Wednesday, January 11, 2012

நண்பேண்டா!!!!!!!!!!

அயித்தானின் அக்காவீடு தாம்பரத்தில். கொட்டும் மழையில் உள்ளே நுழைஞ்சோம்.
சுடச்சுட சாப்பாடு ரெடி செஞ்சு வெச்சிருந்தாங்க. எனக்கு பிடிச்ச சுட்ட
கத்திரிக்காய் தயிர் பச்சடியுடன் லஞ்ச். சூப்பரா எஞ்சாய் செஞ்சோம்.
அம்மம்மா,தாத்தா (எனக்கு அவங்க அந்த உறவுதான்) கூட பேசிக்கிட்டு
இருந்தோம். கண்ணாலேயே என் பசங்க எப்ப கிளம்பறோம்னு
கேட்டுகிட்டு இருந்தாங்க. அத்தைகிட்ட பாசமில்லாம இல்ல. அன்றைக்கு
அவங்க ரொம்ப நாளைக்கப்புறம் அவங்க நட்புக்களை சந்திச்சு
அளவளாவ திட்டம். அதனாலத்தான் நேரத்தை வேஸ்ட் செய்யாம
இருக்க தொணத்திகிட்டு இருந்தாங்க. நாங்க 4.30 மணிவரை அம்மம்மா,
தாத்தா கூட பேசிட்டு பொறுமையா கிளம்பினோம்.

காரில் ஏறியதுமே ரெண்டு பேருக்கும் குஷி. மழை சோன்னு ஊத்திகிட்டு
இருக்கு. நீலாங்கரையில் அவங்க வீட்டுக்கு போய் வாசலில் கார்
நின்னாலும், கதவை திறந்து இறங்க முடியாத அளவுக்கு மழை.
ஆனாலும் ஆஷிஷ் பாஞ்சு ஓடி அவங்க வீட்டு காலிங் பெல்
அடிச்சாப்ல. அம்ருதாவும் பெரிய குரலில் பேச ட்ரைவர் தம்பி
“பாப்பா, நீ இவ்வளவு பெருசா கூட பேசுவையா!!! 4 நாளா
உன் குரலையே நான் கேட்டதில்லை. இப்ப எப்படி சவுண்ட்
வருதுன்னு” ஆச்சரியமா கேட்க,” என் ஃப்ரெண்டை பாக்கப்போறேன்
அங்கிள்னு” பதில் சொல்லிட்டு அம்ருதம்மாவும் இறங்கி ஓடினாங்க.
காலிங் பெல் அடிச்சா யாருமே வரலை. சரின்னு என் ஃப்ரெண்டுக்கு
போன் போட்டா நான் இதோ வந்துகிட்டே இருக்கேன்னு சொன்னாங்க.
பொடிசுங்க இரண்டும் உள்ளே தூங்கிகிட்டு இருந்திருக்கு. 5 நிமிஷத்தில்
என் ஃப்ரெண்டும் வந்திட அப்புறம் வந்து பசங்க கதவு திறந்தாங்க.

யார் இந்த ஃப்ரெண்ட்ஸ்?? எங்க நாலு பேருக்கும், அவங்க 4 பேரும்
ஜிகிரி தோஸ்த்கள். 3 வருஷம் முன்னாடி நாங்க கூட்டமா கிளம்பி
ஏர்போர்ட்டையே கலகலக்க வெச்சு ஸ்ரீலங்கா டூர் போயிட்டு வந்தோமே,
அதே அண்ணபூர்ணா குடும்பத்தினர் தான்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் நைரோபியிலிருந்து மாற்றலாகி சென்னைக்கு
வந்து சேர்ந்திருக்காங்க. அவங்களை பாக்கத்தான் இரண்டு நாளா எப்ப
சென்னை போறோம்னு தொணத்தல். :)) ஃப்ரெண்ட்ஸ்களைப்பார்த்ததும்
எங்களை மறந்திட்டாங்க பசங்க. காபி, டிபன் சாப்பிடும் வரைதான்
கீழே இருந்தாங்க. அதற்கப்புறம் மேல்மாடியில் இருக்கும் ரூமில் 4 பேரும்
சேர்ந்து அரட்டை, கொட்டம் தான்.

6 மணி வாக்கில் அண்ணபூர்ணாவின் கணவரும் வந்துவிட எல்லாம்
பேசிக்கொண்டிருந்தோம். வெளியே மழை, காற்று அதிகமா இருந்தது.
இரவு டின்னருக்கு வெளியே செல்வோம்னு ப்ளான் போட்டிருந்தோம்.
ஆனா இருந்த சூழலில் வீட்டைவிட்டே வெளியே போக முடியாது
போல இருக்க பிள்ளைகள் வரைக்கும் பிட்சா ஆர்டர் செய்துவிட்டு,
பெரியவர்கள் சப்பாத்தி,சப்ஜி செய்துகொள்ளலாம் என முடிவு செய்தோம்.

நான் மெல்ல பானு (அண்ணபூர்ணாவின் பெரிய மகள்)விடம் சென்று
“பானுக்கா, உன் ஃபேவரீட் வேண்டாமா!!?? என்றேன். வேணும் ஆண்ட்டி,
ஆனா எப்படி கேட்பதுன்னு தெரியலை. ஊரெல்லாம் சுத்திட்டு டயர்டா
இருப்பீங்களேன்னு பாத்தேன்” என்றாள். அதுக்கென்னடா உன் ஃப்வேரீட்
இன்று டின்னருக்கு செய்யலாம், ஆனால் பிட்சா? என்றேன். பிட்சா
எப்பவேணாம் சாப்பிடலாம் ஆண்ட்டி, இது ரொம்ப ரேர். அதனால
டின்னரை மாத்திடலாம் என்று சொன்னாள். ”டண்” சொல்லிவிட்டு
தோழியிடம் ப்ளானைச் சொல்ல “அடப்பாவி” என்றார். :))

நானும் என் தோழியும் களத்தில் குதித்தோம். என் தோழி மளமளவென்று
மிக்ஸ்ட வெஜிடபிள் நறுக்கி வேக வைக்க, நான் ஹோட்டல் க்ரேவி
செய்து மிக்ஸட் வெஜிடபிள் கறி செய்தேன். சப்பாத்தி அண்ணபூர்ணா
இட்டு கொடுக்க நான் சுட்டு எடுத்தேன். சுடச்சுட சாதத்துடன் பானுவின்
ஃபேவரிட்டும் ரெடியாக இருந்தது டேபிளில். நானும் அண்ணபூர்ணாவும்
பேசிக்கொண்டே சமைத்தோம். பிள்ளைகள் கொஞ்ச நேரம் எங்களோடு
பேசிக்கொண்டு இருந்துவிட்டு அவர்கள் அரட்டையை தொடர அயித்தானும்,
திரு.பாலகிருஷ்ணாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். சுடச்சுட சாதத்தில் அப்பளம் போட்ட
வெந்தயக்குழம்பு கலந்து என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பானுவுக்கு
ஊட்டிவிட்டேன். மேடம் செம குஷி. அவளின் ஃப்வேரீட் அப்பளம்
போட்ட வெந்தயக்குழம்பு. இது நான் செய்யும் போதெல்லாம் அவளை
நினைக்காமல் இருந்ததில்லை. கொழும்புவில் என் வீட்டிற்கு அவள்
தங்க வரும்பொழுதெல்லாம் இது செய்து சோறு பிசைந்து கையில்
போட வேண்டும்.

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா கிச்சன் கில்லாடி. ஸ்பிரிங் ரோல்ஸ்,
கேக், மினி பிட்சா, கட்லட் என அசத்துவார். எனக்கு நார்த் இண்டியன்,
அண்ட் சவுத் இண்டியன் நல்லா வரும். ரெண்டு பேரும் போட்டி
போட்டு பிள்ளைகளுக்கு செய்து கொடுப்போம். சமீபத்தில் அவரும்
சாக்லேட் செய்ய கற்றுக்கொண்டதை சொல்ல, நானும் செய்வேன்
என்றதும் ஒரே குஷி. டின்னர் முடிந்தது. டெசர்ட் ஐஸ்கிரீம் மற்றும்
ரஸமலாய். சாப்பிட்டு கொண்டிருந்த பொழுதே கரண்ட் கட் ஆனது.
கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என நினைத்திருந்தோம்.

