Thursday, July 31, 2008

ஆடி அமாவாசை சிறப்புப் பதிவு





ஆடி மாதம் விசேட மாதம். நோன்புகளும்,
பூஜைகளும் நிறைந்து பக்தியாக இருக்கும் மாதம்.
நாளை ஆடி அமாவாசை. இது சிறப்பு மிக்க அமாவாசை.
நம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களில்
சிலர் ஆடி அமாவாசை அன்று நோன்பு செய்வர்.
(கன்னடர்கள் செய்வார்களா என்றுத் தெரியாது)

வட இந்தியர்களின் கடுவா சொளக், தமிழர்களில்
சிலர் கொண்டாடும் காரடையான் நோன்பைப்
போன்றது இது.

தன் கணவருக்காக பெண்கள் விரதம் இருந்து
பூஜை செய்யும் நந்நாள்.





ஆடி அமாவாசை அன்று கொளரிக்கு பூஜை செய்து, செவி வழியாக
சொல்லப்பட்டு வரும் கதையை சொல்வது முக்கியம்.

தீபத்தின் தண்டு அல்லது மரக்கட்டையில் மஞ்சள் முடிந்த
கயிறு கட்டி, 5 தாமரைக் கோலம் (பத்மம்) போட்டு
அதில் பூஜை செய்ய வேண்டும்.






ஆடிஅமாவாசைக் கதை:

அழகாபுரி பட்டணத்தில் அழகேசன் என்ற ராஜா ஆண்டு வந்தார்.
அவரது ஒரே மகனான இளவரசனுக்கு திருமணம் ஆகமலேயே
இறந்து விட, தனக்கு அடுத்து நாட்டை ஆள யாருமில்லையே
என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் ஒரு
யோசனை தோன்றி, ஒரு வண்டி நிறைய ஆடை,ஆபரணங்கள்,
பொற்காசுகளும், மற்றொரு வண்டியில் இறந்து கிடக்கும்
மகனின் பிணத்தையும் வைத்துக்கொண்டு ராஜா, ராணி
இருவரும் பிணத்திற்கு பெண்கொடுப்பார் யாரும் இருந்தால்
ஐஸ்வர்யங்களை அந்தக் குடும்பத்தாருக்கு கொடுத்து
அந்தப்பெண்ணை அரசி ஆக்கும் எண்ணத்தில் வீதிவீதியாக
தண்டோரா போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

பிணத்திற்கு யாரும் பெண் கொடுப்பார்களா? தன்
பெண்ணின் வாழ்வை நாசமாக்க யாரும் விரும்ப வில்லை.
அந்த ஊரிலேயே மிகவும் ஏழ்மையான குடும்பம் ஒன்று இருந்தது.
அவர்களுக்கு 3 மகள்கள். ஏதாவது ஒரு பெண்ணைக் கொடுங்கள்,
உங்கள் நிலமை மேம்படும் என்று அக்கம் பக்கத்தவர்கள்
சொல்ல, தகப்பனோ,” மூத்தமகளை நான் தரமாட்டேன்
என்கிறார். தாயோ கடைசிமகள் என் உயிர் என்கிறாள்.
மனம் நொந்த நடுமகள், தான் போனாலாவது இவர்கள்
வாழ்க்கை முன்னேரும் என்று தானே சென்று
அந்த பிணத்தை மணக்கிறாள். பொன்னும் பொருளும்
பிறந்த வீட்டிற்கு கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துகிறாள்.

இடுகாட்டிற்கு சென்று அந்திம கிரியைகளை செய்து முடித்து
அந்தப் பெண்ணையும் நாட்டிற்குள் அழைத்தபோது, அப்பெண்
அழுதுக்கொண்டு நான் இனி வாழ்ந்து என்ன பயன்? நான் வர
மாட்டேன் என்கிறாள். மன்னரும் மகாராணியும் கெஞ்சியும்
மசியவில்லை.

சரி காலையில் வந்து பார்க்கலாம் என்று போகிறார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் மழை கொட்டத்
தொடங்குகிறது. எரியும் சிதையும் அணைந்து போகிறது.
சிதையில் கூட சரியாக எரியாமல் போய் விட்ட தன்
வாழ்க்கையை நினைத்து அழுகிறாள் அந்த அபலை.

அப்போது ஒரு கிழவனும் கிழவியும் அந்த இடுகாட்டிற்கு
வந்து, அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடம்,
விவரங்கள் கேட்க அவளும் சொல்கிறாள்.
அம்மா, முன் ஜென்மத்தில் நீ ஆடிஅமாவாசை நோன்பு
முறையாக செய்யாததினால் இப்படி ஆகிவிட்டது, என்று
சொல்ல, எனக்கு அதெல்லாம் தெரியாது என்றவளுக்கு
கிழவியாக வந்திருக்கும் அன்னை பராசக்தியே

பாடையின் காலை எடுத்து ஸ்தம்பமாக வைத்து,
மஞ்சள் கயிறு கட்டி, பத்மகோலம் போட்டு,
களிமண்ணால் கொழுக்கட்டைகள் செய்து,
நோன்பு செய்வித்து, 5 முடி போட்ட மஞ்சள்
சரடைக் கையில் கட்டி, அட்சதையைக் கையில்
கொடுத்து இதை உன் கணவனது தலையில் தூவு
என்று ஆசிர்வதிக்கிறாள்.

மந்திர அட்சதைப் பட்டதும் பிணமாக கிடந்த
இளவரசன் தூக்கம் களைந்து எழுவதுபோல்
எழுந்து, யார் நீ? நான் எப்படி இங்கு வந்தேன்? என்று
கேட்கிறான். அந்தப் பெண்ணும் நடந்ததைச் சொல்லி
கிழவனும், கிழவியும் இருக்கும் இடத்தில் கை நீட்ட
அங்கே அவர்கள் கண்டது, அம்மையையும் அப்பனையும்.

விடியும் வரை மனம் கலங்கியபடி காத்திருந்து இடுகாட்டிற்கு
ஓடி வந்த மன்னருக்கும், ராணிக்கும் அதிர்ச்சி.
மகனை உயிரோடு கண்டு மருமகளை விசாரிக்க
அவள் நடந்ததைச் சொன்னாள். மனம் மகிழ்ந்து
அவர்களை நாட்டிற்குள் அழைத்துச் சென்று
பிரம்மாண்டமாக திருமணம் செய்து, சந்தோஷமாக
வாழ்ந்தார்கள்.

இந்தக் கதையை கேட்பவர்களும், சொல்பவர்களும்
கொளரியின் அருள் பெற்று தீர்க்க சுமங்கலியாக
வாழ்வார்கள்.

தெலுங்கு, கன்னட திருமணங்களில் முதலில்
கொளரி பூஜை செய்த பிறகே மணமேடைக்கு
அழைத்து வரப்படுவார்கள்.



தேவேந்த்ராணி நமஸ்துப்யம்
தேவேந்த்ர ப்ரியபாமிணி
தீர்க்க சொளமாங்கல்யம்
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யம்
பத்ரு/புத்ர லாபம்ச்ச தேஹிமே.

14 comments:

ambi said...

இந்த கதை இப்போ தான் கேள்விபடறேன். நல்லா இருக்கு.

கன்னடர்கள் என்ன பண்றாங்க?னு தெரியலை, விசாரிக்கறேன்.

பதிவு படிச்சு கமண்டு போட்டவங்களுக்கு கொழுகட்டை குடுத்தா டபுள் புண்யம் கிடைக்குமாம். :))

ambi said...

ஆடி அமாவசையில் நமது முன்னோர்க்கு நீத்தார் கடன் செய்வது அதுவும் நதிக்கரை, கடற்கரையில் செய்வது ரொம்ப விஷேஷம்.

pudugaithendral said...

வாங்க அம்பி,

கொழுக்கட்டை தானே. நாளைக்கு ஹைதராபாத் வந்திடுங்க.

:)

pudugaithendral said...

ஆடி அமாவசையில் நமது முன்னோர்க்கு நீத்தார் கடன் செய்வது அதுவும் நதிக்கரை, கடற்கரையில் செய்வது ரொம்ப விஷேஷம்.

உண்மை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் இந்தக்கதையை இப்பத்தான் கேக்கறேன்.. கொழுக்கட்டையா எந்த கொழுக்கட்டை இனிப்பு வச்சதா.. ?

pudugaithendral said...

வாங்க கயல்,

பலபேருக்கு இந்த பூஜை தெரியாது.
ஒன்லி தெலுகு ஸ்பீங்குத்தான் தெரியும். அதிலும் சிலருக்குத்தான்.

//கொழுக்கட்டையா எந்த கொழுக்கட்டை இனிப்பு வச்சதா.. ?//

எல்லா வகையும் தான். தேங்காய், பருப்பு பூரணம், மணிக்கொழுக்கட்டை,
அப்புறம் ஏரோப்ளேன் :) (உளுந்து, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டையை மடிப்பது ஏரோப்ளேன் மாதிரி மூடுவோம். அதனால் அதுஆகு பெயர் :) )

புதுகை.அப்துல்லா said...

பதிவு படிச்சு கமண்டு போட்டவங்களுக்கு கொழுகட்டை குடுத்தா டபுள் புண்யம் கிடைக்குமாம். :))

rippiittu

:0)

துளசி கோபால் said...

இங்கே பாருங்க

இப்படி ஒரு கதை இருக்கு:-)

நிஜமா நல்லவன் said...

//பதிவு படிச்சு கமண்டு போட்டவங்களுக்கு கொழுகட்டை குடுத்தா டபுள் புண்யம் கிடைக்குமாம். :))//


ரிப்பீட்டேய்....

pudugaithendral said...

kolukattai parcelil anupa mudiyathu abdulla,

flight pidichi vanthundunga.

:)

NewBee said...

//பதிவு படிச்சு கமண்டு போட்டவங்களுக்கு கொழுகட்டை குடுத்தா டபுள் புண்யம் கிடைக்குமாம். :))
//

:D ...மறுக்கா சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

கதை நல்லா இருந்தது.

NewBee said...

ஆனா! இப்பாடி ஒரு கதை, முதன் முறை கேட்கிறேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

தகவல் நன்று

துளசி கோபால் said...

இந்த ப்ளொக்கருக்குக் கொஞ்சநாளா இதே வேலையாப் போச்சு இப்படி ஒளிச்சு வைக்கரது.

http://thulasidhalam.blogspot.com/2005/10/blog-post_21.html