கசப்பான அனுபவத்திற்கு பிறகு அந்த காரியத்தை செய்ய
கூடாது என்ற முடிவுக்கே வந்துவிட்டோம். தனியாகவே
செல்ல ஆரம்பித்தோம். தனியாக செல்வது ஒரு சுகம்
வெளிநாட்டில் இருக்கும் பொழுது நமக்குத் தெரிந்தவர்கள்தான்
உறவினர் போல. தாஜ் சமுத்ராவில் எக்ஸிகியூட்டிவ் ஹவுஸ்கீப்பிங்
மேடம் அப்படி உறவாகிப்போனவர். அவரை வீட்டுக்கு விருந்துக்கு
அழைத்திருந்த பொழுது கதிர்காமம் வரைச் சென்று தரிசனம்
செய்ய முடியாம திரும்ப வந்ததைச் சொன்னார். பாவமே
என்று இருந்தது. 7 மணிநேரப்பயணம் செய்து கதிர்காமம் அடைந்து
சாமி தரிசனம் செய்யமுடியவில்லை என்றால் எப்படி இருக்கும்!!!
எங்களின் ஆனந்தமான தரிசனம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தோம்.
அடுத்த முறை போவதானால் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று
சொன்னதும் ஆஹா என்று நினைத்தோம். நாங்கள் குடியிருந்த
வீட்டில் உரிமையாளர் ஆண்டியும் நானும் வருகிறேன் என்று
சொல்லிவிட்டார். என் உறவினர் மகன் அவனுடைய இரண்டு
நண்பர்களும் கதிர்காமம் பார்க்கவிரும்புவதாகவும் அவர்களையும்
அழைத்து செல்லலாம் என்று சொல்ல எனக்கும் அயித்தானுக்கு
பக் பக்கென்று ஆனது. சின்ன வண்டி பத்தாது. ஹயஸ் வேன் தான்
வேண்டும்.
தெரிந்தவர்களுடன் பேசி தமிழர் ஒருவர் கிடைத்தார்.( ஸ்ரீ என்று பெயர்.
அதன் பிறகு அவர்தான் எங்கள் ஆஸ்தான டிரைவர்.) காலை 7
மணிக்கு கொழும்புவிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று
சொல்லியிருந்தோம். உறவினர் மகனும் அவரது நட்புக்களும்
முதல் நாளே எங்கள்வீட்டில் வந்து தங்கி காலையில் ரெடியாகிவிட்டோம்.
டிரைவர் ஹோட்டலில் இருந்து அவர்களை கூட்டிக்கொண்டு
எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதற்கு முன் காலை டிபன், மதிய சாப்பாடு ரெடி செய்து
வைத்திருந்தேன். தாஜ் ஹோட்டலில் மிகவும் சுவையான
கேக் 2கிலோ, சாண்ட்விச் எல்லாம் கொண்டுவந்திருந்தார் மேடம்.
எங்க ஹவுஸ் ஓனரோ ஜூஸ், பிஸ்கட் எல்லாம் கொண்டு
வந்தார். ஆனந்தமாக பயணம் ஆரம்பமானது. பெந்தோடயில்
கடலலைகளின் ஆரவாரத்துடன் காலை உணவு சாப்பிட்டோம்.
அதன்பிறகு ஸ்நாக்ஸ், தம்பிளி (இளநீ) என நடுநடுவே...
அந்த வேனில் டீவி இருந்தது.கையோடு நல்ல சினிமாக்கள்
கொண்டு சென்றிருந்தோம். சிங்களராக இருந்தாலும் எங்கள்
ஹவுஸ் ஓனர் மிகவும் கனிவானவர். எல்லாரும் சேர்ந்து
பேசி சிரித்திக்கொண்டு ஆனந்தமாக மதிய உணவு சாப்பிட
இடம் தேடி அருமையான இடம் கண்டுபிடித்தோம்.
கூடாரம் மாதிரி போட்டு வைத்திருந்த இடத்தில் எங்கள்
சாப்பாட்டுக்கடையை திறந்து உட்கார்ந்தோம். “கவிச்சி இல்ல
கஷ்டம் தான்” என்று சொல்லிக்கொண்டே டிரைவர் ஸ்ரீயும்
சாப்பிட்டார்.
