Wednesday, December 30, 2009

சமயபுரத்தாளே சரணம்

அடுத்து நேராக சென்றது அருள்மிகு சமயபுரம்.

மாரியம்மன். கண்கண்ட தெய்வம்.
ஆயிரம் கண்ணுடையாள்.

அவ்வா உயிரோடு இருந்த வரை எங்களுக்கு ஏதும்
உடல்நிலை சரியில்லாமல் போனால் சாமிக்கு நேர்ந்து
கொண்டு பணம் முடித்து வைப்பார். வருடத்தில் ஒரு
தடவை கண்டிப்பாய் கூட்டி வந்து மாவிளக்கு போடுதல்
போன்ற பிரார்த்தனைகள் செய்வார். அதே பழக்கம்
நாங்களும் நேர்ந்து கொள்வதுண்டு. எப்போதும் போக
முடியுமோ அப்போது காணிக்கையை உண்டியலில்
செலுத்துவோம்.





கோவிலை நெருங்கிய நொடியிலிருந்து டென்ஷன் தான்.
இங்கே மட்டுமில்லை எங்கேயும் அதாவது முக்கியமாக
சுற்றுலா தலங்கள், புகழ்பெற்ற கோவில்களுக்கு போனால்
பிச்சைக்காரர்களின் ரோதனை தாங்கவே முடியவில்லை.
இவர்களை கட்டுப்படுத்த அரசு ஏதும் செய்யாதா?

பிச்சையிட விரும்பும் மனிதர்களிடம் வாங்கிக்கொண்டு,
மற்றவர்களை நிம்மதியாக இருக்க விட ஏற்பாடு செய்தால்
நல்லது. போக்கிரி தெலுங்கு படத்தில் பிரம்மானந்தத்தின்
பின்னாடியே அவர் எங்கு போனாலும் அவருடனுயே செல்லும்
பிச்சைக்காரர்கள் கூட்டம் போல பல மொழி பிச்சைக்காரர்களும்
இங்கே.

இவர்களுடன் போராடிக்கொண்டிருக்கும் பொழுதே வந்து
விடுகிறார்கள் கண்மலர், உருவாரம் விற்பவர்கள். வெள்ளி
மாதிரியான தகடில் ஆண் உருவம், பெண் உருவம்,
கண் மலர், உருண்டை, வீடு, கை, கால், இப்படி
செய்து வைத்திருப்பார்கள். கை வலி இருப்பவர்கள்
கை வாங்கிப்போடுகிறேன் என நேர்ந்து கொள்வார்கள்.

இவர்களுக்கும் ஒரு வரைமுறை செய்து ஒருவர்
பின்னாடியே 5 பேர் வருவதை தடுக்க ஏதாவது
நடவடிக்கையை அரசு எடுத்தாக வேண்டும்.

ஐயப்ப பக்தர்களின் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை
என்பதாலும் பக்தர்களின் கூட்டம். இந்த நிலையில்
பிச்சைக்காரர்கள் + விற்பவர்களின் டார்ச்சர்.

சரி கோபம் எனக்கு. இரு தரப்பினரையும் நன்கு
பிடிச்சு கத்திவிட்டேன். இன்னும் என் பின்னாடி
வந்தால் கை பிடித்து இழுத்துக்கொண்டு போய்
போலிசில் விட்டு விடுவேன் என்று மிரட்டியதும் தான்
பிச்சைக்கார கூட்டம் விட்டது.

உருவாரம் விற்பவர்கள் யாராவது ஒருவரிடம் நாம்
வாங்க முடியாது. ”நான் ரொம்ப நேரமா உங்க கூடயே
வந்துகிட்டு இருக்கேன், என் கிட்ட வாங்காம வேற
ஆளுகிட்ட வாங்கினா எப்படி”ன்னு சண்டைக்கு வருவாங்க.

உப்பு மிளகு போடும் பழக்கம் உண்டு. உடலில் எந்த
அரிப்பு, எரிச்சல் இல்லாமல் இருக்க போடுவார்கள்.
அரிப்பு அதிகமாக இருந்தால் அரியரிசி செய்து சாமிக்கு
படைப்பதாக வேண்டு, படைத்து அனைவருடனும்
பகிர்ந்துகொள்வதும் வழக்கம். உப்பு மிளகு மட்டும்
வாங்கிக்கொண்டோம்.கண்மலர், உருவாரம் வாங்கி
கொண்டு உப்பு, மிளகு கூட போட்டிருக்க மாட்டோம்.

இன்னொரு வியாபாரப் பெண் வந்து,” நீங்கள் அந்தப்
பையனிடம் வாங்கினீர்கள், காசை எல்லோரும்
பகிர்ந்து கொடுக்கச் சொல்லுங்கள்!!!”(54ரூவாயை
அத்தனை பேருக்கும் எப்படி பகிர்ந்து கொள்வார்கள்!!)
என்று பின்னாடியே வர வந்த கோபத்தில் அந்தப் பெண்ணின் கையை
பிடித்துக்கொண்டு வா,” போலிஸ் ஷ்டேஷன் போகலாம்,
உனக்கும் எனக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்!” என
சொல்ல கையை உதறிவிட்டு ஓடியே போனாள்.

ஆலயத்தில் சீட்டு கொடுப்பவர்,”இவங்களை இப்படித்தான்
டீல் செய்யணும்மா!!” என்று சொல்ல, ”கோவில் நிர்வாகம்
என்ன செய்யுதாம்!!”” என்று கேட்க பதிலே சொல்லாமல்
சீட்டு கிழித்து கொடுத்தார்.

அம்மனின் சந்நிதியை அடைந்த நொடியில் மனம்
வெல்லமாக கரைந்து விட்டது. புற்றில் அம்மன்குடி
இருப்பதாக ஐதீகம். அதனால் அபீஷேகம் எல்லாம்
உற்சவ விக்ரகத்துக்குத்தான்.

மேலும் விவரங்களுக்கு கோவிலின் தளம்.

திருவானைக்காவல், உறையூர், வயலூர் முருகன்
எல்லாம் போகும் இட லிஸ்டில் இருந்தாலும்
டயர்டாகிவிட்டதால் மதிய உணவு முடித்து கொஞ்சம்
ரெஸ்ட் எடுத்துக்கொண்டு புதுகைக்கு பயணமானோம்.









மேலே இருக்கும் புகைப்படங்கள் எந்த விமான நிலையம்னு
நினைக்கறீங்க. நமது தங்கத் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சி
சர்வதேச விமான நிலையம் புது கெட்டப்புல சூப்பரா இருக்குல்ல.

திருச்சி ஏற்போட்டும் மாறிடிச்சுப்பா
:)))))

12 comments:

சுந்தரா said...

முந்திய பதிவைப் படிக்கும்போதே அடுத்து சமயபுரத்தைப்பத்திதான் எழுதுவீங்கன்னு நினைச்சேன்.

//இவர்களுடன் போராடிக்கொண்டிருக்கும் பொழுதே வந்து
விடுகிறார்கள் கண்மலர், உருவாரம் விற்பவர்கள்...இவர்களுக்கும் ஒரு வரைமுறை செய்து ஒருவர்
பின்னாடியே 5 பேர் வருவதை தடுக்க ஏதாவது
நடவடிக்கையை அரசு எடுத்தாக வேண்டும்.//

இதே தாங்க...நானும் ஒவ்வொருமுறையும் அனுபவிப்பதும் மனதில் நினைப்பதும்.

நம்ம பதிலை எதிர்பார்க்காம அத்தனையையும் அர்ச்சனைத்தட்டில் வைத்துவிட்டு ஐம்பது கொடு நூறுகொடு என்று அவஸ்தைப்படுத்துகிறார்கள்.

//நமது தங்கத் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சி
சர்வதேச விமான நிலையம் புது கெட்டப்புல சூப்பரா இருக்குல்ல.//

நிஜமாவே முன்னைவிட ரொம்ப நல்லா இருக்குது. நானும் பார்த்து அதிசயப்பட்டேன் :)

pudugaithendral said...

வாங்க சுந்தரா,

இதனாலதான் சில பிரபலமான கோவில்களுக்கு போவதை தவிர்க்கவே பார்ப்பேன். கோவில்கள் கமெர்ஷியல் செண்டர்களாகிவிட்டன.

:((

ராமலக்ஷ்மி said...

இதே நெருடல் அனுபவம் எனக்கும் உண்டு. வழிபாட்டுக்கென செல்லும் இடத்தில் மனதின் அமைதியே போய் விடுகிறது சமயத்தில் நாம் வாங்க மறுக்கையில் வருகின்ற வசவுகளால்:(! சுற்றுலா வளர்ச்சியில் அக்கறை காட்டும் அரசு, இதையும் அதில் ஒரு கடமையாக நினைத்து செயல்பட வேண்டும் என்பதே என் கருத்தும்.

pudugaithendral said...

சுற்றுலா வளர்ச்சியில் அக்கறை காட்டும் அரசு, இதையும் அதில் ஒரு கடமையாக நினைத்து செயல்பட வேண்டும் //

ஆமாம் ராமலக்‌ஷ்மி
சரியா சொன்னீங்க

வருகைக்கு நன்றி

சுரேகா.. said...

என்னங்க இன்னும் புதுக்கோட்டை வரலை!

வெய்ட்டிங்!

pudugaithendral said...

இன்னும் புதுக்கோட்டை வரலை!//

திருச்சியிலேர்ந்து புதுகை கிளம்பினேன்னு போட்டிருக்கேனே தலைவரே. 20 முதல் 24 வரை புதுகையில் தான் இருந்தேன்.

:)))

சாந்தி மாரியப்பன் said...

//”நான் ரொம்ப நேரமா உங்க கூடயே
வந்துகிட்டு இருக்கேன், என் கிட்ட வாங்காம வேற
ஆளுகிட்ட வாங்கினா எப்படி”ன்னு சண்டைக்கு வருவாங்க.//
சமயபுரத்துக்கு போய் விட்டு, இதை கேக்காம வந்தா ஆத்தா கோச்சுப்பா :-))).
காரிலிருந்து இறங்கியதிலிருந்து,பின்னாடியே வந்துட்டு, கோயில் வாசல் வரை கொண்டாந்து விட்டிருக்கேங்க்கா... எங்கிட்ட வாங்குங்க..ன்னு ஒரு சிறுவன் சொன்னானே பாக்கணும்.!!!.

ஹுஸைனம்மா said...

சும்மா கடை, கண்ணிகளுக்குப் போகும்போதே இவங்க தொல்லை தாங்கமுடியல.

ஒரு முறை வீட்டு வாசலில் வந்து பிச்சை கேட்ட (கொஞ்சம் சுத்தமாக இருந்த) ஒரு பெண்ணை வீட்டு மேல்வேலைகள் செய்ய வருவியா என்று கேட்க, அவள் வேலையெல்லாம் செஞ்சா எங்க சொந்தக்காரங்க கேவலமாப் பேசுவாங்கன்னு சொல்லிட்டுப் போனா!!

pudugaithendral said...

காரிலிருந்து இறங்கியதிலிருந்து,பின்னாடியே வந்துட்டு, கோயில் வாசல் வரை கொண்டாந்து விட்டிருக்கேங்க்கா... எங்கிட்ட வாங்குங்க..ன்னு ஒரு சிறுவன் சொன்னானே பாக்கணும்.!!//

ம்ம் என்னத்த சொல்ல

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நோகாம நோன்பு கும்பிடும் ஆளுங்க இவங்க. அதான் கோவம் வருது

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

Unknown said...

எங்கம்மா பத்தி எழுதினதால், ஓடி வந்திட்டோம்ல. இந்தியாவை விட்டு இவ்ளோ தள்ளி இருப்பதில், மனம் விட்டு அழுவது, சமயபுரத்தாளைப் பார்க்காமல் இருப்பதை நினைத்துத் தான்.

//அம்மனின் சந்நிதியை அடைந்த நொடியில் மனம் வெல்லமாக கரைந்து விட்டது// அதிருஷ்டக்காரி நீங்கள்.

//,” போலிஸ் ஷ்டேஷன் போகலாம், உனக்கும் எனக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்!”// ந‌ல்ல‌ ஐடியாகொடுத்த‌த‌ற்கு ந‌ன்றி! அடுத்த‌ முறை செய‌ல்ப‌டுத்துவேன்:-)

//ஆலயத்தில் சீட்டு கொடுப்பவர் // அந்த‌ சீட்டை வாங்கி உள்ள‌ விடுப‌வ‌ர், அவ‌ச‌ர‌மா சொல்லுவார், "அங்க‌ 20ரூ சீட்டு வாங்கிட்டு வ‌ர‌துக்கு ப‌திலா, என‌க்கு ஆளுக்கு 10ரூ கொடுத்திருங்க‌" என்று:-( அதை எங்கே சொல்வ‌து?

pudugaithendral said...

வாங்க கெக்கே பிக்குணி,

அம்மாவை பாத்தாலே பரவசம் தானே.

//ஆலயத்தில் சீட்டு கொடுப்பவர் // அந்த‌ சீட்டை வாங்கி உள்ள‌ விடுப‌வ‌ர், அவ‌ச‌ர‌மா சொல்லுவார், "அங்க‌ 20ரூ சீட்டு வாங்கிட்டு வ‌ர‌துக்கு ப‌திலா, என‌க்கு ஆளுக்கு 10ரூ கொடுத்திருங்க‌" என்று:-( அதை எங்கே சொல்வ‌து?//

கொடுமை தான். சென்னை தி.நகரில் வண்டியை பார்க்கிங் செய்திருந்தோம். பார்க்கிங்கிற்கு 10 ரூபாய் கட்டணம் என்றார். ரசீது கொடு என்றதற்கு ரசீது என்றால் 20 ரூபாய், ரசீது வேண்டாம் என்றால் 10ரூபாய் தான் என்றார்.

அது போல இருக்கு
:((