Wednesday, January 30, 2013

புரிந்துகொள்வோம் குழந்தைகளை - பாகம் 2

குழந்தைக்கு பெரிதாக என்னத்தேவை இருந்துவிடப்போகிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் குழந்தைகள் என்பதாலேயே அவர்களின் தேவையை நாம் பெரிது படுத்துவதில்லை. ஆனால் குழந்தையின் தேவையை பூர்த்தி செய்வதுதான் நம் முதல் வேலையாக இருக்க வேண்டும்.

 நல்ல சுற்றுபுறச்சூழலை அமைத்து கொடுக்க வேண்டியது நம் கடமை. சுத்தமான சுகாதாரமான சூழலை அமைத்து கொடுப்பதனால் குழந்தை நோய்வாய்ப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுகிறது. குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சுகாதார தேவை.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இது சாதரணமாகவே எல்லோருக்கும் பொதுவான தேவை. குழந்தைகள் சரியான போஷாக்கான உணவை உண்கிறார்களா என்பதை கவனிப்பது அவசியம் அவர்களின் வளர்ச்சியில் அவர்கள் உண்ணும் உணவின் பங்களிப்பு அதிகம். வயிற்றுக்கு தேவையான சமச்சீரான உணவை , சரியான நேரத்தில் உண்ண பழக்குவது நம் கடமை. ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்களுக்கு அடிமைகளாமல் பழக்க வேண்டும். கூல்ட்ரிங்க்ஸ்கள் குழந்தைகளின் உடம்பை பதம் பார்ப்பது நமக்குத் தெரியாது.

சில குழந்தைகள் குளிர்காலமோ, மழைக்காலமோ ஐஸ்க்ரீம், ஃபிரிட்ஜில் வைத்த ஜூஸ் என எடுத்துக்கொள்வார்கள். வேண்டுமென பிடிவாதம் பிடிப்பதை பொறுக்க முடியாமல் பெற்றோரும் வாங்கிகொடுத்துவிடுவார்கள். விளைவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தையாக இருந்தால், மருத்துவமனை, மருந்து என ஜலதோஷத்திற்கு  சிகிச்சை பெற நேரிடும்.
குழந்தைக்கு தெரியாது என்பதால் நாம் தான் எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். கூடிய மட்டும் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை வாங்கி ஸ்டாக் வைக்காமல் இருப்பதும், கேட்டால் கூட வாங்கிக்கொடுக்காமல் இருப்பதும் நலம். மருந்துகளின் பக்கவிளைவுகள் பாதிக்கும்.

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரிடம் அழைத்து செல்கிறோம்,  குழந்தை என்ன சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து உணவு கொடுப்பது முக்கியம்.


 குழந்தைகள் பள்ளி செல்லும் முன் காலை உணவை சாப்பிட்டு செல்வதை கட்டாய பழக்கமாக்க வேண்டும். காலை உணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகளின் கவனம் படிப்பில் குறைவாகவே இருக்கும். பால், பழங்கள் கூட சரி.  இது மிக முக்கியமான தேவை. குழந்தைக்கு தேவையென தெரியாது. தவிர்த்துவிடும்.

குழந்தைகள் தன் வேலையை தானே செய்து கொள்ளும் வகையில் பழக்கப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வயது வந்ததும் தானே சாப்பிடவும், உடை மாற்றவும்,  ஷூ அணிதல் ஆகியவற்றை செய்து கொள்ள பழக்க வேண்டும். தனது உடமைகளை தான் பேணிகாப்பது எப்படி என்றும் சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கவே நேரம் சரியாக இருக்கும், இன்றைய சூழலில் வீட்டில் குழந்தைகளுக்கு நீதிபோதனையை கதைகளாகவது அடிக்கடி சொல்லி கொடுப்பது அவசியம். இது பற்றிய முந்தைய பதிவு.

எந்த வயது குழந்தையும் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அன்பையும் அரவணைப்பையும் தான். நம் கோபதாபங்களை பிள்ளையின் மீது காட்டக்கூடாது. அவர்கள் முன் வீட்டுப்பெரியவர்கள் சண்டை போடுவதும் அரவே கூடாது. இவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை கொடுத்து அவர்களின் வளர்ச்சியை தடை செய்யும். குழந்தைகளுக்கு நம் மன உளைச்சல், பிரச்சனைகள் பெரிதாக புரியாவிட்டாலும், நமது உடல்மொழியால் அவர்கள் அதை உணர்ந்து கொள்வார்கள்.


குழந்தை வேண்டும் என கேட்கும் எதையும் உடனடியாக வாங்கிக்கொடுத்தால் பிடிவாதம் அதிகமாகும். அவசியம் பார்த்து (நியாயமான கோரிக்கையாக இருந்தால் உடனடியாகவும், தேவை குறைவு என்றால் பேசி புரியவைக்க வேண்டும். சில பிள்ளைகள் வேண்டியது கிடைக்காவிட்டால் கடை என்று கூட பார்க்காமல் விழுந்து புரண்டு அழுவார்கள். பிடிவாதத்திற்கு இடம் கொடாமல் வளர்ப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது.

அன்பை விதைத்தால் அன்பைத்தான் அறுவடை செய்வோம். அதனால் குழந்தைக்கு 100% பரிசுத்தமான அன்பை கொடுத்தோமேயானால், நமக்கும் அந்த அன்பு திரும்ப கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வு, நல்ல போதனைகள் ஆகியவற்றை கொடுப்பது மிக முக்கியமானது.




10 comments:

கோமதி அரசு said...

அன்பை விதைத்தால் அன்பைத்தான் அறுவடை செய்வோம். அதனால் குழந்தைக்கு 100% பரிசுத்தமான அன்பை கொடுத்தோமேயானால், நமக்கும் அந்த அன்பு திரும்ப கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வு, நல்ல போதனைகள் ஆகியவற்றை கொடுப்பது மிக முக்கியமானது.//

மிக சரியாக சொன்னீர்கள் தென்றல்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

DHANESH KUMAR. R said...

இன்று தான் உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன். ஒரு சில பதிவுகளை படித்தேன். மிகவும் அருமை

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான ஆலோசனைகள்! பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பெற்றோர்கள் அறிய வேண்டியவை(இரண்டு பகிர்வும்...) தொடர்க...

ADHI VENKAT said...

அவசியமான பகிர்வு. தொடர்கிறேன்.

பால கணேஷ் said...

குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் கற்று்த் தருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஜங்க் ஃபுட்‌ஸைத் தவிர்க்க சொல்லித் தர்றதும்ங்கறது என் கருத்து. நீங்க சொல்லியிருக்கறதைப் படிச்சதும் பிடிச்சிடுச்சு. தொடரட்டும் இந்தப் பயனுள்ள தொடர்!

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கோமதி அரசும்மா,

நன்றி தனேஷ் குமார்

நன்றி சுரேஷ்

நன்றி திண்டுக்கல் தனபாலன்

கோவை2தில்லி

நன்றி பாலகணேஷ்

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கோமதி அரசும்மா,

நன்றி தனேஷ் குமார்

நன்றி சுரேஷ்

நன்றி திண்டுக்கல் தனபாலன்

கோவை2தில்லி

நன்றி பாலகணேஷ்

ஹுஸைனம்மா said...

லைன் பைலைன் ரிப்பீட் போடுக்கிறேன். காலை உணவு ரொம்ப முக்கியம். மூத்த மகனின் உடல் ஆரோக்கியம், (3-ம் வகுப்பிலிருந்து) காலை உணவை வழக்கமாக்கிய பின்புதான் சற்று தேற ஆரம்பித்தது. ஆகையால் சின்னவனுக்கு எல்.கே.ஜி. முதலே காலையில் சாப்பிடுவதைக் கட்டாயப் பழக்கமாக்கிவிட்டேன்.

போலவே, பிடிவாதமும். சட்டை செய்யாமல் விட்டுவிட்டால், அதுக்கெல்லாம் மசிய மாட்டோம்னு தெரிஞ்சுட்டா தொடராது.

நல்ல பதிவு. தொடருங்க.

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி