Friday, December 16, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாக - 4

தியானத்தை ஆன்மீக தியானமாக மாத்திப்பது அவங்கவங்க இஷ்டம்னு சொல்லியிருந்தேன். தான் நம்பும் ஏதோ ஒரு சக்தியை நோக்கி மனதை ஒருமுகப்படுத்தி அமைதி காண்பதுன்னு வெச்சுக்கலாம். தியானத்தை ஆன்மீக சம்பந்தபட்ட விஷயம்னு நினைச்சதாலேயே பலருக்கு தியானம் வேணாம்னு தோணும்.

சிலர் கடவுள் மறுப்பாளர்களா இருப்பாங்க. சிலர் எனக்கு சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லைன்னு சொல்வாங்க. தனிமனித கருத்து அவங்களை நாம ஏதும் குத்தம் சொல்லக்கூடாது. அது அவங்க விருப்பம். இந்தப் பதிவுல கொஞ்சம் ஆன்மீகம் பத்தி பேசப்போறோம். என் புரிதலில் ஆன்மிகம் என்பது அதைப்பத்தி சொல்லிட்டு அது எப்படி ஹீலிங்கில் உதவுதுன்னு சொல்றேன். பிடிக்காதவங்க தவறான கமெண்ட் ஏதும் போடாம இந்தப் பதிவிலிருந்து மட்டும் விலகிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கறேன்.

ரொம்ப வருஷம் முன்ன ஒரு சிறுகதை படிச்சேன். படிச்ச புத்தகம், எழுதினவங்க பேரு எதுவும் ஞாபகம் இல்லை. ஆனா அந்தக் கதை மட்டும் இன்னும் என் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கு. இதோ அந்தக் கதையின் சாராம்சம்:

ஒரு வயதான தாய் தன் மகன் மருமகளோட கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாம்னு அமெரிக்கா போயிருப்பாங்க. மகன், மருமக ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க. ரெண்டு பேரும் தினமும் வேற வேற நேரத்துக்கு வீட்டுக்கு வருவாங்க. வரும்போது ரொம்ப டயர்டா வருவாங்க. இதை கவனிச்ச அந்த அம்மா, தன் மகனிடம் ஏம்பா ரொம்ப டயர்டா இருக்க? தினமும் ரெண்டு பேரும் லேட்டா வர்றீங்க, சாப்பிட்டு தூங்கடறீங்க, திரும்ப அடுத்த நாள் ஓட்டம்னு இருக்கு. என்னப்பா வாழ்க்கை இதுன்னு கேப்பாங்க.

அதுக்கு அந்த மகன்,”உனக்கு இதெல்லாம் புரியாதும்மா. ஆபிஸ்ல வேலைபளு, அதனால எங்க ரெண்டு பேருக்கும் நேரமே கிடைப்பதில்லை. சம்பாதிக்கறோம். மனசுல நிம்மதி இல்லை. அதனால தினமும் ஆபிஸ் முடிஞ்சு ரெண்டு பேரும் மனநல மருத்துவர்கிட்ட போய் 1 மணிநேரம் கவுன்சிலிங் முடிச்சு வீட்டுக்கு வர்றோம். அப்படின்னு சொல்வாப்ல.

தன் மகனுக்கும், மருமகளுக்கு இரவு சாப்பாடு கொடுத்திட்டு அவங்க தூங்கப்போகும் முன் அடுத்த நாள் டாக்டர் கிட்ட போகாம ரெண்டு பேரையும் வீட்டுக்கு சீக்கிரம் வரும்படி சொல்வாங்க. தினமும் அங்க போயியும் அலுத்து போயிருக்கற இவங்க சரின்னு சொல்வாங்க.

அடுத்த நாள் சாயந்திரம் வீட்டுக்கு வந்து பெல் அடிக்க அம்மா கதவு திறக்கும்போது வித்தியாசமா இருக்கும். அந்த அம்மா வீட்டை நேர் படுத்தி வீட்டில் இருக்கும் சாமி படத்துக்கிட்ட விளக்கேத்தி, பூவெல்லாம் போட்டு, ஊதுபத்தி ஏத்தி வெச்சிருந்ததால ஒரு புது ஸ்மெல் வித்தியாசமா இருந்திருக்கு. கைகால் கழுவிகிட்டு வந்து உட்கார சொன்ன அம்மா பேச்சை தட்டாம ரெண்டு பேரும் வருவாங்க. யாரும் எதுவும் பேசிக்காம அந்த சூழ்நிலையில் அப்படியே கொஞ்ச நேரம் இருப்பாங்க. விளக்கின் ஒளி, பூவின் வாசம், ஊதுபத்தியின் சுகந்தம்னு ஒரு இதமான நிலையில் உக்காந்திருந்ததுல ரெண்டு பேர் மனசும் இளகி அம்மா, டாக்டர்கிட்ட கவுன்சிலிங் போயும் எங்க மனசு ரிலாக்ஸாகலை, ஆனா இப்ப மனசுக்கு இதமா இருக்குன்னு சொல்வது போல இருக்கும் அந்தக் கதை.

எங்க அம்மம்மா கூட எனக்கு பூஜைகளை இப்படித்தான் அறிமுகம் செஞ்சுவெச்சாங்க. எந்த பூஜைக்கு முன்னாடியும் வீட்டை சுத்த படுத்துவோம். அப்ப தேவையில்லாத அடைசல் போகுது, வீடு சுத்தமாகுது. பூக்கள், விளக்கொளி, பிரசாத வாசனை இதெல்லாம் ஒரு positive vibrations (நேர்மறை அதிர்வுகளை) உண்டாக்கி மனசை லகுவாக்குது.

