Thursday, December 29, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் 6

செய்யும் தொழிலே தெய்வம் அப்படின்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அதாவது செய்யும் தொழிலை பூஜை செய்வதாக நினைத்து ஆத்மார்த்தமாக செய்யனும். அப்பதான் அந்த வேலை நல்லா செய்ய முடியும்.  நாம செய்யும் எந்த ஒரு வேலையையும் உணர்ந்து ஒருமுகப்பட்டு செஞ்சா ரொம்ப நேர்த்தியா செய்ய முடியும். இது எந்த வேலைக்கும் பொருந்தும். மணி அடிச்சு மந்திரங்கள் சொல்லி பெரிய அளவில் ஒரு மணிநேரம் மனசு ஒன்றாம பூஜை செய்வதை விட  ஒரு நிமிடம் நின்று கடவுளை வணங்கும்போது அதை ஆத்மார்த்தமாக செய்தால் பலன் அதிகம்.

ஆனா இன்னைக்கு இருக்கற அவசரமான ஓட்டமிகு வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகள் எல்லாம் ஓட்டம்தான். நமக்கே நிதானமில்லாத போது பிள்ளைகளை குறை சொல்வானேன். அரக்க பரக்க சாப்பிட்டு ஓடும்போது என்ன சாப்பிட்டோம்னு நினைவே இருக்காது. சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் பசிக்க ஆரம்பிப்பதன் காரணம் இதுதான். உணவு உண்டது அப்படிங்கற செயல் மூளையில் பதிவாகவில்லை.

நம்ம பெரியவங்க எல்லாத்துலயும் நிதானம் வேணும்னு சொல்லியிருக்காங்க. ஆனா அவங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு வழியில நிக்கும் அவங்களை இடஞ்சலா நினைச்சு பக்கத்துல தள்ளி வெச்சுக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கோம். இது மன அழுத்தத்துல கொண்டு போய் விடுது.

பெரியவங்க  கடவுள் நம்பிக்கை உள்ளவங்களுக்கு எல்லாத்துக்கும் ஸ்லோகம் தான். காலையில் எந்திருச்சு கண் முழிச்சதிலிருந்து இரவு படுக்க போகும் முன் வரை எல்லாத்துக்கும் மந்திரம் சொல்வாங்க. மந்திரம் என்ன positive affirmations.

காலையில் கண்விழிக்கவே அலாரம் தான். அது தலையில் இன்னும் ரெண்டு அடி போட்டு தூங்கி லேட்டாகி ஓடுவது தனிக்கதை. ஒரு சிலர் நேரத்துக்கு எந்திரிக்கணும்னு ரெண்டு அலாரம் வைப்பாங்க. முதல் அலாரத்துக்கும் அடுத்த அலாரத்துக்கும் இடைப்பட்ட நேரத்துல ஒரு குட்டி தூக்கம். இப்படி அதிகாலையிலயே அவசர மனோபாவத்தோட நாளை ஆரம்பிச்சா எப்படி இருக்கு? அந்த நாள் முழுதும் ஓட்டம்தான்.

நாளின் துவக்கத்தை அழகாக்கலாம். நம்ம சோம்பேறித்தனத்தை தள்ளி வெச்சிட்டு எப்படி ஆரம்பிக்கலாம். தூக்கம் கலைந்ததும்  கண்களை உடனே திறந்திடாமல் நல்லதொரு தூக்கத்தை கொடுத்த நம்ம பெட்டுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு, அன்பே (உங்க பேரை சொல்லிக்கங்க) விடிந்திருக்கும் இந்த இனிய நாள் மற்றொருமொரு இனிமையான, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கொடுக்க கூடிய நாளாக அமைய பிரார்த்தனை அப்படின்னு சொல்லிட்டு, இன்று முழுக்க நான் செஞ்சு முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க நிறைவான நேரம் எனக்கு இருக்கு அப்படின்னு சொல்லணும், விருப்பமிருந்தா உங்களுக்கு பிடித்த தெய்வத்தை மனதில் நினைத்து ஒரு நிமிடம் தியானம் செஞ்சிட்டு கைகளை மெல்ல தேய்த்து கண்கள் மேல வெச்சு அப்புறம் கைகளை விலக்கி கண்களை திறந்து பாருங்க. நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு, நிதானமான ஒரு முழுமையான நாளாக இருக்கும். இது என் அனுபவம். இதெல்லாம் செஞ்சுகிட்டு உக்காந்தா மத்த வேலைகள் நின்னுடும்னு நினைக்காம ஒரு பத்து நிமிஷம் முன்னாடி எந்திரிச்சு இப்படி நாளை துவக்கி பாருங்க. வித்தியாசம் உங்களுக்கே புரியும்.

