய ஆளுங்க கிட்ட இல்லை. யாருக்கு தேவையோ அவங்களுக்கு நம்ம அன்பை, நேரத்தை, உதவியை கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். கடமையை செஞ்சோம் அப்படிங்கற மன நிம்மதியை மட்டும் நமக்கு நாம பரிசா கொடுத்துக்கிட்டு வேற “எதையும்” எதிர்பார்க்காம இருக்க பழகிப்பது மட்டும்தான் நமக்கு மன ஆறுதலை கொடுக்கும்.



No comments: