Thursday, March 29, 2012

ராம சிலகா

புது இடம் என்பதால் ஆரம்பத்தில் ராமுடுவுக்கு கோவம்
அதிகமாக இருந்தது. கடித்து வைத்துவிடும். மெல்ல
மெல்ல நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் கூண்டை திறந்து
வைத்திருப்போம். மெல்ல கீழே இறங்கி அங்கே இங்கே என
நடை பழகுவதை பார்க்க அப்படி ஒரு ஜோர்.

மிளகாய்ப்பழம் கொடுத்தால் பேச்சுவரும் என்று சொன்னார்கள்
என அப்பப்போ கொடுத்தோம். 10 நாளிலேயே அப்பளத்தை
அழகாக ஒரு காலில் பிடித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது
ராமுடு.

அம்மா, அப்பா என அழைக்க வந்த அன்று எனக்கும் தம்பிக்கும்
அவ்வளவு சந்தோஷம்.நான் கல்லூரியில் இருந்து வந்ததும்
கூண்டை திறந்து விடுவேன். என் கையில் உட்கார்ந்து கொண்டு
உதட்டில் மூக்கை வைத்துக்கொண்டு தூங்கும் அழகே அழகு.

தம்பி பெயர் கார்த்தி. அவ்வா சில சமயம் கார்த்தி குட்டி என்று
அழைப்பார். ராமுடுவும் அப்படியே அழைக்க ஆரம்பித்தது.
காலை 6 மணிக்கு ஆரம்ப்க்கும் கார்த்தி குட்டி எந்திரி,
கார்த்தி குட்டி குளி இப்படி அவன் ஸ்கூல் போகும் வரை
கத்தல் தான். ஓசை ரொம்ப பிடிக்கும். :) தோசைதான் ராமுடு
டிக்‌ஷனரியில் ஓசை. கார்த்திஸ்கூல் பஸ் வரும் வரை
அவனுடன் விளையாட்டுத்தான். தம்பிதான் ராமுடுக்கு
குளிப்பாட்டுவது எல்லாம். அவன் ஸ்கூல் பஸ் வரும் முன்
கூண்டில் போட்டுவிட்டு கிளம்புவான். ஸ்கூல் பஸ்
சத்தம் கேட்டும், கார்த்தி வரவில்லை என்றால் கார்த்தி
குட்டி பஸ் என கத்தி தீர்த்துவிடும்.

அவ்வாவுக்கு ராமுடுவுக்கு ஒத்தே போகாது. காலையில்
எல்லாரும் போன பின் அவ்வாவும் ராமுடுவும் மட்டுமே
வீட்டில். அவ்வா மதியம் கண் அசரும் நேரம். கீச் கீச்
என்று கத்தி தூக்கத்தை கெடுப்பான். இல்லையென்றால்
சீட்டி அடிப்பான். அவ்வா கோவத்தில் தண்ணீர் எடுத்து
தெளிப்பார்கள். அதனால் அவ்வாவைக்கண்டாலே ஆகாது.
அதே மாதிரி சாயந்திரம் 6 மணிக்கு ராமுடுவின் கூண்டு
இருக்கும் வராந்தாவில் மாடவிளக்கு ஏற்றிவிடவேண்டும்.
அது இல்லாவிட்டால் ஏனோ சத்தம் தான்.

நாங்கள் வீட்டிற்கு வந்தபின் கூண்டிலிருந்து வெளியே வந்து
கொட்டம் அடிப்பான். நானும் கார்த்தியும் பாடம் படித்துக்
கொண்டிருந்தால் பேப்பரை இழுத்து ஒரே கலாட்டாதான்.
அப்பா ஆபீஸ் வேலை பார்க்க பெரிய பேட் வைத்து
எழுத ஆரம்பித்தால் பேடில் ஏறி உட்கார்ந்து கழுத்தை
வளைத்து, வளைத்து பார்க்கும். குச்சு குச்சுவென போய்
பேப்பரை இழுக்கும். அப்பாவை அமனி என்று அழைக்கும்.
ரமணி அமனி ஆகிவிட்டது.

அப்பா மஞ்சள் பையில் கடலை மிட்டாய், அடுத்த நாள்
பூஜைக்கு பூ என வாங்கி வருவார். 8.30மணிக்கு ராமுடுவை
கூண்டில் போட்டுவிட்டு தோங்கப்போவோம். அதற்கு
அப்புறம் அப்பா வருவார். திரும்ப கூண்டைத் திறந்து
வெளியே விட்டு அந்தப்பையை ராமுடு குடைந்தாக
வேண்டும். இல்லாவிட்டால் அமனி அமனி என்று கத்தி
தூங்க விடாமல் செய்யும்.

அதன் பிறகு நான் மும்பை போய்விட்டேன். ஒரு நாள்
பள்ளி செல்லும் அவசரத்தில் தம்பி ராமுடுவின் கூண்டு கதவு
மூட மறந்துவிட்டான். வாயில் கதவும் திறந்த நிலையில்
கூண்டை விட்டு வெளியே போன ராமுடு மெல்ல
படிதாண்டி வெளியே சென்று விட்டான்.
கார்த்தி குட்டி, கார்த்தி குட்டி என்று அவனது சத்தம் கேட்டு
அம்மா, அப்பா வந்து பார்க்கையில் சத்தம் மட்டும்தான் வந்தது.
எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லை. ஏதோ மரத்தின்
உச்சியில் சத்தம் வர எடுக்க மரம் ஏறினால் அங்கேயிருந்து
பறந்துவிட்டான் ராமுடு. வீட்டிற்கு திரும்ப வர வழி தெரியாத
நிலையில் வடக்கு 4ஆம் வீதியே கேட்கும் அளவுக்கு கார்த்தி
குட்டி என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறான்.

அதன் பிறகு அம்மா வேறொரு கிளி கொண்டு வந்திருக்கார்.
அதற்கு தம்பி மீனாட்சி என்று பெயர் வைத்திருந்தான்.
இதுக்கும் அவ்வாவுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகவே
வேறு வழியில்லாமல் திரும்ப கொண்டு போய்
கொடுத்துவிட்டார்கள். ராமுடுவை நினைத்துப்பார்த்து
நானும் தம்பியும் கொசுவத்தி சுத்திக்கொள்வோம்.

இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பாட்டை
பாடும் பொழுது (சில சமயம் ட்யூனுக்கு தக்க
சீட்டி அடிக்கும்) :)
ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் அழகு,
தலை தலையை திருப்பி பார்க்கும் அழகு, தம்பியின்
இரு கால்களுக்கு இடையில் குச்சுகுச்சுவென
நடந்து போய் தண்ணீர் தொட்டியில் தலையை விட்டு
ப்ரோக்சனம் செய்து குளியல் செய்யும் ராமுடு என
நினைத்து பார்த்துக்கொள்வோம்.

எங்கள் இனிய நினைவுகளில் ராமுடுவுக்கு எப்போதும்
இடம் உண்டு.


4 comments:

ADHI VENKAT said...

ராமுடு இப்படி வழி தெரியாமல் பறந்து விட்டதா.....:(

raji said...

வளர்ப்புப் பிராணிகளுக்கு செல்லப் பிராணி என்றும் பெயருண்டு.அவ்வளவு ஒன்றி விடும் என்பதால் தான் பிராணி என்பதுடன் ’செல்ல’ என்ற அடை மொழி சேர்கிறது.அப்படி செல்லமாகி விட்ட ஒன்று பிரிந்தால் மனதில் வருத்தம் தோன்றுவதும் இயல்பே. பதிவைப் படித்ததும் பிரிந்த சென்ற ராமுடு சிலகா கிடைத்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.மனம் பாரமாகும் கொசுவத்தி

சாந்தி மாரியப்பன் said...

உங்க தம்பி திரும்பி வர்ற வரைக்கும் மரத்துலயே உக்காந்துருந்துச்சுன்னா ஒரு வேளை ராமுடு திரும்பக் கிடைக்க வாய்ப்பு இருந்துருக்குமோன்னு தோணுது.

குடும்பத்துல ஒண்ணாப் பழகின செல்லப் பிராணிகளைப் பிரியறது ரொம்பவே கஷ்டம்தான்.

pudugaithendral said...

ஆமாம் கோவை2தில்லி,


இப்பவும் எங்கயாவது கிளிசத்தம் கேட்டால் ராமுடு நினைவு வராமல் இருக்காது ராஜி.

ஆமாம் அமைதிச்சாரல்,
அதை பிடிக்கிறேன்னு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க மரம் ஏறினதுல்ல தப்பிச்சு போக எங்கயோ பறந்துகிட்டு இருந்திருக்கு பாவம்