Wednesday, August 14, 2013

சீதா கல்யாண வைபோகமே- 2

                                             PELLI CHUPULU/ PILLA CHUPULU                              
                   
                                                     பெண்பார்க்கும் படலம்

காரில் வந்து இறங்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை பார்த்தார் தியாகு. ”கீழே போய் கூட்டிண்டு வாப்பா” என பானுபின்னி சொல்ல தியாகுவும், ஷ்யாமும் லிஃபிடில் போய் அவர்களை அழைத்து வந்தார்கள்.

சிரித்த முகத்துடன் பத்மா அவர்களை வீட்டுவாசலில் நின்று வரவேற்றார்.
அனைவரும் உள்ளே வந்ததும்  உட்கார வைத்து கொண்டிருந்தார் தியாகு.
ஷ்யாமும் , பத்மாவும் அனைவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மணமகனின்  தாய்  கொண்டு வந்திருந்த பூ, பழம் ஆகியவற்றை பத்மாவிடம் கொடுத்தார். அதற்குள் கந்தம், குங்குமம், சர்க்கரை கொண்டு வந்தான் ஷ்யாம். அதை வாங்கி வந்திருக்கும் ஆண்களுக்கு தியாகுவும், பெண்களுக்கு பத்மாவும் கொடுத்தார்கள். மணமகனின் அப்பா மணி தான் பேச்சை ஆரம்பித்தார். “நமஸ்காரம், நான் தான் மணி, இதுதான் என் மனைவி லீலா.அது எங்க மாப்பிள்ளை அகில். இது என் மகள் ரூபா. இது எங்க அம்மா என அறிமுகம் செய்து வைத்தார்.  கூட இன்னும் சில உறவினர்களும் வந்திருந்தார்கள்.


தியாகு, ஷ்யாம், பத்மா தவிர உள்ளூரிலேயே இருக்கும் தியாகுவின் சகோதரியும், அவரது கணவரும் வந்திருந்தார்கள். இவர்களை அறிமுகம் செய்து வைத்துவிட்டு தனது பின்னியையும், மாமியாரையும் அறிமுகம் செய்துவைத்தார். பானுசித்தியை மாப்பிள்ளை பையனின் பாட்டிக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவரது பக்கத்திலேயே வந்து உட்கார்ந்து கொண்டார். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை பையனின் அக்கா ரூபா கர்ப்பிணியாக இருந்தார். 7 மாதம் இருக்கும். பத்மாவின் அம்மா ராஜி மகளுக்கு உதவியாக கிச்சனில் சுடச்சுட பஜ்ஜி போட்டு கொண்டிருந்தார். பத்மா ஒரு தட்டில் பஜ்ஜியும், கப்பில் கேசரியும் வைத்து எல்லோருக்கும் கொண்டு போய் கொடுத்தார்.  எல்லோரும்
எடுத்துக்கொண்டார்கள். “வயசாச்சும்மா, தின்னா செரிமாணம் ஆகாது” என்று சொல்லி ஒரே ஒரு ஸ்பூன் கேசரி மட்டும் வாயில் போட்டுக்கொண்டார் மாப்பிள்ளை பையனின் அவ்வா சுந்தரி. ”பொண்ணை காபி கொண்டு வரச்சொல்லட்டுமா? எப்படி? என பானுபின்னி கேட்க, சுந்தரி அவ்வா,”அதெல்லாம் எதற்கு சும்மா வந்து உட்காரச்சொல்லுங்க போதும். காபி கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம் ”என்றார்.

மாமியாரை எதிர்த்து மருமகளும் ஒன்றும் சொல்லவில்லை. ஆமாம் அப்படியே செய்யலாம். என்று சொல்ல சீதாவை அழைத்து வர பத்மா உள்ளே போனார். அதிக அலங்காரம் மேக்கப் இல்லாமல் சின்னதாக நெத்திசுடி, கழுத்தில் சின்ன நெக்லஸ், கைகளில் வளையல், தலையில் பூ என அம்சமாக நடந்து வந்தாள் சீதா. சீதா உட்கார்ந்திருந்த அறையை விட்டு வெளியே வரும்போது எதிரில் உட்கார்ந்திருக்கும் ரகுராமை பார்க்க நேர்ந்தது. மெல்ல சிரித்து தலைகுனிந்த படியே வந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.

”எல்லோருக்கும் சேர்த்து ஒரு நமஸ்காரம் செய்மா போதும் என்றார் மணி. சீதாவும் அப்படியே செய்தாள். ரகுராமின் அம்மா எழுந்து சீதாவை கைபிடித்து அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டாள். கொஞ்ச நேரம் ரூபா
சீதாவோடு பேசினாள்.  எல்லோரும் சகஜமாக இருந்தார்கள்.

லீலா தன் மாமியாரிடம் வந்து காதில் என்னவோ கேட்டாள். அதற்கு சுந்தரி அவ்வா சிரித்துக்கொண்டே தலையாட்ட கணவனுக்கு கண்ணாலே சைகை காட்ட மணி தியாகுவிடம்,”பையன் பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு ஆசைப்படறான்!” என்று சொல்ல அதுக்கென்ன சார் அப்படின்னு சொல்லி பக்கத்தில் இருந்த ரூமிற்கு மகளை அழைத்து செல்ல சொல்லி பத்மாவுக்கு சொன்னார். ரகுராமும் எழுந்து போய் சீதாவிடம் பேசினான்.


பானுபின்னியும், சுந்தரி அவ்வாவும் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பது பத்மாவுக்கு பிடிக்கவே இல்லை. அந்தம்மாவோட இந்தம்மாவுக்கு என கிச்சனில் இருந்த தன் அம்மாவிடம் புலம்பினாள். மகளை கண்களாலே அடக்கிவிட்டு,” நீ போடும் ஷ்பெஷல் ஃபில்டர் காபியை கலக்கு என்றார்”.
பத்மாவின் கைமணமே மணம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கூட இவ்வளவு நல்ல காபி கிடைக்காது. காபியின் வாசனையே சூப்பராக இருக்கும்.

ரூபாவின் கணவருக்கும், சுந்தரி அவ்வாவுக்கும் மட்டும் டீ போட்டு (முன்பே கேட்டுக்கொண்டு வந்துவிட்டார்) ஃப்ளாஸ்க்கில் ஊற்றிவிட்டு, காபி கலந்து வைத்து விட்டு ஹாலுக்கு போனார். கூடவே அம்மம்மா ராஜியும் வந்து பானு பின்னி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

அதற்குள் ரகுராமும் சீதாவும் பேசி முடித்து வெளியே வந்தனர். பத்மா எல்லோருக்கும் காபி/டீ கொண்டு வந்து கொடுத்தார்.  சீதாவை உள்ளே அழைத்து செல்லலாமா என கேட்டார் தியாகு. வந்திருந்தவர்கள் சரியென்று தலையாட்ட சீதா அம்மம்மா ராஜியுடன் உள்ளே போனாள்.

மாப்பிள்ளையுடன் அவரது பாவா (அக்கா ரூபா கணவர்) அகில் எழுந்து வெளியே செல்ல, மெல்ல ரூபாவும் அவர்களை தொடர்ந்து வெளியே போனார். மூவரும் கூடி பேசியதும் அகில் வந்து மாமனார் காதில் ஏதோ சொல்ல, விஷயம் சுந்தரி அவ்வாவரை சென்றது.

சுந்தரி அவ்வா நானே சொல்லிடறேன்! என்று சொல்லி ”இத பாருங்கோ!
இந்த ஊருக்கு போய் சொல்றேன், லெட்டர் போடறே,இமெயில் அனுப்பறேன் எல்லாம் வேணாம். போட்டோவுல பிடிச்சுதான் பெல்லி சூபுலுகே வந்தோம். நேரிலும் சீதாவை ரகுவுக்கு பிடிச்சிருக்கு. சீதா அபிப்ராயம் என்னன்னு கேட்டு சொன்னா மத்ததை பேசலாம் என்றார்.

 தியாகுவும், பத்மாவும் உள்ளே வந்து மகளிடம்,”என்னம்மா? பிடிச்சிருக்கா? உன் அபிப்ராயம் என்ன” என கேட்க, ரொம்ப வெட்கமெல்லாம் படாமல் புன்முறுவலுடன் தன் சம்மதத்தை சொன்னாள் சீதா. முதலில் பானுபின்னியையும் ராஜியையும் உள்ளே அழைத்து விவரத்தை சொல்ல அம்மம்மா ராஜியே சொல்லட்டும் என்று சொல்ல மணமகன் வீட்டினரிடம் வந்து “ எங்க பேத்திக்கும் சம்மதம்!” என்று சொன்னார்.

ரொம்ப சந்தோஷம். இப்ப திரும்பவும் சர்க்கரை கொடுங்கன்னு சொல்ல எல்லோரும் ஆனந்தமா எல்லோரும் பேச ஆரம்பிச்சாங்க.



தொடரும்

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

பெல்லி சூப்புலு.....

ம்... பொண்ணுக்கும் பையனுக்கும் ஓகே.... அடுத்தது என்ன....

படிக்க நாங்க ரெடி....

pudugaithendral said...

வாங்க சகோ,

படிக்க நீங்க ரெடின்னா எழுத நானும் ரெடி. சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை அடுத்த பதிவு....

உங்க வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

படிக்க நீங்க ரெடின்னா எழுத நானும் ரெடி. சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை அடுத்த பதிவு....

உங்க வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

பெண் பார்த்தாச்சு. அடுத்து கல்யாண அமர்க்களம்தான்:)

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஒவ்வொண்ணுமே அமர்க்களமாச்சே. :))

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

கல்யாண வைபோகமே.
சீர்எல்லாம் உண்டோ :))

கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு சாறியும் தரவேண்டும்.:) வருகின்றோம்.

pudugaithendral said...

வாங்க மாதேவி,

சீர், பட்சணம் எல்லாம் உண்டு. :))

புடவைதானே கொடுத்திட்டா போச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

Geetha Sambasivam said...

அட?? ஆமா இல்ல? நல்லதா சாமுத்ரிகா பட்டுப் போதும் எனக்கு. அதிலே என்னோட பேரும், நம்ம ரங்க்ஸோட பேரும் போடச் சொல்லிடுங்க. :)))))

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல் - பெண் பார்க்கும் படலம் அருமை . சென்ற மறுமொழியினைப் போல எழுத வில்லை. சுருக்கமாக எழுதி விடுகிறேன்

மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்திறங்க, தியாகுவும் ஷ்யாமும் லிஃப்டில் சென்று அனைவரையும் அழைத்து வந்தனர். பத்மா வீட்டு வாசலில் வரவேற்க, தியாகு அனைவரையும் அமர வைத்துக் கொண்டிருந்தார். பத்மாவும் ஷ்யாமும் தண்ணீர் கொடுத்தார்கள்.

மாப்பிள்ளையின் தாய் லீலா பூ பழம் போன்றவற்றை பத்மாவிடம் அளிக்க, ஷ்யாம் கொண்டு வந்த கந்தம் குங்குமம் சக்கரை போன்றவற்றை ஆண்களுக்குத் தியாகுவும் பெண்களுக்கு பத்மாவும் கொடுத்க்தனர். மாப்பிள்ளையின் தந்தை அனைவரையும் அறிமுகப் படுத்தி வைத்தார்.

மாப்பிள்ளைக்கு அப்பா மணி, அம்மா லீலா, அக்கா ரூபா, ரூபாவின் கணவர் அகில், மணியின் தாயார் மற்றும் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

தியாகு பெண் விட்டார் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பஜ்ஜி கேசரி காஃபி எல்லாம் அனைவருக்கும் வழங்கினர்.

பத்மா சீதாவினை அழைத்து வந்தார் - ரகுராமினை ( அப்பா அறிமுகப் படுத்தாத மாப்பிள்ளைங்க ) சீதா பார்த்து மெல்ல சிரித்து விட்டு அனைவருக்கும் வணக்கம் கூறினாள் .

பிறகு மாப்பிள்ளையும் பொண்ணும் தனியாப் பேசணூம்னு ஒரு அறைக்குச் சென்றனர் - இங்கே இருந்தவர்களுக்குக்க் காஃபி கொடுத்து ப் பேசிக்கொண்டிருக்க, ரகுராமும் சீதாவும் அறையை விட்டு வெளி வர, கொஞ்ச நேரத்தில் தியாகு பொண்ணை அழைத்துக் கொண்டு அறைக்கு அழைத்துச் சென்றார்.

மாப்பிள்ளை விட்டார் அனைவரும் கலந்து பேசி பொண்ணூ என்ன சொல்றான்னு கேட்க - இவங்கெல்லாம் சீதாகிட்டே கேடுட்டு - ராஜி வந்து எங்க பேத்திக்குச் சம்மதம்னு சொல்லிட்டா.

எல்லாரும் மகிழ்ச்சியா சக்கரை சாப்பிட்டுட்டு மத்ததப் பேச ஆரம்பிச்சாங்க.

தொடரும்......

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா