Monday, March 08, 2010

மகளீர் தின சிறப்பு பதிவு போடவில்லை.

மகளீர் தின சிறப்பு பதிவு போடவேண்டும் என நினைத்தேன்.
ஆனால் மனமே இல்லை. ஒரு நாள் மட்டும் மகளீர் தினம்
அது இது என்று சொல்லி நம்மை நாமே தேத்திக்கொள்கிறோமே
தவிர நிஜத்தில் நடப்பது என்ன? எத்தனையோ முன்னேற்றங்கள்
இன்றைய பெண்கள் வாழ்வில். மறுக்க வாய்ப்பில்லை. அதே
சமயம் சமூகத்தில் பெண் இப்போதும் போகப் பொருளாகத்தான்
பார்க்கப்படுகிறாள்.

ஒரு நாள் இரவு 9 மணி வாக்கில் நானும் அயித்தானும்
கடைக்குச் சென்றோம். அவர் ஒரு கடையில் வாங்கிக்
கொண்டு இருக்க 2 நிமிட தூரத்தில் இருக்கும் ஸ்வீட்
ஷாப்பில் தயிர் வாங்கப்போனேன். கொஞ்சம் இருட்டுதான்.
வேகமாக நடந்த என்னை எதிர் நோக்கி வந்த ஆண்
சொன்ன வார்த்தைகள் கை கால்கள் வெல வெலத்து
போய்விட்டன. தயிரை வாங்கி வந்து அயித்தானின்
கைபிடித்தபடிதான் வீடு வந்து சேர்ந்தேன்.நடந்ததை
அவரிடமும் சொன்னேன்.


திருமணமான, இரண்டுகுழந்தைக்கு தாயான எனக்கே
இந்த நிலை என்றாள் நாளை என் பெண் எப்படி?
தனியாக வளைய வருவாள். சமூகம் பாதுகாப்பாக
இல்லை.

என்னை 6 வயதில் அப்பா தனியாக கடைக்கு
அனுப்பி பழக்க படுத்தினார். இன்று என் மகளை
தனியாக அனுப்பி விட்டு நெஞ்சு அடித்துக் கொள்கிறது.
எத்தனை கதைகள் படிக்கிறோம்.

பெண் போதைப்பொருள் என்னும் எண்ணத்தை
ஆணின் மனத்திலிருந்து எடுக்காவிட்டால் எந்த
முன்னேற்றமும் வந்துவிடாது. 33% சதவிகிதம்
கொடுத்தால் மட்டும் முன்னேற்றம் வந்துவிடுமா?
அந்த எம் எல் ஏ, எம்பிக்கள் வேண்டுமானால்
சொத்து சேர்க்கலாம். வேறெதுவும் நல்லவிதமாக
நடக்கும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை.


காப்பி, சோப், இப்படி பல விளம்பரங்களுக்கு
கவர்ச்சியான உடையணிந்த படி வரும் பெண்களை
என்ன செய்தாலும் தகும். அப்படி உடை அணிய
மாட்டேன் என்று சொல்லாமல் இவர்கள் அணியும்
அரைகுறை ஆடைகள் மேலும் பெண்கள் மீது
தவறான எண்ணத்தையே தருகிறது. இவற்றுக்கெல்லாம்
ஒரு அமைப்பு இருந்து அப்படிபட்ட விளம்பரம்
எடுக்கப்படாமல் தடுத்தால் தான் உண்டு.

விஜய் மல்லய்யாவின் கிங்ஃபிஷர் காலண்டர்கள்
உலகப்ரசித்தம். அதுவும் அதில் எல்லாம் டூ பீஸ்
பெண்கள்தான். சென்ற வருட ஆள்பிடிப்புக்கு
நடுவர்களில் ஒருவர் நம்ம மாதவன். ஆளை செலக்ட் செய்வதை
டீவியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல்
பார்க்கும் படி சொல்லி கேட்டுக்கொண்டு போட்டார்கள்.
வந்த க்ளிப்பிங்க்ஸையே பார்க்க முடியவில்லை.

தன் உடலைக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்கள்
காசு சம்பாதிககாவிட்டால்தான் என்ன?

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை
குளியல் அறையில் நெறிக்க போக காப்பாற்ற
வந்த அவளின் தந்தையையும் கழுத்து அறுபட்டு
இறந்தார் என்பது செய்தி.அநாதையாய் பதின்மத்தில்
இருக்கும் அந்தக் குழந்தை பாவம். இன்றும் இத்தகைய
செய்திகளுக்கு ஒன்றும் குறைவில்லை.

ஆசிட் ஊத்தும் கயவர்களுக்கு 10 ஆண்டு
கடுங்காவல் தண்டனைக்கு இங்கே அமைச்சர்
சபீதா ரெட்டி சொல்லியிருக்கிறார். 10 ஆண்டு
கொடுக்காமல் ”ஷூட் அட் சைட்” சட்டம்
போடலாம். அப்பத்தான் அடுத்த ஆளுக்கு
அந்த எண்ணம் வராது.


மீரா குமார் பேச்சாளர், பிரதீமா பாடில் குடியரசு தலைவர்,
இங்கே சபீதா ரெட்டி, கீதா ரெட்டி ஆகியோர் அமைச்சர்கள்
எல்லாம் சரி. ஆனால் இரவில் ஒரு பெண்
தனியாக கடைக்கு போய் வர முடியவில்லை.
எனக்கு மட்டும்தான் இப்படி ஆகியிருக்கும் என்று
அர்த்தமில்லை. பலர் இருப்பார்கள். வெளியே
சொல்ல மறுத்திருப்பார்கள். தயக்கம். சொல்லி
ஆவப்போவது ஒன்றுமில்லை என்ற எண்ணம்.
நானும் சொல்லாமல் இருந்திருக்கலாம். நஷ்டம்
ஏதுமில்லை.

ட்யூஷன் செண்டர் ஒன்றில் தனது சகமாணவியை
தகாத கமெண்ட் அடித்து ஆசிரியர்(அவரும் ஒரு ஆண் )
தந்த மனஉளைச்சலால் என் தோழியின் மகள்
பட்ட கஷ்டம்!! அப்பப்பா, கவுன்சிலிங் கொடுத்து
அந்தக் குழந்தையை சரி செய்தோம்.


ஒரு பெண் தனியாக ரோடில் சுதந்திரமாக பாதுகாப்பாக
நடக்கும் நாள்தான் நாம் உண்மையான சுதந்திரம்
அடைந்திருக்கிறோம் என்ற காந்தி பெருந்தகையின்
வார்த்தைகள் ஏனோ மனதுக்குள் வந்து போயின.


ஒரு பெண் தனியாக ரோடில் நடந்து போக முடியாவிட்டால் என்ன
மகளீர் தினம்? சமூகத்தில் இன்னும் இந்த அவல நிலை.
என்ன கொண்டாட்டம் போங்கள். :(


34 comments:

கண்மணி/kanmani said...

புதுகைத் தென்றல் இப்படி புலம்பல் தென்றல் ஆவது தவிர ஒன்னும் செய்ய முடியாது தாயீ.
மகாத்மா சொன்னது போல நள்ளிரவில் என்றைக்கு ஒரு பெண் தனியாக நடமாட முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் பெண் உரிமை தினம்.உங்களைப் போன்ற அனுபவம் எனக்கும் என் தோழிகளுக்கும் கூட உண்டு.

சாந்தி மாரியப்பன் said...

//காப்பி, சோப், இப்படி பல விளம்பரங்களுக்கு
கவர்ச்சியான உடையணிந்த படி வரும் பெண்களை
என்ன செய்தாலும் தகும்//

ஆண்களுக்கான பொருட்களுக்கு கூட இப்படித்தான் வந்து விளம்பரம் செய்றாங்க. இந்த டி.வி. க்கொரு சென்சார் இருந்தா தேவலை.

எம்.எம்.அப்துல்லா said...

பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு பற்றி உங்கள் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அங்கு இட ஒதுக்கீட்டில் செல்லப்போகும் பெண்களில் 10 சதவிகிதம்பேர் கூட உரையாடப்போவதில்லை.காரணம் அவர்கள் தங்கள் கணவனுக்கு பதிலாகவோ,தந்தைக்கு பதிலாகவோ செல்லப்போகுபவர்கள்.இதுதான் நடக்கும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சரியாச்சொன்னீங்க! அது ஒண்ணுதான் குறைச்சல்

pudugaithendral said...

வாங்க கண்மணி டீச்சர்

புதுகைத் தென்றல் இப்படி புலம்பல் தென்றல் ஆவது தவிர ஒன்னும் செய்ய முடியாது தாயீ.//

ஸ்மைலி போட்டு மனதை ஆத்திக்கறேன். :))

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல் ,

டீவிக்கு மட்டுமல்ல இல்ல விளம்பரப் படங்களுக்கு சென்சார் போர்டு தேவை.

பிரபல சின்னத்திரை இயக்குனர் பத்தி வார இதழில் வந்ததை படிச்சீங்களா?

pudugaithendral said...

ஆமாம் அப்துல்லா,

ராப்ரிதேவியை பேருக்கு முதல்வாராக்கிவிட்டு லல்லு ராஜ்ஜியம் நடத்தியதை பார்த்துக்கொண்டு தானே இருந்தோம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சாந்தி

மெளலி (மதுரையம்பதி) said...

மிக நிதர்சனமான கட்டுரை, வரிக்கு வரி உங்கள் கருத்தை ஏற்கிறேன். சாதாரணமாகவே வருடத்து ஒருநாள் அன்புதினம், ஒருநாள் தந்தை/தாய் தினம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை....இதை எங்கோ பின்னூட்டி வாங்கிக்கட்டிகொண்டேன்...:)

pudugaithendral said...

வாங்க மதுரையம்பதி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராமலக்ஷ்மி said...

/ஒரு பெண் தனியாக ரோடில் சுதந்திரமாக பாதுகாப்பாக
நடக்கும் நாள்தான் நாம் உண்மையான சுதந்திரம்
அடைந்திருக்கிறோம் என்ற காந்தி பெருந்தகையின்
வார்த்தைகள் ஏனோ மனதுக்குள் வந்து போயின.//

உண்மைதான் தென்றல்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் எழும் குரல்கள் அந்நாளுடனே அமுங்கி விடுமெனில்...நீங்கள் முடிவாய் சொன்னதேதான்:(!

ஹுஸைனம்மா said...

/இன்று என் மகளை
தனியாக அனுப்பி விட்டு நெஞ்சு அடித்துக் கொள்கிறது.//

எம்மகனையும் அனுப்பிட்டு இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கு, இந்த விஷயத்துல இப்ப பையன்களையும் விட்டு வைக்கிறதில்ல படுபாவிங்க!!

//33% சதவிகிதம்
கொடுத்தால் மட்டும் முன்னேற்றம் வந்துவிடுமா?//

அதே, அதே!!

புரட்சி, புதுமைங்கிறதுக்கு இன்றைய (பல) பெண்கள் மத்தியில அர்த்தமே மாறிப்போச்சு!!

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

இந்த விஷயத்துல இப்ப பையன்களையும் விட்டு வைக்கிறதில்ல படுபாவிங்க!!//

ஆமாம் ஹுசைனம்மா,

இப்ப பிள்ளை வளர்ப்பு என்பது ரொம்ப சவாலாகிடுச்சு.

வருகைக்கு நன்றிபா

வெள்ளிநிலா said...

i agree with M.M.ABDULLA

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வெள்ளிநிலா

Ananya Mahadevan said...

வரிக்கு வரி உங்கள் எண்ணங்களை ஆமோதிக்கிறேன்! மிகவும் சரி. எனக்கென்னமோ இந்த மகளிர் தினத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நிறைய ஃபார்வேட்ஸ் வந்தது. என்ன வந்து என்ன பிரயோஜனம்? உங்களுக்கு நிகழ்ந்தது போல எல்லா பெண்களுக்கும் சர்வ சாதாரணமாக நடக்கிறதே! என்ன வேண்டிக்கிடக்கு மகளிர் தினம் மண்ணாங்கட்டி தினம்?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சிறந்த சிந்தனையை தூண்டும் பதிவு. உண்மை தான் புதுகை தென்றல், நம் வீட்டில் இருந்து மாற்றத்தை துவங்க வேண்டும். நமது ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை பற்றிய உயர்வை போதித்து வளர்பதன் மூலம் நாளைய சமுதாயமேனும் பெண்களை போகபொருளாக பார்க்கும் சமுதாயமாக இல்லாமல் இருக்கும். மகளிர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

"மகளீர் தின சிறப்பு பதிவு போடவில்லை." அப்படீன்னு சொல்லிட்டு கலக்கிட்டீங்க!

