Friday, October 15, 2010

தெலங்கானா பகுதியில் நவராத்திரி

நவராத்திரி சக்தி வழிபாடு ஒவ்வொரு மாநிலத்திலும்
ஒவ்வொரு விதமாக இருக்கும். அன்னையவளை
ஆடிப்பாடி, பூஜை செய்து உபவாசம் இருந்து
பொம்மை கொலுவைத்து என பலவிதமாக பூஜை
செய்வர். இங்கே ஆந்திராவில் அதுவும் தெலங்கானா
பகுதியில் வாழ்வை தந்த “பதுக்கம்மா பண்டுக”(Bathkamma)
எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.


வண்ணமயமான பூக்களை கொண்டு ஒவ்வொரு வருடமும்
அம்மனை வடிவமைத்து 10 நாள் பூஜை செய்வார்கள்.
பூக்களின் நடுவில் மஞ்சள் பிடித்து வைத்து அதை கொளரி
அம்மனாக பாவித்து பூஜைகள் நடக்கும்.
இது பெண்கள் செய்யும் பூஜை. தன் குடும்பத்தின் நலன்
கருதி, நல்வாழ்வை வேண்டி இந்த பூஜை செய்வார்கள்.



பெண்கள் பட்டுப்புடவை கட்டி பாந்தமாக அலங்கரித்திருப்பர்.
சின்னப் பெண்கள் பாவடை, சட்டை, வயது வந்த
பெண்கள் தாவணி அணிந்து பாரம்பரிய உடையில்
பூஜை செய்வர். துர்காஷ்டமி அன்று இந்த பூஜையை
முடிப்பர். இந்த முறை வெள்ளிக்கிழமை அதாவது
இன்று துர்காஷ்டமி என்பதால் வெள்ளிக்கிழமை
அம்மனை அனுப்ப விரும்பாதவர்கள் நேற்றே
விசர்ஜனம் செய்தார்கள். அதை பதுக்கம்மா நிமர்ஜனம்
என்று சொல்வார்கள்.




பத்தாம்நாள் தன் வீட்டு வாசலில் வைத்து பெண்கள்
எல்லாம் சேர்ந்து கும்மி அடித்து சுற்றி நடனமாடி
தலையில் அம்மனை ஏந்தி நதிதீரத்தில் கரைப்பார்கள்.

இப்போது வீட்டு வாசலுக்கு பதில் அருகில் இருக்கும்
கோவிலுக்குச் சென்று அங்கே சேர்ந்து நடனம் செய்து,
பாட்டுப்பாடி அம்மனை நதியில் கரைக்கிறார்கள்.

இந்த வீடியோவை பாருங்கள் அருமையாக இருக்கிறது.


இந்த பூஜை வந்ததற்கு ஒரு கதையும் உண்டு. தர்மாங்கதா எனும்
அரசனுக்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்து பல பூஜை விரதங்களுக்கு
பிறகு இளவரசி லட்சுமி பிறக்கிறாள். அவள் பலவித விபத்துக்களிலிருந்து
தப்பித்து வளர்கிறாள்.அதனால் பதுக்கம்மா (பதுக்கு-வாழ்க்கை) என
பெயரிட்டனர் பெற்றோர். அப்பொழுதிலிருந்து கன்னிப்பெண்கள்
நல்ல கணவன் வேண்டியும், பெண்கள் தீர்க்க சொளமாங்கல்யத்திற்காகவும்,
தன் குடும்பத்தின் நலன் வேண்டியும் பதுக்கம்மா பூஜை செய்வது
தெலங்கானா பகுதியில் வழக்கமாயிற்று.

நிஜமான கோலோகலத்தை பார்க்க வேண்டுமானால் வராங்கல்
எனும் ஊர்தான் சிறந்தது என்கிறார்கள் இங்கிருப்பவர்கள்.

எப்படியோ அந்த பதுக்கம்மா அனைவருக்கு நல்வாழ்வினை
தந்து நல்லபடியாய் வைக்க நாமும் பிரார்த்தனை செய்வோம்.




4 comments:

சாந்தி மாரியப்பன் said...

புதிய தகவல்கள் தென்றல்.. அந்த பூவலங்காரம் சூப்பர். கேரளாவின் அத்தப்பூ மாதிரி இருக்கு.

எஸ்.கே said...

அலங்காரமும் வீடியோவும் நல்லாருக்கு!

ராம்ஜி_யாஹூ said...

nice

pudugaithendral said...

வருகை தந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்