Wednesday, July 29, 2009

சந்தோஷமா இருக்கு..

என் தோழி ஒரு கதை சொல்வாங்க.
அந்தக் கதையை நான் உங்களுக்குச் சொல்றேன்.

ஒரு ஊருல ஒரு அம்மா. அவங்களுக்கு 4 குழந்தைங்க.
2 மகள், 2 மகன். அன்னைக்கே உரிய அன்போடு
பிள்ளைகளை நல்லவிதமா வளர்த்தாங்க. பிள்ளைகளுக்காக
எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அன்புத்தாய்.

அம்மோவோட அன்புக்குத்தான் அளவே இல்லையே.
பிள்ளைங்க மனசு கோணாம அவங்க கேட்கும்
முன்னே செய்து தரும் அம்மா அவங்க.

பிள்ளைங்களும் வளர்ந்து பெரியவங்க ஆனாங்க.
அம்மா எப்போதும் போல அவங்களுக்குச் சேவைகள்
செஞ்சு, கல்யாணம் கட்டி கொடுத்து,
பேரன், பேத்திகளை எல்லாம் பார்த்த பிறகு
சந்தோஷமா மன திருப்தியுடன் இறைவனடி சேர்ந்தாங்க.

எமலோகத்தில் இறந்தவர்களின் பாவ புண்ணிய
கணக்குகளை பார்க்கும் பொழுது இந்த அம்மாவை
கொஞ்ச நாட்களுக்கு நரகத்தில் இருந்து விட்டு
பிறகு சொர்க்கம் செல்லும் படி யம தர்மன் சொல்ல
அம்மாவுக்கு ஆச்சரியம்!!

“நான் என் வாழ் நாளில் எனக்கென எதுவும்
செய்து கொண்டதில்லை. எப்போதும் என்
பிள்ளைகளை பேணி வளர்ப்பதில் தானே
கண்ணும் கருத்துமாக இருந்தேன். குடும்பத்தினரின்
சந்தோஷத்திற்காக என்னை தியாகம் செய்து
வாழ்ந்த நான் ஏன் நரக லோகத்தில்
தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று
கேட்க யமதர்மராஜ சொல்கிறார்
“அம்மா! உங்களுடைய தன்னலமற்ற
சேவைக்காகத்தான் உங்க தண்டனை
குறைக்கப்பட்டிருக்கிறது” அப்படின்னு
சொல்ல,”நான் செய்த குற்றம் தான் என்ன?”
அப்படின்னு அந்த அம்மா கேட்கிறார்.

யம தர்மராஜன் உன் பிள்ளைகளின்
நிலையைச் சற்று பார் என்று
சொல்லி மாயக்கண்ணாடியில் காட்டுகிறார்.
அங்கே அந்த அன்னையின் பிள்ளைகளும்,
மருமக்களும், பேரன், பேத்திகளும்
அவர் இல்லாமல் வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

பார்த்து பார்த்து செய்து கொடுக்க ஆளிருந்ததால்
தன் வேலையைத் தானே செய்து கொள்ளத்
தெரியாமல் சோம்பேறிகளாக வளர்ந்துவிட்டார்கள்.
அதனால் இப்போது குடும்பத்தில் குழப்பம், சண்டை
சச்சரவுகள் என நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்.

“எங்கம்மாவைச் சொல்லணும்! எனக்கு ஒண்ணும்
தெரியாமல் வளர்த்துட்டாங்க. அவங்களாலத்தான்
நான் இவ்வளவு கஷ்டம் படறேன்” என்று சொல்வதை
அந்தத் தாயும் கேட்டு கண்ணீர் விடுகிறாள்.

வாதமாக எடுத்துக்கொள்ளமால் இந்தக் கதை கூறும்
நீதி பிள்ளையை வளர்ப்பது என்பது அவர்கள் வேலையையும்
நாமே செய்து அவர்களின் வளர்ச்சியைக் கெடுப்பது இல்லை
என்பது. சுயமாக அவர்கள் வாழும் வகையில் வளர்க்க
வேண்டும். சரிதானே!

சரி இப்ப எனக்கு எதுக்காக சந்தோஷம். சொல்றேன்.:)
திருமணம்,குழந்தைகள் என்று ஆன பிறகு நான்
தனியாக எங்கும் சென்றதே இல்லை. ஆனால்
முதன் முறையாக திருமணம் ஒன்றுக்காக நான்
மட்டும் பயணம் ஒன்று செய்தே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம். போய்வந்தேன்.

ஞாயிறு, திங்கள் இரண்டு நாளும்
நான் ஊரில் இல்லை. திங்கள்
பிள்ளைகளுக்கு பள்ளி இருந்தது. ஆனால்
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரெடியாகி
விட்டார்களாம். அயித்தான் உணவு தயார்
செய்து கொடுக்க எப்போதும் போல் பள்ளிக்குச்
சென்று வந்து பாடம் படித்து,
துணிகளை மடித்துக்கொடுத்து, பாத்திரம் எடுத்து
வைக்க அப்பாவுக்கு உதவி செய்து....

என இருந்திருக்கார்கள். நான் எப்படி விட்டுச்
சென்றேனோ அப்படியே சுத்தமாக வீடு இருந்தது.

கேட்க சந்தோஷமாக இருந்தது. அந்தக் கதையி்ல்
வரும் தாய் போல இல்லாமல் இருப்பதால்
சந்தோஷம். :))

அயித்தானுக்கும், குட்டீஸ்களுக்கும் நன்றி.

9 comments:

நட்புடன் ஜமால் said...

மீன் பிடித்து கொடுப்பதை விட

மீ பிடிக்க கற்று கொடுப்பதே மேல்


--- ஏதோ பழமொழி.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜமால் அதுதான் சிறந்தது.

நன்றி

கோமதி அரசு said...

அயித்தானுக்கும், குட்டீஸ்களூக்கும்,
நல்ல பயிற்சி கொடுத்து இருக்கிறிர்கள்
பாராட்டுக்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதி,

முதன் முறையாக அயித்தானே வெண்டக்காய் வெட்டி கறி செஞ்சு கொடுத்திருக்காங்க. அவருக்கு கூட மிச்சமில்லாம போயிடுச்சாம். அம்புட்டு நல்லா இருந்துச்சாம்.

(இந்த ஞாயிற்றுக்கிழமை வெண்டக்காய் கறி செய்யச் சொல்லி சாப்பிட்டு பாக்கணும் :)) )

வல்லிசிம்ஹன் said...

தென்றல்,
இது ஒரு தனி மகிழ்ச்சி. ஒரு ஸ்வீட் சுதந்திரம் கூட.

ஆஷிஷ்,அம்ருதாவுக்கு வாழ்த்துகள்.
அத்தானுக்கு மற்ற சமையலும் சொல்லிக் கொடுங்கோ.

பாச மலர் said...

நல்ல விஷயம் இது கலா..குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வது..

மங்களூர் சிவா said...

/
முதன் முறையாக அயித்தானே வெண்டக்காய் வெட்டி கறி செஞ்சு கொடுத்திருக்காங்க. அவருக்கு கூட மிச்சமில்லாம போயிடுச்சாம். அம்புட்டு நல்லா இருந்துச்சாம்.
/

ஓஹோ!
ஓக்கே ஓக்கே!
:))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

அவருக்கு நேரம் கிடைக்கும்போது சமையல் சொல்லிக்கொடுத்துவிடுகிறேன்.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் பாசமலர்,

பிள்ளைகள் என்னைச் சார்ந்திராமல் தானே வாழ கற்க வேண்டுமென்பது என் எண்ணம்