Wednesday, January 11, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் - 11



 சிலர் அடிக்கடி போன் செஞ்சு பேசுவாங்க, இல்லையா மெசஜ் அனுப்புவாங்க, மெசஜ் வெச்சா உடனுக்குடன் பதில் வந்திரும். ஆனா சிலர் அப்படி இல்லை. இப்ப தகவல் தொடர்பு ரொம்பவே ஈசி. வாட்ஸப், டெலிகிராம், முகநூல் மெசஞ்சர்னு சுலபம். முன்ன மாதிரி லெட்டர் வாங்கி எழுதி போஸ்ட் செய்யற வேலையெல்லாம் இல்லை. கையிலயே இருக்கும் போனிலிருந்துதான் பதில் கொடுக்க போறோம். ஆனா அதுக்கும் சிலர் ரொம்ப யோசிப்பாங்க. “ நான் ரொம்ப பிசி தெரியுமா? பதில் அனுப்பினாத்தானா? எங்கப்பாவுக்கே தெரியும் என் கிட்டேயிருந்து மெசஜ் வந்தா மேட்டர் ஏதோ சீரியஸ்னு. இல்லாட்டி நான் மெசஜ் வைக்க மாட்டேன். அப்படின்னுல்லாம் சொல்வாங்க. உண்மையில் மெசஜ்,போன், இதெல்லாம் அடிக்கடி செய்யறவங்க இல்லை எதிர்பார்க்கறவங்க வேலையத்தவங்கன்னு ஒரு நினைப்பு ஓடுது. மெசஜ் வெச்சாத்தானா? போன் பேசினாத்தானான்னு ஆயிரம் கேள்விகள் கோவமா வீசப்படும்?

ஒரே ஒரு விஷயம் யாரும் அப்படி ஓவர் பிசியெல்லாம் இல்லை. அவங்களுடைய லிஸ்ட்ல  நம் உறவு/நட்பு எந்த இடத்துல இருக்கோமோ அதை வெச்சுதான் பதில் வருவது இல்லை நலம் விசாரிப்பு எல்லாம். இவ்வளவு ஈசியான தகவல் தொடர்பு இருக்கும் சமயத்துல ஒரு மெசஜ் வைக்க கூட இவ்வளவு யோசிக்கறாங்களேன்னு இருக்கும். முகநூலில் ஒரு போட்டோ ஷேர் செஞ்சிருந்தாங்க. ”வீட்டுக்கு போய் சேர்ந்ததும் தகவல் சொல்லுன்னு சொல்லக்கூடிய உறவோ/நட்போ உங்களுக்கு இருந்தா நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவர். இந்த மாதிரி உறவை/நட்பை இழந்துடாதீங்க. இவர்கள் அபூர்வமானவர்கள்னு” இருந்தது அந்த வாசகம்.

 இந்த பிசியான வாழ்க்கையில் நம்மை பத்தி யோசிக்கவும் இவங்களுக்கு நேரம் இருப்பதை நாம போற்றனுமா வேணாமா? இல்லைன்னா நஷ்டம் யாருக்கு? தகவல் தொடர்பு எல்லாம் வேஸ்ட் வேலைன்னு நினைக்கறவங்களுக்குத்தான்.   தூர இருந்தும் அருகில் இருப்போம் இதெல்லாம் பாட்டுல கேட்கலாம். உண்மையில் எந்த ஒரு உறவும்/நட்பும் பேச்சு வார்த்தை இல்லையென்றால் இறந்து போகும். ஒரு செடி/மரத்துக்கு நீர், காற்று, வெயில் எப்படி அவசியமோ அப்படி ஒரு உறவுக்கு அன்பை பரிமாறிக்கொள்வது, பேசுவது ரொம்ப அவசியம். இப்ப நாம பிசின்னு கிட்ட வர்றவங்களை ஒதுக்கிட்டா இந்த மாதிரி மனிதர்கள் இவருக்கு தேவையில்லை போலன்னு ப்ரபஞ்ச சக்தி விலக்கிடும். பிறகு யாரும் அருகில் இல்லாத ஒரு அவல வாழ்க்கை தான். யாருமே இல்லாம வாழ்ந்துவிட முடியுமா? யோசிக்க வேண்டிய விஷயம். கொஞ்சம் யோசிச்சுத்தான் பாப்போமே!!!!


கடமையை செய்யணும். பலனை எதிர்பார்க்க கூடாது இதைப்பத்தி போன பதிவுல பாத்தோம். இப்ப நாம பார்க்க போறது ரொம்பவே முக்கியமான விஷயம். ப்ரபஞ்ச சக்தி எப்பவும் நாம எதை நினைக்கிறோமோ அதை நமக்கு நிறைய்ய கொடுக்கும். துன்பத்தை பத்தி அசை போட்டுகிட்டு இருந்தா துன்பங்களே திரும்ப திரும்ப சுவைக்க நேரிடும். மகிழ்ச்சியான தருணங்களை அசை போடுவதால எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இந்த மாதிரி பார்க்கும் போது நமக்கு ஒருத்தர் உதவி செய்யறாங்கன்னு வெச்சுக்குவோம், பதிலுக்கு நம்மாலான உதவியை செய்யணும்.  தக்க சமயத்தில் உதவிய அவருடைய அந்த நல்ல குணத்தை நாம மதிக்கறோம். என்பதைதான் இது காட்டுது. வாழ்நாளில் அவங்க நமக்கு செஞ்ச உதவியை மறக்க கூடாது. அதுக்காக அவங்க என்ன செஞ்சாலும் பொறுத்து போகணும்னு இல்லை. அப்புறம் செஞ்சோற்று கடன் தீர்க்க கர்ணன் துரியோதனன் பக்கம் நின்னது போல ஆகிடும். அவங்க செஞ்ச உதவியை நினைவுல வெச்சுக்கணும். அவங்களுடை அந்த குணத்தை மதிக்கணும்.

