Tuesday, September 13, 2011

வேகம் தந்திருக்கும் சோகம்

கடந்த ஞாயிறு அன்று நடந்திருக்கிறது இந்த விபத்து. முன்னாள்
கிரிக்கெட் வீரர் அஜாரூதின் அவர்களின் இளையமகனும்(அயாஜ்), அஜாருதினீன்
சகோதரி மகனும் அயாஜின் புதிய Suzuki GSX R1000 bike வண்டியை
ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் ரோடில் ஓட்டியிருக்கிறார்கள். 250கிமீ
வேகத்தை தொடமுயன்ற வண்டி கண்ட்ரோல் இழந்து விபத்துக்குள்ளாகி
அஜாருதினீன் சகோதரி மகன் அந்த இடத்திலேயே மரணத்தை தழுவ
அஜாருதினீன் மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அஜாருதினீன் 19 வயது இளையமகன் ஓட்டிய பைக் இதுதான்.

அஜாருதீனின் முதல் மனைவி நொளருதீன் மகன் இந்த அயாஜ்.
(முதல் மனைவியைப் பிரிந்து நடிகை சங்கீதா பிஜ்லானியை
திருமணம் செய்து கொண்டார் அஜாருதீன்.


ஹைதையின் அவுட்டர் ரிங் ரோடில் சமீபத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன்.
8 லேன் பயணம். வேகமாக போக வேண்டும் எனும் எண்ணம்
எவருக்கும் வரவைக்கும் சுமூகமான பாதை. சர்வ சாதாரணமாக
அனைவரும் 100க்கு மேலே சென்று கொண்டிருந்தனர். கார் ரேசில்
கொசு பறப்பது போன்ற சத்ததுடன் ஜூயுங் என வாகனங்கள் போகுமே
அப்படி பறக்கும். சில சமயம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
வாகனங்களே இருக்காது. டிராபிக் தொல்லை இல்லாமல்
பயணத்தை அனுபவிப்பதை விட்டு அந்தப் பாதையில் வேகமாக
சென்று தன் மரணத்துக்குத் தானே விண்ணப்பம் போடும் மனிதர்களை
என்ன வென்று சொல்வது. (இப்படி வேறு ஊர்களிலும் இருக்கலாம்!)


அஜாருதீனைப்போல மகனும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகிக்கொண்டிருந்தார்.
ஞாயிறு அன்று அதிகாலை 6.30 மணிக்கு வீட்டினருக்குத் தெரியாமல்
வண்டியை எடுத்துச் சென்று அவுட்டர் ரிங் ரோடில் ஓட்டும் பொழுது
இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. அயாஜின் தாயார் சவுதியில்
இருக்கிறார். தாத்தாவிடம் இருந்து வருகிறார் அயாஜ்.

அந்த வாகனத்தை இன்னும் ரெஜிஸ்டர் கூட செய்யவில்லை. இருவரும்
சேர்ந்து டெஸ்ட் ட்ரைவ் செய்து கொண்டிருந்தார்கள். :((

கிட்னியிலிருந்து, நுரையிரலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததாம்.
அயாஜின் மூளைக்கு எவ்வளவு நேரம் ரத்தம் செல்லவில்லை
என்பதை மருத்துவர்களால் அறிய முடியவில்லை. இதனால்
மூளை எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல
முடியவில்லையாம். ஞாயிறன்று நடந்த விபத்து. இப்பொழுது
வரை நினைவு திரும்ப வில்லை. உடலில் எந்த அசைவும்
இல்லாத நிலை. 19 வயதில் அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு
அவஸ்தை!!

வேகம் தரும் த்ரில்லுக்காக இளைஞர்கள் தங்கள் உயிரைப் பற்றி
நினையாமல் இப்படி வண்டி ஓட்டி தங்கள் உயிரை இழக்கின்றனர்.
25 வயதுக்கு உட்பட்ட வாகன ஓட்டிகளால்தான் விபத்துக்கள் அதிகம்
நிகழ்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. பெற்றவர்கள் சொன்னாலும்
பிள்ளைகள் கேட்பது இல்லை.

சென்ற வருட தந்தையர் தினத்தன்று தன் மகனுக்கு நடிகர்
கோட்டா ஸ்ரீநிவாஸராவ் (சாமி படத்தில் வில்லனாக வருவாரே!)
ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். மகன்
வண்டியை ஓட்டிக்கொண்டு முன் செல்ல மருமகள் மற்றும்
குடும்பத்தினருடன் பின்னாலேயே காரில் தொடர்ந்து கொண்டிருந்த
கோட்டா ஸ்ரீநீவாஸிற்கு கண் முன்னாலேயே மகனின் வண்டி
விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தது மகா சோகம். இந்த
விபத்து நெக்லஸ் ரோட் (ஹுசைன் சாகருக்கு இந்தப் பக்கம்)
நடந்தது. தன் ஒரே மகனை இழந்த சோகத்திலிருந்து இன்னமும்
அவர் மீளவில்லை. :((


கடவுளே! எப்பொழுது இந்த இளைஞர்களுக்கு பொறுப்பை தரப்போகிறாய்?
தன்னை காத்துக்கொள்ளும் தன்மையை எப்பொழுது தரப்போகிறாய்?
தெரிந்து சில தெரியாமல் பல என எத்தனையோ பெற்றோர்களின்
துயரத்தை நிறுத்த வழிதான் என்ன??

நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகள் அயாஜிற்காக.15 comments:

சேட்டைக்காரன் said...

இந்தியாவின் சாலைகளில் இத்தகைய சூப்பர் பைக்-குகள் ஓட்டத்தக்கவையே அல்ல. அதிலும், அதிவேகமாய் ஓட்டுகிற ஆவலில் இப்படி உயிரைப் பணயம் வைப்பது வருத்தமாய் இருக்கிறது.

இது போல சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் அவ்வப்போது நிகழுகிறது.

பெற்றவர்கள் மனது என்ன பாடுபடும் என்பதை இவர்கள் ஏன் உணரமாட்டேன் என்கிறார்களோ? :-(

வெங்கட் நாகராஜ் said...

நேற்று இது பற்றி யாஹூ பக்கத்தில் படித்தபோதே மனதுக்குக் கஷ்டமாக இருந்தது....

வேகம் விவேகமல்ல என்பது இன்னும் புரியவில்லை இளைஞர்களுக்கு....

அவருடன் இருந்த நண்பர் இறந்து விட்டார் என நினைக்கும்போது இன்னும் கஷ்டம்.... :(

அமைதிச்சாரல் said...

பதைபதைப்பா இருக்குங்க.

என்னத்தைச்சொல்றது இப்பத்திய இளைஞர்களை :-(

Appaji said...

இளம் வயதில் ....அனைவருக்கும் வண்டியில் வேகமாக செல்ல வேண்டும்..
என்பது இயல்பான ஆசை தான்...ஆனால் பெற்றோர்கள் தான் ...பிள்ளைகளிடம்
நட்பு ரீதியில் எடுத்து சொல்லி பாதுகாப்பாக ...பயணம் செய்ய அறிவுறுத்த வேண்டும்....
நமது பிள்ளைகளின் நண்பர்களுக்கும் ஆலோசனை கூற வேண்டும்..வேறு என்ன செய்ய முடியும்? ......................அசாருதீன் குடும்பத்திற்காக பிரார்த்திப்போம்.

ஷர்புதீன் said...

அடியேன் ஹைதையில் இருந்த பொழுது சிலரது பல்சர் பயணங்களை பார்த்து பயந்திருக்கிறேன். ( அடியேன் முப்பது வருட வாழ்க்கையில் பைக்கில் எழுபது கிலோ மீட்டரை தொட்டதுதான் அதிகபட்ச சாதனை)., ஹுசைன் சாகருக்கு பக்கத்தில் pvr தியேட்டர் போகும் வழியில் ஒரு வளைவு வரும், அந்த வளைவில் எண்பதில் வளைபவர்களை அடிக்கடி பார்த்து வயறு கலங்கியதுண்டு.,

உயிர் பிழைக்க எனது துவாக்கள்!

புதுகைத் தென்றல் said...

வாங்க சேட்டைத்தம்பி,

அவர்கள் பெற்றவர்கள் ஆகும் பொழுதுதான் அந்த உணர்வு வரும் என நினைக்கிறேன். :(

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

இளம் கன்று பயமறியாது என பெரியவர்கள் சும்மா சொல்லிவிடவில்லை.

இறந்தது அஜாருதினீன் சகோதரி மகன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

நடந்து சென்றாலே விபத்துஆக்கிவிடுவார்களோ என இருக்கும் சூழலில் வேகமாக வாகனங்களை ஓட்டுகிறார்கள் இளைஞர்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாஜி,

பெற்றோர்கள் சொன்னால் எத்தனை பிள்ளைகள் கேட்கிறார்கள். பெற்றோர்களை வீட்டில் இருக்கும் வில்லன், வில்லிகளாகத்தானே பார்க்கிறார்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஷர்புதீன்,

சாலைவிதிகள் அத்துமீறல் ஹைதையில் அதிகம் தான். நெக்லஸ் ரோடில் நாம் மிதமான வேகத்தில் சென்றாலும் மற்ற வாகங்கள் போகும் வேகத்தைப் பார்த்து டென்ஷனாவது உண்டு.

முறையான வாகனப்பயிற்சி இல்லாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆன்லைனில் டெஸ்ட் பாஸ் செய்வித்து லைசன்ஸ் கொடுத்துவிடும் சூழல் இருக்கும் பொழுது வேறு எதுமாதிரி போக்குவரத்து இருக்கும்?

KSGOA said...

எனது பிரார்தனைகளும்.இப்படிப்பட்ட
விபத்துகளை பற்றி படிக்கும்போதெ
பயமாக இருக்கு.

ஹுஸைனம்மா said...

//250கிமீ வேகத்தை தொடமுயன்ற வண்டி//

பல விபத்துகளுக்கும் இதான் காரணம். நம்மைப் போல சாமான்யர்கள் எழுப்பும் கேள்வி: அதிவேகமாகச் செல்ல வசதியில்லாத சாலைகள் உள்ள நாட்டில், ஏன் வாகனங்களில் அளவுக்கதிகமான வேகத்துடன் செல்லமுடிகின்ற வசதி இருக்கின்றது என்பதுதான்.

அதாவது, ஒரு நாட்டின் சாலைகளில் அதிகபட்ச வேகம் 120கி.மீ. என்றால், அந்நாட்டில் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் அதற்குமேல் செல்லும் திறன் இருக்கக்கூடாது!! நியாயமான கருத்து. ஆனால், நடக்கக்கூடியதா இது??

இளைஞர்கள் ஆர்வக்கோளாறில் செய்பவை, அவர்களைவிட பெற்றவர்களைத்தான் அதிகம் பாதிக்கீறது.

ஸாதிகா said...

//கடவுளே! எப்பொழுது இந்த இளைஞர்களுக்கு பொறுப்பை தரப்போகிறாய்?
தன்னை காத்துக்கொள்ளும் தன்மையை எப்பொழுது தரப்போகிறாய்?
தெரிந்து சில தெரியாமல் பல என எத்தனையோ பெற்றோர்களின்
துயரத்தை நிறுத்த வழிதான் என்ன??

நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகள் அயாஜிற்காக.
//

நானும் பத்திரிகையில் படித்து கலங்கி விட்டேன்.இறைவனிடம் அயாஜிற்காக நானும் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கின்றேன்.

கோவை2தில்லி said...

வேகம் தான் ஒருவரின் உயிரையே பறித்திருக்கிறது.....

அயாஜுக்காக பிரார்த்தனைகள்.....

புதுகைத் தென்றல் said...

இன்று காலை 11.45 மணிஅளவில் அயாஜுதீன் இறைவனடி சேர்ந்தார். அதிகமாக ரத்தம் கசிந்து கொண்டிருந்த இடது பக்க கிட்னியை எடுத்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் நலம் பெறக்கூடும் என மருத்துவர்கள் நினைக்கும் அளவுக்கு முன்னேறிய உடல்நிலை இன்று அதிகாலை எந்த மருத்துவ சிகிச்சைக்கும் பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.

இந்த சோகத்தை தாங்கும் மனதை அந்தத் தாய்க்கு இறைவன் தரட்டும்.
அயாஜூதினீன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்