கிளம்பும்போதே.... மனசு திக் திக்குன்னு இருந்துச்சு. எல்லார்
கிட்டயும் நல்லா கன்பார்ம் செஞ்சேன். உறுதியானச்சு. ஆனாலும்
டிக்கட்டை மாத்த முடியாத காரணத்தாலும் பயணத்தை தள்ளிவைக்க
முடியாததாலும் நடப்பது நடக்கட்டும்னுதான் டில்லி கிளம்பினோம்.
எதுக்கு இந்த பில்டப்பு? எல்லாம் ஹோலிக்குத்தான். மும்பையில்
இருந்த காலத்தில் அழுகிய முட்டைஹோலி, தக்காளிஹோலி
எல்லாம் பார்த்த ஆளுதான் நான். ஆஷிஷும் அம்ருதாவும் கூட
கடந்த இரண்டு வருஷமா ஹோலி கொண்டாடி கலர்புல்லாத்தான்
வீட்டுக்கு வருவாங்க. ஆனா அயித்தானுக்கு இந்த ஹோலி அலர்ஜி.
ஆனாலும் பயணத்துக்கு போன இடத்துல ஹோலி கலர்களோடு
இருக்கறது கஷ்டம் + ஹோட்டல்களில் நுழையக்கூட விடமாட்டாங்க,
இந்த குலால் கலர் அவ்வளவு சீக்கிரம் போகாது. இதெல்லாமும்
டென்ஷனாக்கி ஹோலி சமயத்துல மதுராவில் மாட்டிக்கிறோமேன்னு
இருந்துச்சு.
இரண்டு நாளா நொய்நொய் டிரைவர் ரோதனை தாங்காம டிராவல்ஸ்
காரங்க கிட்ட சொன்னதுல வேற டிரைவர் மாத்திருந்தாங்க. வந்தது
பீமசேன மஹாராஜா!! பேரு பீம்சிங். சும்மா ஒரே லொடலொட.
பலசமயங்களில் ”வம்சம்” பட டயலாக்கை ஞாபகம் வர வெச்சாரு.
(பெருமை பீத்தகளையனா இருக்காறேப்பா” :)) பதினோரு மணி
வாக்குல தில்லியிலேர்ந்து கிளம்பினோம். மனசு எல்லாம் ரொம்ப
எதிர் பார்ப்பு. கண்ணன் பிறந்த இடம், வளர்ந்த இடமெல்லாம்
பாக்கப்போறேமேன்னு சந்தோஷப்பட்ட்டேன். பழைய டிரைவர்
தந்த தப்பான இன்பர்மேஷனால பதினோருமணிக்கே கோவில்
சாத்திடுவாங்க அதனால 4 மணி கோவில் திறக்கும் பொழுது
அங்கே இருக்கறாப்ல போனா போதும்னு நினைச்சு 11 மணிக்கு
கிளம்பினோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுச்சு கோவில் 1 மணி
வரை திறந்திருக்கும்னு. 3 மணிக்கே பிருந்தாவனம் சேர்ந்தாச்சு.
4.30க்கு கோவில் திறக்கும் வரை தேவுடு காத்து கிடந்தோம்.
மதுராவிலிருந்துதான் ஹோலிப்பண்டிகை ஆரம்பித்தது என்பதால
எல்லோரும் கலர்ஃபுல்லா இருந்தாங்க. கயல்விழி வேற பழைய
ட்ரெஸ்ஸு போட்டுக்கங்கன்னு சொல்லியிருந்தாங்க. போட்டோல்லாம்
எடுத்தா ட்ரெஸ் நல்லா இருக்காதுன்னு நல்ல ட்ரெஸ்ஸா போட்டுகிட்டாச்சு!
கோவில் திறந்துமே கலர் அடிப்பாங்க! கலர் இல்லாம நீங்க வறவே
முடியாது அப்படி இப்படின்னு டிரைவர் பயமுறுத்த காரைவிட்டு
இறங்கவா வேணாமான்னு யோசனை! குரங்குகளின் ராஜ்ஜியமா
இருக்கு பிருந்தாவனம். மதுரா போயிடலாம்பா! அப்படின்னு அயித்தான்
சொல்ல வந்தது வந்தாச்சு, என்ன ஆனாலும் சரி தரிசனம் செஞ்சிட்டு
போகலாம்! இதுக்காகன்னு திரும்ப வர முடியாதுன்னு சொல்லிட்டேன்.
4 மணிவாக்குல இறங்கி கோவிலுக்கு கிளம்பினோம். இங்க ஒரு
விஷயம் சொல்லணும். நான் நினைச்சு பார்த்திருந்த பிருந்தாவனம்
வேற, இங்க இருக்கற பிருந்தாவனம் வேற! கொசகொசவென
சின்னச்சின்ன சந்துகள், புனித பூமியில் சுத்தமே இல்லை,
கடைகள்தவிர இங்கே ஏகப்பட்ட கிருஷ்ணர் கோவில்கள். இஸ்கான்
கோவிலும் இருக்கு. அதனால் கோவில் எங்கன்னு கேட்டாக்க?
எந்தக்கோவில்னு எதிர்க்கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது.
இந்தக்கோவில்தான் பிரதானமான கோவில். காத்திருந்தோம்.
காத்திருந்த இடத்திலேயே ஒவ்வொருவரின் கைகளில் இருந்த
கலர்களைப்பார்த்து ஆஷிஷ்,அம்ருதா ஜெர்க்கானார்கள். “சூப்பர்
ட்ரெஸ் போட்டிருக்கேன்ம்மா! இதை இன்னியோட மறந்திட
வேண்டியதுதான்னு” ரெண்டு பேரும் புலம்பல்.
கண்ணனை நினைத்தால் நல்லது நடக்கும்...ஆண்டவனை
பிரார்த்தனை செய். மத்ததெல்லாம் நல்லாவே நடக்கும்னு
சொன்னேன்.
கதவைத் திறந்ததும் திபுதிபுன்னு கூட்டம் உள்ளே நுழைய
மெள்ள போகலாம்னு அயித்தான் சொன்னாரு. சரின்னு
மெள்ள சைட்ல நுழைஞ்சு சேஃபா மேலே ஏறி நின்னோம்.
இதுதான் கண்ணன் இருக்கும் இடம். அந்தத் திரையை
விலக்கியதும் எல்லோரும் கலரை கண்ணன் மேல
கொட்ட ஆரம்பிச்சாங்க. அவன் வரைக்கும் போக முடியாதவங்க
முன்னால நிக்கறவங்க தலையில கொட்டிகிட்டு இருந்தாங்க.
திரைவிலக்கியதும் பூ அலங்காரத்துக்கிடையே பளிச்சின்னு இரண்டு
கண்கள்!! தரிசனம் செஞ்சதும் அப்படியே நைசா கீழேயிறங்கி
ஓரேஒரமா ஒரே ஓட்டம்.:) வெளியே வரும்போது கொஞ்சமே கொஞ்சம்
கலர் ரொம்ப ஸ்லைட்டா... அம்புட்டுதான். அங்கேயிருந்து
ஓடி வந்திட்டோம். திரைவிலக்கியதும் போட்டோ பிடிச்சிகிட்டுருந்தவங்களை
ஒருத்தர் அடிச்சிடுவேன்னு மிரட்டிகிட்டு இருந்தாரு. அதனால பேசாம
கேமிராவை உள்ளே வெச்சிட்டேன். இந்தப் படம் நெட்டில் சுட்டது.
கலர்புல்லா வருவோம்னு நினைச்சிருந்த டிரைவருக்கு ஷாக்.
நாங்க மும்பைக்காரங்கப்பு, இதுக்கெல்லாம் பயப்படமாட்டோம்!
ஹோட்டல்ல விடமாட்டங்களேன்னுதான் யோசைனைன்னு சொன்னேன்.
ஃப்ரெஷ்ஷா பேடா செஞ்சுகிட்டிருந்தாங்க ஒரு அம்மா. போட்டோ
எடுக்கவான்னு கேட்டதும்,”எம் பையனை எடுங்கன்னு!”சொன்னாங்க.
சுடச்சுட தயாராகுது பேடா. இந்தோ உங்களுக்கும்.
சின்னக்கண்ணன் லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தில் பாலுக்கு
பஞ்சமில்லை. லஸ்ஸி கீரிமி கீரிமாயக் சூப்பர் சுவை.
மாடர்ன் மத்து:
யம்மி லஸ்ஸி.
அருகில்தான் கோவர்தன கிரி. இந்த மலையைத்தான் கிருஷ்ணன்
சுண்டுவிரலால் தூக்கியது. 20கீமி தொலைவுதான். நேரமாகிவிட்டதால்
கிருஷ்ணரின் ஜன்ம பூமியான மதுராவை பார்க்கப்போனோம். 20 கிமீ
தொலைவில் இருக்கிறது மதுரா.