நாம ஏன் உதவி செஞ்சதை பெருசா எடுத்துக்கணும்? அவங்களால முடிஞ்சது செஞ்சாங்க? இல்லையா நான் கேட்கலை அவங்களாதான செஞ்சாங்க அதுக்காக நான் என்ன அவங்களுக்கு அடிமையா இருக்கணுமா? இப்படி நிறைய்ய கேள்விகள் நம்ம மனசுல எழும்பலாம். தப்பேயில்லை.

 உதவி செய்தவங்களை மதிக்காமல் காயப்படுத்தினா  அந்த காயம் பலமடங்கா வந்து தாக்கும். இது சாபமோ பயமுறுத்தலோ இல்லை. கர்மாவுக்கு ஒண்ணு மட்டும்தான் தெரியும். நாம எதை கொடுக்கிறோமோ அதை நமக்கு திரும்ப கொடுக்கும். அதற்கு வேற எதுவும் தெரியாது. இதை நாம புரிஞ்சுக்கணும். இன்னொரு விஷயம் இந்த மாதிரி நல்ல உள்ளங்களை, நமக்காக பிரார்த்திப்பவர்களை, நம் மீது அன்பை பொழிபவர்களை எல்லாம் விலக்கி வெச்சா நாம கேட்பதை ப்ரபஞ்ச சக்தி கொடுக்கும் எனும் விதிப்படி உதவி செய்யும் உள்ளங்கள் நம்மை விட்டு விலக்கி வைக்கப்படும். ஏன்? அதான் நாம அவங்களை மதிக்கலையே!!!

என்ன செய்யலாம்? அழகான வழி இருக்கு. இந்த மாதிரி மனிதர்களை எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி அப்படின்னு நாம அடிக்கடி சொல்லவேண்டும். கடவுள் மனித ரூபத்துலதான் வந்து உதவுவார். அப்ப நாம அவமதிப்பது தெய்வத்தைதான். showing gratitude அப்படின்னு சொல்வாங்க. அதாவது நம்ம நன்றியுணர்ச்சியை காட்டுவது. இந்த  அன்பு நிறைந்த மனிதர்கள் சூழ்ந்த  இனிமையான வாழ்விற்கு நன்றி. உண்ண உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் கொடுத்தற்கு நன்றின்னு நாம எப்பவும் நாம் நன்றியுணர்ச்சியோடு இருந்தால் ப்ரபஞ்ச சக்தி நமக்கு அளப்பரிய சந்தோஷத்தை தந்து கிட்டே இருக்கும். நம் வாழ்க்கை நம் கையில தான். நாமதான் அதை வடிவமைச்சுக்கறோம். நம் எண்ணங்களின் ப்ரதிபலிப்புதான் நம் வாழ்க்கை.

அன்பை வேண்டினால் அன்பை பாராட்ட வேண்டும். என்னை சுற்றி அன்பானவர்கள் இருக்கிறார்கள் அதற்கு நன்றின்னு அடிக்கடி சொல்வதால் நம்மை சுற்றி அன்பானவர்கள், நம் அன்பை மதிப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். எப்பவும் நன்றியுணர்ச்சி உடன் இருந்தால் நம் வாழ்வும் சுபிட்சமாக இருக்கும். நன்றியுணர்ச்சியுடன் இருந்தால் நமக்கு அகங்காரம் இருக்காது. “காலு தரையில பாவாம இருக்கன்னு” சிலரைப்பாத்து சொல்வாங்க. அந்த நிலை இருக்காது. நமக்குள் ஒரு பக்குவம் ஏற்படும். செய்யும் செயலை ரொம்ப அழகா செய்ய முடியும். நன்றியுணர்ச்சி  ஏற்பட்டால் மட்டும்தான் நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பது புரியும்.

தினமும் 10 நிமிடமாவது அமைதியான இடத்தில் உட்கார்ந்து கொண்டு நமக்கு வாழ்வில் கிடைத்திருக்கும் வசந்தங்களுக்கு நன்றி சொல்வதை பழக்கமாக்கிக்கணும். இந்த பழக்கம் நமக்கு நேர்மறை சிந்தனைகளை மட்டுமே தரும்.

“Gratitude opens our Hearts and Minds. It instantly connects us to the present moment. It feels absolutely wonderful. The fact that Gratitude is so easy to come by gives us one more reason to be Grateful!”        Raphael Cushnir


நம்ம வள்ளுவரும் ரொம்ப அழகா சொல்லியிருக்காரே!

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வரதராசனார் உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.

மு.வரதராசனார் உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

 உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
மு.வரதராசனார் உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

இதைவிடவா நன்றியுணர்ச்சியைப் பத்தி அழகா சொல்லிட முடியும். நன்றியோடு இருப்போம். வளமோடு வாழ்வோம்.


2 comments:

'பரிவை' சே.குமார் said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

சுசி said...

சூப்பர் கலா ! ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் !