Tuesday, April 17, 2012

பெத்தகடன்??!!!! - இறுதிப்பகுதி

முன்கதைக்கு இங்கே

அவங்க மகன் தன் மனைவி, குழந்தையுடன் வந்ததும்
நேரா அப்பா இருக்கும் ரூமுக்கு போய் பார்த்தாரு.
டிரிப்ஸ் ஏத்தி இருந்தாங்க. முகம் கொஞ்சமா வாட்டமா
இருந்தது மகனைக்கண்டதும் ஜொலிக்க ஆரம்பிச்சது.
மகனைக்கட்டிகிட்டு அம்மா அழ, ஆதரவா அப்பா கைய
தடவிக்கொடுத்திட்டு மருத்துவரைப் பார்க்க நகரும் முன்
மனநல மருத்துவரே அங்கே வந்திட்டாரு.

“ஓ நீங்கதான் ராமசாமி சாரோட மகனா?” எல்லாம் கேட்டுட்டு
உங்க அப்பாவுக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல.
வயதான காலத்துல பெத்தவங்களுக்கு அன்பு அனுசரனையும்
தேவை. அவங்களை கவனிச்சுக்கறது ரொம்ப முக்கியம்”
அப்படின்னு சொல்ல....

கவனிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன் டாக்டர்” அப்படின்னு மகன்
சொல்ல....”என்ன மனுஷன் இவருன்னு?” எனக்கு கோவம்
வந்தது. அந்நியரான நம்மளை அங்கே இருக்கச் சொன்னதே
பெரிய மனசுன்னு நினைச்சு பேசாம இருந்தேன்.

”பெத்தவங்க தேவைகளை பக்கத்தில் இருந்து கவனிக்கணும்
மிஸ்டர் பாஸ்கர்!” அதுதான் அவங்களுக்கு முக்கியம்”

“என்னைப்பெத்தவங்களுக்கு மாசாமாசம் பணம் அனுப்பிகிட்டுத்தான்
இருக்கேன் டாக்டர்”னு சொன்னவரைப் பார்த்து அழறதா சிரிக்கிறதான்னு
புரியலை. டாக்டரும் இவர் புரிஞ்சுதான் பேசறாரா? புரியாமத்தான்
பேசறாருன்னு குழம்ப ஆரம்பிக்க,

“பணத்தை மட்டும் அனுப்பினா போதுமான்னு தானே கேக்கறீங்க?!!”
என்னைப் பெத்தவங்களுக்கு பணம் போதும். சின்ன வயசுலேர்ந்து
எங்களுக்கு அவங்க சொல்லிக்கொடுத்தது அதுதான். நானும்
அக்காவும் சாதாரண பள்ளியிலதான் படிச்சோம். ஒரு கட்டத்துல
அக்கா படிப்பை நிப்பாட்டி வேலைக்கு போகச்சொன்னாரு. பெரிய
படிப்பு படிக்கணுங்கற கனவுல இருந்த காலேஜ் அக்காவுக்கு
காலேஜ் கூட முடிக்காம அவசர அவசரமா
கல்யாணம் முடிச்சாங்க. நான் படிக்கும் போதுகூட “நீ நல்லா படிச்சு
நல்ல வேலைக்குப் போனாத்தான், நல்ல சம்பளம் கிடைக்கும். என்னையும்
அம்மாவையும் உக்கார வெச்சு சோறு போடலாம்னு” சொல்லியே
வளர்த்தாரு. அம்மாவும் பக்கத்துல இருந்த பள்ளிக்கூடத்துல
டீச்சர் வேலைப் பார்த்தாங்க!!!” என கோவமா சொன்னாரு.


“பெத்தவங்க கஷ்டப்பட்டு உழைக்கிறது பிள்ளைகளை நல்ல
நிலையில் வளர்க்கணும் என்பதற்காகத்தான் மிஸ்டர்.பாஸ்கர்.
தன் வாழ்க்கையையே தியாகம் செய்யறாங்க” என்றார் டாக்டர்.

”இரண்டு பேரும் வேலைக்கு போனாங்களே! எங்க வீட்டுல டீவி
கூட இருந்தது இல்ல. வெளியூர் எங்கயும் கூட்டிப்போனது
கிடையாது. அநாவசியமான செலவுகள் ஏதும் செஞ்சதே இல்லை.
இப்படி வயத்தக்கட்டி வாயக்கட்டி சேத்து வெச்ச பணத்தை
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு குடுத்து ஏமாந்தாங்க. அக்கா
சேத்து வெச்ச பணத்துலதான் அவங்க கல்யாணம் நடந்தது.
என் படிப்பு கூட ஸ்காலர்ஷிப்லதான்.” என்று முகம் சிவக்க
சொல்ல ராமசாமி அப்பா, கோகிலாம்மா கண்ணுலேர்ந்து
தாரை தாரையா கண்ணீரு.

“ பெத்தவங்களைத் தவிக்க விடணும்னு எந்த பிள்ளையும்
நினைக்கறதில்லை. பெத்தவங்களூக்கு கூடிய மட்டும்
உதவியாய் இருக்கத்தான் பாக்கறோம். ஆனா அப்பாக்கு தான்
சின்ன வயசுல பணம் இல்லாம கஷ்டப்பட்டதால, தன்னை
யாரும் பெருசா மதிக்காம போயிட்டதால பணம் சம்பாதிக்கணும்
எனும் வெறியே உருவாகிடிச்சு. அம்மாவும் வேலைக்குப்போக
பக்கத்து வீட்டுல சாவி வாங்கிகிட்டுத்தான் நானும் அக்காவும்
வீட்டுக்கு வந்து காலையில் ஆக்கி வெச்சிருந்த சோத்தை
திம்போம்.

அப்பா ராத்திரி 11 மணிக்குத்தான் வருவாரு. நாங்க அவரோடு
சேர்ந்து விளையாடியது, கதை பேசியதுன்னு எதுவும் இல்லை.
அம்மா, அப்பா அரக்க பரக்க ஓடிக்கிட்டு இருந்தாங்க. நானும்
அக்காவும் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்காக எவ்வளவு ஏங்கி
இருப்போம் தெரியுமா? அன்னைக்குத்தான் ம்தியச் சோறு
எல்லோரும் சேர்ந்து திம்போம். பணம் சம்பாதிச்சாங்க.
ஆனா அதை அனுபவிக்கவும் இல்லை, எங்களையும்
அனுபவிக்கவும் விடலை. பணத்தை விடுங்க டாக்டர்.
என்னை ஒரு 6 வயசு பையனா மாத்த முடியுமா?
எங்க அப்பா,அம்மா கைய பிடிச்சுகிட்டு நான் நடக்க, எங்க
அக்காவும் கூட வர ஒரு கோவிலுக்கு கூட போனதில்லை!
நாங்க எங்கயும் சேர்ந்து போனதில்லை. அவங்க வேலைக்கும்,
நாங்க படிப்புக்கும் தான் ஓடிக்கிட்டு இருந்தோம்” அப்படின்னு
கண்ணுல தண்ணியோட சொல்லிக்கிட்டு இருக்க டாக்டருக்கு
என்ன பேசன்னு தெரியலை....

பாஸ்கர் அண்ணாவோட மகன் ஓடிவந்து அவரைக்கட்டிகிட
அவனை இழுத்து அணைச்சுகிட்டே,” இப்படி கூட எங்கப்பா
கிட்ட நான் நின்னதே இல்ல டாக்டர். எல்லா பிள்ளைகளுக்கும்
அவங்க பெத்தவங்கதான் ரோல் மாடல். எனக்கும் என்
பெற்றோர்தான் ரோல்மாடல். எதுக்குத் தெரியுமா? பிள்ளைகளிடம்
எப்படி நடந்துக்க கூடாது என்பதற்கு. அவரை மாதிரி
நானும் ஆகிடக்கூடாதுன்னுதான் என் குழந்தையின் பருவத்தை
அவனுடன் சேர்ந்து அனுபவிக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன்.
என் மகனின் பள்ளிப்ராயத்தில் நான் இழந்த சந்தோஷங்களை அவனுக்குத்
தரணும்.

என்னைப் பெத்தவங்களுக்கு பணம் இருந்தா போதும்.
அதனால அதை மட்டும் அனுப்பிகிட்டே இருப்பேன்.

வயசான காலத்துல மட்டுமில்ல டாக்டர் அறியாத வயசுலயும்
அன்பும் அனுசரணையும், அருகாமையும் ரொம்ப முக்கியம்.
எங்களுக்கு அதுகிடைக்கல. இப்ப என்னை குத்தவாளி
ஆக்கறாங்க. தன் பெற்றோரை சரியா கவனிக்காத மகன்
மீது பெத்தவங்க வழக்குத் தொடரலாம்னு சட்டம் சொல்லுது.
ஆனா குழந்தைதானேன்னு கண்டுக்காம விட்டு எங்க
மனசுல அன்புக்கான ஏக்கத்தை உருவாக்கின பெத்தவங்களை
என்ன செய்யலாம்??!!!! இதுக்கு ஏதும் சட்டம் இருக்கா?”
அப்படின்னு பாஸ்கர் அண்ணா கேட்ட கேள்விக்கு அங்க
இருந்த யாருக்குமே விடைத் தெரியலை!!!

உங்களுக்கு விடை தெரியுமா???

55 comments:

Appaji said...

அப்படி போடு......இதற்கும் சட்டம் தேவை தான்....புதியதாய் யோசித்து உள்ளீர்கள்..!!!

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

இளம் வயதில் எதற்காகவோ ஓடி முதுமையில் அருகில் யாருமில்லாமல் போய்விடுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

துளசி கோபால் said...

நல்ல ட்விஸ்ட் தென்றல்.

இன்னொன்னு பிள்ளை கூடவே இருந்து கவனிக்கணுமுன்னு கடைசி காலத்தில் எதிர்பார்க்கும் பெற்றோர் நிறையப்பேர் இருக்காங்க.

சரின்னு அந்தப்பிள்ளை வெளிநாட்டு வேலையையோ, அங்கே அவருக்கு இருக்கும் கமிட்மெண்டையோ விட்டுட்டு வரமுடியுமா? அவருடைய சொந்த பிள்ளைகளின் படிப்பு,குடும்பத்தின் கதி என்ன ஆகும்?

அப்படியே துணிஞ்சு வேலையை விட்டுட்டு வந்தாலும் தன் குடுமபத்தையும் பெற்றோர்களையும் கவனிச்சு மருத்துவச்செலவு இன்னபிற செய்வதற்கும் பணம் வேணாமா?

ஒரு குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு உள்ளூர்லே வேலை கிடைக்குமா?

நிறைய கோணங்களும் பார்வைகளும் இருக்கு இந்த விஷயத்தில்.

இந்த குறிப்பிட்ட பெற்றோர் தங்களுக்குன்னு ஒரு ஹாபி, நண்பர் வட்டம்,கோவில் குளமுன்னு எதாவது செஞ்சு தங்களை பிஸியா வச்சுக்கலாம்.

அப்புறம் இன்னொரு விஷயம்..... அந்தம்மாவுக்கும்தானே வயசாகுது. விதவிதமா சமைக்க இப்பவும் இன்ட்ரஸ்ட் இருக்குமா?

என்னமோ போங்க:(

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

நிறைய்ய கோணங்கள், கேள்விகல் எழும். நீங்க சொல்லியிருப்பது போல சில பெற்றோர்கள் பணமும் பத்தா இருக்கணும், பொண்ணும்முத்தா இருக்கணும்னு தான் நினைக்கறாங்க.

மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்னு சொல்லிக்க ஆசை. ஆனா கூட இருந்து பாத்துக்கலைன்னு குறை :(

pudugaithendral said...

இந்த குறிப்பிட்ட பெற்றோர் தங்களுக்குன்னு ஒரு ஹாபி, நண்பர் வட்டம்,கோவில் குளமுன்னு எதாவது செஞ்சு தங்களை பிஸியா வச்சுக்கலாம்.

ஆமாம் இது ரொம்ப முக்கியம். ஆனா இது நிஜத்துல நடக்காததால ஒரு வெறுமை உண்டாகுது. சும்மா இருக்கும் மனசுல சாத்தான் புகுந்த மாதிரி ஆகிடறாங்க.
அப்புறம் இன்னொரு விஷயம்..... அந்தம்மாவுக்கும்தானே வயசாகுது. விதவிதமா சமைக்க இப்பவும் இன்ட்ரஸ்ட் இருக்குமா?//

65 வயசுல ஒருத்தர் இருக்காரு. அப்பத்தான் ஓடியாடி வேலை செஞ்சுகிட்டு இருந்தேன் ருசிச்சு சாப்பிட முடியலைன்னு சொல்லி உடல்நிலை சரியில்லாத மனைவியை சேனை கோலா, வாழைப்பூ வடைன்னு தினத்துக்கு ஒரு வெரைட்டி செய்யச்சொல்லி வளைச்சு கட்டி அடிக்கிறாரு. :) அந்தம்மாவுக்கு வயசானலும் புருஷன் கேட்டா செஞ்சு கொடுத்துத்தானே ஆகணும்.

என்னமோ போடா மாதவா கதையாத்தான் இருக்கு.

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வழக்கமான எல்லோரும் பார்க்கற பெத்தவங்க கோணத்துலேர்ந்து மட்டுமே பார்க்காம, குழந்தைங்க கோணத்துலேர்ந்தும் பார்த்தது வித்தியாசமா, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குது தென்றல்.

வயசை ஒரு கேடயமா பயன்படுத்திக்கிற பெரியவங்களும் நிறையவே இருக்காங்கப்பா.. அவங்க யோசிக்கணும்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ரொம்ப நன்றிப்பா. ஆமாம் எனக்கு வயசாகிடிச்சின்னு சொல்லி சொல்லி இமோஷனல் ப்ளாக்மைல் பண்ணிக்கிட்டு இருக்கற பெரியவங்களை எனக்குத் தெரியும்.

இந்த உலகத்துல எல்லாமும் தான் நடக்குது.

வருகைக்கு ரொம்ப நன்றி

ப.கந்தசாமி said...

உண்மையை உருக்கத்தோடு சொல்லியிருக்கீங்க.

ADHI VENKAT said...

மகன் சொல்ற விதத்துலயும் பாவமா தான் இருக்குது. என்ன சொல்வதென்று தெரியல.....

பாச மலர் / Paasa Malar said...

நச் நச்...நறுக்..நறுக்....

தம் தேவை முடிந்ததும், அவர்கள் பெர்ற பிற பிள்ளைகளையும் ஏன் பரம்பரையையும் காப்பாற்றும் வரை காத்திருந்து..அனுபவித்து...ஊரில் உள்ளவர்களிடமெல்லாம் என் பிள்ளை என்னை மறந்துவிட்டான் என்று சொல்பவரையும் பார்த்திருக்கிறேன்...

பிள்ளைகள் அனுப்பும் பணத்தைப் பிள்ளைகளுக்காகவே சேமித்து, குறைகளை வெளியில் சொல்லாமல், இருக்கும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன்...

வெளிநாடுகளில் வேலை செய்வதில் பணம் மட்டும் பளிச்சென்று தெரியும்..இரு தரப்பினர் செய்யும் தியாகங்களும் வெளியே தெரிவதில்லை...

சல்யூட் கலா..

ஹுஸைனம்மா said...

எதிர்பாராத (ஆனால், சாத்தியமான) ட்விஸ்ட்!!

கேரியர், பணம், முன்னேற்றம் என்று அலைபாயும் தற்கால பெற்றோர் கருத்தில் கொள்ளவேண்டிய கதை. “எல்லாம் என் பிள்ளைக்காகத்தானே” என்ற சால்ஜாப்பெல்லாம் இனி எடுபடாது. இருவரும் சம்பாதித்து, பிள்ளையைச் செல்ல(வ)த்தில் குளிப்பாட்டுவதைவிட, இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் குணத்தைக் குழந்தைக்கும் கற்றுத் தருவதே என்றும் நல்லது.

//அப்புறம் இன்னொரு விஷயம்..... அந்தம்மாவுக்கும்தானே வயசாகுது. விதவிதமா சமைக்க இப்பவும் இன்ட்ரஸ்ட் இருக்குமா?//

டீச்சர்ஸ்!! எங்கம்மா அப்பப்ப எங்கிட்ட புது ரெஸிப்பி (கோபி மஞ்சூரியன், பட்டர் சிக்கன் இந்த மாதிரி) அனுப்பச் சொல்லி புது சமையல்லாம் ட்ரை பண்றாங்க!! நேரம் போகணும் + இப்பத்தான் ஃப்ரீயா இருக்காங்க!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமையான கதை அக்கா. பாஸ்கர் அண்ணா சொல்றதை நானும் ஒத்துக்கறேன், ஆனா எந்த அம்மா அப்பாவும் வேணும்னே தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்தை சூறையாட நினைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்

பாஸ்கர் அண்ணா கடைசியா சொன்னார் இல்லையா "என் மகனின் பள்ளிப்ராயத்தில் நான் இழந்த சந்தோஷங்களை அவனுக்குத்
தரணும்"னு, அதையே தான் அவரோட அப்பாவும் செஞ்சு இருக்கார். தனக்கு கிடைக்காத பணமும் மரியாதையும் தன் மகனுக்கு கிடைக்கணும்னு நெனச்சு தான் அப்படி வளத்து இருக்கார்னு என் மனசுக்கு படுது. ஆனா பாஸ்கர் அண்ணாவோட வருத்தம் புரிஞ்சுக்க முடியுது

ஆனாலும் இது tit for tat செய்யற நேரமில்லையே. முடியலைனு கேட்டதும் பறந்து வந்ததுல இருந்தே அவர் மனசுல பெத்தவங்க மேல இருக்கற அக்கறை புரியுது. எல்லாம் விட்டுட்டு ஊரை நோக்கி ஒரேடியா வர்றதும் துளசிம்மா சொன்ன மாதிரி அவ்ளோ சுலபம் இல்லை, அதுல நெறைய யோசிக்க வேண்டி இருக்கு. They should reach a median point and make some compromises on both parts I guess

எப்ப ஊர்ல யார்கிட்ட போன் பேசினாலும் "எப்ப இந்தியாவுக்கு வர்றதா இருக்கீங்க?"னு ஒரு கேள்வி வரும். அதே சமயம் அங்க இருக்கறவங்களை "இங்கயே இருந்தா ஒண்ணும் பெருசா பண்ண முடியாது, வெளில வேலை தேடு"னு சொல்லிட்டு தான் இருக்காங்க. Never ending scenario I guess...:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

-

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. இரண்டு பகுதியையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இரண்டு விதத்திலும் இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் இப்படி இருந்தால் சில பிள்ளைகள் வேறு மாதிரி இருக்காங்க!

நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வேண்டிய விஷயங்களைத் தெளிவாகக் கொடுத்திருக்கிறீர்கள் தென்றல்.

அன்புடன் அருணா said...

அட!அசத்திருக்கீங்க!பூங்கொத்து!

pudugaithendral said...

வாங்க ஐயா,

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

அப்படி ஒரு கோணம் இருப்பதே தெரியாம சில பெத்தவங்க பிள்ளைகளுக்காகத்தான் காசு சம்பாதிக்கறோம், சந்தோஷத்தை கொடுக்க நினைக்கிறோம்னு சொல்றாங்க. உண்மையில் பிள்ளைகள் விரும்புவது அருகாமையை, அன்பை.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

எனக்கு பிள்ளைகளின் மனது ரொம்ப முக்கியம். அதில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பும் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அன்பை அந்த வயதில் விதைத்து விட்டால் அறுவடையும் நல்லவிதமாகவே இருக்கும். அதைச் சொல்லத்தான் இந்தக் கதை.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

எனக்கு பிள்ளைகளின் மனது ரொம்ப முக்கியம். அதில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பும் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அன்பை அந்த வயதில் விதைத்து விட்டால் அறுவடையும் நல்லவிதமாகவே இருக்கும். அதைச் சொல்லத்தான் இந்தக் கதை.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

கேரியர், பணம், முன்னேற்றம் என்று அலைபாயும் தற்கால பெற்றோர் கருத்தில் கொள்ளவேண்டிய கதை. “எல்லாம் என் பிள்ளைக்காகத்தானே” என்ற சால்ஜாப்பெல்லாம் இனி எடுபடாது. இருவரும் சம்பாதித்து, பிள்ளையைச் செல்ல(வ)த்தில் குளிப்பாட்டுவதைவிட, இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் குணத்தைக் குழந்தைக்கும் கற்றுத் தருவதே என்றும் நல்லது.//

அருமையான கருத்து. அதிலும் அந்தக்கடைசி வரிகளை பொன்னெழுத்துக்களால் பொறித்து எல்லார் வீட்டிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

வருகைக்கு மிக்க நன்றிப்பா

pudugaithendral said...

வாங்க புவனா,

எந்த அம்மா அப்பாவும் வேணும்னே தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்தை சூறையாட நினைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்//

ஒரு கசப்பான உண்மையைச் சொல்லட்டுமா!! பிள்ளையைப் பெற்றதனாலேயே அவர்கள் முழுமையான பெற்றோர் ஆகிவிட மாட்டாங்க. துரதிஷ்டவசமா 100ல் 15 சதவிகிதம் தன் கையில் இருக்கும் பொக்கிஷத்தை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை. தெரிஞ்சு செஞ்சாலும் தெரியாம செஞ்சாலும் தப்பு தப்புதான்.

தங்களால் முழு ஈடுபாட்டோடு பிள்ளை வளர்ப்பு எனும் அற்புதக்கலையை ஏற்க முடிந்தவர்களின் பிள்ளைகள் பாக்கியசாலிகள்

pudugaithendral said...

தனக்கு கிடைக்காத பணமும் மரியாதையும் தன் மகனுக்கு கிடைக்கணும்னு நெனச்சு தான் அப்படி வளத்து இருக்கார்னு என் மனசுக்கு படுது. ஆனா பாஸ்கர் அண்ணாவோட வருத்தம் புரிஞ்சுக்க முடியுது //

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணராம இருப்பதும் தவறு. பணம் நிரந்தரம் இல்லை. மற்ற உறவினர்கள் பற்றி, சமூகம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தன் குழந்தை எதை விரும்புகிறது என்பதையும் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

pudugaithendral said...

ஆனாலும் இது tit for tat செய்யற நேரமில்லையே.//

அப்புறம் எப்ப அவங்களுக்கு புரிய வைப்பது. :)) சிலருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் தான் வேலை செய்யும் புவனா

pudugaithendral said...

எப்ப ஊர்ல யார்கிட்ட போன் பேசினாலும் "எப்ப இந்தியாவுக்கு வர்றதா இருக்கீங்க?"னு ஒரு கேள்வி வரும்.//
அழகன் படத்துல ஒரு வசனம் எனக்கு பல இடத்துலயும் உபயோகமாக. அந்தப்படத்தில் ஒரு வாண்டு,” நாம பேசாம வேறவீட்டுல புறந்திருக்கலாம் அப்படின்னு சொல்லும். அதுமாதிரி வெளிநாட்டுக்கு சென்றவர்கள் அங்கேயே இருந்துவிடுவது... அல்லது கொஞ்சம் வயதானதும் வருவதுதான் நல்லது. //
அதே சமயம் அங்க இருக்கறவங்களை "இங்கயே இருந்தா ஒண்ணும் பெருசா பண்ண முடியாது, வெளில வேலை தேடு"னு சொல்லிட்டு தான் இருக்காங்க. Never ending scenario I guess...:)//

அதே அதே சபா பதே.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

இரண்டு விதத்திலும் இருக்கிறார்கள். //

ஆமாம். ஆனா அதிகமா பிள்ளைகள் கவனிக்கறது இல்லை எனும் குற்றச்சாட்டுத்தான் வெளியில தெரியுது.

பிள்ளைகள் படும்பாடு வெளியே தெரிவதில்லை. அவர்கள் யாரிடமும் குற்றம் சொல்லவும் வாய்ப்பில்லை.

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்கும் உங்க பாராட்டுக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

பூங்கொத்துக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

இது ஒரு உண்மைச் சம்பவம். என் நெருக்கமான தோழியும் அவரது தம்பியும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் தங்கள் கடமையைச் செவ்வனவே இன்றுவரை செய்தும் வருகிறார்கள். அவர்கள் செய்த தவறை தாங்களும் செய்யக்கூடாது என இருவரும் பெற்றோரை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் நிஜ வாழ்க்கையில் சந்தித்த எத்தனையோ ஏச்சுக்களும், பேச்சுக்களும் சந்தித்துதான் வந்திருக்கிறார்கள்.

ஒரு சமயத்தில் இருவருக்கும் மனதில் தோன்றிய விஷயம் என்ன தெரியுமா? பிடிக்காத கணவன் மனைவி விவாகரத்து பெற்று தனித்து வாழ முடியும். ஆனால் ஒத்துவராமல,அன்பு என்றால் என்பதே காட்டாமல், தினம் தினம் திட்டி தீர்க்கும் பெற்றோரிடம் எங்கே சென்று விவாகரத்து பெறுவது”!!! என கண்ணீருடன் அவர்கள் துடித்ததை அருகிலிருந்து பார்த்தவள் நான். இதை சிலர் ஒத்துக்கொள்ளாமலும் போகலாம். ஆனால் இது சத்தியமான உண்மை இது.

அனைவருக்கும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் வேண்டிய நல்ல பாடம்.கொடிது கொடிது இளமையில் வறுமை இது பழசாகிவிட்டது. அன்பிலா வாழ்வும் கொடிதுதான். மிக அழகாகக் கோர்வையாகச் சம்பவத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். மிக வருத்தமாக இருக்கிறது. இனியாவது அவர்கள் வாழ்வு திருந்தட்டும்.

ஹுஸைனம்மா said...

கிட்டத்தட்ட இதே கருத்தில் நேற்று வாசித்த இன்னொரு கதை:

http://muthusidharal.blogspot.com/2012/04/blog-post_16.html

KSGOA said...

புதிய கோணம்!!!நல்லா இருக்குங்க.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

இப்படியும் நடக்குதுன்னு பலருக்குத் தெரியாது. அன்பு அகலாத மனைவி மட்டுமல்ல, எந்த உறவும் அன்பு அகலாமல் இருந்தால்தான் நிம்மதி.

வருகைக்கு நன்றிம்மா

pudugaithendral said...

படிக்கறேன் ஹுசைனம்மா,

சுட்டிக்கு நன்றி

pudugaithendral said...

மிக்க நன்றி கேஎஸ்கோ

karunakaran said...

நல்லா இருக்குங்க

அமுதா கிருஷ்ணா said...

என் குத்தமா,உன் குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல???

pudugaithendral said...

வாங்க கருணாகரன்,

உங்க கருத்துக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

இன்னொரு பாட்டு வரி கூட ஞாபகம் வருது.

“சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு முடிச்சிடலாம். நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்!!!!” :((

வருகைக்கு மிக்க நன்றி

மனோ சாமிநாதன் said...

Truth is starnger than fiction என்ற சொல்லுக்கேற்ப இந்த உண்மைக்கதை மனசை பாதிக்கிறது! இந்த வலியும் நிறைய பேர் வாழ்க்கையில் இருக்கிறது! 'எதை விதைக்கிறோமோ அது தான் கிடைக்கும்' என்பது எத்தனை அழகான உண்மை!!

Unknown said...

ஒரே மூச்சில இரண்டுபகுதியையும் படிச்சி முடிச்சேன். எதிர்பாராத கோணத்தை மகன் சொல்லி முடிச்சாலும், அவர் அம்மாவின் கண்ணீர் வேறு கதை (மகனை மறுத்து அவையில் கூற விரும்பாத கதை?) சொல்கிறதுன்னு எனக்குத் தோணுது. மகன் சொன்னது அவர் பார்வை மட்டுமே.

நம்மூர்ல எல்லாருமே கொஞ்சம் உணர்ச்சிவசப்படறவங்க என்பதையும் மனதில் வைக்கணும். அப்பா பிள்ளை இரண்டுபேருமே தம் உணர்ச்சிகளை தங்கள் கோணங்களில் 25%ஆவது மிகைப்படுத்துறாங்கன்னு நான் நினைக்கிறேன்.

Unknown said...

For follow-up.

சுசி said...

எங்கே அந்த பெற்றோர் பாவம் என்று சொல்லி விடுவீர்களோ என்று நினைத்தேன். பல வீடுகளில் குழந்தைகளை கவனிக்காமல் இருந்து விட்டு அவர்கள் தானாகவே வளரும் படி செய்துவிட்டு, அவர்கள் சாதித்தால் அதில் பெற்றோர் என்ற உரிமையில் பங்கு போட்டுக்கொள்ள ஓடி வருகிறார்கள்.

அவர்களே தவறு செய்து விட்டால் "சீ! என் பிள்ளையா நீ ?" என்று ஒதுங்கி விடுகிறார்கள். பல வீடுகளில் குழந்தைகள் கொண்டுவரும் பணத்திற்காக அவர்களுக்கு திருமணமே செய்ய நினைப்பதில்லை.

ஒரு மாமி என்னிடம்,"எங்க சுந்தர் இப்ப நன்னா சம்பதிக்கிராண்டி, எனக்கு கல்யாணம் செஞ்சு வைம்மா, என் ஆபீஸ்ல எல்லோருக்கும் கல்யாணம் ஆகிறது, என்கிறான் எனக்குதாண்டி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே இஷ்டம் இல்ல. இப்பதான் வசதியா இருக்கோம் அதுக்குள்ளே மாட்டு பொண் வந்துட்டா இதை எல்லாம் அனுபவிக்க முடியாதேன்னு இருக்கு." என்று சொன்னதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த பையன்னுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் இருந்த போதும் அந்த மாமியை பார்க்கும் போதெல்லாம் அவர்கள் அன்று சொன்ன இந்த வார்த்தைகள் என் மனதில் ஓடுகிறது. தன் தாய்க்காகவும் தன் சகோதரர்களுக்காகவும் ஓடாய் தேய்ந்தவன் அந்த பையன். ஆனால் அந்த அம்மாவின் எண்ணத்தை பார்த்தீர்களா எவ்வளவு சுயநலம்.

தாய் என்றால் அன்பே உருவானவளாமே, இந்த மாதிரி தாய்மார்களை எல்லாம் என்னவென்று சொல்வது.

Bala said...

// வயசான காலத்துல மட்டுமில்ல டாக்டர் அறியாத வயசுலயும்
அன்பும் அனுசரணையும், அருகாமையும் ரொம்ப முக்கியம். //

ரொம்ப பீல் பண்ண வைச்ச வார்த்தைகள்.

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அனுஜா,

உணர்ச்சி வசப்படுவது எல்லோருக்கும் இயல்பு. ஓவரா என்பது சூழ்நிலையைப்பொறுத்தும் எவ்வளவு தூரம் நாம் காயப்படுறோம் என்பதையும் பொறுத்து இருக்கும்.

அம்மா என்றால் அன்பு அது இதுன்னு அம்மாக்களுக்கு எப்பவுமே புகழாரம் தான். பலர் அதற்கு இலக்கணமாவே இருப்பாங்க. சில இலக்கணப்பிழைகளும் நிஜத்தில் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டாங்க. பெத்த தாயையே இப்படி பேசறாங்களேன்னு பசங்க மேலத்தான் கோவப்படுவாங்க.

திரும்ப திரும்ப சொல்றேன். 10 மாசம் சுமந்து பெத்ததால் மட்டும் தாய்மை வந்துவிடாது. தாயாவதற்கு முதல் படிதான் பிள்ளை பேறு.

வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

நானும் இதுமாதிரி அம்மாக்களை பாத்திருக்கிறேன். இதுவும் சாத்தியமா என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது போல சில இலக்கணப்பிழைகள். :((

வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகில்

இராஜராஜேஸ்வரி said...

எல்லா பிள்ளைகளுக்கும்
அவங்க பெத்தவங்கதான் ரோல் மாடல். எனக்கும் என்
பெற்றோர்தான் ரோல்மாடல். எதுக்குத் தெரியுமா? பிள்ளைகளிடம்
எப்படி நடந்துக்க கூடாது என்பதற்கு.

முடிவு சிந்திக்கவைத்தது ..

சமீரா said...

வாவ்!! மிக அருமையான கதை களம். நேற்று தான் பெற்றவர்களை புரிந்துகொள்ளத மகள் கதை படித்தேன், இன்று பிள்ளைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர் கதை..
இரண்டுமே வலைசரத்தில் மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் அறிமுகம். மிக அருமை!!!

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நனறிகள்

pudugaithendral said...

வாங்க சமீரா,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நிலாமகள் said...

வாழ்வெனும் முப்பரிமாணக் கண்ணாடியில் ஆளுக்கொரு தரிசனம்!

pudugaithendral said...

வாங்க நிலாமகள்,

ஆமாம்...

வருகைக்கு மிக்க நன்றி