Monday, January 21, 2013

மெட்ரோ......

மெட்ரோ ரெயில் பத்தின பதிவோன்னு நினைச்சீங்களா!!! இல்லீங்க. வால்மார்ட் வந்திருச்சு. சென்னையில் வேற பேர்ல இயங்கறாங்க. ஆள் பிடிக்கறா மாதிரி வளைச்சு வளைச்சு கார்ட் கொடுக்கறாங்கன்னு நிறைய்ய பத்திரிகைகளில் எழுதனது படிச்சப்பவே இந்தப் பதிவு எழுதணும்னு நினைச்சேன். ஆனா நேரம் இப்பத்தான் கூடி வந்தது. (எழுதத்தான் :)

 இது இங்கே ஹைதையில் இருக்கும்  METRO CASH & CARRY பத்திய பதிவு.
இதுக்கு தலைமையகம் பெங்களுரூ. இந்தியாவில் வேற சில இடங்களிலும் கடை இருக்கு. நான் இங்கே ஹைதைக்கு வந்து 2 வருஷம் கழிச்சு வேற அப்பார்ட்மெண்ட் போனோம். அங்கே ஒரு தோழி அடிக்கடி நான் மெட்ரோ போயிட்டு வந்தேன். அங்கதான் மாச சாமான்லாம் வாங்குவேன்னு சொல்வாங்க.

குக்கட்பள்ளி, உப்பல் ரெண்டு இடத்துலயும் இந்தக் கடை இருக்கு. இது ஒரு ஹோல்சேல் மார்க்கெட். ஆனா பிசினஸ் செய்யறவங்க மட்டும்தான் மெம்பராக முடியும். அந்த தோழியோட அப்பா ஏதோ பிசினஸ் செய்யறவரு அதை வெச்சு ஒரு கார்ட் வாங்கி மகளுக்கு கொடுத்திருக்காறாம்.  சரி மேட்டருக்கு வருவோம்.  உங்களையும் மெட்ரோவுக்கு அழைச்சுக்கிட்டு போகலாம், விலை கம்மி ஆனா எல்லாம் பல்காதான் வாங்கணும். ஒரு சோப் , ஒரு பேஸ்ட் வாங்க முடியாதுன்னு சொன்னாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன்.

10 சோப் இருக்கற பேக் வாங்கினா சோப்  கறைய குறைஞ்சது 3 மாசம் ஆகும். நாம சீசனுக்கு தகுந்தா மாதிரி சோப் உபயோகிப்போம். இந்த மாதிரி எல்லாம் பல்கா வாங்கிகிட்டு வந்தா கட்டுப்படியாவாதுன்னு பேசாம இருந்தேன். ஒரு நாள்  அயித்தான் இந்த மெட்ரோ கடைக்கு போயிட்டு அவுக CEOவா இருந்தாலும் ஹெட் இங்க இவுகதான்னு அவுகளுக்கு ஒரு மெட்ரோ கார்ட் வாங்கியாந்தாங்க. (ஓரு கம்பெனிக்கு ரெண்டு கார்ட்தான் அனுமதி)

ஒரு கார்டுக்கு ரெண்டு பெரியவங்க மட்டும்தான் அனுமதி. சின்ன பசங்களை கூட்டிக்கிட்டு போக முடியாது. அதனால நானும் அயித்தானும் மட்டும் எப்படித்தான் இருக்குன்னு பாக்க போனோம்.

பெரிய்ய்ய்ய்ய இடத்தை வளைச்சு கட்டியிருக்காங்க. பார்க்கிங் வசதி சூப்பர்.
உள்ளே போறதுக்கு முன்னாடி அந்தக்கார்டை காட்டணும். அதை வாங்கி கம்ப்யூட்டருக்கு காட்டிட்டு நம்மளை உள்ளே அனுப்புவாங்க. அம்மாம் பெரிய்ய ட்ராலிகளை அன்னைக்குத்தான் நான் பாத்தேன்!!!! எல்லாம் ஹோல்சேல் விலைகள். எண்ணெய், நெய், எல்லாம் மார்க்கெட் விலையைவிட கணிசமான குறைவு. கடைகளூக்கு டோர் டெலிவரி உண்டுன்னு  போட்டிருந்தாங்க.  1/2 கிலோ பேக்கிங்கே கிடையாது. எல்லாம் ஒரு கிலோ தான். கத்திரிக்காய் வாங்கினா 1 கிலோ தான் வாங்கணும்.


எண்ணெய், நெய்யெலாம் பரவாயில்லை ஆனா துவரம்பருப்பு, பாசிப்பருப்பு என எல்லா வகையும் ஹோல்சேல் விலையில் வாங்கலாம். ஆனா குறைஞ்ச பட்சம் ஒரு கிலோ தான் தருவாங்க. அங்கேயே காய்கறிகள், எலக்ட்ரானிக் ஐட்டங்கள், ப்ளாஸ்டிக், மளிகை, அரிசி,  எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம் இருக்கு. மார்க்கெட்ல என்ன விலை? அதுவே மெட்ரோவில் என்ன விலைன்னு விவரமா எழுதியிருந்தாங்க.


முன்ன மாதிரி இல்லாம பிஸ்கட், சோப், ஷாம்பு எல்லாம் பல்கா வாங்கத்தேவையில்லாம 1 யூனிட் கூட வாங்கிக்கலாம்னு இருந்துச்சு. அந்த மாசம் அங்கே பர்ச்சேஸ் செஞ்சோம். வெளியில வாங்கறதுக்கும் மெட்ரோவுல வாங்கறதுக்கும் நல்ல வித்தியாசம். அதே தரமான பொருள்  ஹோல்சேல் விலைக்கு கிடைக்கும். ஆனா எல்லாம் யூனிட்ல வாங்க முடியலை. சிலது 6 அல்லது 10 வாங்கற மாதிரி தான் இருக்கு.

 
அடுத்த மாசம் அங்கே போகலாமான்னு பாத்தப்போ, அயித்தானுக்கு வேலை வந்திருச்சு. அவரு டூர் போயிட்டு வர்ற வரைக்கும் சாமான் வாங்காம முடியாது. சரி நாம மெட்ரோ  போகலாம்னா, ஆட்டோல போயி ஆட்டோல வந்தா பழுத்திடும். எங்க வீட்டுலேர்ந்து 10 கிமீ தூரத்துக்கும் மேல இருக்கும் உப்பல். எப்பவும் வாங்கற மளிகைக்கடையிலேயே வாங்கினோம். அதுவும் ஹோல்சேல் கடைதான். ஆனா மெட்ரோ அளவுக்கு விலை வித்தியாசம் இருக்காது. சூப்பர் மார்க்கெட்டுக்கும், மெட்ரோவுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் இருக்கும்.

அப்பதான் அந்த மளிகைக்கடை அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன், நீங்க மெட்ரோவுலேர்ந்து வாங்கியாந்துதான் விக்கறீங்களான்னு?” அதுக்கு அவர் சொன்னார்,” மெட்ரோவா!!! அங்க வாங்கினா உங்களுக்கு லாபமா இருக்கும். கடை முதலாளிகளுக்கு இல்லை!! நாங்க டைரக்டா கம்பெனிகள் கிட்டேயிருந்து வாங்குவோம்னு சொன்னாரு. மெட்ரோவுல வாங்குறதே நமக்கு விலை ரொம்ப குறைச்சலா இருக்குன்னா, இவரு கம்பெனிகிட்டேயிருந்து வாங்கினார்னா இன்னும் எவ்வளவு லாபம் இருக்கும்னு யோசிச்சேன்.

””டேடி எனக்கொரு டவுட் ரேஞ்சுல!”” நான் புரிஞ்சுகிட்டது இதுதான். வியாபரிகளுக்கு லாபம் இல்லாம வியாபரம் செய்ய மாட்டாங்கதான்னாலும்,  400 கிமி கார்ன்ஃப்ளக்ஸ் டப்பாவிலையில் 7.50 குறைச்சு  மெட்ரோவுல விக்கறதுலயே அவங்களுக்கு லாபம் இருக்குதுன்னா, நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கும் எம்புட்டு லாபம் இருக்கும்.  இப்ப வால்மார்ட் வந்ததும் எல்லோரும் ஏன் கடுப்பாறாங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு.

ப்யூட்டி பார்லர் வெச்சிருந்தா கூட கூப்பிட்டு அட்டை கொடுக்கறாங்க. அவங்க அங்க போய் வாங்க ஆரம்பிச்சிட்டா மளிகை கடைக்கு யாரும் வரமாட்டாங்க,
அப்படின்னு சொல்லி கட்டுரை எழுதறாங்க. அவங்க வயத்துல அடிக்குது வால்மார்ட்னு சொல்றாங்க. நான் வால்மார்ட் மாதிரி கம்பெனிகளுக்கு சப்போர்ட் செஞ்சு பேசலை. ஆனா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

வாடிக்கையாளர்கள் நலன் கருதி விலையில் தள்ளுபடி செஞ்சு கொடுக்கணுமா இல்லையா? அப்பத்தானே வாடிக்கையாளர்கள் விட்டுப்போகாம இருப்பாங்க. ஒரு சாமான் வாங்கும்போது 4 கடையில் விசாரிச்சு எங்கே விலை கம்மியா இருக்கோ அங்கே வாங்குவதுதானே இயல்பு.!!! இதை நான் சொன்னா சிலருக்கு கோவம் வரலாம்.


உதாரணம் சொல்றேன் பாருங்க. முன்னாடில்லாம் நாம மருந்துக்கடையில மருந்து வாங்கினா டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது.  டோர்டெலிவரில்லாம் கிடையாது.   இந்த மெட்ப்ளஸ், ஹீத்ரூ மாதிரி பார்மஸிகளில்  உறுப்பினருக்கு 10 சதவிகிதம் விலையில் தள்ளுபடி உண்டு.  அதை நீங்க விலையில் கழிச்சுக்கலாம், இல்லாட்டி உங்க அக்கவுண்டில் பாயிண்டா வரவு வைக்கப்பட்டு மொத்தமா சேர்ந்ததும் அதுக்கு தக்க கிஃப்ட் ஏதாவது வாங்கிக்கலாம்னு இருக்கு. இந்த மாதிரி மருந்துக்கடைகள் டிஸ்கவுண்ட்டோட, டோர் டெலிவரியும் செய்வாங்க. அவங்க கிட்ட மருந்து இல்லைன்னா, அவங்க கிளைகள்ல எங்க இருந்தாலும் வாங்கியாந்து நமக்கு கொடுத்திருவாங்க.

இதுக்கப்புறம் இங்கே ஹைதையில் மற்ற மருந்துக்கடைகளிலும் 10% டிஸ்கவுண்ட் + டோர் டெலிவரி தர ஆரம்பிச்சிருக்காங்க. போட்டி போட்டு சாதாரண கடைகளும் தன் விற்பனைக்காக மாற ஆரம்பிச்சிருக்காங்க. எங்க ஏரியாவுல சூப்பர் மார்க்கெட்களும் இருக்கு. மளிகை கடைகளும் இருக்கு. சூப்பர் மார்க்கெட்ல வாங்கறதை விட கொஞ்சம் குறைஞ்ச விலையில் மளிகை கடையில் வாங்கிடலாம். டோர் டெலிவரியும் சில மளிகைக்கடை காரங்க இலவசமாவே தர்றாங்க. எந்த மளிகை கடைக்கும் மூடு விழா நடக்கலை.

இது மாதிரி மத்த இடங்களிலேயும் செஞ்சா நம்மளோட  பாசமா பாத்து, பேசுற அண்ணாச்சியை விட்டு (அப்படித்தான் கட்டுரைகளில் எழுதியிருக்காங்க) ஏன் மத்த இடத்துல ஏன் போய் வாங்கப்போறாங்க. இப்ப இருக்கற விலைவாசி ஏத்தத்துல கால் ரூவாயாவது மிச்சம் பிடிக்க முடியாதான்னு தான் மக்கள் யோசிப்பாங்க.  வால்மார்ட், மெட்ரோ மாதிரியான கடைகள் ஊருக்கு வெளியிலதான் கடை போட முடியும். ஏன்னா அவ்வள்வு பெரிய இடம் வேண்டும். ஒவ்வொரு வாட்டியும் அங்கே போகணும்னா ஆவுற காரியம் இல்லை. அதனால மளிகைக்கடையில் சாமான் வாங்கினாலும் காசு மிச்சம் பிடிக்க முடிஞ்சா, “சுண்டக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு” சொல்வாங்களே அதுமாதிரி அம்மாம் தூரம் போய் ஏன் சாமான் வாங்கப்போறோம் சொல்லுங்க?????!!!!



என் மனசுல பட்டதை, என் அனுபவத்தோட சொல்றேன். அம்புட்டுதான். உங்களுக்கு மாத்து கருத்து இருந்தா கண்டிப்பா சொல்லுங்க. தெரிஞ்சிக்கலாம். சண்டைல்லாம் வேணாம்!!

 

27 comments:

ADHI VENKAT said...

நீங்க சொல்லியிருக்கறது சரி தான். அவ்வளவு தூரம் போய் வாங்கறத யோசிச்சா அதுக்கு இங்கேயே வாங்கிக்கறது நல்லது தான்.

தில்லியில் நண்பர்கள் வீட்டில் ”காலி பாரி” என்ற இடத்திற்கு சென்று ஹோல்சேலா வாங்கிட்டு வருவாங்க. போயிட்டு ஆட்டோ வைத்து எடுத்து வருவதை யோசிக்கும் போது இங்கேயே வாங்கிக்கலாமே என்று யோசிப்பேன். அதன் பிறகு அந்த சாமான்களை வண்டு, பூஞ்சை வராமல் வேறு பாதுக்காக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பல கடைக்காரர்கள் அதிக லாபம் பார்ப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். சில முதலாளிகள் மட்டுமே அதிக ஆசை இல்லாது இருக்கிறார்கள்....

இங்கே தில்லியிலும் Cash and Carry இருக்கிறது....

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி

pudugaithendral said...

சீதோஷ்ணம் சீரா இல்லாம இருக்கற இந்த சூழலில் சாமான்களை காவந்து செய்யறது கஷ்டம்.

pudugaithendral said...

வாங்க சகோ,

அதான் எனக்கு ஆதங்கம். கொஞ்சம் விலையை குறைச்சு கொடுங்கன்னு கேட்டா அப்ப நீங்க ஹோல்சேல் கடைக்குத்தான் போகணும்னு சொன்ன கடைக்காரங்க இருக்காங்க. சென்னையில் இருந்தப்ப என் அனுபவம் இது. :(


வருகைக்கு மிக்க நன்றி சகோ

raji said...

I also agree with u

ப.கந்தசாமி said...

கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க.

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்வது உண்மைதான். இங்க பிக் பசார் வந்தபோது புதன்கிழமை வாங்குங்கனு விளம்பரம் கொடுத்தாங்க.
அமெரிக்கால வால்மார்ட் போயிட்டு இருக்குன்னு சொன்னாங்க எவ்வளவு உண்மையோ தெரியாது.
சில பொருட்கள் ரொம்ப நன்றாக இருக்கும் . ஆனால் ஹோல்சேலில் வாங்கணும்னு கட்டாயம் கிடையாது.
சாம்ஸ் க்ளப்ல பெரிய வண்டியை எடுத்டுக் கொண்டு போய் கீழ பேஸ்மெண்ட்ல அடுக்கிவிடுவாள். இங்க எங்களுக்கு அந்த மாதிரி வசதி எல்லாம் கிடையாதுநாமெல்லாம் மாசாந்திரிகள்.அண்ணாநகர்ல வந்திருக்குனு சொன்னாங்க. மைலாப்பூர்ல இருந்து பெட்ரோல் செலவு பார்த்தால் தானிக்குத்தீனி சரியாயிடும்.:)நல்ல பகிர்வுமா.

pudugaithendral said...



வருகைக்கும் உங்க கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ராஜி

pudugaithendral said...

வாங்க ஐயா,

கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இரண்டு மாசத்துக்கு ஒரு முறை போய் தேவையானதை வாங்கிகிட்டு வந்து வெச்சுக்கறாங்க.. ஐடியா நல்லா இருக்குல்ல. நானும் போகலாம்னு முயற்சி செய்யும்போதெல்லாம் நம்ம ஆஸ்தான ஓட்டுனர் ஊரில் இல்லாம போயிட பக்கத்துலேயே போய் வாங்கிடறேன்.

வருகைக்கு நன்றிம்மா

ஹுஸைனம்மா said...

இங்கேயும், கேரிஃபோர், கோ-ஆப்ரேடிவ் என்று பெரிய கடைகள் உண்டு. ஆனால், நீங்க சொன்ன மாதிரி, அதெல்லாம் அடிக்கடி போறதில்லை. பக்கத்திலிருக்கும் சின்னச் சின்ன சூப்பர் மார்க்கெட்டுகளில்தான் அன்றாடப் பொருட்கள் வாங்குவது - அதுவும் குறிப்பிட்ட கடைகளில்தான்.

சின்னக் கடைகளை ஒரேயடியாக ஒதுக்குவது என்பது நம்மால் முடியவே முடியாததுதான்.

ஒரு 2, 3 தரம் கடைகளுக்குப் போய் வந்தாலே, எந்தக் கடையில் எது லாபம், எது கூடுதல், தரம் எப்படினு தெரிஞ்சிடும். அத வச்சு வாங்கிக்கலாம்.

என்ன, இதுக்குக் கொஞ்சம் “ப்ளாஆஆன்” பண்ணி வாங்கணும். அடுப்பில சட்டியை வச்சுகிட்டு, கடைக்கு ஆள் அனுப்புறவங்களுக்கு சரி வராது. :-))))

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இதுக்குக் கொஞ்சம் “ப்ளாஆஆன்” பண்ணி வாங்கணும். அடுப்பில சட்டியை வச்சுகிட்டு, கடைக்கு ஆள் அனுப்புறவங்களுக்கு சரி வராது//

ஆமாம். ஆனா அதே சமயம் இந்த மாதிரி கடைகளால சின்ன சின்ன கடைகள் மொத்தமா மூடிடவும் வாய்ப்பில்லை. மாற்றங்கள் தேவைன்னு மக்கள் புரிய ஆரம்பிக்கணும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இதுக்குக் கொஞ்சம் “ப்ளாஆஆன்” பண்ணி வாங்கணும். அடுப்பில சட்டியை வச்சுகிட்டு, கடைக்கு ஆள் அனுப்புறவங்களுக்கு சரி வராது//

ஆமாம். ஆனா அதே சமயம் இந்த மாதிரி கடைகளால சின்ன சின்ன கடைகள் மொத்தமா மூடிடவும் வாய்ப்பில்லை. மாற்றங்கள் தேவைன்னு மக்கள் புரிய ஆரம்பிக்கணும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சமீரா said...

இதே வால்மார்ட் என்னோட அலுவலகத்துக்கு பக்கத்துல கடந்த டிசம்பர் மாதம் திறக்கபோறதா சொல்லி, அதுக்கும் 4 மாதம் முன்னாடி உறுப்பினர் அட்டை கொடுத்தாங்க. இது பெஸ்ட் பிரைஸ் - என்ற பெயரில் உள்ளது.

ஒரு குடும்ப தலைவியா காசை மிச்சபடுதர வழி பார்கறீங்க அது ரொம்ப சரிதான். ஆனாலும் சில விஷயங்கள கொஞ்சம் யோசிக்கணும்.
1. இது அந்நிய முதலீடு - இன்னும் அதிகாரபூர்வமா வரலன்னாலும், இதுபோன்ற பெயர்களில் வந்து விட்டது. இதற்கு பொருள் கொள்முதல் செய்ய மத்திய அரசின் உதவி நிச்சயம் இருக்கும். அதனால் பொருள் கொள்முதல் மற்ற மளிகை கடை விலைகாட்டிலும் குறைவாக தான் இருக்கும். கொள்முதலில் இருந்து அவர்களின் லாப விகிதம் வைத்தாலும் அது மளிகை கடைகளை விட நமக்கு குறைவாக இருப்பது இயல்பு தான்.
2. நாம் தினசரி வாங்கும் பால் பாக்கெட் கெட்டு போன உடனே மளிகை கடைக்காரர் கிட்ட திருப்பி கொடுத்து புதுசு வாங்கறோம். அது வால்மார்ட் போன்ற கடைகளில் சாத்தியமா? இதுபோல தான் முட்டை, தேங்காய் போன்ற பொருட்களும்!!
3. கொஞ்சம் அதிகம் காசு கொடுத்தாலும் நாம் கொடுப்பது நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தில் நம் சமுதாயத்தில் சேர்ந்தவங்களுக்கு தான் போய் சேர்க்கிறது. இந்த தொழிலாய் சார்ந்து பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இப்படியே தனி நபர் சேமிப்பு என சிந்தித்தால் மீண்டும் அந்நியனுக்கு அடிமையாவது நிச்சயம்!!

உங்கள் கட்டுரை அருமை!! தவறு இருப்பின் மன்னிக்கவும்...

சமீரா said...

மற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..

ஸாதிகா said...

ந்நீங்கள் சொல்வது அத்தனையும் நிஜம்.

//சின்னக் கடைகளை ஒரேயடியாக ஒதுக்குவது என்பது நம்மால் முடியவே முடியாததுதான். // ஹுசைனம்மா,இதுவும் சில இடங்களுக்குத்தான் சரிப்படும்.தோஹாவில் பெரிய சூப்பர் மார்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரியால்.இதுவே சிறிய கடையில் 10 ரியால்.அங்கு அவசரத்துக்குத்தான் சிறிய கடைகளுக்கு செல்வார்கள்.ஆனால் இங்கோ எல்லாம் தலைகீழ்..

pudugaithendral said...

வாங்க சமீரா,

நான் அந்நிய முதலீட்டை ஆதரிக்கலை.
வால்மார்ட் ஆகட்டும், மெட்ரோ ஆகட்டும் அடிக்கடி போக முடியாது. காரணம் கிலோ கணக்குலத்தான் வாங்கணும்.நான் கேப்பது என்னன்னா, சில்லறை விற்பனைக்காரர்கள் தங்களுக்கு கஸ்டமர் வேணும்னா சில தள்ளுபடிகள் mrpல செஞ்சுக்கொடுக்கணும் என்பதுதான்.

தவறெல்லாம் இல்ல. நீங்க உங்க கருத்தை சொல்றீங்க அம்புட்டுதான்.

pudugaithendral said...

மற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..//

எங்க சொல்றீங்க. சில்லறைக்கடைகளிலா இல்ல ஹோல்சேல் கடைகளிலா?

pudugaithendral said...

மற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..//

எங்க சொல்றீங்க. சில்லறைக்கடைகளிலா இல்ல ஹோல்சேல் கடைகளிலா?

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

சூப்பர் மார்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரியால்.இதுவே சிறிய கடையில் 10 ரியால்//

இங்கயும்தான். சூப்பர்மார்க்கெட்டில் 10ரூவா. அதுவே கடைகளில் 12 லேர்ந்து 15 :(

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

சூப்பர் மார்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரியால்.இதுவே சிறிய கடையில் 10 ரியால்//

இங்கயும்தான். சூப்பர்மார்க்கெட்டில் 10ரூவா. அதுவே கடைகளில் 12 லேர்ந்து 15 :(

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சமீரா said...

மற்றொரு லாபம் இந்த கடைகளினால் நமக்கு: எடையில் அடிக்க வாய்ப்பில்ல்லை..//

எங்க சொல்றீங்க. சில்லறைக்கடைகளிலா இல்ல ஹோல்சேல் கடைகளிலா?

- வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் தான்.. எலேக்ட்றோனிக் தராசு இல்லையா!!!

Pandian R said...

அன்பின் தென்றலாரே,
பதிவை இரண்டு முறை படித்தாகிவிட்டது. பின்னூட்டம் இடத்தான் நேரம் கூடிவரவில்லை.

இந்தப் பிரச்சினையை அனைவரும் அடித்துத்துவைத்துக் காயப்போட்டுவிட்டனர். idealisticஆகப் பார்த்தால் வாக்குவாதம் நீண்டுகொண்டுதான் போகும். ஆனால் நிதர்சனத்தில் என்ன நடக்கும் என்பதுதான் நீங்க எழுதியிருப்பது.

கொள்ளையர்களில் கொஞ்சம் நமக்கு ஏதுவான கொள்ளையர் யார் என்று தெரிவு செய்வதுதான் இன்று நடந்துள்ளது. நமது தமிழ்நாடு ஆந்திரா என்று இல்லாமல் இந்தியா முழுமையிலும் உள்ள வணிக இடைத்தரகு மாபியா என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. உலகப் பணக்காரரான அனில் அம்பானியால் கூட அடககி ஆளமுடியாத கெட்ட சக்தி அது.

கெட்ட சக்தி என்று நான் கூறக் காரணம் கொள்முதல் முறையை மிகக் கொடூரமான முறையில் புற்றுநோய் பிடித்த நிலையில் வைத்திருப்பதே. உற்பத்தி செய்யும் விவசாயி அல்லது பிற உற்பத்தி மக்களுக்கோ - வாங்கும் வாடிக்கையாளருக்கோ சென்று சேராமல் ஒட்டு மொத்தமாக விழுங்கப்பார்ப்பவை இந்த இடைத்தரகு மாபியாக்கள்.

உழவர் சந்தையை ஒரு திராவிட அரசியல் சக்தி இந்த இடைததரகு மாபியாவுடன் கூட்டு வைத்து மிக மோசமான முறையில் அழித்திருக்கிறது. இன்னைக்கி புதுக்கோட்டை உழவர் சந்தையில் ஒரு விவசாயி சுதந்திரமாக கடை போட இயலாது.

ரிலையன்சு மோர் அங்காடிகள் வந்தபோது இந்த கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறையும் மேலும் கொள்முதல் நேரடியாக உற்பத்தி செய்பவர்களிடம் நடக்கும் (விவசாயிகள் மறறும இன்ன பிறர்) என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. உண்மையில் இந்த இடைததரகு மாபியாவை வெல்ல ரிலையன்சால் முடியவில்லை

ஆனால் இன்றைக்கு நமக்கு வரும் காய்கறி பருப்பு வகையறாக்களில் கடையில் வாங்குவதை விட இந்த ரிலையன்சு அங்காடிகளில் தரமாக (fresh, expiry date not barred etc)இருககிறது என்பது என் கணிப்பு. சென்னையில் உள்ள தெற்கத்திய வணிக மக்களின் மிகப்பெரிய சாப்பிங்கில் லேபிள் இருக்க உள்ளே உள்ள பொருள் மாற்றப்படுகிறது என்பது உண்மை. கலப்படம் என்பது தமிழ்நாட்டில் மிக அதிகம் (சமீபத்தில் ஆந்திர உணவையும் தமிழக உணவையும் ஒப்பிடுகையில் ஜெயமோகன் சொன்னது) - இது தரம்

விலை - சல்லிசு என்று கூற இயலாது. ஆனால் கொள்முதல் முறை மாற்றப்படுமானால் தற்போதைய விலை குறைய வாய்ப்புள்ளது - இது விலை.

ஆக கொள்முதல் முறை வேறுபட்டு அதன் பயன் உற்பத்தி செய்பவர்களுக்குச் சென்று சேரும் என்கிற நம்பிக்கையில் - சில்லரை வணிகத்திலும் FDIஐ ஆதரிக்கவே வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.தவிறவும் இன்சூரன்சு - ஏரோப்பிளேன் என்று அனைத்திலும் ஏற்கனவே திறந்தாச்சு. சோனி வோர்ல்டு - சாம்சங் ஸ்டோர் எல்லாம் திறக்கறப்ப எதிர்ப்புகள் எங்கே போனதென தெரியலை. அவை எல்லாம் 100 சத அந்நிய முதலீடுகள்.

நம்முடைய எதிர்பார்ப்பு காண்ட்ராக்ட் விவசாயம் - விவசாயிகளை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. நானும் நம்புகிறேன்.

அடுத்த கடை அண்ணாசசியோ - அவர் வாங்கும் இடைத்தரகரோ - சல்லியும் உற்பத்தி செய்பவருக்காகக் கிள்ளிப்போட்டதில்லை.

இன்னொரு கேள்வி கேட்கலாம். ஒருவேளை விவசாயம் சுததமாக அத்துப்போய்விட்டது என்றால் கடைகள் மூடப்பட்டுவிடுமா? கண்டிப்பாக நடக்காது. அப்போது இந்த இடைத்தரகு மாபியாக்கள் இறக்குமதி செய்து இலாபத்தில் கொழிக்கவே போகிறது.

அவை போடுவது பொய்வேசம்.

தவிற இப்போதைக்கு எந்த அரசாக இருந்தாலும் இந்த FDI வந்தே தீரவேண்டிய நிலையில்தான் இருக்கிறது நமது தேசம்!

pudugaithendral said...

வாங்க சமீரா,

அதென்னவொ உண்மை.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

விரிவான பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

இடைத்தரகு பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனை தான். உழுதவனுக்கு உழக்கு கூட மிஞ்சாது. அங்கேயிருந்து நம்ம கைக்கு வர்ற வரைக்கும் நிறைய்ய பேர் சாப்பிடறாங்க.

//ஆனால் இன்றைக்கு நமக்கு வரும் காய்கறி பருப்பு வகையறாக்களில் கடையில் வாங்குவதை விட இந்த ரிலையன்சு அங்காடிகளில் தரமாக (fresh, expiry date not barred etc)இருககிறது //

இங்கே செகந்திராபாதிலிருந்து 38 கிமீ தூரத்தில் இருக்கும் சின்ன சின்ன கிராமங்களுக்கு காலை நேரத்தில் போனால் ரிலையன்ஸ் போன்ற கடைகளிலிருந்து ஃப்ரெஷ்ஷாக காயக்றிகளை ஏற்றுவதை பார்க்கலாம்.

பாலக்கீரை அங்கே வாங்குவதற்கும், சாதாரணமா வாசலில் கொண்டு வருவ்பவர்கிட்ட வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கு. ரிலையன்ஸ், ஹெரிடேஜ் போன்ற இடங்களில் இருக்கும் பாலக் நீளமா நல்லா இருக்கும். கீரைக்காரர் கொண்டு வருவது சின்னதா கொத்தமல்லிக்கட்டு மாதிரி இருக்கும்.

ம்ம்ம்ம்

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் காயகறி வாங்க மோண்டா மார்க்கெட் போவேன், இல்லாட்டி உழவர் சந்தையிலேர்ந்து லாரில போட்டு கொண்டு வந்து வாரத்துக்கு ஒரு நாள் விப்பாங்க. அங்க வாங்கிகிட்டு இருந்தேன்.

ஆனா இப்ப ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் எங்க வீதியிலேயே சந்தை மாதிரி வந்திருது. எல்லாமும் கிடைக்குது. ஃப்ரெஷ்ஷா, அதே சமயம் நல்ல விலையில் (மார்க்கெட் விலைதான்னாலும் அதை விட இளசா நல்லா இருக்கு)

இவங்களோட கனிவான வியாபரம் பத்தி சொல்லியே ஆகணும். வெண்டக்காயை உடைச்சு பாத்து வாங்குவதெல்லாம் மார்க்கெட்டில் சாத்தியமில்லை. கறாரா இருப்பாங்க. ஆனா இங்க அப்படி இல்லை. இதெல்லாம் பார்த்துட்டு வீட்டுக்கிட்டேயே வாங்க ஆரம்பிச்சிட்டோம்.

இந்த மாதிரி எல்லா ஏரியாவுலயும் கடை போடறாங்க. அதனால மார்க்கெட் ஆளுங்க எங்க வயத்துல அடிக்கறாங்கன்னு புலம்பல்.

இந்த மாதிரி மாறுதல்கள் தவிர்க்க முடியாது.