மதியம் 4 மணிவாக்கில் திஸ்ஸமகராம எனும் இடத்தை
அடைந்தோம். அங்கே ஹோட்டல் ரூம் புக் செய்து வைத்திருந்தோம்.
அங்கேயிருந்து 30 நிமிட பயணம் தான் கதிர்காமம். ரூமிற்கு சென்று
ரெஃப்ரெஷ்ஷாகி ஹோட்டலில் இருந்து மேடம் கொண்டு வந்திருந்த
டீ/காபி கிட் வைத்து டீ காபி தயார் செய்து குடித்து கோவிலுக்கு
கிளம்பினோம்.
6 மணிக்கு கோவில் சந்நிதியில். அந்த நேரம் ஆராதனை நேரம்.
அந்த பூஜைக்கு முன்பு யானை மலர் வைத்து வணங்கிச் செல்லும்.
அதெல்லாம் பார்த்து சந்நிதி உள் நின்று கொண்டோம். பூஜை
நடக்கும் பொழுது பார்க்க பரவசமாக இருக்கும். ஆலயமணிகளின்
ஆரவாரத்தையும், கொட்டு முழக்கத்தையும் தவிர வேறு எந்த
சத்தமும் கேட்காது. தாஜ் மேடம் தன் மகள், மற்றும் மகனுடன்
வந்திருந்தார். அனைவரும் ஆனந்தமான தரிசனம் செய்தோம்.
இரவு உணவு என்ன என்று மற்றவர்கள் கேட்டபொழுது இங்கே
இடியாப்பம், ஆப்பம் நல்லா இருக்கும் என்றதும் அதையே
சாப்பிடுவோம் என்று கோரஸ் போட ரோட்டோர கையேந்தி
பவனில் சாப்பிட்டோம். ரூமுக்கு திரும்பி ரெஸ்ட் எடுத்து.
அடுத்த நாள் செல்லக்கதிர்காமம் (இங்கேதான் கஜமுகன்
யானையாக வந்து வள்ளியை பயமுறுத்தியது) தரிசனம்
செய்து கொழும்பு கிளம்பினோம். மதியச் சாப்பாடு வழியில்.
இரவு உணவுக்கு கொழும்பு அடைந்து கிடைத்த ஹோட்டலில்.
வண்டிச்சத்தம், உணவு, இருப்பிடம் எல்லாம் கணக்குப்போட்டு
தலைக்கு இத்தனை என வகுத்து சொன்னதும் பணம் கொடுத்து
விடுவார்கள். அதன் பிறகு எங்கள் இந்த குரூப் ஒவ்வொரு
வருடமும் டிசம்பர் மாதத்தில் கதிர்காமம் செல்ல தவறியதே
இல்லை. இதில் சில நபர்கள் கூடுவார்கள், குறைவார்கள்.
ஆனால் பயணம் அனைவருக்கும் மிக மிக இனிதாக இருந்தது.
இன்று வரை அனைவரும் நினைத்துப்பார்த்து மகிழும்
விதத்தில் அருமையாக இருந்தது பயணம்.
ஒரே மாதிரியாக நினைக்கும் கூட்டம் இருந்தால் போதும்.
ஒன்றாக பயணிக்கும் பொழுது ஒரு புரிதல் வேண்டும்.
எங்கள் குரூப் நண்பர்கள் சேர்ந்து நுவரேலியா, கண்டி
கூட போனோம். ஹோட்டல் புக்கிங், சுற்றி பார்க்க
செய்திருந்த ஏற்பாடு எல்லாம் அனைவருக்கும் மிகவும்
பிடித்திருந்தது. (அயித்தானுக்கு ஹோட்டல் இன்டஸ்ட்ரியில்
அனைவரும் பழக்கம்.) நல்ல டிரைவரும்
அமைந்தது ஆண்டவன் வரம். இலங்கையை விட்டுவிட்டு
வந்தபிறகு 3 வருடங்களுக்கு முன்பு மறுபடி இலங்கை
சென்றிருந்த பொழுதும் ஸ்ரீதான் எங்களுக்கு வண்டி
எடுத்து வந்தது. ஏதோ உறவினரை பார்ப்பது போல
ஒரே சந்தோஷம் அவருக்கு.
கசப்பான அனுபவத்தைத் தந்த இறைவன் அதன் பிறகு
நினைவலையில் வைத்து புரட்டி பார்த்து மகிழக்கூடிய
இனிய அனுபவத்தையும் தந்தான். இன்று வரை இந்த
நட்புக்களுடன் தொடர்பு இருக்கிறது. இதில் ஒரு நண்பர்
பல ஊர் மாறினாலும் மாறாமல் தொடர்பில் இருக்கிறார்.
கதிர்காமம் அழைத்துச் சென்று நல்ல தரிசனம் செய்து
வைத்தாயே என்று அந்த மேடம் இன்றளவும் சொல்லிக்
கொண்டு இருக்கிறார். ஒரு முறை எங்கள் ஹவுஸ் ஓனர்
எங்களுடன் இந்தியா வந்து திருப்பதி சென்று தரிசனம்
செய்ய முடியாமல் போய்விட்டதாம். எங்களுடன்
திருப்பதியில் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டார்.
அதன் பிறகுதான் அவருக்கு பேரப்பிள்ளையை பாக்கியம்
கிடைத்தது என்பதால் பாலாஜி மேல் அலாதிப் பிரியம்
ஆகிவிட்டது. விசாரித்து மடல் எழுதும் பொழுதெல்லாம்
”என்னை மறுபடி திருப்பதி அழைத்துப்போ, நன்றி
சொல்ல வேண்டும்!” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
14 comments:
நானும் குடும்பத்துடன் இலங்கை சென்று வர வேண்டும் என நினைக்கிறேன். எப்போது நடக்குமோ தெரிய வில்லை
//ஒரே மாதிரியாக நினைக்கும் கூட்டம் இருந்தால் போதும்.
ஒன்றாக பயணிக்கும் பொழுது ஒரு புரிதல் வேண்டும்.//
உண்மை நல்ல துணை இருந்தால் தான் பயணம் இனிமையாகும்
அயித்தான் அயித்தான் என நீங்கள் எழுதுவது சுவாரஸ்யம்
வாங்க மோகன் குமார்,
எப்ப போகணும்னாலும் எனக்கு ஒரு மடல் தட்டுங்க. முடிஞ்ச உதவி கண்டிப்பா செஞ்சு தர்றோம். இன்னும் அங்கே நட்புக்கள் இருக்காங்க.
//உண்மை நல்ல துணை இருந்தால் தான் பயணம் இனிமையாகும்//
ஆமாம்
அயித்தான் அயித்தான் என நீங்கள் எழுதுவது சுவாரஸ்யம்//
எங்க ஊரு பக்கம் இப்படித்தான் அழைப்பாங்க. :))
சில கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் சில நல்ல அனுபவங்களும் மனிதர்களும் கிடைக்கவே செய்கிறார்கள்.... நல்லதே நினைப்போம்!
பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ.
சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் பயணக் குறிப்புகள்.
ஆமாங்க,நம்ம wavelength-உடன் ஒத்துவரும் ஆட்களுடன் செல்லும் பயணங்கள் இனிமைதான்! :) ஆனால் அது தெரியாமப் போய் மாட்டிகிட்டா கஷ்டம்தான்! என்ன செய்வது..பட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு இதெல்லாம். இருந்தாலும் கசப்புக்கு பின்னால் கிடைக்கும் இனிப்பு ரொம்ப நல்லா இருக்கும்! :)
வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோ
தங்களின் தொடர்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
ஆமாம் மஹி
அதுவும் சரிதான் :))
வருகைக்கு மிக்க நன்றி
பகிர்ந்த பயணானுபவங்கள் சுவாரஸ்யம் பட இருந்தன,
நாங்க சொந்தக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து டூர் அடிக்கடி போவோம்.பிரச்சனை எதுவும் வந்ததில்லை.
இலங்கைக்கு ஒரு முறை போக வேண்டும்.
இந்த பயணம் சிறப்பாக அமைந்து இருக்கு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவம்.
வாங்க ஸாதிகா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அமுதா,
சொந்தக்காரங்க கூட போயிருக்கோம். அது ஒரு ரகம் (!!) இது ஒரு ரகம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கோவை2தில்லி,
வித்தியாசமான அனுபவங்கள்தான்
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment