Monday, July 12, 2010

அன்பு நண்பர் AKM அவர்களுக்கு

என்னுடைய முந்தைய பதிவுக்கு நண்பர் AKM கொடுத்திருந்த
பின்னூட்டம் இது. இதுக்கு பதில் ஒரு தனிப்பதிவா போட்டிடலமேன்னு
இந்தப் பதிவு.


AKM said...

உங்கள் அம்மா இதை நல்ல பதிவு என்று பாராட்டினாரா? நிச்சயம் எந்த அம்மாவும் சொல்லமாட்டார்.. நாளை மணம் முடித்து உங்கள் பெண் வந்து தங்கும்போது சுமை என நினைப்பீரகளா..//


என்னிடம் தன் சோகக்கதையைச் சொல்லி அழுததும் ஒரு தாய்தான்.
தன் மகளுக்கு புரிய வைக்க முடியாமல், அவள் மேல் இருக்கும்
பாசத்தை தவறாக பயன் படுத்திக்கொள்வதைச் சொன்னார். தன்னால்
முடியவில்லை என்று அம்மா சொன்னாலும்,” எனக்கு என் மாமியார்
வீட்டில் நிம்மதி இல்லை! இந்த இரண்டு நாள்தான் நிம்மதி!” என்று
சொல்லிவிடுகிறாளாம். மகளும், மருமகனும் ஊர் சுற்றி நிம்மதியாக
தூங்கி எழ முதியவர்கள் இருவரும் படுச்சுட்டியான குழந்தைகள்
இருவரையும் பார்த்துக்கொள்ள முடியாத அவஸ்தையை நானே
கண்ணால் பார்த்திருக்கிறேன்.

தன் மகளைச் சுமையாக யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால்
தன் கடமையை சரியாக செய்யாமல் இருந்தால் நான் ஒத்துக்
கொள்ள மாட்டேன். திருமணத்திற்கு பிறகு என் வீட்டிற்கு
என் மகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால்
அடிக்கடி வந்து ஓய்வு எடுக்கிறேன் என்றாள், “ என்ன பிள்ளை
வளர்த்திருக்கிறீர்கள்? எங்களுடன் ஒட்டவே இல்லை உங்கள் மகள்?
என்று மருமகனிடம் வார்த்தை பட நான் ரெடி இல்லை. திருமணத்திற்கு
பிறகு உங்கள் மகள், உங்கள் மகள் என மருமகன் சொல்வதை விட,
என் மனைவி என அடிக்கடிச் சொல்லிக் கேட்க விருப்பம். அந்த
நெருக்கம் வர இந்தச் சின்னச் சின்னப் பிரிவு தடையாக இருக்கும்
என்பதால் தான் எதையும் ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்றும்
சொல்லிக்கொடுத்து புகுந்த வீடு அனுப்புவேன்.

(என் அப்பாவைத் தெரிந்திருக்கும் உங்களுக்கு என் தாத்தா(அம்மாவின்
அப்பா) தெரிந்திருக்கும் என் நினைக்கிறேன். நான் சுந்து சார் பேத்தி.
அவரது மனைவி என் அம்மம்மா திருமதி ராஜலட்சுமி எனக்குச்
சொல்லிக்கொடுத்த மந்திரம் இது)

இறைவன் விரும்பினால் என் மருமகளும் அப்போது என்னுடன்
இருந்தால், என் மருமகளுக்கு எக்ஸ்ட்ரா சுமையைத் தரும்
வேலைகளை தர விருப்பமில்லை. அடிக்கடி வீடு வரும் நாத்தி
வேண்டாதவளாகி விடுவாள்.அவர்கள் உறவு இனிக்க
வைக்க வேண்டியது என் கடமை.

எப்போது வருவார் என காத்திருப்பீரா மாட்டீர்களா.. பயிர் வேண்டுமானால் நாற்றாங்காலை மறந்து போகலாம்.. பெண்ணால் எப்படி வாழ்வின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை கழித்த வாழ்ந்த இடத்தை மறக்க முடியும்..உரிமையான இடத்தில் விருந்தாளி போல் வந்து தங்கிப்போக சொல்கிறீர்கள்.. எத்ததை பெண்கள் தாயின் மடியில் தங்கிச்செல்லும் அந்த தருணங்கள்தான் பேட்டரி சார்ஜ் என சொல்ல கேட்டிருக்கிறீர்களா..?//

கண்டிப்பாய் ஏங்கி தவிப்பேன். ஆசைக்கு பெண் என்பது பெரியவங்க
சொன்னது. ஆசை ஆசையாய் அழகு படுத்தி, ஆடை உடுத்தி, வளர்த்து,
விளையாடி, தலை கோதும் விரலாக தாய்மை காட்டுபவளை விட்டு
பிரிவது என்பது எவ்வளவு சோகம் என்பது தெரியும். முற்றிலும்
மறக்கவா சொல்கிறேன்! அப்படி மறந்தால் என் வளர்ப்பு சரியில்லை
என்றோ, இல்லை நான் என் மகளிடம் அன்பு காட்டவில்லை என்றோ
அர்த்தம்.( மருமகன் என்னை விட அன்பு காட்டி அந்த அன்பில்
திளைத்து என்னை மறந்தால் சந்தோஷமே)

பிறந்த வீட்டினர் மீதுஏதும் கோபம் கடுப்பு இருந்தால் தான் முற்றிலும் மறக்க முடியாவிட்டலும் கடமையை மட்டும் செய்து,
கொஞ்சம் எட்டியே நிற்கும் பெண்களையும்
பார்த்திருக்கிறேன்.

தாயின் மடியில் வந்து பேட்டரி ரீசார்ஜ் செய்து கொள்வது
தவறல்ல. திரும்ப திரும்ப சொல்கிறேன். பல பெண்கள்
தாய்வீடு செல்கிறேன் என்று கிளம்பிச் சென்று அங்கே
விருந்தினர் போல எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு
எடுப்பதையே வழக்கமாக்கிக்கொள்வதை, அதையும் அடிக்கடி
செய்வதைத்தான் தவறு என்று சொல்கிறேன்.

தங்கள் பெண் வந்து தங்குவதை எந்த தாயும் சுமையாக நினைக்க மாட்டார்..நிச்சயம் இந்த பதிவை உங்கள் மனதிலிருந்து எழுதியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.. சற்றே கோபமாய் (எழுதுவது என் உரிமை அதில் நீ என்ன கோபப்படுவது என என் மேல் கோபப்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்) ஏகேஎம்

இந்தப் பதிவை என் உள் மனதிலிருந்துதான் எழுதியிருக்கிறேன்.
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!” என அக்னி நட்சத்திர
ஜனகராஜ் மாதிரி சந்தோஷப்பட்டுகிட்டு கணவன் இருக்க இருவருக்கும்
இடையே ஒரு இடைவெளி கண்டிப்பா விழுது. அந்தத் தனிமைக்காக
சிலர் மனைவி,”அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னா உடனே
அனுப்பிடறாங்க. சிலர் போகாதேன்னு சண்டை போடறாங்க. இந்த மனஸ்தாபம் பிள்ளை வளர்ப்பில் பாதிக்கும். கணவன் - மனைவி உறவில் விரிசல் விழவைக்கும் எந்த ஒரு செயலும் என் பார்வையில் தவறுதான்.
அந்த பாதிப்பு அடுத்த தலைமுறையை பாதிப்பதை சுத்தமா
விரும்பலை. ஒரு ஆசிரியையா அது அவங்க மனசை பாதிக்கும்னு
என்னோட ஒவ்வொரு பதிவுலயும் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு
வர்றேன்.

ஆமாங்க தன் மகள் வருகையையே தவறுன்னு அம்மா சொல்வதாக
நான் பதிவு இட்டிருப்பதாக நீங்க புரிஞ்சிக்கிட்டதால தான் இந்தக்
கோபம். சத்தியமாக நான் அப்படி எழுதவில்லை என்பது மேலே
சொல்லியிருக்கும் பதில்களில் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.

உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கீங்க.அதுவும் கடுகடுப்பா
சொல்லாம. அப்புறம் நான் ஏன் கோபப்படப்போறேன். :))

சரி அயித்தான், பிள்ளைகளோடு புதுகைக்கு வர்றேன்.
முடிஞ்சா அங்க சந்திக்கலாம். இந்தப் பதிவின் மூலமா
நண்பர்கள் எல்லார்கிட்டயும் ஒருவாரத்துக்கு லீவு சொல்லிக்கிறேன்.

அப்பா,அம்மா புது வீடு வாங்கி போயிருக்காங்க. பால் காய்ச்சும்
போது கூட நானும் தம்பியும் பக்கத்துல இல்லன்னு வருத்தப்பட்டாங்க.
இதோ தம்பி கூட லீவு போட்டு வர்றாப்ல. அப்படியே கோவில்,
குளம்னு சுத்திட்டு வரலாம்னு மீ த கிளம்பிங். அடுத்த செவ்வாய்தான்
வர்றேன். அதுவரைக்கும் டாடா! (நடுவுல 2நாள் வந்து ஏதும்
பதிவு போட்டா போடலாம். சொல்றதக்கில்லை. :) )


16 comments:

KarthigaVasudevan said...

//திருமணத்திற்கு
பிறகு உங்கள் மகள், உங்கள் மகள் என மருமகன் சொல்வதை விட,
என் மனைவி என அடிக்கடிச் சொல்லிக் கேட்க விருப்பம்//

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த லைன்.
:)
மகள் அம்மா வீட்டுக்குப் போய் பேட்டரி ரீ சார்ஜ் பண்ணுவதெல்லாம் சரி தான்,ஆனால் அம்மாவுக்கும் அப்படி ரீசார்ஜ் அவசியம் நேரும் போது மகள் வீடு இருக்கிறது அல்லது மகளுடைய அனுசரணை இருக்கிரதேனும் உணர்வை மகள் ஏற்படுத்தி ஆகவேண்டும் , அப்போது மட்டுமே "இவள் என் மகள் ,நான் இவளது அம்மா" என்ற உறவுக்கு அர்த்தமும் மரியாதையும் இருக்கக் கூடும்.

Vidhya Chandrasekaran said...

பெற்றோருடன் இனிய பயணம் அமைய வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாங்க கார்த்திகா,
//திருமணத்திற்கு
பிறகு உங்கள் மகள், உங்கள் மகள் என மருமகன் சொல்வதை விட,
என் மனைவி என அடிக்கடிச் சொல்லிக் கேட்க விருப்பம்//

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த லைன்.
:)//

மிக்க நன்றி

pudugaithendral said...

மகள் அம்மா வீட்டுக்குப் போய் பேட்டரி ரீ சார்ஜ் பண்ணுவதெல்லாம் சரி தான்,ஆனால் அம்மாவுக்கும் அப்படி ரீசார்ஜ் அவசியம் நேரும் போது மகள் வீடு இருக்கிறது அல்லது மகளுடைய அனுசரணை இருக்கிரதேனும் உணர்வை மகள் ஏற்படுத்தி ஆகவேண்டும் , அப்போது மட்டுமே "இவள் என் மகள் ,நான் இவளது அம்மா" என்ற உறவுக்கு அர்த்தமும் மரியாதையும் இருக்கக் கூடும்.//

ரொம்ப அருமையான கருத்துக்களுக்கு நன்றி கார்த்திகா

pudugaithendral said...

நன்றி வித்யா

மங்களூர் சிவா said...

/
இதோ தம்பி கூட லீவு போட்டு வர்றாப்ல. அப்படியே கோவில்,
குளம்னு சுத்திட்டு வரலாம்னு மீ த கிளம்பிங்.
/

டேய் கார்த்தி ஜாக்கிரதைடா அக்கா பழைய கணக்கு ஒன்னு பெண்டிங்ல வெச்சிருக்காங்க

:))))))))))))))))

மங்களூர் சிவா said...

புது வீடுக்கு வாழ்த்துக்கள்!

AKM said...

