Friday, March 19, 2010

சகோதரி. கே. ஆர். அருணா அவர்களுக்கு,

வணக்கம்,

வீட்டுவேலை செய்யும் பெண்களுக்காக “மனுஷி” எனும்
அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்காக நீங்கள்
போராடுவதாக கல்கி இதழில் படித்தேன். தங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தங்களின் அமைப்பின் பெயர் எனை மிகவும் கவர்ந்தது.
வீட்டு வேலை செய்பவரும் மனுஷி தான்.அவரைப்பற்றி
வரும் அசிங்கமான ஜோக்குகள் தடை செய்யப்பட வேண்டிய
ஒன்று.

1999ஆம் ஆண்டு வீட்டு வேலை என்பதை
அரசை ஒரு தொழிலாக ஏற்கவைத்து, 2007 ல் இவர்களுக்காக
தனி வாரியம் அறிவித்தது உங்களின் வெற்றின்னு
சொல்லியிருக்கீங்க.

சில இடங்களில் வீட்டு வேலைக்கு வரும்
பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு
ஆட்பட நேர்கிறது என பல இடங்களில் படித்திருக்கிறேன்.
இதற்கும் சிறுவயது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு
அனுப்பவதற்கும் கூட நல்ல தீர்வை நீங்கள் காண வேண்டும்.

உங்களிடம் எனக்கொரு வேண்டுகோள் உண்டு.

வீட்டு வேலைக்கு வரும் பெண் மனுஷி என்பது போல்,
தன் வீட்டில் வேலை தருபவரும் ஒரு மனுஷி என்பதை
பல நேரங்களில் வீட்டு வேலை செய்பவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

நான் ஏதோ வேண்டுமென்று குற்றம் செய்யவில்லை.
என் அனுபவம் அப்படி. என்னைப்போல அனுபவம்
பலருக்கும் இருக்கும். பேசி பார்ப்போம், கத்தி பார்ப்போம்
அப்போதும் மாறாவிட்டால் அடுத்த ஆளை வேலைக்கு
அமர்த்தி விடுவோம். :( திரும்பவும் அதே பிரச்சனை.

தங்களிடம் தமிழகம் முழுதும் 8000 பேர் பதிவு
செய்திருக்கிறார்கள் என்பது கட்டுரையிலிருந்து தெரிந்தது.
அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும்.
நம் வீட்டில் செய்யும் அதே பத்து பாத்திரம் கழுவி,
விடு பெறுக்கி, துடைப்பது தானே, எனும் ரீதியில் தான்
பலர் வீட்டு வேலைக்கு வருகிறார்கள். இந்த வேலைக்கும்
முறையான பயிற்சி தேவை.


பெருக்கினால் குப்பையை கட்டிலோ, சோபாவுக்கு அடியிலோ
தள்ளிவிடுவது, அதிகம் சோப் உபயோகித்தல், அப்போதும்
சுத்தமாகமால் எட்டிப்பார்க்கும் சோற்றுப்பருக்கைகள் என
வேலை பார்க்கும் பொழுது வேலைக்கு வைத்திருப்பவர்கள்
பாடு என்னவாகும்??

இலங்கையில் வீட்டு வேலை செய்பவர்கள் அன்னியசெலவாணி
ஈட்டித்தருப்வர்கள். வெளி நாட்டில் அதிகம் இவர்கள் தான்.
சிறந்த பயிற்சி பெற்று இருப்பார்கள். சுத்தம் சுத்தம்.
அவர்கள் வந்து சென்ற பின் வீடு பிரகாசிக்கும். இதுவும்
என் அனுபவம்.

முறையான பயிற்சி பெறுவதனால் சுத்தமாக வேலை
செய்வார்கள். இவர்களை போன்றவற்களுக்கு அதிக
டிமாண்ட் இருக்கும்.


அடுத்த விடயம் இவர்கள் எடுக்கும் விடுமுறைகள்.
சொல்லி கொஞ்சம் சொல்லாமல் கொஞ்சமென்று
எடுக்கும் விடுமுறைகளினால் படும் அவஸ்தைகள்
கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களுக்கு ஓய்வு தேவை,
உடல் நலமில்லாமல் போகும்.( வெளி நாடுகளில்
வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை.)

அலுவலகங்களில் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு
எடுத்தால் ஒத்துக்கொள்வார்களா? அது போல தானே
இங்கும். இங்கும் பார்க்கும் வேலைக்கு சம்பளம்
கிடைக்கிறதுதானே! எண்ணிக்கைகளற்ற விடுப்புக்களை
அவர்கள் குறைத்துக்கொள்வதனால் இருவருக்கும்
மகிழ்ச்சி.

மிக முக்கியமாக நான் கருதுவது அவர்களின் உடை.
வீட்டு வேலைக்குத்தானே போகிறோம் என்று
ஏத்தி கட்டிய புடவையும், அருக்கானி கொண்டையுமாக
வேலைக்கு போவார்கள். இதை கொஞ்சம் மாற்றச்
சொல்லுங்கள். அதற்காக கஞ்சி போட்ட உடை
என்று சொல்லவில்லை. படியத் தலைவாரி கொண்டால்
பார்க்க இனிமையாக இருக்கும். நம் பண்பாட்டில்
பெண்கள் பொதுவாக புடவைதான் அணிவார்கள்.
மால்கள் போன்றவற்றில் பாத்திருப்போமே அது போல்
புடவையின் மேல் சட்டை ஒன்றை போட்டுக்கொண்டு
வேலை பார்த்தால் வேலை பார்க்கும் பொழுது
புடவை அங்கே இங்கே விலகும் டென்ஷன் இல்லாமல்
இருக்கலாம்.


இப்படி உடை இருந்தால் பார்ப்பவர்களுக்கும் கொஞ்சம்
மரியாதையாக இருக்கும். இது என் எண்ணம் மட்டுமே.
வீட்டுவேலை செய்வதை ஆங்கிலத்தில் HOUSE KEEPING
என்று சொல்வார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களில்,
மால்களில் தூய்மை இவர்களின் கைவண்ணம் தான்.

இங்கே(ஹைதராபாத்தில்) வீடு பெருக்கி துடைக்க
ஒரு ஆள், பாத்திரம் தேய்க்க ஒரு ஆள் என்று
பலவீடுகளில் வைத்திருக்கிறார்கள். காரணம்
கேட்ட பொழுது ஒருவர் விடுப்பு எடுத்தால்
மற்றொருவரை வைத்தாவது வேலை செய்து
கொள்ளலாமே!! என்றார்கள்.( ஒரு வேலைக்கு
அதாவது வீடு பெருக்கி துடைக்க 500 ரூபாய்
மாதத்திற்கு.)

வீட்டு வேலை செய்யும் பெண்கள் அவர்கள் வேலை
செய்யும் வீட்டு எஜமானி அம்மாவால் கஷ்டப்படுவதைத்தான்
நீங்கள் கேட்டிருப்பீர்கள். பல இடங்களில் அப்படித்தான்.
வீட்டு வேலைக்கு வருபவர்கள் கொடுக்கும் கஷ்டங்களை
நாங்கள் யாரிடம் போய் சொல்ல முடியும்???


நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பது
போல் இதுவும்.


வேலைக்காரம்மாவின் சுயத்துக்கு தீங்கு விளைவிக்கும்
எந்த வேலையையும் வேலைத் தருபவர்கள் செய்துவிடக்கூடாது.
அந்த வீட்டில் இருக்கும் பொடிசு கூட பேர் சொல்லி
அழைப்பதோ ஏக வசனத்தில் பேசுவதோ தவிர்ப்பது நல்லது.

ஊசிப்போன உப்புமா, தண்ணிக்காப்பி போன்றவற்றை
இப்போது யாரும் கொடுப்பதில்லை. அவர்களும்
ஏற்பதில்லை. சத்தம் போடாமல் குப்பைத்தொட்டியில்
கொட்டி விடுவார்கள்.அவர்களும் மனுஷிதான் என்பதால்
நல்லவற்றை பகிர்வோம்.

வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு நிதித் தேவை,
வேலை தருபவர்களுக்கு ஆள்த் தேவை. ஒருவருக்கொருவர்
உதவி புரிந்துகொள்கிறார்கள்.இதை நன்கு இருவரும்
புரிந்து கொண்டால் பலப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
இதுதான் என் எண்ணம். என்வீட்டில் வேலைக்கு
வருபவர்களிடமும் இதுதான் சொல்வேன்.

என் வேண்டுகோளை ஏற்று அதற்கு ஆவன
செய்து தங்களிடம் பதிந்திருக்கும் 8000 பேருக்காவது
பயிற்சி கொடுத்தால் அவர்கள் வேலைக்கு போகப்போகும்
வீட்டுக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள். விரைவில்
உங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகும்
பொழுது மேலும் மேலும் நல்ல வேலைக்காரர்கள்
கிடைப்பார்கள்.


இந்த மடலை கல்கி இதழுக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி சகோதரி.

23 comments:

நட்புடன் ஜமால் said...

மனுஷி - எவ்வளவு அழகாயிருக்கு.

வேலைக்காரி என்ற சொல் பாவிக்காமல் இப்படி அழைப்பது நிறைவா இருக்கு.

நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகளும் ஏற்புடையவை தாம்

வித்யா said...

நாணயத்தின் இரு பக்கமும் பார்த்தது பாராட்டிற்குரியது. நல்ல பதிவு.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜமால்,
அதுவும் ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஷ்டா வந்திருக்கீங்க.

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

வல்லிசிம்ஹன் said...

தென்றல் ஒவ்வொரு வரியும் அக்ஷர லட்சம் பெறும். இங்கேயும் ஒரு முழுக் குடும்பமே நம் வீட்டில் வேலை செய்கிறார்கள்.ஐந்து பெர். 600ரூபாய் ஒரு வேலைக்கு. தனி வீடு என்பதால். குற்றம் சொல்ல வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.
துபாயில் வேலை செய்யும் பெண்மணை தினமும் 3 மணி நேரம் வேலை செய்து, வெள்ளி விடுமுறை எடுத்துக் கொள்கிறார். பணியில் அவ்வளவு சுத்தம்.சம்பளம் நிறையத்தான். அதற்கு ஏற்ற உழைப்பு ஒவ்வொரு இடத்திலும் பளபளக்கும். இங்கே இவர்களுக்கு வீட்டுக் கவலை, குடியினால் ஏற்படும் தொந்தரவு, இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள். வேலையில் மனம் லயிப்பதில்லை.

பாலாஜி said...

புதிய கண்ணோட்டத்தில் உள்ளது

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வெளிநாடுகளில் வீட்டு வேலை பார்ப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லாமல் இல்லை. இந்த பெண்கள் தான் அவர்கள் வீட்டின் bread winner களாக இருக்கிறார்கள். dedication என்பது எந்த வேலைக்கும் தேவை. அது இல்லாமல் போனதால் தான் பிரச்சனைகள். வருகைக்கு நன்றிம்மா

புதுகைத் தென்றல் said...

வாங்க பாலாஜி,

வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆள் வைத்துக்கொண்டு அவதிப்படும் ஒரு குடும்பத் தலைவியின் பார்வையில் இந்தப் பதிவு.

வருகைக்கு நன்றி

சேட்டைக்காரன் said...

சமநோக்குடன் ஒரு விஷயத்தை அணுகுவது அனைவராலும் முடியாது. உங்களுக்கு அது இயல்பாகவே வருவது தெளிவாய்ப் புலப்படுகிறது.

நாஸியா said...

நல்லா சொன்னீங்க சகோதரி..ஊர்ல எங்க வீட்டுல ஒருத்தர் இருந்தார்.. எங்கம்மா வேலை செய்பவள் தானே என்றில்லாமல் வீட்டில் ஒருத்தியை போன்று தான் நடத்துவார். ஆனா அதையே அவங்க ஒரு அட்வான்டேஜா எடுத்துக்குவாங்க.. பிள்ளைகளை கூட்டிட்டு வர்றத பத்திக்கூட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. ஆனா அவங்க சேட்டை பண்ணும்போது கண்டிக்கிறதே இல்ல.. நாங்க எப்படி சொல்றதுன்னு ஒண்ணும் சொல்லாம இருப்போம்.. அதே போல இஷ்டத்துக்கு காசு வாங்குறது.. கொஞ்சம் கவனமில்லாத தாய்மார்கள் எவ்வளவு கொடுத்தோம்னே கணக்கு வெச்சுக்க மாட்டாங்க..

இத விட கொடுமை என்ன தெரியுமா? திருட்டு தான்.. :( ரொம்ப பட்டுட்டோம்ங்க..

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சேட்டைத்தம்பி

நிஜமா நல்லவன் said...

ம்

துளசி கோபால் said...

எங்க ஊர்லே இவுங்களை ஹௌஸ் கேர்ள் ன்னு சொல்வாங்க. சிலசமயம் ஹோம் ஹெல்ப் ன்னும் சொல்வோம்.

வீட்டுக்கு வந்தவுடன் நமக்குச் சரிசமமா சோஃபாவில் உட்கார்ந்து பொதுவா சில நிமிஷம் பேசிட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பாங்க.

இதே மாதிரிதான் ஃபிஜித்தீவிலும் உள்ளது.


வீட்டு வேலையில் உதவி செய்பவரை மனுஷியாவே மதிக்காதது இங்கே சென்னையில்தான் சில இடங்களில் பார்த்தேன்:(

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு கருத்துக்கும் நன்றி நாஸியா

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசியக்கா,

நலமா? நானும் இலங்கை பழக்கத்தில் இங்கே நல்லா பாத்துகிட்டு சகஜமா பழகினா டூ மச்சாகி நம்ம தலையில மொளகாத்தான் அரைக்கிறாங்க. மக்களின் மைண்ட் செட்டை கொஞ்சம் மாத்தணும். வேலைக்கு வருபவர்களுக்கும், வேலை தருபவர்களுக்கும் இது பொருந்தும்.

நான் மேரியை நினைக்காத நாளில்லை. எனக்கு ஒரு நல்ல தோழி. வீட்டுக்கு வந்ததும் முதலில் காலை உணவு கொடுத்துவிடுவேன். காலை நீட்டிக்கொண்டு அவர் உண்ண, நாங்கள் இருவரும் டீவி பார்த்துக்கொண்டே டீ குடிப்போம். அதன் பிறகு சக சகவென வேலையை ஆரம்பித்து சுத்தமாக முடித்துக்கொடுப்பார். ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு வசந்த காலம்.

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

வூட்டுக்காரம்மா வேலைக்கு போயிணு சோறுமட்டும்தான் ஆக்குவேன்னு சொல்லிட்டாங்க ஒரு வேலைக்காரம்மா வெச்சோம் 3நாள்தான் பணம் வாங்கிகிட்டு நின்றுச்சு :((

thenammailakshmanan said...

உண்மை கலா வீட்டு வேலை செய்பவர்களும் மனிதர்கள்தான் ஆனால் அவர்களிலும் சிலர் செய்யும் அழும்பு இருக்கிறதே

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

அந்தக்கொடுமையாலதான் நான் வேலைக்கு போகாமல் உக்காந்திருக்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

அவர்களிலும் சிலர் செய்யும் அழும்பு இருக்கிறதே//

ரொம்ப கொடுமை. என் தோழி ஒருவர் வெளிநாட்டில் இவர்களால் பட்ட கொடுமை மஹா கொடுமை.

வீட்டிலேயே தங்கி வேலைப்பார்த்த அந்தப்பெண் பீரோவிலிருந்து 300 டாலர் பணத்தை எடுத்துவிட்டார். தோழியின் மகள் பார்த்து சொல்ல ஏன் எடுத்தாய் என்று திட்டியிருக்கிறார்.

அவ்வளவுதான் கோபம் வந்து தன் அப்பாவுக்கு போன் போட்டு வரச்சொல்லி தன் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலையை விட்டு நின்று கொள்வதாகச் சொல்லி, வீட்டை விட்டுக்கிளம்பி போகும் வழியில் இருந்த குப்பை தொட்டியில் உடைகளை போட்டுவிட்டு போலிஸ் ஸ்டேஷனில் போய் என் தோழி வீட்டில் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி ரிப்போர்ட் கொடுத்து, அவர்கள்
என்ன சொல்லியும் கேளாமல்

தோழி தண்டத்தொகையாக 1000 டாலர் கொடுதழுதாள். இதை என்னவென்று சொல்வது. எவ்வளவு நல்லபடியாக அந்தப்பெண்ணை வைத்திருந்தார் என்பது எங்களுக்கு நல்லாத் தெரியும்.

அன்புடன் அருணா said...

இது தகவல்! இப்படி ஒரு அமைப்பா! ஆனாலும் இவங்க உடைத்து நொறுக்கும் பொருட்கள் எக்கச்சக்கம்!

ஹுஸைனம்மா said...

தென்றல், இதப் பத்தி ஒரு தொடரே எழுதலாம். முதலில் என்னிடம் ஆறுவருடம் வேலை பார்த்த இலங்கைப் பெண்போல இன்னும் யாரும் கிடைக்கவில்லை. இப்ப ஊரிலருந்து ஒரு அம்மாவைக் கூட்டிவந்து வீட்டோட வச்சு, அத நம்பி மோசம்போய், லட்ச ரூபா வரை நஷ்டமானதுல, சூடுகண்ட பூனையா வேறு ஆளே வக்க மனசு வராம, அல்லாடிகிட்டிருக்கேன். வேலையையே விட்டுடலாமான்னுகூட யோசிச்சுகிட்டு இருக்கேன்.

நல்ல நம்பிக்கையான வேலைக்காரங்க கிடைக்கிறதுங்கிறது குதிரைக்கொம்புதான் இப்பல்லாம்.

புதுகைத் தென்றல் said...

இவங்க உடைத்து நொறுக்கும் பொருட்கள் எக்கச்சக்கம்!//

முறையான பயிற்சி இல்லாம மனசு வேலைல லயிக்காம செஞ்சா இப்படித்தானே ஆகும் அருணா

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

இதப் பத்தி ஒரு தொடரே எழுதலாம்.//

ஆமாம் ஹுசைனம்மா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமா இருக்கும். குதிரைக்கொம்பேதான்.

வருகைக்கு நன்றி