பல் தேய்க்கும் போது கண்ணாடியில் நம்ம முகத்தை பாக்கும்போது ஒரு ஐலவ்யூ,
ஹேய் அழகா இருக்க அப்படின்னு சொல்லிப்பது,உனக்கு இனிமையான அனுபவங்கள்தான் கிடைக்குது, நீதான் எனக்கு ரோல்மாடல்னு சொல்வது எல்லாம் தன்னம்பிக்கையை கூட்டும்.

காலை வேளைகளில் யாரிடமும் அதிகம் வாக்குவாதம் செய்யாமல் இருக்கணும் என்பதாலதான் காலையில் குளிச்சிட்டு ஸ்லோகங்கள் சொல்லிக்கிட்டே வேலைகள் பாத்தாங்கன்னு நினைக்கறேன். இது காலையில் அவங்கவங்க வேலைகளை முடிச்சுக்க ரொம்பவே உதவுது.

ஆனா இப்ப குளிப்பது கூட அனுபவிச்சு குளிக்கறோமான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும். காலையில் பெண்கள் சமையகட்டுல வேலைக்கு நடுவுல ஒரு சிப் அடிச்சாதான் காபியே குடிக்க முடியும். அவ்வளவு ஓட்டமான நேரம். இதுல குளிப்பது என்பது உடம்புல தண்ணி பட்டு , சோப்பு போட்டா சரின்னு ஒரு எண்ணம் நமக்கு. ஆனா உண்மையில் அப்படி இருக்க கூடாது.

நான் என்னுடைய இந்த உடம்பை ரொம்ப மதிக்கிறேன், இந்த உடம்பும் என்னை ரொம்ப விரும்புது, குளிப்பது ஒரு சுகானுபவம், தண்ணி மேல படுவது ரொம்ப அழகா இருக்கு, எனது வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, எதிர்மறை எண்ணங்களை களைஞ்சு நேர்மறை எண்ணங்களை குளியலாக்கிக்கறேன் அப்படின்னு சொல்லணும். இது சமீபத்துல கத்துக்கிட்டேன். ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு.

எங்க அம்மம்மா சமைக்கும் போது நம்ம மனசுல எந்த வருத்தமும் இல்லாம, மனமகிழ்வோட சமைக்கணும் அப்படின்னு சொல்வாங்க. நம்ம மனசுல இருக்கும் உணர்வுகள் சமைக்கும்போது அதுல சேருமாம்.உணவு ருசிக்கணும்னா முழு மனசோட இந்த உணவை சாப்பிடறவங்க நல்ல ஆரோக்கியமா இருக்கணும், மன மகிழ்வை கொடுக்கும் அப்படின்னு சொல்வாங்க. டீ/ காபி கலக்கும்போது அன்பையும் சேத்து கலக்கு, சமைக்கும் எந்த பதார்த்ததிலும் ரெண்டு மூணு ஸ்பூன் அன்பு சேர்த்து சமைச்சு பாரு உன் சாப்பாட்டை எல்லோரும் விரும்புவாங்க அப்படின்னு எனக்கு சமையல் சொல்லி கொடுக்கும்போது அம்மம்மா சொல்லிக்கொடுத்தாங்க.

