Wednesday, December 03, 2014

அம்மம்மா என்றொரு தெய்வம்.

அம்மம்மா என்று மற்றவர்களுக்கு சொல்வேன். ஆனால் மனதாலும் உயிராலும் அவள் எனக்கொரு தாய். என்னைப்பெறாத தாய். அவளுடைய தாயின் நட்சத்திரமும் நாமகரணமும் எனக்கு என்பதால் என்னை அவள் தாய் என்பாள் என் அம்மா.

அம்மம்மாவிற்கு உடம்பு சரியில்லாத நிலையிலும் பேரனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வலிகளை தாங்கி நல்ல படியாக வீட்டிற்கு வந்து, பிறகு சென்னை வரை வந்து பேரனை வாழ்த்தியதை நினைக்கும்பொழுது  மனோபலம் புரியும்.

படிக்கவில்லை என்பதால் தன்னை எப்பொழுதும் தாழ்த்திக்கொண்டதே இல்லை. கண்மூடி நின்றால் கண்முன் தோன்றுவது அழகான நெற்றியில் வைத்த குங்கும பொட்டு, சீராக வாரிய தலை, நேர்த்தியான உடை. புடவைதான் கட்டுவார் என்றாலும் அதில் ப்ளவுஸ் சரியான மேட்சிங்காக இருக்கும். சாயம்போன புடவைகள் எல்லாம் அம்மம்மாவுக்கு அலர்ஜி. ஆர்பாட்டம் இல்லாத அழகு அம்மம்மாவிடம் நிரந்த்ரமாக குடிகொண்டிருந்தது. வீட்டில் இருந்தாலும் நேர்த்தியாக ட்ரஸ் செய்து கொள்ள வேண்டும் என்பது அம்மம்மாவின் குணம்.

கடந்த மாதம் உடல்நிலை மோசமாகிவிட்டது. அதிலும் தன் நினைவு இல்லாமல் இயற்கை உபாதைகள் செய்துவிட அதை அத்தைகள் சுத்தம் செய்திருக்கிறார்கள். எப்பொழுதோ நினைவு வந்த பொழுது அது தெரிந்து விட  நவம்பர் மாத பவுர்ணமியிலிருந்து உண்ணா நோன்பு ஆரம்பித்திருக்கிறார். ஆகாரம் கிடையாது. எப்பொழுதாவது கால் கிளாஸ் ஹார்லிக்ஸ். அதுவும் நீரில் கரைத்தது. இப்படி தன்னை ஒடுக்கிக்கொண்டே வந்தவர் கடந்த வாரங்களில் ஹார்லிக்ஸ் குடிப்பதையும் நிறுத்திவிட்டார். தண்ணீர் மட்டும் தான். நெஞ்சுக்கும் தொண்டைக்கும் சுவாச கர் கர் என்று ஆகிவிட உடன்பிறப்புக்களுக்கு சொல்லிவிட்டனர்.

எனக்கும் போன் வந்தது, லோ பீபி ஜாஸ்தியாகி என்னால் முடியாத நிலை. தனியாக நான் பயணம் செய்வது இயாலது. எதேச்சையாக என் அம்மா சென்னையிலிருந்து வரும் அதே சமயம் ஒரு விமானம் ஹைதையிலிருந்து புறப்பட்டு மும்பையை சேர்வது இருப்பதை பார்த்தான் அயித்தான் புக்கிங் செய்து கொடுக்க, மும்பை ஏர்போர்ட்டில் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து சின்ன மாமா வீட்டிற்கு போனோம்.

அம்மம்மாவின் நிலை பார்த்து மிக மிக வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு பாகங்களும் வேலை செய்வதை குறைத்துக்கொண்டே வந்தது.  மருத்துவரை அழைக்காதே, எனக்கு எந்த ட்ரீட்மெண்டும் வேண்டாம். ஊசி, சலைன் எல்லாம் கொடுத்து எனக்கு ரண வேதனை தரவேண்டாம் என்று அம்மம்மா உத்தரவு போட்டிருந்தாலும், மனது கேட்காமல் மாமா மருத்துவரை வீட்டுக்கு அழைத்தார். ப்ரி கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும், அதனால் நினைவு பிரண்டு போகிறது. ஹாஸ்பிட்டலில் சேர்த்து மூக்கு வழியாக உணவு கொடுக்கலாம் எனவும் அப்பொழுதும் சரியாக வாய்ப்பு கம்மி என்றும் சொன்னார். ரணவேதனை ஏன் தரவேண்டும் என தாத்தாவும் வேண்டாம் என்று சொல்லவே கங்காஜலம் மட்டும் அருந்திக்கொண்டிருந்த அம்மம்மாவுக்கு கொஞ்சம் பால் புகட்டினோம்.

ஆஷிஷ் அம்ருதாவிற்கு பரிட்சை இருக்க, அயித்தான் லீவு போட்டு பார்த்துக்கொண்டது தொடர முடியாத காரணத்தால் நான் ஊருக்கு கிளம்ப முடிவு செய்து வெள்ளிக்கிழமை மாலை ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து கொண்டேன்.  வியாழன் மாலை 6 மணியிலிருந்து அம்மம்மாவுக்கு பிபி குறைய துவங்கியது. சத்யா மாமாவின் மகள் சசி, ஆயுர்வேதிக் டாக்டர். அருகிலேயே இருந்து பிபி பார்த்துக்கொண்டே வர பல்ஸ், பீபி மேலே, கீழே என மாறிக்கொண்டே வந்தது. 8 மணி வாக்கில் மிக அதிக குறைந்த பீபிக்கு வந்து அம்மம்மா எங்களை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. அருகிலேயே தாத்தா, மாமாக்கள், அத்தைக்கள், அம்மா, அப்பா,சித்தி, பேரன், பேத்திக்கள் என இரண்டு நாட்களாக உட்கார்ந்திருந்து அம்மம்மாவுக்கும் மிகவும் பிடித்த பக்தி பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்வது, மொபைலில் வைத்து போடுவது என செய்து கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் அருகிலிருக்க எங்கள் அன்பு தெய்வம் எங்களை விட்டு பிரிந்தது.

அம்மம்மாவின் ஆசை படி சின்ன மகனின் வீட்டில் உயிர் பிரிந்ததும், பெரிய மகன் வீட்டுக்கு கொண்டு சென்றோம். (என்னைப்பார்க்க நிறைய்ய கூட்டம் வரும் அதனால் சத்யா வீடுதான் சரி என சொல்லியிருந்தார். சொன்னது போல ஏகப்பட்ட கூட்டம்)  ஆஷிஷ் அம்ருதாவை பார்த்துக்கொள்ள அயித்தான் உடன் கிளம்பி வந்து சேர்ந்தார். பிறந்த வீட்டு இறுதி மரியாதையை அயித்தான் அம்மம்மாவுக்கு செய்தார். என் புகுந்த வீடு அம்மம்மாவுக்கு பிறந்த வீடு ஆயிற்றே.

நான் ஊருக்கு கிளம்பியதற்கு பின் ஏதாவது நிகழ்ந்திருந்தால் அருகில் நானில்லையே என வாழ்நாள் முழுதும் அழுதிருப்பேன் என்பதால், அம்மம்மா ”உனக்கு  முன்னே நான் கிளம்புகிறேன்” என புறப்பட்டாரோ!!! என் அன்பு தெய்வம். சுமங்கலியாக  போவதில் சந்தோஷமா!! தன் கடமைகளை செய்து முடித்துவிட்ட திருப்தியா அம்மம்மாவின் முகத்தில் சந்தோஷம், கம்பீரம் எல்லாம் களைகட்டி நிம்மதியாக சாஸ்வதமான தூக்கத்துக்கு போய்விட்டாள்.

தாத்தாதான் ரொம்ப கலங்கி போய்விட்டார். சும்மாவா? 65 வருட சிநேகிதமாச்சே. எங்கள் அன்பு தெய்வம் எங்களை காத்து ரட்சிப்பாள். அம்மம்மாவின் மற்ற காரியங்களுக்காக ஊருக்கு போக வேண்டும். எல்லாம் முடிந்து வந்து என் பதிவுகள் தொடரும்.12 comments:

Mahi said...

அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்! அதிகம் வேதனைப்படாமல் இறைவனடி சேர்ந்தார் என்பது நிம்மதிதான் அக்கா!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி மஹி.

அமுதா கிருஷ்ணா said...

இன்று தான் அம்மா போன்ற அன்புள்ள ஒருவர் நெல்லையில் நவம்பர் 26..சுமங்கலியாக இறந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டு இங்கே வந்தால் இன்னொரு செய்தி. அவ்வாவின் ஆத்மா சாந்தியடைய வணங்குகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கலா, அன்பு தெய்வங்கள் என்றாவது பிரியத்தான் வேணும். அம்மம்மா இத்தனை கட்டுப்பாடுகளோடு உயிர் துறந்தார் என்று கேட்க மிகப் பெருமையாக இருக்கிறது. தாத்தாவுக்கு மன உறுதி கடவுள் கொடுக்கட்டும்.ஆறுதல் பெறுங்கள் கலா.

வெங்கட் நாகராஜ் said...

அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

-'பரிவை' சே.குமார் said...

அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Thanai thalaivi said...

அவர்கள் தெய்வமாய் இருந்து உங்கள் அனைவரையும் காத்து ரட்சிப்பார்கள். தத்தாவை தேற்றுங்கள்.

Appaji said...

அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்...

புதுகைத் தென்றல் said...

அனைவருக்கும் நன்றி

Ranjani Narayanan said...

கணவர், குழந்தைகள் அருகிலிருக்க சுமங்கலியாக இறைவனடி சேர்ந்த உங்கள் பாட்டியின் கொடுப்பினை யாருக்கு வரும்? அந்த நல்ல ஆத்மா நிச்சயம் இறைவனுடன் கலந்திருக்கும்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள் உங்களுக்கும், குறிப்பாக உங்கள் தாத்தாவிற்கும்.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ரஞ்சனிம்மா,

அம்மம்மா காலமான அன்று ஏதோ அபிஜின் முகூர்த்தமாம். அந்த நாளில் இறைவனடி சேர்வது கூட பூர்வ ஜென்ம புண்ணியம் என்று சாஸ்த்ரிகள் சொன்னார்.