Thursday, January 21, 2016

கேரள நந்நாட்டிலே......... பாகம் 2

கேரளாவுல தான் முதல்ல மழைக்காலம் துவங்குது. அதை வெச்சுத்தான் மத்த இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பை கவனிப்பாங்க.கேரளா பத்தி எழுதற எந்த பதிவும் "Gods own country"  அப்படிங்கற வார்த்தைகள் இல்லாம இருந்ததில்லை. அழகா இருக்கே அதனால சொல்றாங்களான்னு நினைச்சா அதுமட்டுமில்லை காரணம், புராண இதிகாசத்தின் படி விஷ்ணுவின் 6ஆவது அவதாரமான பரசுராமர் இந்த ஊரை உருவாக்கினதா சொல்றாங்க. விக்கிப்பீடியாவுக்கு இங்கே சொடுக்கவும்.

கடலால் ஆள்கொள்ளப்பட்டிருந்த இடத்தை தனது கோடாரியை கொங்கன் லேர்ந்து கன்யாகுமரி வரைக்கும் போட சமுத்திரம் வழிவிட்டு இந்த அழகிய ஷேத்ரம் உருவானதா சொல்றாங்க. கேரளா டூரிசம் "Gods own country"  இப்படித்தான் தங்க ஊரை சுற்றுலா பயணிகளுக்கு சொல்றாங்க. தப்பே இல்லை. எங்கெங்கு காணினும் பசுமை, Backwaters, சில இடங்களில் இன்னமும் படகில் தான் பயணம் செய்யறாங்க. ஒரு பெரிய படகில் பைக் போன்றவற்றை ஏத்திகிட்டு அடுத்த கரைக்கு போய் அங்கேருந்து வேலைகளை முடிச்சு வர்றவங்களை பாத்தோம்.

கொச்சிலேர்ந்து சபரிமலை 4 மணிநேரப் பயணம். நாங்க நெடும்பசேரி ஏர்போர்ட்லேர்ந்து கிளம்பிட்டோம். கேரளாவுல இருந்த வரைக்கும் எங்களுக்கு தோணின விஷயம்  எப்படி கட்டிட அமைப்புகள், பசுமை எல்லாம் இலங்கை மாதிரியே இருக்கு என்பதுதான்.  விண்ணைத்தாண்டி வருவாயா படத்துல ஒரு டயலாக் வரும். இங்க வீடுகளை விட சர்ச்கள் தான் அதிகமா இருக்குன்னு. எங்க பசங்க எம்புட்டு சர்ச்கள் வழியில இருக்குன்னு எண்ண ஆரம்பிச்சு களைச்சு போய் விட்டுட்டாங்க. இந்து கோவில்கள் போல துவஜஸ்தம்பம் வெச்ச சர்ச்களை பாக்கும்போது வியப்பா இருந்தது.

பரசுராம ஷேத்திரம்னு சொல்றாங்க ஆனா நிறைய்ய கிறிஸ்துவர்கள்தான் இருக்கற மாதிரி தோணுது. மதமாற்றம் இந்த மாதிரி விஷயங்களுக்குள் நுழைய நமக்கு மேட்டர் தெரியாது. கிறிஸ்துமஸ் சமயம் திருச்செந்தூர் போயிருந்தோம் . அந்த கோவில் எவ்வளவு பிரசித்தமான கோவில்னு தெரியும். அந்த கோவிலுக்கு போகும் ரோடு, ரொம்ப பக்கத்துல இருக்கற வீடுகள் எல்லாமும் அலங்கார விளக்குகள், ஸ்டார்கள்னு இருந்தது.  நடப்பது நல்லதா கெட்டதான்னு தெரியலை. ஆனா எப்படி இப்படில்லாம் மாற்றம் நடக்குதுன்னு செம யோசனை. சரி அதை விடுங்க.

போற வழியில தான் சோட்டானிக்கர பகவதி கோவில் வரும்னு அயித்தான் சொன்னாங்க. ஆகா அது ரொம்ப தொலைவுல இருக்கும்னு நினைச்சுத்தான் ப்ளான்ல சேக்கலை போகலாம்னு சொன்னேன். அந்த சமயம் கோவில் மூடியிருக்கும் என்பதால நாளை அதே வழியிலதான் கொச்சிக்கு வரப்போறோம் அப்ப பாத்துக்கலாம்னு அயித்தான் சொன்னாப்ல. ஆனா அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. செம கூட்டம் இருக்கும். அதைத் தவிரவும் குருவாயூர் கோவிலுக்கு கட்டிட்டு போக மட்டுமே ஒரு புடவை எடுத்து போயிருந்தேன். அப்படி இருக்க அடுத்த நாள் போக முடியாதுன்னு சனிக்கிழமை குருவாயூர் போறதுக்கு முன்ன காலேல சோட்டானிக்கர பாத்துக்கலாம்னு ப்ளான் செஞ்சோம். பெண்களுக்கு புடவை, சுடிதார், ஆண்களுக்கு வேஷ்டி மட்டுமே சட்டை போடக்கூடாது. இது கேரளாவில் பொதுவான விதி.

கொச்சி சேலம் ஹைவே வழியா போனா சோட்டாணிக்கர வராது. ஆனா இது நெடும்பசேரிலேர்ந்து கொச்சி சிட்டிக்குள் நுழையாம போகும் பாதை. வயலார் ஊரெல்லாம் தாண்டி போய்க்கிட்டு இருக்கோம். கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணியாகிடிச்சு...... நாங்க தங்கப்போற ஹோட்டலுக்குள் வண்டி நுழைஞ்சப்ப அப்பாடான்னு இருந்துச்சு. அதிகாலையிலேயே எந்திரிச்சு, தாமதமான விமானப்பயணம்னு செம டயர்ட்.................

தொடரும்




8 comments:

NDM Gopal Krishnan said...

....எங்களுக்கு "தோணின" விஷயம்..... பேச்சு வழக்குச் சொல்லை "தோணின" பயன்படுத்திய விதம் அழகு.... தமிழ் இலக்கணப்படி இந்தச் சொல் (அர்த்தம்) வேறு வித பொருள் தரும்.... இப்படித்தான் "தோணலை" என்பதும் "செக்கலை" செத்துப்போகவில்லை அதாவது இறந்துபோகவில்லை என்பதும் சொல்வழக்கில் உருவாக்கப்பட்ட சொற்கள்... இவ்வகைச் சொற்கள் சாமர்த்தியமாக எடுத்தாளப்பட்ட விதம் அழகு என்றாலும் ... தமிழ் இலக்கணக் குற்றம், குற்றமே என்பது நக்கீரன் காலத்து வழக்கம்....
மகாகவிக் கம்பர் அவர்கள் தமது இராமாயண காவியத்தை அவையில் எடுத்துரைக்கும்போது "துமி" என்கிற சொல்லை உபயோகப்படுத்தியபோது, அவையிலிருந்த தமிழ் அறிஞர்கள் அந்த சொல்லை ஏற்காமல் சொல் இலக்கணத் தவறு என்றார்கள்... பிறகு அந்த சொல் வழக்கில் உள்ளதா என ஆராய்வதற்கு எட்டு 8-நபர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, எட்டுத் திக்கு நோக்கிச் சென்றார்கள்... அப்போது ஒரு ஊரில் ஒரு தாயார் தமது வீட்டில் திண்ணையில் மோர் கடைந்து வெண்ணை எடுத்துக்கொண்டிருந்தார்.... அவரை நோக்கி அவரது குழந்தை தவழ்ந்து அவர் அருகில் வந்தது,.... அப்போது அந்தத் தாய் தமது குழந்தையை பார்த்து "துமி தெறிக்கும் ... அருகில் வராதே ... வாடை வீசும்" என்றார்.... ஆகவே "துமி" என்கிற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என்கிற விவரம் உடனே சான்றோர்களின் அவைக்கு செல்ல .. கவி கம்பரின் கம்பராமாயணம் அவையேரியது..... ஆகவே தமிழில் ஒரு சொல்லை எடுத்தாளுவது என்பது அத்தனை சுலபமானது அல்ல ..... அன்புடன் ...ரேடியோ கோகி.... புது தில்லியிலிருந்து.....

வெங்கட் நாகராஜ் said...

கேரளப் பயணம்..... ஆஹா நாங்களும் தயார். நிறைய முறை அங்கே சென்றிருந்தாலும் இன்னமும் செல்ல ஆசை உண்டு!

Pandian R said...

கேரளாவின் ரயில் பயணங்கள் மிகவும் அழகானவை.

”தளிர் சுரேஷ்” said...

கேரளப் பயணம் அருமை! மதமாற்ற குழுக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன போலும்! பகிர்வுக்கு நன்றி!

pudugaithendral said...

வாங்க கோபால கிருஷ்ணன்,

தங்களின் முதல் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. எனக்கு தெரிந்த வார்த்தைகளை உபயோகிச்சு எழுதறதுதான் வழக்கம். ஏதோ மனதுல பட்டதை, எனது அனுபவங்களை பகிர்ந்துக்கிறேன். ரொம்ப இலக்கண சுத்தமால்லாம் எனக்கு தெரியாது.
வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

ஆமாம் அழகோ அழகு. வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கடைசி பெஞ்ச்,
பொதுவாகவே எனக்கு ரயில் பயணம் தான் பிடிக்கும். நேரம் ரொம்ப குறைவா இருந்ததால ரயிலில் பயணிக்க முடியவில்லை. அதுக்கென்ன இன்னொரு வாட்டி ட்ரிப் போட்டுடலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

ஆமாம் நானும் அதேதான் நினைச்சேன்.

வருகைக்கு மிக்க நன்றி