Saturday, August 14, 2010

நாகபஞ்சமி ,கருட சதுர்த்தி சிறப்பு பதிவு

ஆடி அமாவாசை பண்டிகை கொண்டாட்டங்களை ஆரம்பித்துக்
கொண்டு வருகிறது. ஆடி அமாவாசை அன்று நோன்பு நோர்ப்பது
கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம் மக்களுக்காக.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்”
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.
பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்து எந்த வித
தோஷமும் இல்லாமல் வம்சம் தழைத்தோங்க பூஜை.
இன்று துள்ளரிசியும், வெல்லமும் எள்ளும் சேர்த்தரைத்த
பிரசாதம் நைவேத்யம் செய்து எறும்புகள் சாப்பிட
போட்டு விடுவோம். எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது.
பிள்ளைகள் நலனுக்காக உப்பில்லாமல் சாப்பாடு.
அடுத்த நாள் கருட பஞ்சமி. இது கிட்டத்தட்ட எங்களுக்கு
(தெலுங்கர்களுக்கு) ரக்‌ஷா பந்தன் போல.

இந்த நோன்புக்கு ஒரு கதையும் உண்டு.
ஒரு வீட்டில் 7 அண்ணன் தம்பிகள் அவர்களுக்கு
கறிவேப்பிலை கொத்துப்போல ஒரே ஒரு தங்கை.
அம்மா, அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட
தங்கையைக் கண்போல பார்த்தக்கொள்வது அண்ணன்கள் தான்.
அண்ணன்கள் காலையிலேயே வயலுக்கு சென்று விட
வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கை அண்ணன்களுக்கு
கஞ்சி எடுத்துச் செல்வாள்.

அன்றும் அப்படித்தான் கருட பஞ்சமி என்றுத் தெரியாமல்
வீட்டை சுத்தம் செய்து, ஒட்டடை அடித்து துவாரங்களை
எல்லாம் அடைத்துவிட்டு கஞ்சி கலயத்தை தலையில்
சுமந்துக்கொண்டு வயலுக்கு செல்கிறாள். அப்போது
ஆகாய மார்கமாக கருடன் ஒன்று பாம்பை கவ்விக்கொண்டு
செல்கிறது. இறுக்கமான பிடி தாளாமல் பாம்பு விஷத்தைக்
கக்க அது கஞ்சி கலயத்தில் விழுகிறது. அது தெரியாமல்
அதை அவர்களுக்குகொடுத்துவிட அவர்களும் குடித்து
இறக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக 7 அண்ணன்களும்
இறந்துவிட தானும் அதைக் குடித்து இறக்க முற்படும்
பொழுது ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வந்து
அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் செய்வித்து
அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின்
வலது காது, வலது புஜத்தில் வைக்கச்சொல்ல அவர்களும்
உயிர்தெழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி நாங்களும் உடன் பிறந்தவர்களுக்காக
வேண்டிக்கொண்டு 7 முடி போட்ட தோரம் அணிந்து
புற்றுமண் கொண்டு வந்து உடன் பிறந்தவர்களின்
வலது காது, புஜத்தில் வைத்து பூஜை செய்து அவர்களுக்கு
பரிசளித்து வேண்டி பூஜை செய்வது வழக்கம்.

நம்ம உடன்பிறப்புக்கள் எல்லாம் வெளி நாட்டில் வெளியூரில்
தானே! அதனால் அவர்களுக்கெல்லாம் சேர்க்கும் படி
சாமிக்கே வைத்து பூஜை செஞ்சாச்சு. அம்ருதா அண்ணனுக்கு
பூஜை செஞ்சு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்திட்டாங்க.


அன்புத் தம்பிகளுக்கு என்னோட அன்பளிப்பு. எல்லோரும்
சண்டை போடாம எடுத்துக்கோங்க.
ஆண்டவன் எல்லாவித சந்தோஷத்தையும் கொடுக்கட்டும்.

8 comments:

அமைதிச்சாரல் said...

நாகபஞ்சமின்னாலே என் ஃப்ரெண்ட் செஞ்சு, எனக்காக கொண்டுவரும் அஞ்சுவகை லட்டுகள்தான் ஞாபகம் வரும்.இப்ப,உங்க பூஜைமுறையும் தெரிஞ்சுக்கிட்டேன்.ஆந்திராவுல பொரிஉருண்டை கிடையாதா :-)))))

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

இங்க பொரி உருண்டை இல்ல. வகை வகையா கொழுக்கட்டைகள் தான். :))

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

காலண்டரில் கருடபஞ்சமின்னு போட்டிருந்தது. இப்படி ஒரு விழா தை மாதம் கனுபொங்கல் அன்றுதான் எங்கபக்கம் செய்வார்கள். பிறந்த வீட்டுச் சீர் வரும்:)
இது நல்லா இருக்கே நாமும் தம்பி அண்ணன்களுக்குக் கொடுக்கலாமே. நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிகவும் நன்றி தென்றல்.

புதுகைத் தென்றல் said...

varugaikku nandri vallimma

ஆதிமூலகிருஷ்ணன் said...

நம்பிக்கை ஒருபக்கம் இருந்தாலும், இது போன்ற விஷயங்களை நீங்கள் அணுகும் விதமே ரசனையாக இருக்கிறது. வாழ்த்துகள், நன்றி.

புதுகைத் தென்றல் said...

நன்றி ஃப்ரெண்ட்

fundoo said...

பார்த்தீங்களா, நான் லேட்டா வந்தேன். எல்லாரும் எடுத்துக்கிட்டாங்க. எனக்கு ஏதுமில்ல.

புதுகைத் தென்றல் said...

தங்க ப்ரெஸ்லெட் ஒண்ணு இருக்கே அதை எடுத்துக்கோங்க ஃபண்டு