நினைத்தை விட சீக்கிரமாகவே கனகதுர்கம்மாகோவிலில் பூஜையும்
தரிசனமும் முடிந்துவிட அயித்தான் மங்களகிரி சென்று வரலாம்
என்று சொல்ல எனக்கு செம ஷாக். ஆனாலும் சனிக்கிழமை
பெருமாள் கோவிலில் கூட்டம் இருக்குமே என ஒரு பயம்.
துணிந்து கிளம்பினோம்.
ஆஷிஷ் குட்டியாக இருந்த பொழுது பாட்டிலில் கொடுத்தாலும் சரி,
டம்ப்ளரில் கொடுத்தாலும் சரி பாலை கொஞ்சம் மிச்சம் வைத்துவிடுவான்.
அதனால் இங்கே பலரும் “உன் மகன் என்ன பானக நரசிம்மரா! மிச்சம்
வைக்க” என்று கேட்பார்கள். எனக்கு அதுவரை மங்களகிரியைப் பற்றியும்
தெரியாது, பானக நரசிம்மரைப் பற்றியும் தெரியாது. விஜயவாடாவிலிருந்து
18 கிமீ தொலைவில் இருக்கிறது மங்களகிரி.
கீழே நரசிம்மரை முதல் நாளே தரிசனம் செய்திருந்ததால் மலைக்குச்
சென்றோம். வாகனங்கள் மேலே வரை செல்கிறது.
நான் நினைத்ததைப்போல நெட்டிமுட்டும் கூட்டமில்லை.
இங்கே இருக்கும் மலை யானைவடிவில் இருக்கும். அதில்தான்
பானக நரசிம்மர் கோவில். கோவிலில் சிலை ஏதும் கிடையாது.
15 செமீ அளவில் வாய்போன்ற அகண்ட துவாரம் மட்டும் தான்.
அதற்கு வெள்ளியில் நரசிம்மர் போல் கவசம் போட்டு வைத்திருப்பார்கள்.
பானகம் நைவேத்தியம் செய்யவேண்டும் என்று சொன்னால் 30 ரூபாய்க்கான
சீட்டு ஒன்று தருவார்கள். அதை வாங்கிக்கொண்டு சந்நிதி சென்றால்,
சின்னச் சின்ன தேக்சாக்களில் பானகம் கரைத்து வைத்திருப்பார்கள்.
அதை நைவேத்தியம் செய்து அர்ச்சகர் அந்த பானகத்திலிருந்து கொஞ்சம்
எடுத்து நரசிம்மரின் வாயில் ஊற்றுவார். ஆனால் முன்பெல்லாம்
எவ்வளவு பெரிய பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அதில் பாதி மிச்சம்
இருக்கும். ஊற்ற ஊற்ற யாரோ பருகும் சத்தம் கேட்குமாம். சின்ன
டம்ப்ளாரில் ஊற்றினாலும் அதில் பாதி தான் உள்ளே போகும் என்று
தெரிந்தவர்கள் சொல்லக் கேள்வி.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் அத்தனை பானகம் உபயோகப்படுத்தினாலும்
சந்நிதியிலோ ஒரு எறும்பு கூட இல்லை!!! இந்தியாவிலேயே வெல்லம்
உபயோகித்தும் அங்கே ஒரு எறும்பு கூட இல்லை என்பது மங்களகிரியில்
மட்டும்தான்!!!!! எப்பொழுது எறும்புக்களும், ஈக்களும் இந்த இடத்தில்
வருகிறதோ அப்பொழுது இந்த யுகம் முடிவுக்கு வரும் என அர்த்தமாம்.
அப்பண்ணாவாக கந்த அலங்காரத்தில் விசாகப்பட்டிணத்தில் தரிசனம்
தரும் நரசிம்மர் இங்கே என்ன பானக நரசிம்மராக அருள் புரிகிறார்.
கதை கொஞ்சம் பார்ப்போம்.
மங்களகிரி - பெயரே சொல்கிறது மிக புனிதமான மலை என்று.
தேவர்கள் வந்து பூஜிப்பதாக கருதுவதால் கோவில் காலை முதல்
மதியம் வரை மட்டும்தான் திறந்திருக்கும்.
நுமுச்சி எனும் அசுரன் ஈரமாகவும் இல்லாமல்/காய்ந்தும் இல்லாத
வகையில் தன் சாவு இருக்க வேண்டும் என வரம் வாங்கிக்கொண்டு
படாத பாடு படுத்திக்கொண்டு எறும்பு உருவில் இந்த மலையில்
தங்கி இருந்தான். அவனை சுதர்சன நரசிம்மராக விஷ்ணு கொல்கிறார்.
அந்த அசுரனின் உடலில் இருந்து வந்த ரத்தம் ஒரு குளம் போல
ஆகிவிட மஹாவிஷ்ணுவின் உக்ர சூட்டைத் தாங்க முடியாமல்
கிருதயுகத்தில் அவருக்கு தேனையும்,த்ரேதாயுகத்தில் நெய்யும்,
துவாரபயுகத்தில் பாலும் தற்போது கலியுகத்தில் பானகமும் கொடுத்து
சாந்தப் படுத்துவதாக ஐதீகம்.
முன்பு இந்த மலை ஒரு எரிமலை என்றும் அது பொங்கி விடாமல்
இருக்க பானகத்தை ஊற்றி குளிர்விக்கிறார்கள் என்றும் தகவல்.
கோவிலின் பின்னே லட்சுமி கோவில் இருக்கிறது. இங்கே இறைவனின்
திருநாமம் ஸ்ரீ பானகால லட்சுமி நரசிம்மர்.
கீழே ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் இருக்கிறது. இறைவனுக்கு
சாத்தப்படும் 108 சாலிக்கிராமங்களால் ஆன மாலை மிக பிரசித்தி.
தக்ஷ்ண்விருத சங்கம் இது ஸ்ரீ கிருஷ்ணரால் உபயோகப்படுத்தப்பட்டு
பின்னர் தஞ்சை சரபோஜி மன்னரால் கோவிலுக்கு சமர்க்கிப்பட்டது
தற்போதும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கோவில் ஸ்தலவிருட்சம் க்ஷீர விருக்ஷம். அதாவது பால்மரம்.
அதற்கும் ஒரு கதை உண்டு. சசிபிண்டி எனும் அரசனை
அவன் மனைவி,குழந்தைகளை தன் பாதுகாவலில் விட்டு
தவம் செய்ய செல்ல நாரதர் சொன்னதைக் கேட்டு அந்த அரசனின்
மனைவி நாரதரை க்ஷீரவிருக்ஷமாக சபிக்கிறாள். நாரதர் இன்றளவும்
அங்கே இந்த மர வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதுதான் அந்த மரம்.
சனிக்கிழமை இங்கே கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை
அம்மையை தரிசிப்பதை விட்டு இங்கே வரத்திட்டம் போட்டிருந்தேன்.
வெள்ளிக்கிழமை அம்மையை ஆனந்தமாக தரிசிக்க வைத்து சனிக்கிழமை
தன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அருள் புரிந்து அவனை தரிசிக்க
வேண்டும் என் பலநாள் கோரிக்கையை தீர்த்துவிட்டான்.
இந்தக் கோவில் பிள்ளைகளுக்கு செம ஆச்சரியம்!!!!
பானகத்தின் சுவை சொல்லில் அடங்காது. வெளிப்பிரகாரத்தில்
நாம் கொண்டு செல்லும் பாத்திரத்திலிருந்து ப்ரசாதத்தை டம்ப்ளரில்
போட்டு குடிக்கக் கொடுக்கிறார்கள். பாட்டிலில் ஊற்றி வீட்டுக்கும்
எடுத்து வரலாம்!! இதோ உங்களுக்கும் கொஞ்சம்.
மதியம் வேறு ஏதும் சாப்பிட மனமில்லை. பானகம் குடித்தே
வயிறு நிரம்பியிருந்தது.:) கனகதுர்கம்மா கோவில் ப்ரசாதத்துடன்
மதிய சாப்பாட்டை முடித்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ஹைதைக்கு
புறப்பட்டோம். இரவு 12 மணிக்கு ஹைதை வந்து சேர்ந்தோம்.
9 comments:
என்னுடைய மங்களகிரி பயணமும் நினைவுக்கு வந்து போகிறது. அத்தனை பானகம், வெல்லம் இருந்தும் ஒரு எறும்பு கூட இல்லை என்பது எனக்கும் சிறு வயதிலிருந்தே ஆச்சரியமான விஷயம். என் பதிவில் கூட மங்களகிரி பற்றி எழுதி இருக்கிறேன்.
மங்களகிரி பானக நரசிம்மர் தரிசனம் முடித்து பிரசாதமாக பானகமும் எடுத்துக் கொண்டோம்.
கீழே நரசிம்மருக்கு நாங்கள் சென்ற சமயத்தில் யாரோ காணிக்கையாக தங்கப் பற்கள் அளித்ததும் அந்த தங்கப்பற்களுடன் தரிசனம் கிடைத்தது.
பானகம் குடித்தே
வயிறு நிரம்பியிருந்தது.:) //
பதிவு படித்தே
மனதும் நிரம்பியிருக்கிறதே.
நன்றி. பகிர்வுக்குப் பராட்டுக்கள்.
நானும் இதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆந்திராவில் உள்ள தளங்களுக்கு வரணும். அலுவலகத்தில் விடுமுறை தர அந்த நரசிம்மர்தான் ஒரு யோசனை சொல்லணும்
பானக நரசிம்ஹர் தர்சித்தேன். புதுமையான கோவிலாக இருக்கிறது.
உக்ரத்தைத் தணிக்க
பானகம்.
குண்டூர் சென்றிருந்த போது இந்த மலைக்கும் சென்று
வந்தோம்.
நரசிம்ஹரின் வாயில் விடும் பானகம் எங்குசெல்கிறது
இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
good post
சென்ற வருடம் நண்பர்களுடன் குண்டூர் வந்திருந்த பொழுது
பெருமாளின் அருளால் கனக துர்கா கோயிலுக்கும்
பானக நரசிம்ஹர் கோயிலுக்கும் வந்தது எனது பாக்கியம்.
தங்கள் மூலம் நிறைய புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.....
1) << கோவில் காலை முதல்
மதியம் வரை மட்டும்தான் திறந்திருக்கும் >>
2)<< இந்த மலை ஒரு எரிமலை என்றும் அது பொங்கி விடாமல்
இருக்க பானகத்தை ஊற்றி குளிர்விக்கிறார்கள் >>
மிக்க நன்றி...
தாமதமா பதில் பின்னூட்டம் போடுவதற்கு மன்னிக்கவும்.
சகோ, கோவை2தில்லி, இராஜராஜேஸ்வரி, எல்.கே,மாதேவி, வல்லிம்மா,கீதா, அப்பாஜி அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment