Monday, November 01, 2010

தீபாவளி நினைவுகள்

இந்தப்பதிவு என்னுடைய மீள்பதிவுதான். ஆனாலும் இந்த நினைவுகள்
தரும் இதம், சுகம் எப்போதும் அலாதி. எப்போதும் இனிக்கும் தீபாவளி நினைவுகள்.


கார்த்தி பய இரண்டு ரூபாய் பாட்டியை கேட்டதும்
பாட்டி,”எதுக்குடா? 2 ரூபாய்ல என்ன வெடி வாங்குவன்னு
கேட்டாங்க?”

பாட்டி அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்! அப்படின்னு
சொல்ல ஜோஸ்யக்காரர் திட்டிகிட்டே போனாரு.

அப்பாக்கு இந்த விவரம் தெரிய,”தீபாவளிக்கு
முதல் நாள் வெடி வரும்”னு சொல்ல தீபாவளிக்கு
முதல் நாள் எப்பவரும்னு கவுண்டவுன் செய்ய ஆரம்பிப்போம்.


தீபாவளி பலகாரங்கள் வீட்டுலயே செய்வாங்க.
பாட்டி பெரிய ட்ரம் நிறைய மிக்ஸர், தேன்குழல்,
ரவா லட்டு, ஓமப்பொடி எல்லாம் செய்வாங்க.
அம்மாவும் ஒத்தாசையா இருப்பாங்க.

நான், அப்பா தம்பி 3 பேரும்கூட ரொம்ப
ஒத்தாசை செய்வோம். செய்ய்ற பலகாரத்தை
சாப்பிட ஆளு வேணும்ல :)

அப்பா செய்யற அன்னைக்கு மட்டும் தான்
சாப்பிடுவாரு. டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லி
சொல்லியே பாதி காலி ஆகிடும்.

பாட்டி விவரமா கள்ளிப்பெட்டிக்குள்
1 டப்பா நிறைய ரவா லட்டு, பூந்தி லட்டு,
தேன்குழல் எடுத்து வெச்சிருப்பாங்க.
தீபாவளி முடிஞ்சதுக்கப்புறம் அதை ரிலீஸ்
செய்வாங்க.

அம்மா செய்யும் ஜாங்கரிக்கு நானும் தம்பியும்
அடிமை. அம்மம்மாவுக்கு அப்புறம் அதே
பக்குவத்தோட அம்மா செய்வாங்க.
அவங்க பேரை நிலை நாட்ட நானும்
செய்ய கத்துகிட்டேன். தலைமுறை
ஜாங்கிரி பக்குவம் எனக்கும் வந்திடுச்சே :)

தீபாவளி அன்னைக்கு காலைல எழுந்திருச்சு
மொத வெடி போட்டுட்டுத்தான் மத்த வேலையே.
எண்ணை தேச்சு குளிச்சு, தீபாவளி லேகியம்
சாப்பிட்டாத்தான் அம்மா காபியே தருவாங்க.

அந்த அதிகாலையில் நாங்க எண்ணைய் குளியல்,
செஞ்சு கஷ்டப்பட்டுகிட்டு இருப்போம் அப்பா
நல்லா தூங்கிகிட்டு இருப்பாரு.
அவர் தீபாவளி கொண்டாடவே மாட்டாரு,
புதுசு எடுத்தாலும் அன்றைக்கு உடுத்துவது
கிடையாது. பட்டாசு வெடிக்கும் போது
பாட்டியின் ஸ்டாண்டர்டு டயலாக்,”சீக்கிரம்
வெடிச்சிட்டு வாங்க”??!! :(

காலை 5.30 மணிக்கு மெல்ல வெளிச்சம்
பரவ ஆரம்பித்தாலே தீபாவளி முடிந்துவிட்டது
எங்களுக்கு. :)

அம்மா உறவினர்களுக்கு நண்பர்களுக்கு
பலகாரங்கள் எடுத்து வைத்திருப்பார்
கொண்டுபோய் கொடுத்து வாழ்த்துக்கள்
சொல்லி வருவோம்.

இப்போதெல்லாம் எல்லோரும் டீவி
முன் தான் இருப்பார்கள். முன்பு
தீபாவளி கொண்டாடிய சந்தோஷம்
இப்போது இல்லை. புத்தாடைக்கோ,
திண்பண்டங்களுக்கோ காத்திருப்பு
இல்லை. அதனால் தீபாவளிக்கு இருந்த
ஸ்பெஷல் மதிப்பு குறைந்ததாகவே
தோன்றுகிறது.

இதில் தொலைக்காட்சிகளின் சிறப்பு
நிகழ்ச்சிகளும் முக்கிய பங்குவகுக்கிறது.

மும்பையில் இருந்த போது தீபாவளி
இன்னும் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு
முன் சீரியல் செட்கள் போட்டு ஒவ்வொரு
வீடும் பளிச்சென்று இருக்கும்.
நான் வேலைபார்த்த கம்பெனில் நாங்கள்
3 பேர்தான் பெண்கள். தீபாவளி ஷ்பெஷலாக
முப்பெருந்தேவியரும் ஜரிப்புடவை கட்டி
அசத்துவோம்.

தன் த்ரேயச் ( வட நாட்டு பழக்கமாக) தீபாவளிக்கு முதல் நாள்
வரும் த்ரயோதசி திதி அன்று அம்மம்மா
தங்க நகை வாங்குவார்கள். தங்கம்
முடியாவிட்டால் வெள்ளிக்காசு. கண்டிப்பாக
பால் காய்ச்சும் பாத்திரம் வாங்குவார்கள்.
அதில் பாயசம் செய்துதான் குபேரலட்சுமிக்கு
பூஜை செய்து படைப்பார்கள்.

இந்த இனிமையான நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே
தீபாவளிக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன்.

இதுக்கு முந்தைய தீபாவளி கொசுவத்திகளுக்கு

டிஸ்கி: ரொம்ப நாளா பதிவும் எழுதறதில்லை, ஆளையே
காணோம் அப்ஸ்காண்டான்னு???!!! என்னியக் காணோமேன்னு
தேடிக்கிட்டு(!!!) இருக்கற நண்பர்களுக்கு மீ கொஞ்சம் பிஸி.
புதுவீட்டில் மரவேலைகள் நடந்துகிட்டு இருக்கு. மத்த
வேலைங்களும் சீக்கிரம் முடிச்சு இந்த மாசக் கடைசியில்
குடி புக வேணும். அந்த வேலைகளாலத்தான் பதிவுலுகம்
பக்கம் வரமுடியவில்லை! எல்லாம் முடிச்சிட்டு கண்டிப்பா
வந்திடுவேன்.

அனைவருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
எப்பவும் மறக்க முடியாத இந்தப் பாடல் உங்கள்
அனைவருக்கும்:



22 comments:

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தென்றல்.

நினைவுகள் இனிமை, அப்பாடலைப் போலவே:)!

மதுரை சரவணன் said...

theepavali naivukal eppothum sukame... vaalththukkal.

ஸாதிகா said...

கொசுவத்தி சுவாரஸ்யம்.

Unknown said...

முந்தைய எல்லாரின் தீபாவளியும் இதே போல தான் இருந்திருக்கும் போல.., கிட்டத்தட்ட உங்களது அதே அனுபவம் எனக்கும்... என் அப்பாவும் சோம்பிப்போய் தான் அன்று படுத்துக்கிடப்பார்... திவாளி அன்று எப்படி இப்படி ஒரு மனிதனால் இருக்க முடியும் என்கிற ஆச்சர்யம் அன்றைய பால்யங்களில்..

ஆனால் இன்று அப்பாவாக நான் மாறிய பிறகு தான் புரிகிறது, என் அப்பாவின் தன்மையும்...நானும் தீவாளி அன்று மணி எட்டு வரைக்கும் படுக்கையில் தான் கிடப்பேன்.. என் மனைவியும் குழந்தையும் குளித்து முடித்து தெளிவாக காட்சி கொடுப்பார்கள்...

Unknown said...

இனிமையான நினைகவுகள் நிறைந்த தீபாவளி பதிவு அருமை...

வரும் தீபாவளி சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Anisha Yunus said...

ஹ‌ப்பா...ரொம்ப நாளைக்கு அப்புறம் நதியாவை பாக்கிறேன். நன்றி அதற்காக. ஜாங்கிரிய கண்ல கூட காட்ட மாட்டேங்கிறீங்க?? :)

pudugaithendral said...