`வரலட்சுமி பூஜைன்னு ஒரு பூஜை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆந்திராவுல ஜாதி வித்தியாசம் இல்லாம எல்லோரும் செய்வாங்க. ரொம்ப அழகா வீட்டை அலங்கரிச்சு செய்வாங்க. அதுல முக்கியமா புதுப்புடவை வாங்கி பூஜையில வைப்பாங்க. முடிஞ்சவங்க கொஞ்சமாவேணும் தங்க நகை வாங்கி பூஜையில் வைப்பாங்க.தவிர பூஜை செய்யும்போது நல்ல புடவை உடுத்திதான் உக்காருவாங்க. இந்தப் பூஜை லட்சுமி பூஜைன்னு எல்லோருக்கும் தெரியும். லட்சுமி செல்வத்துக்கு அதிபதின்னு சொல்லப்படுற தேவதை. இவங்களை பூஜை செஞ்சா செல்வம் பெருகும். இது நம்பிக்கை. சாயந்திரம் அம்மனை பார்க்க பெண்கள், குழந்தைகளை வரச்சொல்வாங்க. இதனால அடுத்தவங்களுடன் கலந்து பேசி மகிழ, நட்பு வளர்க்க ஒரு வாய்ப்பு. வீட்டோட இருக்கும் பெண்களுக்கு வெளியில போக வாய்ப்பு, வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் அலுவலக வேலைகள் இல்லாத ஒரு மகிழ்வான நேரமா இருக்கும்.

உண்மையில் செல்வம் பெருகுமா? நான் ப்ரபஞ்ச சக்தியைப் பத்தி சொல்லியிருக்கேன். இதை நான் செய்யறேன்னு மனசுல நினைச்சு ஆரம்பிக்கும்போதே நம்ம மனசுல நேர்மறை எண்ணம் (positive thinking )வந்தாச்சு. நாம எதை கேட்கிறோமோ அதை ப்ரபஞ்ச சக்தி கொடுக்குது. இந்த கோணத்துல பாருங்க. அப்ப நமக்கு கண்டிப்பா ஐஸ்வர்யம் பெருகும்.

எங்க அம்மம்மா பூஜை செய்யும் அழகே அழகு. சாமிக்கு அழகு  செய்வதிலும் ஒரு நேர்த்தி இருக்கும். பூஜைக்கு தேவையானதெல்லாம் அழகா ரெடி செஞ்சு வெச்சுக்குவாங்க. பூஜையின் நடுவுல எந்திருச்சு ஓடும் வேலையெல்லாம் இல்லை. எல்லாம் ரெடி செஞ்சு வெச்சுக்கிட்டதும் முதலில் நல்ல புடவை உடுத்தி, தலையெல்லாம் நல்லா முடிஞ்சு, பூ வெச்சு தான் பூஜைக்கு உக்காருவாங்க. (அவங்க உயிரோட இருந்த வரைக்கும் மேட்சிங் இல்லாம புடவை இருக்காது. ஒரு கிழிசலோ, மடிப்பு கலைதலோ இல்லாம அவ்வளவு அழகா உடுத்துவாங்க. கிழிஞ்சதை ஒட்டி போட்டுப்பதை விட அதை வேறஏதாவது உபயோகத்துக்கு மாத்திடுவாங்க. எப்பவும் பளிச்சுன்னு இருந்தாங்க)

பூஜைகள் செய்யும்போது வீட்டில் நேர்மறை அதிர்வுகள் உண்டாகும்னு அம்மம்மா சொல்லிக்கொடுத்தாங்க. பூக்களின் வாசம், ஊதுபத்தியின் சுகந்தம், கந்தம், குங்குமத்தின் வாசனை, மணி அடிக்கும்போது ஏற்படும் நாதம் இதெல்லாம் தான் நேர்மறை அதிர்வை உண்டாக்குது. இதை நானும் செஞ்சா நான் இருக்கும் இடம் நல்லதா இருக்குமே எனும் எண்ணம், அத்துடன் பூஜை செய்வதன் நோக்கம் அதுவும் ஒரு நேர்மறை சிந்தனையை உருவாக்குது என்பதாலேயே எனக்கு பூஜை செய்ய பிடிக்கும்.

என்னை பொறுத்தவரை எனக்குள் இருக்கும் சக்தியை இறையாக பார்க்கிறேன். நான் கடவுள் எனும் போது நீங்களும் கடவுள். அதனால அடுத்தவங்களை காயப்படுத்துவது என்னை நானே காயப்படுத்திப்பது போலத்தான். இதெல்லாம் என் அம்மம்மா எனக்குள் விதைச்சிருக்கும் விஷயங்கள்.  வண்டி வண்டியாக பூக்கள் கொட்டுவதை விட ஆத்மார்த்தமாக வைக்கப்படும் ஒரு பூக்கு மகத்துவம் அதிகம்னு சொல்லும் பகவத் கீதை கிளைக்கதை ஞாபகத்துக்கு வருது.

நம்ம மனதை, செயலை ஒருமிக்க வைத்து நம் மன உளைச்சலை குறைப்பதில் இந்த பூஜைகளுக்கு பெரிய பங்கு இருக்கு. வீட்டில் நேர்மறை சக்தி பெருகும்போது உடன் இருப்போருக்கும் ஒரு அமைதியான ஆனந்தமான சூழலை உருவாக்குது. குடும்பத்தினர் சேர்ந்து கலந்து மகிழ ஒரு வாய்ப்பு.

பூஜை சரி. அதுல சொல்லப்படும் மந்திரங்கள் பத்தி????!!!!! அடுத்த பதிவு அதைப்பத்திதான்.

தொடரும்.No comments: