Friday, April 22, 2016

சம்மர் லீவ் - பார்ட் 2

ரொம்ப பேருக்கு பசங்களுக்கு லீவுன்னா ரொம்ப கஷ்டமான விஷயம். எப்படி இவங்களை மேய்க்கறது என்பதுதான் அது?ஆமாம் மேய்க்க அவங்க என்ன ஆடா? மாடா அப்படின்னு தோணினாலும்  அவங்களுக்கு போரடிக்காம வெச்சுக்கறது என்பது கஷ்டமான வேலைதான்.

அந்த காலத்தில் ( ஏதோ வயசானவன்னு நினைச்சிடாதீங்க :) ) பசங்களுக்கு லீவு விட்டா ஊர்ல இருக்கற பாட்டி, தாத்தாவீடு, அம்மாச்சி, தாத்தாவீடு, சித்தப்பா வீடு, மாமாவீடு, அத்தை வீடுன்னு போவாங்க. பெரியவங்க கொண்டு வந்து விட்டுட்டு திரும்ப வந்து கூட்டிப்போவாங்க இல்லைன்னா யார்வீட்டுல இருக்கறாங்களோ அவங்க ஒரு எட்டு போய் விட்டுட்டு வருவாங்க.

நேரத்துக்கு சோறு போட்டு பெரியவங்க பாத்துப்பாங்க. கதை சொல்வது, தாயம் விளையாடுவது, இப்படி ஏதாவது விளையாடிட்டு வெய்யில் தாழ்ந்ததும் வெளிய விளையாட விடுவாங்க. முடிஞ்சப்ப சினிமா, பக்கத்து ஊருக்கு ஒரு ட்ரிப்னு ஓடும்.  ராத்திரிக்கு பெரும்பாலும் வீட்ல இருக்கற ஒரு குண்டான்ல சோறு பிணைஞ்சு பிள்ளைகளை வரிசையா உட்கார வெச்சு கையில சோறு போடுவாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் கதை பேசிட்டு தூங்குவாங்க. பெரியவங்க திட்டுவாங்கன்னு ஒரு பயமும் இருக்கும்.ஆனா இப்ப பசங்களை லீவுக்கு அழைச்சுகிட்டு வந்தா கொஞ்சம் டென்ஷன் தான் ஆகுது.

அவங்க வீட்ல எப்படி இருந்தாங்களோ அப்படியே வெளியவும் இருக்கணும்னு ஆசைப்படறாங்க. சைவம் படத்துல வர்ற குட்டி பையன் மாதிரி wifi  இருக்கா? இதுதான் மொதோ கேள்வி  கேட்ஜட்லாம் பொதுவா அவங்க கிட்ட இருக்குது!!! அதனால அது வேணாம். ஆனா எந்த நேரமும் அதோடயே பொழுதை கழிக்கறாங்க. சாப்பிட வைக்க எல்லாம் கஷ்டம் தான். ஏன்னா அவங்க சாப்பிடும் சாப்பாடே மாறுபட்டே இருக்கு. எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி கூட்டத்துல ஒரு 4 வயசு கொழந்தை  அவங்க டேப் சரியா வேலை செய்யலைன்னு எங்க ஐபேடை கொடுத்தாதான் ஆச்சுன்னு அடம். அவ்வளவு காசு போட்டு வாங்கி அதை குழந்தை கையில கொடுக்க நமக்கு பயம். சமாளிக்க ரொம்ப கஷ்டமாச்சு.  சோறு கொடுத்தா வேணாம். பாஸ்தா, நூடில்ஸ், இப்படி தான் வேணும்னு சொல்வது, டீவியில கார்ட்டூன் சேனலைத் தவிர வேற எதுவும் மாத்தக்கூடாதுன்னு அடம், அந்த பக்கம் இந்த பக்கம் போனாலோ நாம வேற சானல் வெச்சுக்கலாம்னு வெச்சா தரையில விழுந்து புரண்டு அடம்!!!!

இன்னொரு வீட்டுக்கு நாங்க விருந்தாளியா போனப்ப வெளிய சுத்தி வந்த டயர்டுக்கு மதியம் கொஞ்சம் படுக்கலாம்னு நினைச்சு படுத்தா டீவியை பெருசா வெச்சு பாத்துக்கிட்டு இருந்துச்சு அந்த வீட்டு குழந்தை. கொஞ்சம் சவுண்ட் கம்மி செய்டான்னு சொன்னா,” எனக்கு இப்படி இருந்தாதான் டீவி பார்க்க பிடிக்கும்னு !!!” பதில் சொல்லுது அந்த 6 வயசு வாண்டு. படுத்திருக்காங்கன்னு  தொந்திரவா இருக்கும்னு இல்லாம அடிக்கடி கதவை திறந்து உள்ளே வருவதும் போவதுமா இருந்துச்சு.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா நம்ம வீட்டு பிள்ளை இப்படி இருக்குமோன்னு யாரும் நினைச்சு பார்ப்பதே இல்லையோன்னு ஒரு எண்ணம். நம்ம பிள்ளைகளுக்கு நாம என்ன சொல்லிக்கொடுத்து வளர்க்கறோம்? புரிதல், விட்டுக்கொடுத்தல், பெரியவர்களை மதித்தல் இதெல்லாம் சொல்லி கொடுத்திருக்கோமான்னு நம்மளை நாமே அலசி பாத்துக்கறது நல்லது. தாத்தா பாட்டிகள் செல்லத்தால பிள்ளைகள் கெடுதுன்னு ஒரு சாரார் சொன்னாலும், தாத்தா பாட்டிகளை எத்தனை பேரப்பிள்ளைங்க மதிப்பா நடத்தறாங்க? சொன்ன பேச்சை கேக்கறாங்க? இதெல்லாமும் தானே சொல்லி கொடுக்கணும். இதெல்லாம் ஸ்கூல்ல சொல்லி கொடுக்க மாட்டாங்க. நாம தான் செய்யணும்.

சம்மர் கேம்ப்புக்கு பிள்ளைகளை சேர்த்துவிடுவதை விட்டுட்டு, நாம பக்கத்துல இருந்து இந்த லீவுல பிள்ளைகளை சரியா முறைப்படுத்த முடியும். கேட்ஜட்களை தள்ளி வெச்சிட்டு, புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், தாயம், நொண்டி விளையாட சொல்லி கொடுக்கறதுன்னு நிறைய்ய செய்யலாம். ஏன் சின்ன சின்னதா வீட்டு வேலை செய்ய பழக்கலாம். துணி காயப்போட்டு, மடிச்சு, இப்படி நிறைய்ய இருக்கு.  அப்ப சம்மர் லீவு என்பது பிள்ளைகளுக்கும் சுமையா இருக்காது. பெத்தவங்க நமக்கும் மேய்க்கும் கஷ்டம் இருக்காது.

தொடரும்......

2 comments:

கோமதி அரசு said...

நல்ல பதிவு . சித்திரை திருவிழாவிற்கு வந்து இருக்கும் தங்கை பேரன் பேத்திகளுடன் தாயம் , பல்லங்குழி விளையாடி மகிழ்ந்தேன்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...