ரொம்ப நாளைக்கப்புறம் மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க ராமலக்‌ஷ்மி. ரொம்ப சந்தோஷம். அந்தப் பாட்டை மறக்க முடியுமா??

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அட நம்ம பக்கத்து ஊர்க்காரவுக வந்திருக்கீங்க. வாங்க சரவணன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஸாதிகா

pudugaithendral said...

ஆமாங்க சுந்தரவடிவேலு,

நல்ல நாளும் அதுவும் வாங்கி வெச்சிருக்கற புதுத் துணியை பேருக்கு 5 நிமிஷம் கட்டிட்டு உடனே ட்ரெஸ் மாத்தி அடுக்களையில் நுழைஞ்ச அம்மா இடத்தில் நான் இப்போ இருக்கும்பொழுது அம்மாவின் நிலமை நல்லா புரியுது.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சிநேகிதி,

ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க நன்னு,

எனக்கும் பிடிச்ச நடிகைகள் லிஸ்டில் நதியா எப்பவுமே இருப்பாங்க. ஜாங்கிரி இந்த வாட்டி செய்யலைங்க. புதுவீட்டு வேலைகளில் பிஸி பிஸியா இருக்கேன். செய்யும்போது கண்டிப்பா படம் போடுறேன்..

வருகைக்கு நன்றி

கோமதி அரசு said...

தீபாவளி நினவுகள் அருமை.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

அடுத்தவருடம் புது வீட்டில் தீபாவளி.

வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு,

புது வீடு கிட்டத்திலேயே இருப்பதால எல்லா பண்டிகைக்கும் அங்கயும் போய் பூஜை நடக்குது. இந்த வருஷம் தீபாவளி அங்கதான் கொண்டாடப்போறோம்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தென்றல்..

ஃபர்னிச்சர் வேலைகள் பெண்டெடுத்தாலும், நல்லபடியா முடிச்சுட்டு ஜாங்கிரியோட வாங்க :-))))

வெங்கட் நாகராஜ் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இனிமையான நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சாரலைப் படிச்சுட்டு இங்க வந்தா எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருப்பது புரிகிறது.:)
நல்லாக் கொண்டாடுங்கப்பா. சந்தோஷமா இருங்க. உங்க அம்மாம்மா,அம்மா,அமிர்தா,ஆஷிஷ் ,விட்டுக்காரர் எல்லோருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்மா.

pudugaithendral said...

ஆஹா புது வீட்டுக்கும், பழைய வீட்டுக்கும் சுத்தி சுத்தி கிட்டு இருக்கேன். இதுல இப்ப எங்க ஜாங்கிரி சுத்துறது. :))) நீங்க ஹைதை வாங்க சுடச்சுட செஞ்சு தர்றேன்.

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

நன்றி வெங்கட் நாகராஜ்

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

அப்பல்லாம் பண்டிகைகளை அனுபவிச்ச மாதிரி இப்ப இல்லை என்பதால ஒரு ஏக்கம். நினைச்சா ஸ்வீட், நினைச்சா புது ட்ரெஸுன்னு இருப்பதால எதுக்கும் ஷ்பெஷாலிட்டி இல்லாம போச்சு.

உங்க ஆசிரிவாதம் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்.

Pandian R said...

அன்பின் தென்றல் அவர்களே.
நல்ல தீபாவளி வத்தி! நன்றி.

இந்த முறை புதுகையில் தீபாவளி வேட்டு சத்தங்கள் குறைவாகவே இருந்ததாக நினைக்கத் தோன்றுகிறது. விலை வாசியின் விளைவா என்று தெரியவில்லை.

கூட்டத்திற்குக் குறைவில்லை. ஆனால் தாற்காலிக அனுமதி அல்லாத பட்டாசு கடைகளை அதிகமாகக் காண இயலவில்லை.

அடுத்து வருகிறது கார்த்திகை. காத்திருப்போம்.

pudugaithendral said...

ஆஹா வாங்க ஃபண்டூ,

நம்ம புதுகையிலா இப்படி???? ம்ம்ம் காலம் மாறிப்போச்சுன்னு இதைத்தான் சொல்வாங்க போல. கார்த்திகையின் போது எப்படி இருக்குன்னு பாத்து படம் பிடிச்சு அனுப்புங்க.

வருகைக்கு நன்றி