பேசி பேசி, கண்ணில் தண்ணீர் வர சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம்.
கரண்ட் வரவில்லை. பிள்ளைகள் முன்பே முடிவு செய்துவிட்டார்கள்.
அவர்கள் 4 பேரும் ஒரே ரூமில் தான் படுப்பது என்று அப்பொழுதுதான்
3 வருட கதைகளை பேசி முடிக்க முடியும்!!! மழையும், காற்றுமாக
இருந்ததால் வீட்டுக்குள் வெக்கையாக இல்லை. அதனால் பிள்ளைகள்
4 பேரும் கீழே இருந்த ரூமில் படுத்துக்கொள்ள, நாங்கள் 4 பேரும்
தரையில் பாய் விரித்து ஹாலில் படுத்தோம். கீழ் தளத்தில் மட்டும்
தான் இன்வர்டர் இருக்கிறது என்பதால் அது ஓடும் வரை கொஞ்சம்
ஃபேன் காற்று கிடைக்குமே!! கரண்ட் அதிகாலையில் கூட வரவில்லை.

5.30 மணிக்கே என் ஃப்ரெண்ட் எழுந்து காபிக்கு ரெடி செய்ய
ஆரம்பித்தார். நானும் அவருடன் எழுந்து கொண்டு ஹாலில்
இருக்கும் கணவர்கள் தூக்கம் கெடாத வகையில் பேசிக்கொண்டே
காபி குடித்தோம். அவர்கள் இருவரும் கூட கொஞ்ச நேரத்தில்
எழ காபி குடித்து வெளியே கதவு திறந்து பார்த்தால் மழையும்,
காற்றும் குறைவில்லாமல் இருந்தது. கரண்ட் இல்லாததால்
நியூஸ் கூட பார்க்க முடியவில்லை. அம்மா போன் செய்து
”செங்கல்பட்டுக்கு முன்னாலே எங்கோ 5 மரம் விழுந்துவிட்டது,
சென்னையில் கூட பல இடங்களில் மின்சாரம் இல்லை. மழை
இன்னம் அதிகமாக வாய்ப்பு இருக்கு” என்று அப்டேட் தந்தார்.

அன்று மாலை எங்களுக்கு ஹைதை செல்ல ட்ரையின்.
மழையால் ட்ரையின் ரத்தானால் அயித்தானுக்கு ஹைதையில்
இருந்தே ஆகவேண்டிய கட்டாயம். என்ன செய்யன்னு நாங்க
டென்ஷன் பட மெல்ல எழுந்து வந்த ஆஷிஷ் “ஹை ஜாலி!
ட்ரையின் கேன்சலானா திரும்ப இங்கே வந்து இருக்கலாம்!!!”
என்றான். ஆமாம், அப்படின்னு அண்ணபூர்ணா ஆமோதிப்பு
வேற. பானு, தேஜு, அம்ருதா 3 பேர் முகத்திலும் செம
சந்தோஷம். பூனைக்கொண்டாட்டம் எலிகளுக்கு திண்டாட்டம்
அப்படின்னு சொல்வாங்களே அதுமாதிரி ஆகிடிச்சு எங்களுக்கு.

அவங்க வீட்டுல தங்க கஷ்டமில்லை. ஆனா ஹைதை
வந்து சேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயம். ஷ்டேஷ்ன் வரை
போய் பாக்கலாம் அப்புறம் முடிவு செய்வோம்னு சொன்னோம்.
காலை டிபன் சுடச்சுட இட்லி, சாம்பார் செய்தார் அண்ணபூர்ணா.
அப்பவும் கரண்ட் இல்லை. அக்கம் பக்கத்தில் கேட்டால்
அங்கேயும் கரண்ட் இல்லை என்பது தெரிந்தது. 9 மணிக்கு
வந்த அண்ணபூர்ணாவின் ட்ரைவர் புயலுக்கு பயந்து பல
இடங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று
வரும் வழியில் மின்சார அலுவலகத்தில் விசாரித்து வந்ததைச்
சொன்னார்.

அன்று வேறு சில ப்ளான்களும் இருக்க 10 மணிவாக்கில்
எங்கள் அன்பு தோழி குடும்பத்தினருடன் பிரியாவிடை
பெற்று கிளம்பினோம். நாங்கள் அவர்கள் வீட்டிலிருந்து
கிளம்பி 10 நிமிடம் கூட ஆகியிருக்காது பானு போன்
செய்தாள். ”ஆண்ட்டி கரண்ட் வந்துவிட்டது என்று!!!”

அங்கேயிருந்து அடுத்து சென்ற இடம்..........??
ஹைதை செல்ல தடை ஏதுமில்லாமல் இருந்ததா??

அடுத்த பதிவில்

14 comments:

Jaleela Kamal said...

என் பசங்களுக்கும். சென்னை போன நன்பர்கள் வீட்டில் தங்கி லூட்டி அடிக்க அலாதி பிரியம்,

பய்ண கட்டுரை நல்ல இருக்கு , பிள்ளைகள் நல்ல என் ஜாய்ப்ண்ாஞக் ல்ைய??
ஆனால் கரண்ட் கட் ் தான் சிரமம்இல்லயா?

அமைதிச்சாரல் said...

பழங்கதைகள் பேச, ஆறுதலாய் தோளில் சாய்ஞ்சுக்க, மறுபடியும் சின்னக்குழந்தையாய் மாறி விளையாட நாலு நட்புகள் இருந்தா அதுவே சொர்க்கம்ப்பா..

பிரிந்தவர் கூடினால் புயலடிச்சாலும் விடிய விடிய பேசலாமே.. விஷயங்களுக்கா பஞ்சம் :-))

Vetrimagal said...

ரொம்ப நாள் கழித்து உங்கள் ப்ளாக் படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.இப்போது தான் நிறைய மிஸ் பண்ணி விட்டதை அறிந்தேன்.

இந்த 'கேப்பில்' நீங்கள் எத்தனை புது ப்ளாக்குகள் சேர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

அடுத்து எப்படி ஹைதை வந்து சேர்ந்தீர்கள் என்று அறிய காத்திருக்கிறேன்.

கணேஷ் said...

குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்க்க மனம் மகிழ்ந்தது. அதுசரி... எப்பவுமே மழை ‘சோ’ வென்றுதான் கொட்ட வேண்டுமா? ஏன் ‘நாகேஷ்’ என்று கொட்டக் கூடாது? அடிக்காதீங்க.... ஹி... ஹி...

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜலீலா,

பசங்க மனசு ஒருத்தங்களோட ஒட்டிடிச்சின்னா அது அப்படியே இருக்கும். தன்னோட எல்கேஜி டீச்சரை மிஸ் செஞ்சதை விரும்பாத பசங்களும் உண்டு. அது ஒரு அட்டாச்மெண்ட் மாதிரி. கரண்ட் கட்டினால் சிரமமே இல்லை. டீவி இல்லாம ஆனந்தமா பேசிக்கிட்டே இருந்தோம். செம் எஞ்சாய்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

நிஜம்தான். நட்பின் கதகதப்பு சொல்ல தெரியாத இதம். ஆஷிஷிற்கு எத்தனையோ ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறாங்க. ஆனா பானு சம்திங் ஷ்பெஷல். மேடம் இப்போ +1. அம்ருதாவுக்கு தேஜூ. எனக்கு என் கல்லூரித் தோழி சாந்திக்கு அடுத்து அண்ணபூர்ணாதான்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வெற்றிமகள்,

நலமா? பொழுது போகாம ப்ளாக்ல சேர்ந்தேன். இப்ப இந்த ஒரு ப்ளாக்கிலேயே எழுத நேரம் ரொம்ப குறைவா இருக்கு. :(. இனி வரும் காலங்களில் எல்லா ப்ளாக்கிலயும் மாசத்துக்கு 4 பதிவாவது போடணும்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

எப்பவுமே மழை ‘சோ’ வென்றுதான் கொட்ட வேண்டுமா? ஏன் ‘நாகேஷ்’ என்று கொட்டக் கூடாது? //

:)))))))

வருகைக்கு நன்றி கணேஷ்

கோவை2தில்லி said...

நண்பர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது.....

ஹைதை சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்தீர்களா...ஆவலுடன் காத்திருக்கிறோம்...

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகளின் சந்தோஷம் பெரியவர்களின் மகிழ்ச்சி.
மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த அன்பும் நட்பும் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டும்.
இனிய பொங்கல் நாள் வாழ்த்துகள் தென்றல்.

அமுதா கிருஷ்ணா said...

நான் இருப்பது தாம்பரம் தான்.மழையில் செம ஜாலி போல.ஃபோன் செய்து இருக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

ஆமாம். :))

இதோ அடுத்த பதிவு போடறேன்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த அன்பும் நட்பும் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டும். //

இந்த ஆசிர்வாதம் தான் வேண்டும்

வருகைக்கு நன்றிம்மா

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா,

நிஜம்மா மழையைப்பார்த்து பயந்து போயிட்டோம். அதனால யாருக்கும் போன் செய்யலை.

வருகைக்கு நன்றி