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாவி தங்கமணி,

மாற்றம் வீட்டிலிருந்து வந்தால்தான் சமுதாயத்தில் மாற்றம் வர வாய்ப்புய்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

மகளீர் தினம் அன்னைக்கு சாதிச்சவங்களைப் பத்தி சொல்லும் பொழுது கஷ்டபடறவங்களை மறந்திடறாங்க. பெண்களின் அவலநிலை மாறவேயில்லைன்னு சொல்லணும்னுதான் பதிவு போட்டேன்.

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் எனக்கு நேற்று மகளிர்தினம் என்பதே மறந்து போய்விட்டது:)
வந்திருக்கும் பேத்தியைக் கொண்டாடி நானும் மகளிர்தினம் இன்பமாகச் செலவிட்டேன். இவர்கள் வளரும் நேரமாவது நாடு நலம் பெறணும்னு இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

பேத்தியோட எஞ்சாய் செஞ்சிருக்கீங்க.

நீங்க சொல்வது போல வளமான வருங்காலம் வரும் தலைமுறைக்காவது வரணும்

வருகைக்கு நன்றி

Anonymous said...

அருமை.. பதிவு இல்லன்னு தலைப்பு கொடுத்துட்டு மனசுல பதிஞ்சுட்டீங்க அம்மணி.

நாஸியா said...

சரியா சொன்னீங்க சகோதரி.. பெண் சுதந்திரம்னு கூவி கூவி ஒரு பிரயோஜனமும் இல்லை.. உலகத்துல எந்த நாட்டுலயுமே பெண்கள் பாதுகாப்பா இல்லை.. பெண்ணை ஒரு கம்மாடிட்டியாக காமிக்கிற மீடியாக்களும் அதுக்கு ஒத்துழைக்கும் பெண்களும் திருந்தினாத்தான் கொஞ்சமாச்சும் நமக்கு நல்லது.

pudugaithendral said...

வாங்க ரவி,
வருகைக்கு நன்றி.

பாலுஜியோட உங்க போட்டோ பொறாமையா இருக்கு. யேசுதாஸ் என் குலதெய்வம்னாலும் பாலுஜி என் ராமுமாமா மாதிரி இருப்பதால்(பாடல்களும் பிடிக்கும்) ஃபேவரிட்

pudugaithendral said...

ஆமாம் நாஸியா

இத்தகைய உடைகள் அணிந்து நாங்கள் நடிக்க மாட்டோம் என்று பெண்கள் சொல்லி அதன் படி நடந்தால் தான் உண்டு. இது சாத்தியமா???
வருகைக்கு நன்றி சகோதரி

Thenammai Lakshmanan said...

உண்மையான வருத்தம் கலா என்ன செய்வது தனி மனித்ர்கள் திருந்த வேண்டும்

pudugaithendral said...

வாங்க தேனம்மை,
தானா திருந்துவாங்களா, திருந்த வைக்க ஏதாவது செய்யணும். அதெல்லாம் செய்யாம சும்மா 33% மசோதா கொடுத்து என்ன ப்ரயோசனம்.
வருகைக்கு நன்றி

Subu said...

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் பெண்காளுக்காகவா, இல்லை அரசின் திசை திருப்பல் விளையாட்டா ?

ஒரு ஓட்டெடுப்பு

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html

சுரேகா.. said...

மிகச்சரியான பார்வை! எவ்வளவுதான் பேசினாலும், எங்களால் உங்கள் உணர்வுகளை அனுபவிக்கமுடியாது. புரிந்துகொள்ளவாவது முயற்சிக்கிறோம்... !

pudugaithendral said...

வாங்க சுரேகா,

வருகைக்கு மிக்க நன்றி

மங்களூர் சிவா said...

/
ஒரு பெண் தனியாக ரோடில் நடந்து போக முடியாவிட்டால் என்ன
மகளீர் தினம்? சமூகத்தில் இன்னும் இந்த அவல நிலை.
என்ன கொண்டாட்டம் போங்கள். :(
/

:((((