இதுதான் மதுரா கோவிலின் முகப்பு. இங்கே டைட் செக்யூரிட்டி செக்கிங்.
மொபைல், கேமிராக்கள் அனுமதி இல்லை. ஆண்களுக்கு தனி
பெண்களுக்குத் தனி செக்கிங்.
உள்ளே போனால் வலது பக்கத்தில் பெரிய படிக்கட்டு. அதில் ஏறி
சென்றால் அழகான ஓவியங்கள் சீலிங்கில் படைக்கப்பட்ட
இடத்தில் கண்ணன் ராதையுடன் அழகாக ஜொலிக்கிறான்.
கீழே இறங்கி வந்தால் கண்ணன் பிறந்த சிறை இருந்த இடம்
என்று போட்ட போர்டு பார்க்கலாம். அங்கே போனால் கிருஷ்ணரின்
உருவம் பொதித்த பொம்மை கூட இல்லை. ராம ஜன்ம பூமிக்கு
பக்கத்தில் மசூதி இருப்பது போல இங்கேயும் பின்சுவர் மசூதியினுடையதுதான்!!!
சுத்தமாக இருக்கிறது கோவில். கண்ணனின் பக்தர்கள் தாளம்போட்டு
பாட்டுப்பாடி பக்தி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.பிருந்தாவனதில்
இருப்பது போல இங்கே ஹோலி இல்லை. எந்தக் கலரும்
படாமல் கண்ணனின் தரிசனம் இனிதே நடந்த மகிழ்ச்சியில்
அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு டாகூர் என்று அவ்வூர்
மக்கள் அன்பாய் அழைக்கும் தவழும் கண்ணனின்
விக்கரகம் ஒன்றை ஞாபகார்த்தமாய்
வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.
12 comments:
தொடர்கின்றேன்.
தொடர்வதற்கு நன்றி டீச்சர்
மதுராவில் அந்த தவழும் கிருஷ்ணனை வங்கி வந்த பிறகு தான் எனக்கு அமிர்தவர்ஷன் பிறந்தான்... (இது நடந்தது ) இன்றைக்கும் அந்த சிலை எங்கள் வீட்டின் பூஜை பொருள். உங்கள் இந்த பயணத்தொடர் படிக்க படிக்க அந்த நாள் ஞாபகம் எல்லாம் வருதுக்கா ... தொடருங்கள் வாழ்த்துக்கள்.....
வெய்யிலுக்கு லஸ்ஸி இதமா இருந்திருக்குமே..
வாங்க சுதர்ஷிணி,
நலமா. நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பாச்சே. அவனருள் எல்லாம்.
வருகைக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
ஐயோ ஏன் கேக்கறீங்க. டீ குடிக்கும் நேரத்துல லஸ்ஸி குடிச்சு ஆசுவாசபடுத்திகிட்டேன்.:)
வருகைக்கு நன்றி
வாவ் நல்ல அனுபவம் தென்றல்.. கண்ணனுக்கு ஹோலி பவுடர் போடுவது பத்தி பேப்பரில் படித்தேன் அதையே நேராப்ப்பாத்த்துட்டீங்க நீங்க..:)
படங்களுடன் நல்ல பகிர்வு. அந்த பேடா, பார்த்தாலே நாவில் நீர் ஊறுது.
வாங்க கயல்,
அடுத்த நாள் அதேக்கோவிலில் ஹோலித்தண்ணீர் கரைச்சு பக்தர்கள்மேலே பூஜாரி ஊத்துவது போல போட்டோவையும் வந்திருந்ததைப் பாத்தீங்களா!!
நல்லவேளை முதல்நாளே போய் தப்பிச்சோம்னு நினைச்சேன்.
வருகைக்கு நன்றி
வாங்க சித்ரா,
ஆமாம், அதிகம் இனிப்பு இல்லாமல் மிதமான இனிப்புடன் சுவையா இருந்துச்சு பேடா.
வருகைக்கு நன்றி
பேடா என்ன லஸ்சி என்ன?
கண்ணனோட ஊர்ல இதுக்கெல்லாம் கேக்கணுமா?
எப்படியோ கலர்லேருந்து தப்பிச்சாச்சு.
படங்களும் பதிவும் அருமை.பகிர்விற்கு நன்றி
வாங்க ராஜி,
அன்னைக்கு க்ரேட் எஸ்கேப்புத்தான்.
வருகைக்கு நன்றி
Post a Comment