Friday, September 09, 2011

உக்கிரான அறை

எங்க புதுகையில் நரசிம்ம ஜெயந்தி கல்யாணமண்டபம் ரொம்ப
பிரசித்தி. மே மாதம் வரும் நரசிம்ம ஜெயந்தி விழா நடக்க என
கட்டி விட்டிருக்கிறார்கள். அந்த மாதம் தவிர மற்ற நாட்களில்
அங்கே திருமணங்களும் நடக்கும். ஊருக்கு நடுவே பெரிதாக
இருக்கும் கல்யாண மண்டபம் என்பதால் பல திருமணம் அங்கே
நடக்கும். அப்புறம் தான் லேனா எல்லாம் வந்தது.

நரசிம்ம ஜெயந்தி கல்யாணமண்டபத்தில் சமையலறைக்கு எதிரே
உக்கிரான அறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா மன்னிச்சிடுங்க)
அப்படின்னு எழுதி ஒரு ரூம் இருக்கும். அங்கே காய்கறிகள்,
பழங்கள், மளிகை சாமான்கள் எல்லா வெச்சிருப்பாங்க. அந்த
ரூம் வாசலிலேயே ஒருத்தர் சேர் போட்டு உட்கார்ந்திருப்பார்.
எல்லோரும் திருமண விழாவில் பிசியா இருக்கும் பொழுது
இவர் மட்டும் இங்கே உட்கார்ந்திருப்பார். முஹூர்த்த நேரத்தில்
மட்டும் யாராவது ஒரு நிமிடம் வந்து நிற்க இவர் போய்
அட்சதை போட்டு வருவார். ஒவ்வொரு திருமணத்திற்கும்
அங்கே உட்காரும் ஆள் மாறும்பொழுது இது சத்திரக்காரர்கள்
சேர்ந்த ஆள் இல்லை என்று புரிந்தது. அந்த அறைப்பற்றியும்
அங்கே உட்காருபவர் பற்றியும் அம்மாவிடம் கேட்டேன்.

அப்பொழுதெல்லாம் இந்த காண்ட்ராக்ட் மேரேஜ் கிடையாதே.
அதனால் ஆளுக்கு ஒரு வேலையை பகிர்ந்து செய்து
கொடுப்பார்கள். அதில் முக்கியமானது இந்த உக்கிரான அறை
ட்யூட்டி. சமையல்காரர் எந்த நேரமும் எந்த சாமான் வேண்டுமானாலும்
கேட்கலாம் என்பதால் அங்கேயே இருக்க வேண்டும். பூட்டிக்கொண்டு
போய்விட முடியாது. சாமான்களுக்கு அவர்தான் ஜவாப்தாரி
என்பதால் நம்பிக்கையான ஆளை மட்டுமே அங்கே உட்கார
வைக்க முடியும். மொய் எழுத உட்கார்வதற்கும் நெருங்கிய
சொந்தமோ, அல்லது நம்பிக்கையான ஆளோதான் ஏற்பாடு
செய்வார்கள். என்று அம்மா சொன்னார்.

இவ்வளவு மேட்டர் இருக்கா என வியந்தேன்.
இந்த உக்கிரான அறை எனும் எழுத்து
இன்னமும் என் கண்முன் நரசிம்ம ஜெயந்தி கல்யாண மண்டபத்தில்
படித்தது ஓடிக்கொண்டே இருந்தது. பொறுப்பாக செய்ய ஒருவர்
இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். மானிட சேவை
எவ்வளவு நல்ல சேவை என்றெல்லாம் யோசித்துக்கொண்டே
இருந்தேன். அந்த பதத்தின் மீது எனக்கு அப்படி ஒரு
ஈடுபாடு எப்படி வந்தது என்றே தெரியவில்லை!!!

ஆனால் என்னையும் அப்படி ஒரு தன்மையான,நம்பிக்கைக்கு
பாத்திரமுள்ள, இவளிடம் கொடுத்தாள் இந்த வேலை நன்கு
செய்வாள் என்று சொல்லும் பொறுப்பையும் ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும் எனும் எண்ணத்தை வளர்தது உக்கிரான அறைதான்!!!
நம் மீது நம்பிக்கை வரவைப்பது ரொம்ப கஷ்டம். அதே போல
செய்வதை திருந்தத்தான் செய்கிறோமா என்பதையும் அடுத்தவர்கள்
புரிந்து கொள்ள் வைப்பதும் கடினம்.

எனக்கு 18 வயது ஆன பொழுது அப்பா,அம்மா வீட்டு விஷயங்களில்
கலந்து பேசுவார்கள். அது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக
இருந்தது. நம் எண்ணத்தையும் கேட்கிறார்கள் (செயல்படுத்துகிறார்களா
இல்லையா என்பது வேற பிரச்சனை) என்ற எண்ணமே நம்பிக்கையைத்
தந்தது. எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்தது. உறவினர்களுக்கு,
நட்புக்களுக்கு பிடித்தது என்ன என்பதை பேச்சுவாக்கில் கேட்டு ஞாபகத்தில் வைத்திருப்பேன்.
அவர்களுக்கு அதையே அன்பளிப்பாக கொடுப்பேன். அவர்களும் அக
மகிழ்வர். என் அம்மம்மாகூட,”யாருக்கு என்ன பிடிக்கும்னு கலாவை
கேட்டால் தெரியும்! என்றோ இவங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?
என்றோ கேட்டு அதன்படி செய்வது உண்டு. ஆக என் செயல்பாடுகள்
இவர்களுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தியை தந்திருக்கிறது அதனால்தான்
என்மீது நம்பிக்கை வைத்து என் எண்ணத்தை கருத்தில் எடுத்து
கொள்கிறார்கள்.சந்தோஷமாக இருந்தது. அப்போதும் அந்த உக்கிரான
அறையை நினைவில் வைத்திருந்தேன்.

திருமணமாகி ஆஷிஷ் பிறந்து அம்ருதாவை கருவில் சுமந்துகொண்டிருந்த
பொழுது அயித்தானின் அண்ணன் மகள் திருமணம். மாமாவும், அத்தையும்
வேலைக்கு போவதால் பல பொறுப்புக்களை எடுத்து செய்ய வேண்டிய
கட்டாயம். வயது ஜஸ்ட் 25!! மண்டபம் பார்க்க,பத்திரிகை வைக்க,
சாமான் வாங்க,என ஓடிக்கொண்டி இருந்தேன். போட்டோகிராபர்
ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். நான் இருந்த வீட்டிற்கு கீழ்
இருப்பவர். அவரது வேலை மிக அருமையாக இருந்தது. திருமணம்
முடிந்து உடனே ஆல்பம் கொடுத்துவிட்டார். சீடியும் மிக அருமையாக
வந்திருந்தது. அமெரிக்கா செல்ல விசா நடவடிக்கைகளின் பொழுது
சில சமயம் நிறைய்ய புகைப்படங்கள் பார்ப்பார்களாம். ஆனால்
அயித்தானின் அண்ணன் மகள் காட்டிய ஆல்பத்தின் முதல் பக்கம்
மட்டும் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே திருப்பி கொடுத்துவிட்டார்கள்.
(விசாவும் தான் :))

“ரொம்ப நல்ல போட்டோகிராபி சித்தி. உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”
என பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாள்.

எனது திருமணத்திற்கு அப்பா ஏற்பாடு செய்திருந்த மேரேஜ் காண்ட்ராக்டரையே
ஏற்பாடு செய்தோம். மிக அருமையாக எல்லாம் செய்து கொடுத்ததோடு
மட்டுமில்லாமல் எங்கள் பட்ஜட்டில் 45,000 மிச்சம் பிடித்து கொடுத்தார்.
1999ல் 45,000 மிச்சம் என்றால் பணத்தின் மதிப்பு பார்த்து கொள்ளுங்கள்.
மாமா என் கையில்தான் கிட்டத்தட்ட 3 லட்சம் பணம் கொடுத்து
எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந்தார். அந்த
பணத்தை கையில் வாங்கும் பொழுது அந்த உக்கிரான அறை என்
கண்முன் வந்து சென்றதை தவிர்க்க முடியவில்லை.

என்னை நான் டெவலப் செய்துகொள்ள நரசிம்ம ஜெயந்தி கல்யாண
மண்டப உக்கிரான அறை ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பதில்
எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.


18 comments:

Lakshmi said...

அருமையான ப்ளாஷ்பேக் நினைவுகள்.ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.

சதீஷ் மாஸ் said...

அருமையான எழுத்து நடை... அந்த அறைக்கு பெயர் "ஸ்டோர் ரூம்" என ஆங்கிலத்தில் சொல்வர்... அப்ப தமிழில் என்ன வரும்....

வெங்கட் நாகராஜ் said...

பெரும்பாலான கல்யாணங்களில், அதுவும் சென்ற காலங்களில், இந்தப் பொறுப்பு மிகவும் முக்கியமான ஒன்று.... எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.... :)

நல்ல பகிர்வு....

Appaji said...

உறவுகளில் ஒருவர் ...உக்கிரான அறையை பார்த்து கொள்வார்கள்? இப்பொழுது எங்கே உறவுகள்........ திருமணத்திற்கு வந்தாலே பெரிய விஷயமாகி இருக்கிறது...அப்புறம் எங்கே .உக்கிரான அறையை பார்த்து கொள்வது ? இருப்பினும் மிகவும் நம்பிக்கை, அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே உக்கிரான அறை
பொறுப்பை எடுத்து கொள்வார்கள். அப்போதைய திருமணங்கள்......... உறவினர் ஒவ்வொருவரும் .....நண்பர்களும் சேர்ந்துதான் மிக மிக சிறப்பாக நடந்தன.
இனி எங்கே அது போல் திருமணங்களை பார்க்க போகிறோம்!

தங்கள் கணவரது அண்ணன் மகள் திருமணத்தை தாங்கள் பொறுப்பு எடுத்து நடத்தியிருப்பது...மிக பெரிய விஷயம்..நிறைய அனுபவங்கள்...
முழு மன திருப்தியும் கிடைத்திருக்கும்....நிறைய விமர்சனங்களும் வந்திருக்குமே!

Lakshmi said...

நேத்து நான் போட்ட கமெண்ட் எங்க போச்சு?

AKM said...

நல்லா இருக்கீங்களா மேடம்..
எதையடா ஆட்டை போடுவோம் அந்த உக்கிரான அறையிலன்னு யோசிக்கிறவங்க நிறைஞ்சு இருக்கிற இந்த உலகத்திலே அந்த எழுத்தையே இன்ஸ்பிரேசனா வைச்சு செயல்பட்டிருக்கீங்கங்றது நல்ல விசயமா படுது..(பழைய நரசிம்ம ஜெயந்தி மண்டபம் இடிக்கப்பட்டு எதிரில் அமைக்கப்பட்டாலும் அப்போது நடந்தது போல் இங்கு அவ்வளவு திருமணங்கள் நடைபெறுவது இல்லை..ஈஷா, ரவிசங்கர் போன்றோரின் இயக்க நிகழ்சிகள் நடக்கின்றன.. கணை எண்ணை என்ற பாகவதர் குடுப்பத்தின் பேமஸ் எண்ணையும்.. அந்த குடும்பமும் என்ன ஆயின??..)
அன்புடன் ஏகேஎம்

புதுகைத் தென்றல் said...

வாங்க லக்‌ஷ்மிம்மா,

வருகைக்கு ரொம்ப நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சதீஷ்,

ஸ்டோர் ரூம் கரெக்ட். ஆனா அதென்னவோ மண்டபத்துல உக்கிரான அறைன்னு எழுதியிருப்பாங்க.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

இப்ப என்னதான் காண்ட்ராக்ட் மேரேஜ்னாலும் அவங்களும் நாம சொன்னதையெல்லாம் செஞ்சு கொடுக்கறாங்களான்னு பாத்துக்க வேண்டிய பொறுப்பும் இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாஜி,

//நிறைய அனுபவங்கள்...
முழு மன திருப்தியும் கிடைத்திருக்கும்....நிறைய விமர்சனங்களும் வந்திருக்குமே!//

ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்னுன்னா என்னன்னு அப்ப நல்லா கத்துக்கிட்டேன். விமர்சனம் நல்லவேளை நல்லபடியா வந்தது. மகளை ரயிலேத்த அயித்தான் போயிருந்தார். (என்னால முடியல அதனால போகலை) அவங்க மாமனார் வீட்டுக்காரங்க என்னையும் அயித்தானையும் ரொம்ப பாராட்டி நல்லா பொறுப்பா செஞ்சீங்கன்னு சொன்னாங்களாம். அன்னையிலேர்ந்து அயித்தானோட அண்ணி என்னை தன் முதல் மருமகள்னு தான் சொல்வாங்க. :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஏகேஎம்,


எங்கோ எப்பொழுதோ விழும் சிறு பொறிதானே ஒரு மாற்றத்தை தருது. பாகவதர் வீட்டுப்பாட்டி தரும் கணை எண்ணெய், மஞ்சள்காமாலைக்கு மருந்து, மந்திரித்தல் என எத்தனையோ!!!!!!! கொசுவத்தி ஏற்கனவே சுத்தியிருக்கேன். :))

ராணிஸ்கூல் சந்து கிட்டதான் இப்ப அப்பா இருக்காங்க.
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வரலையே லக்‌ஷ்மிம்மா:(

ஹுஸைனம்மா said...

நிஜமாத்தான்ப்பா.. இப்படி ஏதாவது ஒண்ணுதான் நமக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும்!!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு கருத்துக்கும் நன்றி

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. திருமணத்தில் பொறுப்பெடுத்து செய்வது என்பது பெரிய விஷயம்.உக்கிரான அறை உங்களுக்குள் ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு இடத்தில் 4,50,000 என்றும் மறு இடத்தில் 45000 என்றும் வருகிறது. எது சரி?

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

சுட்டி காட்டியதற்கு நன்றி 45,000 என்பதுதான் சரி.

வருகைக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

நம் மீது நம்பிக்கை வரவைப்பது ரொம்ப கஷ்டம். அதே போல
செய்வதை திருந்தத்தான் செய்கிறோமா என்பதையும் அடுத்தவர்கள்
புரிந்து கொள்ள் வைப்பதும் கடினம்./

மன நிறைவைத்தந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

தமிழ்ல உக்கிராண அறைன்னுதான் நானும் கேள்விப்பட்டிருக்கேன்.