Sunday, February 24, 2008

பூச்சொரிதல் விழா

இது பூச்சொரிதல் சீசன். ஊரின் பெண்காவல் தெய்வங்களுக்கு
பூச்சொரிதல் விழா வெகு விமரிசயாக நடக்கும்.

உதிரிப்பூக்களை தேவியின் மேல் சொரிந்து பார்க்க அழகாய் இருக்கும்.
பூச்சொரிதல் முடிந்து அடுத்த வாரம் காப்புக் கட்டு, அதற்கு
அடுத்த வாரம் திருவிழா. (ஞாயிற்ருக்கிழமை)

இன்று (24.2.08) புதுகையில் திருக்கோகர்ணத்தில் இருக்கும்
திருவப்பூர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்து
கொண்டிருக்கிறது.

திருவப்பூர்க்கு அடுத்து கொன்னையூர் மாரியம்மனுக்கு விழா.
அதாவது திருவப்பூரில் காப்பு கட்டி நடக்கும்போது
கொன்னையூரில் பூச்சொரிதல் விழா.....

அடுத்து புதுக்குளம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா.

நார்த்தாமலை, திருவரங்குளம், வம்பன் வீரமாகாளி,

கீழ 4 மாரியம்மன்வடக்கு 3 மாரியம்மன்
கடைசியாக அரியநாச்சியம்மன்
பூச்சொரிதல் விழா நடைபெறும்.

பூச்சொரிதல் விழாவை நினனக்கும் போது பல
நினனவுகள். ஐயர் குளம் கரையைச் சேர்ந்தவர்கள்
அழகாக ஜோடித்த புஷ்ப பல்லக்கில்
பூக்களை எடுத்துச் செல்வதைக் காணக் கண்கோடி
வேண்டும்.

இதைத் தவிர சின்னச் சின்ன தேர்களும் போவது
வாடிக்கை. எல்லாம் நடந்தே செல்வார்கள்.
வாத்தியம் இசைக்க...... சொல்லிப் புரிய
முடியாததொரு அனுபவம் அது.


மற்ற கோயில்களுக்குப் போனால் கூட்டம் அதிகமாக
இருக்கும் . நான் சின்ன வயதில்தான் திருவப்பூர்
மாரியம்மனை பூச்சொரிதல் அன்று பாத்திருக்கிறேன்.

அதற்கப்புறம் கீழ 4 மாரியம்மன் கோயிலுக்கு அருகில்
இருந்த போது தரிசித்து இருக்கிறேன்.

அதிகம் ஞாபகம் இருப்பது வடக்கு 3 மாரியம்மன்
கோயில் விழாதான்.

நாங்கள் வடக்கு 4ல் இருந்தோம். பூச்சொரிதலுக்கு
தேர் போகும்போது வீட்டு வாசலில் மட்டுமல்லாது
ரோடே அடைக்க கோலம் போடுவது.
ரோடில் கோலம் போட்டுவிட்டு அதன் சைக்கிள்
ஓட்டுபவர்களை ஓடஒட விரட்டுவோம்.


கிட்டத்தட்ட அதிகாலையில் தான் சாமி புறப்பாடாகி
வீதியில் வரும். தூக்கக் கலக்கதில் எழுந்து, சாமி
பார்த்து அதெல்லாம் ஒரு காலம்.


வடக்கு 3 மாரியம்மன் திருவிழா பரிட்சை நேரத்தில்
தான் இருக்கும். மைக் கட்டி பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.
வடக்கு 2, வடக்கு 3, வடக்கு 4 வீதியைச் சேர்ந்தவர்கள்
3 நாள் தனித்தனியாக மண்டகப்படி செய்வார்கள்.



எங்கள் வீதி மண்டகப்படியின் போது வீதியில் இருக்கும்
முருங்கைமரங்களும் விளக்கொளியில் ஜொலிக்கும்.



