Wednesday, November 23, 2011

ஊரெல்லாம் உன் பேச்சுத்தான்!!!!!:(( :)

அம்ருதம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. பள்ளியில் வாமிட் செய்து
விட்டதாக சொன்னாள். வீட்டிற்கு வந்து எது சாப்பிட்டாலும் வயிற்றில்
தங்கவில்லை. சில சமயம் நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் வாயுக்கோளாறு
ஏற்பட்டு இப்படி ஆகும் (முதல் நாள் சத்தியநாராயண விரதத்திற்குச்
சென்று சாப்பாடு ரொம்ப லேட்டானது). சரி என்று அதற்கான மருந்து
கொடுத்தேன். அதன் பிறகு தொந்திரவு இல்லாமல் இருந்தாள்.

காலை எழுந்தது முதல் வயிற்றுப்போக்கும் சேர்ந்து கொள்ள டாக்டரிடம்
அழைத்துச்சென்றால் அங்கே நிறைய்ய குழந்தைகள் இதே சிம்ப்ட்ம்ஸுடன்.

ரெயின்போ மருத்துவமனை எனக்கு மிகவும் பிடித்தது. சுகாதாரமாகவும்
இருக்கும். மருத்துவர்களும் நல்லவர்கள். ஆரம்பமே ஆண்டிபயாடிக்
கொடுத்து டார்ச்சர் செய்ய மாட்டார்கள். (இந்த ரெயின்போ மருத்துவமனை
ப்ரதேயகமாக தாய்மார்கள், மற்றும் குழந்தைகளுக்காக மட்டுமே)

அம்ருதாவிற்கு என்ன உபாதை என்று சொன்னதுமே டாக்டர் பொறுமையாக
“இப்பொழுது ஊரில் இப்படி ஒரு தொற்றுவியாதி பரவியிருக்கிறது.
வாந்தி, பேதி இத்துடன் ஜுரமும் சேர்ந்து கொள்ளும்.” என்று சொல்லி
அதற்கான மருந்தை எழுதிக்கொடுத்து 3 நாளில் சரியாகிவிடும் என்று
சொன்னார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாருக்கு உடல்நிலை சரியில்லை
என்று மருத்துவரிடம் போனாலும் நான் கேட்டுக்கொள்ளும் முதல்
கேள்வி,” என்ன டயட் கொடுக்கலாம்?” இது ரொம்ப முக்கியம்.
சில சமயம் நாம் சாப்பிடும் உணவு அந்த நேரத்துக்கு உகந்ததாக
இல்லாமல் இருக்கும். குறிப்பாக அம்ருதாவிற்கு தற்போது பால்,
பழங்கள், பழச்சாறு கொடுக்ககூடாது. காரம்,எண்ணெய் கூடாது.

நம் ஊர் பக்கம் என்றால் இடியாப்பம் கூட வாங்கி கொடுக்கலாம்.
ஆரோருட் மாவு கஞ்சியும் ரொம்ப நல்லது. இங்கே அதைத்
தேட முடியாது. அதனால் சாதத்தை மறு உலைபாய்ச்சி (திரும்ப
தண்ணீரில் கொதிக்க வைத்து கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதால்
செரிமானம் சீக்கிரம் ஆகும்) கொஞ்சமாக தயிர் ஊற்றிக் கொடுக்க
திட்டமிட்டிருந்தேன். அம்மாவிற்கு போன் செய்த பொழுது
வயிற்று பிரட்டல் நிற்க ஒரு பொடி செய்து அதைக் கலந்து
கொடுக்கச் சொன்னார். பலருக்கும் உதவும் என்பதால் அதை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.

ஓமம்பொடி:

தேவையான பொருட்கள்:
10 மிளகு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 100 கிராம் ஓமம், பெருங்காயம் கொஞ்சம்.

செய்முறை:
மேல் சொன்னவற்றை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து
உப்பு சேர்த்து பொடித்து சூடான சாதத்தில் கலந்து முதல் கவளம்
இந்த பொடி சாதத்தைக்கொடுப்பதால் வயிற்று பிரட்டல் டாடா
காட்டி விடும்.

வயிறு சரியில்லாத சமயத்தில் அதிகம் சிரமம் கொடுக்காமல் இதமான
உணவு இட்லி, கஞ்சி இப்படி கொடுத்தல் நலம். ஆனால் காய்கறிகள்
இல்லாததால் உடம்புக்கு சத்து இல்லாமல் போய்விடும்.

இன்றைக்கு காய்கறி கஞ்சி செய்து கொடுக்கப்போகிறேன்.

கறிவேப்பிலை 4, கொஞ்சம் கேரட், பீன்ஸ் நறுக்கி தண்ணீரில்
கொதிக்க வைத்து அதே தண்ணீரில் அரிசி ரவையை போட்டு
நன்கு வேகும் வரை வேகவைத்து கஞ்சி பதத்தில் உப்பு,சீரகம்,மிளகு கொஞ்சம்
சேர்த்தால் சுவையும் நல்லா இருக்கும். உடம்புக்கும் நல்லது.
இத்தோடு விரும்பினால் கொஞ்சமாக தயிரும் சேர்க்கலாம்.


இந்த மாதிரி சமயத்தில் ப்ரெட் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது
நல்லது. தயிரும் காலையில் தோய்த்து மதியம், மதியம் தோய்த்து
இரவுக்கு என ஃப்ரெஷ்ஷாக செய்து கொள்ள வேண்டும். (சளித்தொல்லை
இருப்பவர்கள் குளிர்காலம் முழுதும் இதே போல் தயிர் சாப்பிடலாம்.
ஃப்ரிட்ஜில் வைக்கும் தயிர்தான் சாப்பிடக்கூடாது.)

இந்தக் குளிர் காலத்தில் தயிரை தோய்ப்பது ரொம்ப கஷ்டம். வெயில்
இல்லாமல் இருப்பதால் சீக்கிரத்தில் தோயாது. நான் எப்போதும் கைப்பற்றும்
பழக்கம் ஹாட்பேக்கில் இதமான சூட்டில் பாலை ஊற்றி, 1 ஸ்பூன் தயிரை
சேர்த்து நன்கு கலக்கி மூடி வைத்துவிட்டால் 1 மணிநேரத்தில் தயிர் ரெடி.
(எந்தக்காலத்திலும் இந்த ஐடியா ஒர்கவுட் ஆகும்) :))

இன்னைக்கு எங்க அம்ருதம்மா ஓகே. ஆனாலும் வீக்காக இருப்பதால்
பள்ளி செல்லவில்லை. நானும் என் அம்மாவும் எஞ்சாயிங் டுகதர். :))
சேர்ந்திருப்பது ஒரு சுகம் தானே!

18 comments:

CS. Mohan Kumar said...

//இன்னைக்கு எங்க அம்ருதம்மா ஓகே. ஆனாலும் வீக்காக இருப்பதால்
பள்ளி செல்லவில்லை. நானும் என் அம்மாவும் எஞ்சாயிங் டுகதர். :))//

இன்னிக்கு என் பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லைன்னு நான் Office லீவு போட்டுருக்கேன் ! சேம் பின்ச்!

துளசி கோபால் said...

சீக்கிரம் உடல் நலம் பெறட்டும் குழந்தை.

இப்படித்தான் ஊரில் அப்பப்ப ஏதாவது திடீர்னு வந்துருது.

எங்கூர்லே டம்மி பக் ரொம்ப ஃபேமஸ்:-)

பால கணேஷ் said...

ஓமம் பொடி என் அம்மா செய்து கொடுத்து நான் குணமடைந்தது உண்டு. இன்றைய தலைமுறையினருக்கு இக்குறிப்பு மிக உபயோகமாக இருக்கும். அம்ருதம்மாவுடன் சேர்ந்திருப்பது உங்களுக்கு மட்டுமா... அவங்களுக்கும் இதமான விஷயம்தானே... என்ஜாய்...

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொரு கால நிலையும் அடுத்ததுக்கு மாறும்போது(transition period) உடம்போட சம நிலை மாறுபடறதாலயும் ஹெல்த் படுத்துமாம். எங்க டாக்குட்டர் சொன்னது இது. குழந்தையை பார்த்துக்கோங்க.. சீக்கிரம் குணமாகட்டும்.

நட்புடன் ஜமால் said...

நான் கேட்டுக்கொள்ளும் முதல்
கேள்வி,” என்ன டயட் கொடுக்கலாம்?” ]]


இதத்தான் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன், இப்ப கேட்பதில்லை

எப்ப கேட்டாலும் "நக்கலா" ஒரு பார்வை ஒரு சிரிப்பு, ஏன்னு கேட்கத்தான் நம்மால் முடியலை ...

Unknown said...

அம்ருதம்மாக்கு உடல் நலம் பரவாயில்லையா? அம்மாவின் கைமருத்துக்கு அம்மாவுக்கு நன்றி சொல்லுங்க...

pudugaithendral said...

வாங்க மோகன்குமார்,

நீங்க இன்னைக்கு லீவு போட்டு மகளை பார்த்துக்கொள்றீங்களா. ரொம்ப சந்தோஷம். உங்க மகளை விசாரித்ததா சொல்லுங்க.

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

ஆண்டவனருளில் இப்போ நல்லாவே தேவலாம்.

இப்படித்தான் ஊரில் அப்பப்ப ஏதாவது திடீர்னு வந்துருது.//

ஆமாம். :((

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

ஓமம் பொடி நல்லாவே வேலை செஞ்சது. அதன் பிறகு வயிறு பிரட்டல் வாந்தி ஏதுமில்லை.

தெரியாதவங்களுக்கு உதவியா இருக்கும்னுதான் பதிவிட்டேன். ரெண்டு பேரும் நல்லா எஞ்சாய் செய்யறோம். வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம்பா ஒவ்வொரு வாட்டியும் காலநிலை மாறும்பொழுது ஏதோ ஒரு வைரஸ் இப்படி படுத்திக்கிட்டுதான் இருக்கு.

இன்னைக்கு மேடம் ஓகே. நான் தான் லீவு போட வெச்சிருக்கேன். :)

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஜமால்,

அதென்னவொ சில மருத்துவர்கள் அப்படித்தான் இருக்காங்க. ஆனா இங்க என்னுடைய அனுபவம் நல்ல மருத்துவர்கள் கிடைச்சிருக்காங்க. அவங்க மொபைல் நம்பர் கொடுத்து ஏதும் அவசரம்னா போன் பண்ணச் சொல்லக்கூடிய மருத்துவர்கள்.

முறைப்பா இருக்கற டாக்டர்கள் இருக்கும் பக்கமே போகமாட்டேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சிநேகிதி,

அம்மாவுக்கு நன்றி சொல்லிட்டேன். அம்ருதம்மா இப்ப நலம்.

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

அம்ருதாவை கவனிச்சுக்கோங்க. சீசன் மாறும் போது இப்படித் தான் படுத்தும்.

இங்கயும் இப்ப அப்படித் தான். ஓமம் பொடி நல்ல வைத்தியம். ஞாபகம் வைச்சுக்கறேன். அம்மாவுக்கு நன்றி சொல்லிடுங்க.

வெங்கட் நாகராஜ் said...

பார்த்துக் கொள்ளுங்கள் சகோ!

இங்கேயும் சீசன் மாறும்போது வயிறு நிறைய பேருக்குப் படுத்தும்.....

Appaji said...

அம்மாவும் பொண்ணும் வீட்டில் ...என்ஜாய்....(உங்களை நம்ப முடியாது...இப்ப ...வீக்கா இருக்கா...அப்படின்னு சொல்லுவீங்க...அப்புறம்.....அடுத்த...நாள்....கம்மியா சாப்பிடு...அப்படின்னு சொல்லுவீங்க தானே....(இந்த அம்மாக்களே இப்படி தான் :(((

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

அம்ருதம்மா இப்ப ஓகே. ஸ்கூல் போயிட்டாங்க. அம்மாவுக்கு மெசெஜ் சொல்லிடறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

சீசன் மாறுதுன்னு நம்ம உடம்பே நமக்கு சொல்லிடுது :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

3நாள் செம ஜாலி. செவ்வாயன்றே உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டாலும், மேலும் இரண்டுநாள் ரெஸ்டில் வைத்து மெல்ல மெல்ல நார்மல் டயட்டுக்கு வந்தோம். பதிவு போட நேரம் இருந்தாலும் அம்மா கூட இருந்ததால் சும்மானாச்சுக்கும் வரலை :))

எங்க வீட்டுல 2 மணிநேரத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறதுதான் பாலிசி. அதனால தேவையானது வயத்துக்கு ஒழுங்கா போயிடும். கொஞ்சமா சாப்பிடுன்னு சொல்லும் வேலையை மட்டும் இதுவரைக்கும் செஞ்சதில்லை. :))

வருகைக்கு நன்றி