Thursday, June 25, 2009

ஏதோ நினைவுகள்...

வீட்டில் வயதானவர்கள் இருந்தால் கிடைக்கும்
சுகமோ சுகம். அவ்வா வீட்டில் இருந்ததால்தான்
அப்பாவும், அம்மாவும் எங்கள் கவலையில்லாமல்
வேலைக்கு போனார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அவ்வாவுக்கு காலை உணவு சாப்பிட்டு பழக்கமில்லை.
மதியம் 11 மணி வாக்கில் மீல்ஸ் சாப்பிடுவார். பிறகு
இரவு டிபன் தான். வயதானவர்கள் குழந்தையை போல.
சிறு திண்டி தின்ன அதிகம் விருப்பம் காட்டுவார்கள்.
செரிமான சக்தி குறைவு என்பதால்
உணவின் அளவு குறைத்து சாப்பிடுவதால் வரும் பசி இது.

சாப்பாட்டிற்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்த
பின்னர் நான் பள்ளியிலிருந்து வருவேன். தம்பியும்
வந்து சாப்பிட்டு விட்டு திரும்ப பள்ளி செல்வான்.
2 மணி வாக்கில் அப்பா சாப்பிட வருவார். பல நாட்கள்
கையில் பக்கோடா கொஞ்சமாக காராபூந்தியுடன் தான் வருவார்.

அப்பா கொஞ்சமாக எடுத்துக்கொண்டு மீதியை எங்களூக்கும்
பாட்டிக்கும் தருவார். பாட்டிக்கு அந்த ருசி அதாவது
தூங்கி எழுந்தவுடன் ஏதாவது சாப்பிட வேண்டும் எனும்
எனும் வாய்க்கு அந்த ருசி பிடிக்கும்.

அப்பா பக்கோடா வாங்கி வராத நாட்களில் அல்லது
ஊருக்கு போய்விடும் நாட்களில் காலையில் செய்த
கறியில் கொஞ்சமாக தன்க்கென எடுத்துவைத்துக்கொள்வார்
பாட்டி. அதை சாப்பிடுவார்.



எனக்கும் தம்பிக்கும் விடுமுறையாக இருக்கும் நாட்களில்
ஏதாவது சாப்பிடவேண்டுமென தோன்றும். சோறு தின்னச்
சொன்னால் விளக்கெண்ணெய் குடித்தது போல் முகம் மாறும்.

தம்பி அவ்வாவை தாஜா செய்வான். ”சரி! இந்தா உங்களுக்கு
பிடிச்சது வாங்கிக்கோங்க, எனக்கும் பூந்தி வாங்கிட்டு வா”
என்பார் பாட்டி. அதுவும் குறிப்பிட்ட கடைதான்.

கீழ் 3ஆம் வீதியில் ஒரு வீட்டில் இது போன்ற திண்பண்டங்கள்
தயாரிப்பார்கள். அவர்களது டேஸ்ட் நன்றாக இருக்கும்.
அது எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் என்பதால்
அப்பா ஆபீசுக்கு எதிரில் இருக்கும்(இப்போ அந்தக் கடை
இல்லை) தெலுங்கு மாமா கடையில் வாங்குவோம்.

அப்பாவுக்கு விடயம் தெரிய வேண்டாம். தெரிந்தால்
அனாவசியாமாக செலவு என திட்டுவார் என பாட்டி நினைத்து
அப்பாவுக்குத் தெரியாமல் வாங்கி வரச் சொல்வார்.

ஊருல எங்களைத் தெரியாதவங்களூம் உண்டா?
இந்த லட்சணத்தில் அப்பா ஆபீஸுக்கு எதிரில் இருக்கும்
கடையில் வாங்கினால்??? அந்த கடை மாமாவை
அப்பா, அம்மா, பாட்டி அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் போனாலே அந்த மாமா வேண்டியதை
பொட்டலம் கட்டி கொடுத்துவிடுவார். காசுகொடுத்தால்
அப்பாவோட அக்கவுண்ட்ல!!! சேத்திடறேன்!!!! என்பார்.

அக்கவுண்டில் அதிகமாக பணம் ஏறும் என்பதால்தான்
அப்பா திட்டுகிறார் என்று தெரிந்து பாட்டியே ஒரு முறை
கடைக்கு வந்து,” நான் பணம் கொடுத்தனுப்பினால் அதை
வாங்கிக்கொள்ளுங்கள்!! என்று சொல்லிவிட்டார்.


பாட்டிக்கு தோன்றும் போது எடு சைக்கிளை! என்று
கிளம்பிவிடுவோம். சில சமயம் அப்பா ஆபீஸுக்கு போய்
பாட்டி வாங்கி வரச்சொன்னார் என சொல்ல கோபத்துடன்
அக்கவுண்டில் வாங்கிகோ! என்பார் அப்பா.




பாட்டிக்கு பல் கிடையாது. அதனால் காராபூ்ந்திதான்
சாப்பிடுவார். ஒரு முறை தயிரில் ஊறவைத்த பக்கோடா
வாய்க்கு மெதுவாக இருக்க அப்போது முதல் பக்கோடாவும்
சாப்பிட ஆரம்பித்தார்.
இன்று ஊரில் எத்தனையோ கடைகள் இருக்கின்றன. ஆனால்
சில இடங்களில் அந்த டேஸ்ட் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
அதில் ஒன்று கீழ 2ஆம் வீதியில் பெரிய படிக்கட்டுகள் வைத்த
வீட்டு வாசலில் விற்கப்படும் பஜ்ஜி.


இன்னமும் மாலை 6 மணிக்கு் அங்கே சுடச்சுட பஜ்ஜி வியாபாரம்.
வாழை இலையில் சுற்றி தருவார்கள். அங்கேயே சாப்பிடுபவர்கள்
தான் அதிகம். அவர்களின் தேங்காய்சட்னி மிக ருசி.




சேட்டுக்கடை ஒன்று கீழ ராஜவீதியில் முன்பு இருந்தது
இப்போது கோர்ட் பக்கம் கடை வைத்திருக்கிறார்களாம்.
அவர்களின் சப்பாத்தியை விட பிரபலம் அல்வா. சுடச்சுட
அப்பா வாங்கி வருவார். இதன் முன் திருநெல்வேலி
அல்வால்லாம் ஒன்றுமே இல்லை என்று எங்கள் ஊர்க்காரர்கள்
சொல்வார்கள். சிவப்புக்கலரில் நெய் மினுமினுக்க சூப்பர் டேஸ்ட்.

அம்மாவுக்கு கை வலி என்பதால் அப்பா சப்பாத்தி சாப்பிடவேண்டுமென்று
தோன்றினால் சேட்டுக்கடைக்கு போய் சப்பாத்தி வாங்கிக்கொள்வார்.

போனில் பேசும்போது அப்பா,” சேட்டு கடைக்கு போயிருந்தேம்மா!!
அல்வாவைபாத்தேன். உங்க ஞாபகம் வந்துச்சு” எனச்சொல்லும்போது
மனதில் ஏதோ உருளும் !!

24 comments:

butterfly Surya said...

"ருசிகர" பதிவு.

Vidhya Chandrasekaran said...

:)

சுவாதி said...

//” சேட்டு கடைக்கு போயிருந்தேம்மா!!
அல்வாவைபாத்தேன். உங்க ஞாபகம் வந்துச்சு” எனச்சொல்லும்போது
மனதில் ஏதோ உருளும் !!//

கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வண்ணத்துபூச்சியாரே

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி வித்யா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சுவாதி

ராஜ நடராஜன் said...

"அவ்வா" மறந்து போன வார்த்தை.கால ஓட்டத்துல இப்படி நிறைய வார்த்தைகளை தொலைத்து விடுகிறோமில்ல:(

பக்கோடா,பஜ்ஜி நல்லாவே இருக்கும் போல தெரியுது.முன்பு கோவையிலும் கூட வாழைக்காய் பஜ்ஜிக்கெல்லாம் வாழையிலையில் தொட்டுக்க தேங்காய் சட்னிதான்.இப்ப எவர்சில்வர்களின் ஆதிக்கம்.

பக்கோடா பார்த்தவுடன் ஒரு டிப்ஸ் தரலாமே என்று மனதுக்கு தோன்றியது.கடலை மாவு,அரிசி மாவு பாதிக்குப் பாதி,ரவை கொஞ்சம் இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,கொத்துமல்லி கொஞ்சம் பெருஞ்சீரகம் தானுங்க சரியான காம்பினேசன்.(அம்மணிக்கு நாமதானே சமையல் ஆலோசகர்:))

இப்ப சொல்றதுதான் டிப்ஸ்.கொஞ்சம் மிருதுவா இருக்கவும் அளவீட்டில் அதிகமாக இருக்கவும் முட்டைக்கோஸ் நீளவாக்கில் நறுக்கி மேலே சொன்ன முக்கியப் பொருட்களின் கலவையுடன் கலக்கலாம்.

ஆயில்யன் said...

படம் நீங்க சுட்டதா...?

:)

pudugaithendral said...

"அவ்வா" மறந்து போன வார்த்தை.கால ஓட்டத்துல இப்படி நிறைய வார்த்தைகளை தொலைத்து விடுகிறோமில்ல//

ஆமாம். அவ்வா இறந்த பின்னர் அப்படி யாரையும் அழைக்கவேயில்லை.

உங்க ரெசிப்பிக்கு மிக்க நன்றி. ஆஷிஷ் (என் மகன்) பஜ்ஜி, பக்கோடா பிரியன். அவனுக்கு செஞ்சு கொடுத்து அசத்தறேன்.

pudugaithendral said...

சுட்டதுன்னா சுட்டதுதான்.

(நெட்ல சுட்டதா வீட்ல சுட்டதான்னு நீங்க கேக்கலியே பாஸ்))

GEETHA ACHAL said...

பழைய நியபங்கள் வருகின்றது...அருமையாக எழுதி இருக்கின்றிங்க

நட்புடன் ஜமால் said...

\\சுடச்சுட பஜ்ஜி வியாபாரம்.
வாழை இலையில் சுற்றி தருவார்கள். அங்கேயே சாப்பிடுபவர்கள்
தான் அதிகம். அவர்களின் தேங்காய்சட்னி மிக ருசி.

\\

யக்கோவ் பசிக்குது

இப்படி பதிவு போடுதியளே

துபாய் ராஜா said...

//” சேட்டு கடைக்கு போயிருந்தேம்மா!!
அல்வாவைபாத்தேன். உங்க ஞாபகம் வந்துச்சு” எனச்சொல்லும்போது
மனதில் ஏதோ உருளும் !!//

//கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள்.//

உண்மைதான் சகோதரி.

ராமலக்ஷ்மி said...

சுவையான பதிவு.

//இதன் முன் திருநெல்வேலி
அல்வால்லாம் ஒன்றுமே இல்லை என்று எங்கள் ஊர்க்காரர்கள்
சொல்வார்கள்.//

நீங்கள் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டிருக்கிறீர்களா:)?

pudugaithendral said...

முதல் வருகைக்கு நன்றி கீதா

pudugaithendral said...

இப்படி பதிவு போடுதியளே//

:)))))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராஜா

pudugaithendral said...

நீங்கள் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டிருக்கிறீர்களா//

சாப்பிட்டிருக்கிறேன் ராமலக்‌ஷ்மி,

நெய் கோட்டிங்குடன். அதே போல் மதுரையிலிருந்தும் எனக்காக ஷ்பெஷல் அல்வா வாங்கி வருவார்/இல்லாவிட்டால் இந்தப்பக்கம் வருபவர்களிடம் கொடுத்தனுப்புவார் சித்தப்பா.

ஆனால் எங்களூர் சேட்டுக்கடை அல்வா சம்திங் ட்ஃபரண்ட். சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும்.

எம்.எம்.அப்துல்லா said...

/அதில் ஒன்று கீழ 2ஆம் வீதியில் பெரிய படிக்கட்டுகள் வைத்த
வீட்டு வாசலில் விற்கப்படும் பஜ்ஜி.

//

கோபாலகிருஷ்ணன் வக்கீல் வீட்டு வாசலில் இருக்கும் கடைதானே???
அதுக்கு ஈடு இணையே இல்லை.

கடந்தமுறை ஊருக்குப்போய் இருந்தபோது அங்கு சென்று ஹெரு ஓரம் நின்று ஹாயாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். தற்போது ஊரில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்தமுகமாகி விட்டதால் தெருவில் சென்று கொண்டு இருந்த ஒருவர் என் அருகில் வந்து என்ன சார்...இங்க வந்து சாப்பிடுறீங்க? என்றார். ஏண்ணே தெருவில் நின்று சரக்கா சாப்பிடுறேன்? பஜ்ஜிதானே சாப்பிடுறேன் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் லேசாக சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விட்டேன்

:))

pudugaithendral said...

கோபாலகிருஷ்ணன் வக்கீல் வீட்டு வாசலில் இருக்கும் கடைதானே???
அதுக்கு ஈடு இணையே இல்லை.//

ஆமாம் அப்துல்லா

pudugaithendral said...

கடந்தமுறை ஊருக்குப்போய் இருந்தபோது அங்கு சென்று ஹெரு ஓரம் நின்று ஹாயாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். தற்போது ஊரில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்தமுகமாகி விட்டதால் தெருவில் சென்று கொண்டு இருந்த ஒருவர் என் அருகில் வந்து என்ன சார்...இங்க வந்து சாப்பிடுறீங்க? என்றார். ஏண்ணே தெருவில் நின்று சரக்கா சாப்பிடுறேன்? பஜ்ஜிதானே சாப்பிடுறேன் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் லேசாக சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விட்டேன்//

:))))))))))) ஸ்ரீராம், ஆஷிஷுக்கும் கூட அந்த இடம் மிகவும் பிடித்தது.

அன்புடன் அருணா said...

மொறு மொறுப்பான பதிவு.

pudugaithendral said...

நன்றி அரு்ணா

Starjan (ஸ்டார்ஜன்) said...

காமிச்சா மட்டும் போதுமா

எங்க அது

இப்படியெல்லாம் ஏமாத்தாதீங்க !!!!