காப்புகட்டி முடிந்து மஞ்சத்தண்ணீரு ஊற்றிக்கொள்ள
அம்பாளைக் கொண்டுவருவார்கள். பொதுவாக உச்சிவெயில்
நேரமாக இருக்கும். அதற்கு கோலம் போட்டு, பச்சை மஞ்சளை
அரைத்து நீரில் கரைத்து ரோடில் வைத்துவிட்டு ஓடி
வந்துவிடுவேன். மேலே ஊற்றி விடுவார்களே!!!



3 நாளும் தேர்வரும், நாங்களும் கோலம் போடுவோம்.
நாடகம், நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மிக உரை ஆகியவை
நடக்கும்.



அன்னதானத்தன்று வீடு வீடாக கொண்டுவந்தே
கொடுத்துவிடுவார்கள் எங்கள் வீதி நண்பர்கள்.

இப்போதெல்லாம் ஊரில் பூச்சொரிதல் என்று
அம்மா சொல்லும்போது பழைய நினைவுகளில்
மூழ்கிப் போகிறேன்......

நினைவே ஒரு சங்கீதமாக அம்மனை
இங்கிருந்து வணங்குகிறேன்.

14 comments:

Yogi said...

எங்கள் ஊரில் பங்குனி மாதம் பொங்கல், பூச்சொரிதல் விழா, முளைப்பாரி எல்லாம் நடக்கும். :)

மங்களூர் சிவா said...

நானும் அம்மனை
இங்கிருந்து வணங்குகிறேன்.

pudugaithendral said...

வாங்க பொண்வண்டு,

மாசி, பங்குனி மாதம்னாலே திருவிழாதானே.

எங்க ஊரில் சித்திரை வருடப் பிறப்பு வரை இருக்கும். அவ்வளவு காவல் தெய்வங்கள்.

pudugaithendral said...

வாங்க சிவா,

எல்லோரும் வணங்குவோம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன் ஆயிற்றே!!!!

cheena (சீனா) said...

ஊர் பக்கம் போய் திருவிழா பாக்குறதுக்கெல்லாம் நேரமில்ல - இங்கே இருந்தே சாமி கும்பிட்டுக்க வேண்டியது தான்

நிஜமா நல்லவன் said...

எங்க ஊர் மழைமாரியம்மன் ஆலய திருவிழாவும் ரொம்ப விமரிசையா நடக்கும். என் பள்ளி நாட்களில் விடிய விடிய கோவிலில் இருந்துவிட்டு காலையில் பள்ளியில் போய் தூங்குவேன்.

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

நீங்க சொல்வதும் சரிதான்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

வீட்டுப்பாடம் செய்ய முடியாட்டிகூட
திருவிழா சமயத்துல டீச்சர்கள் கூட
கண்டுக்க மாட்டாங்க.

தூங்கினா தப்பில்ல.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

பூச்சொரிதல் விழாவுக்கு த.பி.சொக்கலால் பீடி,நிஜாம் பாக்கு கம்பெனிகளின் வண்ண விளக்கு மினி லாரியெல்லாம் பார்ததா ஞாபகம்.

pudugaithendral said...

வாங்க சாமான்யன்,
ஆமாம், ஒட்டகம் மார்க் சோப் மின் விளக்கெல்லாம் இருக்கும்.

சபா. பாண்டியன் said...

ayoo nenga vatkku 4 naan kamaraja purum unga veedu entha edathula nan ippo singaporela irukken nenga enga irukkringa thx

pudugaithendral said...

வாங்க பாண்டியன்,

காமராஜபுரமா! நல்லது.

சிங்கப்பூர்ல இருக்கற புதுகை காரங்கள்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிங்க.

நான் இப்ப இருக்கற ஊரு பேரு சொன்னா சும்மா அதிரும்ல.....

ஸ்ரீலங்கா :)

Learn Speaking English said...

மிக மிக அருமை

pudugaithendral said...

thanks