அட.. என்னையும் ஒரு ஆளா நினைச்சு பதில் போடறதே பெரிசு.. நீங்க பதிவே போட்டுட்டீங்களே.. thank you..உங்கள் விளக்கம் ஏற்புடையதே..உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.அப்புறம்..
அ ம் மா வீட்டிற்கு வரும் புதுகைத்தென்றலுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்!..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதில்கள்...

pudugaithendral said...

டேய் கார்த்தி ஜாக்கிரதைடா அக்கா பழைய கணக்கு ஒன்னு பெண்டிங்ல வெச்சிருக்காங்க//

ஹா ஹா ஐயோ ஐய்யோ,

ஒண்ணு மட்டும்தானா!!??? (எம்புட்டோ இருக்கு. :)) வருகைக்கு நன்றி வாழ்த்தை அப்பா அம்மாகிட்ட சொல்லிடறேன்.

pudugaithendral said...

அட.. என்னையும் ஒரு ஆளா நினைச்சு பதில் போடறதே பெரிசு.//

அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? என் பதிவை படிக்க வர்றீங்க. அது எனக்கு எம்புட்டு பெருசு.

நீங்க பதிவே போட்டுட்டீங்களே.. thank you..உங்கள் விளக்கம் ஏற்புடையதே..உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.//

நன்றி நன்றி

அப்புறம்..
அ ம் மா வீட்டிற்கு வரும் புதுகைத்தென்றலுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்!..

ஷ்பெஷல் நன்றி. தாரை தப்பட்டை, வரவேற்பு எல்லாம் வேணாம். :)

pudugaithendral said...

நன்றி புவனா

சாந்தி மாரியப்பன் said...

//பல பெண்கள்
தாய்வீடு செல்கிறேன் என்று கிளம்பிச் சென்று அங்கே
விருந்தினர் போல எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு
எடுப்பதையே வழக்கமாக்கிக்கொள்வதை, அதையும் அடிக்கடி
செய்வதைத்தான் தவறு என்று சொல்கிறேன்.//

கரெக்டுப்பா.. எனக்குத்தெரிஞ்ச குடும்பத்தில், நாத்தனார்கள் ஒருவர் மாத்தி ஒருத்தர் வந்து சீராடுவாங்க. ஆனா அந்தப்பொண்ணை மட்டும் அவங்கம்மா வீட்டுக்கு அத்தியாவசியமான சமயங்களில்கூட அனுப்பறதில்லை. கடைசியா அந்தப்பொண்ணு,' சரி.. நான் என் அம்மா வீட்டுக்கு போகமாட்டேன். அதமாதிரி உங்க பொண்ணுங்களும் இங்க வரக்கூடாது'ன்னு ஒரு குண்டைத்தூக்கிப்போட்டாளே பாக்கணும் :-)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல்,
உங்கள் பதிவை மிக விரும்பிப் படித்தேன்.
வேற ஒரு கோணத்திலிருந்து:)
நூறு சதவிகித உண்மை கொண்ட இந்தப் பதிவை இத்தனை அழகாக்க் கோர்வையாகச் சொல்லிவிட்டீர்கள். எங்களுக்குப் புரிகிறது.

pudugaithendral said...

எனக்குத்தெரிஞ்ச குடும்பத்தில், நாத்தனார்கள் ஒருவர் மாத்தி ஒருத்தர் வந்து சீராடுவாங்க. ஆனா அந்தப்பொண்ணை மட்டும் அவங்கம்மா வீட்டுக்கு அத்தியாவசியமான சமயங்களில்கூட அனுப்பறதில்லை. கடைசியா அந்தப்பொண்ணு,' சரி.. நான் என் அம்மா வீட்டுக்கு போகமாட்டேன். அதமாதிரி உங்க பொண்ணுங்களும் இங்க வரக்கூடாது'ன்னு ஒரு குண்டைத்தூக்கிப்போட்டாளே பாக்கணும் //

இப்படி அதிரடியா ஏதும் செஞ்சாத்தான் உண்டு சிலருக்கு. வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

வேற ஒரு கோணத்திலிருந்து:)//

ஓஒ ரொம்ப சந்தோஷம் வல்லிம்மா.
வருகைக்கு மிக்க நன்றி