Tuesday, February 09, 2010

எப்படிச் சொல்வேனடி???

இலங்கைக்கு மாற்றலாகிப்போன புதிது. ஒரு 4 மாதத்திற்கு பிறகு
என நினைக்கிறேன். மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்
அயித்தான் சாப்பிட்டு உடன் கிளம்பிவிடுவார். அன்று கிளம்பவில்லை.
கொஞ்சம் லேட்டாக போவார் போல என நினைத்து பேசாமல்
இருந்துவிட்டேன். பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு நான்
துணிமடிக்க ஆரம்பித்த நேரத்தில் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

”உன் ஃப்ரெண்டுகிட்டேயிருந்து லெட்டர் ஏதும் வந்துச்சும்மா!”

”இல்லப்பா, நான் இங்க வந்ததைப்பத்தியும் நம்ம அட்ரஸை கொடுத்தும்
லெட்டர் போட்டேன். அதுக்கப்புறம் அவகிட்டேயிருந்து பதிலே இல்லை.
எப்பவும் லெட்டர் வரும். ஆனா வரலியேன்னு யோசிச்சுகிட்டேயிருக்கேன்.”


போன் ஏதும் செஞ்சியா?

இல்லையே! ஏன் என்னாச்சு?!!

”இல்ல கேட்டேன்” என்றவர் ஏதோ சொல்லத் தயங்குகிறார் என்பது
புரிய ஆரம்பித்தது. என்னாச்சுன்னு சொல்லுங்க.

தாங்குவியான்னுத் தெரியலை. கார்த்தி( என் தம்பி) காலேல
போன் செஞ்சு விஷயம் சொன்னான். “அக்காக்கு எப்படி சொல்வதுன்னு
புரியலை, நீங்களே மெல்ல விஷயத்தை சொல்லிடுங்க பாவா”ன்னு
சொன்னான்.

என்னன்னு சொல்லுங்க,

என் கைகளை மெல்ல பிடிச்சுகிட்டு “உன் ஃப்ரெண்டோட கணவர்
இறந்துவிட்டார்” என்ற விஷய்ம் கேட்ட நொடியில் பரிதவித்து போனேன்.
என்னைவிட 2 வயது சின்னவள். இருவரும் கல்லூரி தோழிக்கள்.
சிறிய வயதில் இரண்டு குழந்தைகளுடன் என்ன செய்யப்போகிறாள்!!
என நினைத்த நொடியிலிருந்து கண்ணில் நீர். கட்டுக்கடங்காமல்
போய்க்கொண்டிருக்கிறது.

என் நெருங்கிய ஒரே தோழி அவள்தான் என்பது என் வீட்டினர்
அனைவருக்கும் தெரியும். இந்த விஷயம் கேள்விப்பட்டால்
நான் நொறுங்கிப்போய்விடுவேன் என்று ஆறுதல் சொல்ல
மதியம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து பொறுமையாக
என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பிறந்ததிலிருந்து அழாத அழுகை அன்று நான் அழுதது.
என் தோழியின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று
புலம்பி தீர்த்தேன். இறைவனுடன் சண்டை போட்டேன்.

மஞ்சள் காமாலை நோயிலிருந்து தன் கணவனை மீட்க
சென்னை வரை வந்து வைத்தியம் பார்த்தாளே, கைவிட்டு
விட்டாயே இறைவா என்று கதறினேன்.

அவங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்க. பேசு என்றார்
கணவர். என் அப்பாவுக்கு போன் போட்டு அவங்க நம்பர்
வாங்கிக்கொண்டு தோழியின் அம்மாவீட்டுக்கு போன் செய்தேன்.
லைனுக்கு வந்தவளிடம்,”என்னம்மா ஆச்சு!” என்றேன்
கண்ணீருடன்.

”நீ இருந்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். எப்போதும்
தொடர்பில் இருப்பாய். எப்போது என்னைத் தாங்க உன்
தோள் தேவையோ அப்போது என்னைவிட்டு எங்கே போனாய்??”
என்றவளிடம் நான் என்ன சொல்வேன்??