திருமணத்துக்கு முன் அம்மம்மாவீட்டில் தங்கியிருந்துதான் வேலைக்கு போனேன். வேலைக்கு போய்ட்டு வந்த முதல் நாள் அம்மம்மா சொன்னது செருப்பு கழட்டும்போது ஆபீஸ் நினைப்பை கழட்டி வெச்சிடு.அடுத்த நாள் ஆபிசுக்கு கிளம்பும்போது தான் திரும்ப அந்த நினைப்பு வரணும். ஏம்மான்னு கேட்டப்ப இங்க நினைப்போட அங்கயோ அங்க நினைப்போடயே இங்கயோ இருந்தா உன்னால வாழ்க்கையை வாழ முடியாது அப்படின்னு சொன்னாங்க. எங்க மாமா கம்பெனி செக்கரட்டரி. அவருக்கும் அதே கண்டீஷன் தான். வீட்டுக்கு வந்திட்டா நீ இன்னாருடைய மகன், இன்னாருடைய கணவன், இன்னாருடைய தகப்பன் அந்த வேலைகளை சரிவர கவனிக்க மனசை இப்படி வெச்சுக்கிட்டாதான் முடியும்னு சொல்வாங்க. கம்பெனி செக்கரட்டரிங்கற பந்தா இல்லாம மாமா வீட்டுல வேலைகள் செய்வாங்க.

படிப்பறிவே இல்லாம எங்க அம்மம்மா எனக்குள் விதைச்ச பல விஷயங்கள் எவ்வளவு புனிதமானதுன்னு புரியுது. அம்மம்மா சொல்லிக்கொடுத்த இந்த நிலைதான் mindfullness. ஒரு வேலையை ஒருமுகப்படுத்தி செய்ய இந்த மைண்ட்ஃபுல்னஸ் ரொம்ப முக்கியம்.
“குப்பை பொறுக்கினாலும் அதுலயும் நீ பெஸ்ட் குப்பை பொறுக்கியா இருக்கணும்” அப்படின்னு எங்க அம்மம்மா சொன்னதுதான் செய்வதை திருந்த செய்னு நம்ம பெரியவங்க சொன்ன சொல். காலையில் எந்திரிப்பதிலிருந்து இரவு படுக்க போகும் முன் வரை mindfullnesஒட இருந்திட்டா பிரச்சனையே இல்லை.

இரவு படுக்கும் முன் ஒரு ஸ்லோகம் எங்க அம்மம்மா சொல்லிக்கொடுத்ததை சொல்லி இந்த பதிவை நிறைவு செய்யறேன். சின்ன குழந்தையா இருந்தப்ப இரவில் பயப்புடுவோம்னு ஆஞ்சநேயர் ஸ்லோகம் ஒண்ணு சொல்லி கொடுத்தாங்க. “ராமஸ்கந்தம் அனுமந்தம் வைனதேயம் ப்ர்கோதரம். சயனஏகாஸ் ஸ்மரே நித்யம் துர்சொப்னம் தஸ்ய நஸ்யதி” இதுதான் அந்த ஸ்லோகம். இதற்கு அடுத்தும் அவங்க சொல்லி கொடுத்த positive affirmation:

”உத்தமி பெற்ற பெண்ணே உள்ளே விட்டு அசையாதே, நாளைக்கு வரும்பொழுது நல்ல பொழுதாய் வாடியம்மா தாயாரே”. இன்றைக்கு பிறந்திருக்கும் நல்ல பொழுதே வெளியேற்றாமல் உள்ளே இருத்தி வைத்துக்கொண்டு நாளைக்கும் பிறக்கும் பொழுதும் நல்ல பொழுதாய் பிறக்க உறுதிக்கூற்று. இன்றும் என் பசங்க இதை சொல்லித்தான் தூங்குறாங்க.


4 comments:

சுசி said...

மிக அற்புதமான பதிவு கலா ! இன்றும் நானும் என் பெண்களும் "ராமஸ்கந்தம்..." சொல்லிட்டு தான் தூங்கறோம். நல்ல கருத்துக்களுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இதை தினமும் தொடர்ந்தால், வாழ்நாள் என்றும் இனிமை...

அருமையான பகிர்வு... நன்றி...

Vaishnavi said...

Yenga kollu paatiyum thoonga munna oru slokam solli koduthanga.adhu,Ganga Gowri Gomatha Aswatha(ashwini devathaigal)Deepa jothi.Proper meaning therilainalum innum follow pandren.and veetai vittu veliyil kilambumpothu Manojavam Maruthi thula vegam solla solvanga.Kulikumpothu saptha nadhi name solluvanga.andha rivers yellam nama kulikara thanniya marumam(vibrations)

புதுகைத் தென்றல் said...

வருகைதந்த அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி