Monday, January 16, 2017

SHATHAMANAM BAVATHI

SHATHAMANAM BAVATHI சதமானம் பவதி இது பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் தெலுங்கு படம். ஆத்ரேயபுரம் எனும் கிராமத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா வசிக்கிறார்கள். அவர்களுக்கு 3 குழ்ந்தைகள். இரண்டு மகன், ஒரு மகள். அனைவரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட இவர்கள் இருவரும் கிராமத்தில் தனியாக வசிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பண்டிகைக்காக பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள் என காத்திருக்கும் பெற்றோர். வேலை பிசி, பிள்ளைகள் படிப்பு என காரணம் கூறிக்கொண்டு எத்தனையோ முறை வரச்சொல்லி கேட்டும் வராத பிள்ளைகள்.

இந்த சங்கராந்திக்கு (பொங்கல்) என் பிள்ளைகள் வீட்டுக்கு வரவேண்டும். இல்லையெனில் நான் அவர்களுடன் போய் தங்கிவிடுவேன் என கோவமாக ஜெயசுதா கூற என்ன சொல்லி தன் பிள்ளைகளை வரவழைக்க எனத்தெரியாமல் யோசித்து தன் பிள்ளைகளுக்கு ஒரு மெயில் அனுப்புகிறார். அதை படித்து பதறி மூவரும் தன் குடும்பத்தினருடன் ஊர் வந்து சேர்கிறார்கள்.

ஊருக்கு வந்த பிள்ளைகள் மெயில் சம்பந்தமாக பேச முயல பிரகாஷ்ராஜ் எல்லாம் பண்டிகை முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என சொல்லிவிடுகிறார்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக வகைவகையாக சமைப்பது என்ன, அவர்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்வது, என கிராமத்து வாழ்க்கையில் அதுவும் பெரியவர்களுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ்வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் அவரின் தம்பி மகனின் பையனாக (பேரன்) சர்வானந்த் நடிப்பு அருமை. தன் தாத்தா பாட்டியின் சந்தோஷத்திற்காக மெனக்கெடுவது அருமை.

தாய் வீட்டிற்கு வந்த பின்னும் டீவி,லேப்டாப், போன் என மூழ்கி கிடக்கும் பிள்ளைகளைப் பார்த்து “இவங்க இங்க இருந்தும் இல்லாத மாதிரி தான் இருக்கு.” என்று புலம்புவதைப் பார்த்து  கிராமம் மொத்தத்திற்கும் கேபிள் டீவியை நான்கு நாட்கள் கட் செய்துவிடுகிறார். அனுபமா பரமேஷ்வர்ன் (பிரகாஷ் ராஜின் மகளாக நடிக்கும் இந்த்ரஜாவின் மகளாக அனுபமா) மொபைல் நெட்வொர்க்கை ஜாம் செய்து வைக்க, எல்லோரும் கூடி பேசி மகிழ்கிறார்கள்.

தங்களுக்கு வந்த மெயில் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் வீட்டில் இல்லை. தம்மை வரவைத்து ஏமாற்றிவிட்டார்கள் என இரண்டாவது மகன் கொதிக்கும் வேளையில் மற்றவர்கள் சமாதனம் செய்கிறார்கள். அதற்குப்பிறகு பிரகாஷ்ராஜ் ஜெயசுதாவிற்கு அனுப்பி வைத்திருக்கும் டைவர்ஸ் நோட்டீஸ் என தெரிகிறது.

படத்தின் ஆரம்பத்தில் பிள்ளைகள் வராவிட்டால் நான் அவர்களுடன் போய்விடுவேன் என ஜெயசுதா சொல்லும்போது என்னை தனியாக விட்டு போய்விடுவாயா என பிரகாஷ் ராஜ் கேட்கிறார். ஆமாம் உங்களுக்காக பெற்றவர்களை விட்டு வரவில்லையா, பிள்ளைகளுக்காக உங்களையும் விட்டு போவேன் எனும் வார்த்தை பிரகாஷ் ராஜின் மனதில் காயத்தை தர “உங்கள் அம்மாவை விவாகரத்து செய்கிறேன். உங்கள் தாயையை யார் அழைத்து போய் வைத்துக்கொள்வது என முடிவு செய்ய நேரில் வரவும் “ என மெயில் அனுப்பி பிள்ளைகளை வரவழைத்தது தெரிய வருகிறது.

பிள்ளைகள் தங்கள் தவறை உணரும் வகையில் எடுத்து பேசி என் மனைவியாக என்னை விட்டு வரமாட்டாள், நான் விவாகரத்து கொடுத்தால் உங்கள் தாயாகாவாவது உங்களுடன் இருந்து சந்தோஷப்படுவாள் என கூறுகிறார். பிள்ளைகள் புரிந்து கொண்டு பெற்றோரை அடிக்கடி வந்து சந்திப்பதாக படம் நிறைவு பெறுகிறது.

படத்தில் டயலாக்குகள் இனிமை. 1991 ஆம் ஆண்டு நாகேஸ்வரராவ் நடித்து வெளிவந்த சீதாராமைய்ய காரி மனவராலு திரைப்படைத்தை நினைவு படுத்தும் சில காட்சிகள் இந்த படத்திலும் இருக்கிறது. நாகேஸ்வரராவ் பேத்தியாக மீனா நடித்திருந்தார். இங்கே பிரகாஷ் ராஜின் பேரனாக சர்வானந்த். கதைக்களம் கொஞ்சம் மாற்றம். சில இடங்களில் ஓவர் ஆக்‌ஷனாக தோன்றினாலும் இந்த தலைமுறையினருக்கு உறவின் அருமையை, வாழ்வின் ஆனந்தங்களை அறிமுகப்படுத்தும் படமாக சதமானம் பவதி இருக்கிறது. சர்வானந்த் அனுபமா பரமேஷ்வரன் இடையே ஆன காதலும் அருமையாக சொல்லப்பட்டிருக்கு

பாடல்கள் காதுக்கு இனிமை. வரிகளும் அருமையாக இருக்கிறது. காட்சிபடுத்தபட்டவிதம், பாத்திரங்களை உணர்ந்து நடிக்கும் தேர்ந்த நடிகர்கள் என ஒரு அருமையான குடும்ப சித்திரம். சதமானம் பவதி என்றால் நூறாண்டுகாலம் வாழ்க.




1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதைக்களன்.....

அறிமுகத்திற்கு நன்றி.