நான் எனது விலாசம் எழுதிய கடிதம் அவளுக்கு சேர்ந்த பொழுது
அவளோ கணவனைக் காக்க மருத்துவமனையில் இருந்திருக்கிறாள்.
அதற்கப்புறம் எல்லாம் முடிந்து விட்டது.


அந்த சோகத்திலிருந்து என்னை நான் மீட்க பல நாள் ஆனது.
இப்போதும அவளுடன் தொடர்பில் இருக்கிறேன். வாழ்க்கை எனும்
கடலில் நீந்தி மேலே தாமரையாக வந்திருக்கிறாள் இப்போது.
“எங்களுக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை?” என்று கேட்கும்
அவளது மகன்களுக்கு புரிய வைத்து பதில் சொல்லக் கற்றுக்
கொண்டுவிட்டாள் தோழி.

ஆனால் உன் திருமணநாளை மறக்க எனக்குத் தெரியவில்லையடி
பெண்ணே! ஊருக்கெல்லாம் மறக்காமல் வாழ்த்து சொல்லும் எனக்கு
என் ஆருயிர் தோழிக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லையே!! என்ற
வருத்தம் எப்போதும் உண்டு.

இதோ இன்று உன் திருமணநாள். வாழ்த்த முடியாமல் என் வாய்
மூடிக் கதறிக்கொண்டிருக்கிறேனே!

இந்த நிலையை ஏன் கொடுத்தான் ஆண்டவன்?

24 comments:

துளசி கோபால் said...

அடடா...... வருத்தமா இருக்கு.

தோழிக்கு என் அன்பு.

Ananya Mahadevan said...

ரொம்ப மனசை உலுக்கிடுத்து. என்ன பண்றது? உங்க தோழி மேன்மேலும் வாழ்வில் உயரட்டும்.நல்ல நிலைக்கு வரட்டும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் மேம்படட்டும். என் பிரார்த்தனைகள் உடனிருக்கும். May God always be with her. நீங்களும் இருக்கீங்களே. :) கவலைப்படாதீங்க. ஒரு கதவை மூடினா ஒரு கதவு திறக்கும்.

sathishsangkavi.blogspot.com said...

//இதோ இன்று உன் திருமணநாள். வாழ்த்த முடியாமல் என் வாய்
மூடிக் கதறிக்கொண்டிருக்கிறேனே!//

கண்ணீர் தான் வருகிறது... எனது தோழியின் நிலமை கூட இது போலத்தான்....

Vidhoosh said...

:( ரொம்ப வருத்தமாக இருக்கு.

ஆனால், தென்றல், அவர் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நீங்களும் கலங்கி அவரையும் கலங்க வைக்காதீர்கள். அவருக்கும் மிகவும் அவசியம் மனதைரியம் மட்டுமே. அவருக்கும் இறைவன் என்றும் துணையாக இருக்கட்டும்.

கோமதி அரசு said...

நெருங்கியவர்களின் வேதனை நம்மை கலங்க தான் வைக்கும் .
நீங்கள் உங்கள் தோழிக்கு தைரியம் அளித்து , வாழ்வு வளம் பெற பிராத்தனை செய்யுங்கள்.

pudugaithendral said...

வாங்க வரதராஜுலு,

வாங்க துளசி அக்கா,

pudugaithendral said...

வாங்க அநன்யா,

ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருக்கிறாள் இப்போது.

pudugaithendral said...

எனது தோழியின் நிலமை கூட இது போலத்தான்....//

அவங்களுக்கு என் அனுதாபங்கள் இல்லை, பிரார்த்தனை எப்போதும் இருக்கும்.

pudugaithendral said...

அவர் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நீங்களும் கலங்கி அவரையும் கலங்க வைக்காதீர்கள். அவருக்கும் மிகவும் அவசியம் மனதைரியம் மட்டுமே. அவருக்கும் இறைவன் என்றும் துணையாக இருக்கட்டும்.//

அவளும் மீண்டுவிட்டாள் வித்யா, நானும் மீண்டுவிட்டேன். ஆனால் இன்று(திருமண நாள்) யாருடனும் கலக்காமல் வீட்டுக்குள்ளேயே தன்னை பூட்டி வைத்துக்கொண்டு குமுறிக்கொண்டிருக்கிறாள். இந்த ஒரு நாள்.....

pudugaithendral said...

நீங்கள் உங்கள் தோழிக்கு தைரியம் அளித்து , வாழ்வு வளம் பெற பிராத்தனை செய்யுங்கள்.//

கண்டிப்பாக கோமதி அரசு,

தாய்வீட்டுக்குச் செல்லாமல் கணவனுட்ன் வாழ்ந்த ஊரிலேயே தன்னம்பிக்கையுடன் முன்னேறி வந்திருக்கிறாள் என் அன்புத் தோழி.

ஹுஸைனம்மா said...

அவங்க தைரியமா இருக்கிறது ஆறுதலா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வருத்தமா இருக்குப்பா.. அவங்க தனியா இல்லை. இத்தனை பேருடைய பிரார்த்தனைகளும் அவங்க கூட இருக்குன்னு சொல்லுங்க.

இராகவன் நைஜிரியா said...

படிக்கவே மனசு ரொம்ப கஷ்டமாயிருக்குங்க... என்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்கள் தோழிக்கு வாழ்க்கையை நடத்த தைரியத்தை கொடுக்கட்டும் என பிராத்திக்கின்றேன்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வித்யா

அது நடந்து 7 வருஷம் முடிஞ்சு போச்சு. மத்தநாளில் சாதாரணமா இருப்பா. இன்னைக்கு திருமணநாள். அழுதுகிட்டு இருப்பா.

pudugaithendral said...

வருத்தமா இருக்குப்பா.. அவங்க தனியா இல்லை. இத்தனை பேருடைய பிரார்த்தனைகளும் அவங்க கூட இருக்குன்னு சொல்லுங்க.//

என் பதிவுகளை அவளும் படிக்கறா. கண்டிப்பா சொல்றேன் அமைதிச்சாரல்

pudugaithendral said...

நன்றி இராகவன்

Menaga Sathia said...

படித்ததும் கண்களில் கண்ணீர்..என்ன சொல்வதென்று தெரியவில்லை..தோழிக்கு என் அன்பு...

எம்.எம்.அப்துல்லா said...

:)

அன்புடன் அருணா said...

உங்க தோழி மேன்மேலும் வாழ்வில் உயரட்டும்.நல்ல நிலைக்கு வரட்டும்.

Thangavel Manickadevar said...

புதுகைத் தென்றல் ரொம்பவும் டச்சிங்கா இருக்கிறது என்று எழுதலாமென்றால் முடியவில்லை. உங்களின் அந்த தோழி இமயத்திற்கும் ஒப்பானவராகத்தான் இருப்பார். உங்களின் இந்தப் பதிவு அவர்களின் மனதினை வருந்தச் செய்து விடுமோ என்ற பதைப்புத்தான் எனக்குள் எழுகிறது. அந்த தோழியின் தாய்மை கடவுளுக்கு ஒப்பானதாகத்தான் இருக்கவியலும்.

Thenammai Lakshmanan said...

மிக வருத்தமாய் இருக்கிறது தென்றல் இருந்தாலும் நினைவுகளுக்கு மரணமேது அவளுக்கு எனது வாழ்த்தும்

pudugaithendral said...

நன்றி அருணா,

வருகைக்கு நன்றிதங்கவேல்,
எனக்கும் என் தோழிக்குமான பிணைப்பு இன்று நேற்றல்ல 16 வருடங்களுக்கு மேற்பட்டது. அவள் துயர் உரும் எந்த செயலையும் செய்ய மாட்டேன். தங்கள் ஆதங்கத்துக்கு நன்றி

அந்த தோழியின் தாய்மை கடவுளுக்கு ஒப்பானதாகத்தான் இருக்கவியலும்.// நெகிழ்ந்தேன்.

நன்றி தேனம்மை, காரைக்குடியைச் சேர்ந்தவள் தான்.

Thamira said...

தைரியமற்ற மனங்கள்தான் பொய்மையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கிடக்கின்றன.

இறை நம்பிக்கையை தூக்கியெறியும் தருணங்கள் இவை. உண்மை படிந்திருப்பதால் வேதனை உண்டுபண்ணிய பதிவிது.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்