Monday, January 16, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா??? பாகம் - 13

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கை இருந்தா போதும் நாம வாழ்க்கையில் முன்னேறிவிடலாம். நேர்மறை நம்பிக்கை எப்பவும் நமக்கு நல்லதை தரும். ஆனா சிலசமயம் நம்பிக்கை எதிர்விளைவையும் தரும். இது எப்படி? முரணா இருக்கேன்னு தோணலாம்.


பல சமயம் நம் மீது திணிக்கப்படும் நம்பிக்கைகள் இந்த மாதிரி எதிர்மறை விளைவைத்தரலாம். இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா நம்முடைய பல நம்பிக்கைகள் நம் பெற்றோரால வந்தது. அவங்க நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கும் நல்லது கெட்டதுதான் நம்முடைய வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்குது. ஆனா அதுலயும் சில சமயம் தவறான நம்பிக்கைகள் நம்மீது திணிக்கப்பட்டிருக்கும். இயல்பாவே அது நடந்திருந்தாலும் அவைகளும் நமக்கு எதிர்விளைவைத்தரலாம்.


பிள்ளைகளுக்கும் பெற்றோர்தான் முன்னுதாரணம். அவங்க சொற்படி கேட்டு நடப்பதுதான் இயல்பு. அறியாமையில் அவர்களும் தவறும் வாய்ப்பு இருக்கு.
ஒரு உதாரணத்துக்கு சமுத்திரக்கனி அவர்களின் ” அப்பா” படத்தில் வரும் அப்பா கேரக்டர்களை சொல்லலாம். 3 பேரும் 3 விதமான நம்பிக்கையை தங்கள் மகனுக்கு கொடுத்திருப்பாங்க. அதே பார்வையில் அவங்க உலகத்தை பார்க்கும்போது அது உண்மைதான்னு தோணும். இது பெத்தவங்க வேணும்னு செய்யும் தவறு இல்லை. அவர்களுக்கு அவர்கள் பெற்றவர்களிடமிருந்து வந்த புரிதலும் நம்பிக்கையும் நமக்கு கடத்தப்பட்டிருக்கும்.

ஒரு தாய் தான் தன் கணவரிடமும், மாமியாரிடமும் கஷ்டபட்டதை மகளுக்கு எடுத்துச் சொல்லி  ””நீயாவது ஜாக்கிரதையா இருந்துக்கோ . நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது” எனும் போது அவர்களின் பயத்தை நமக்குள்ள விதச்சிடறாங்க. கணவரும், மாமியாரும் இப்படித்தான் இருப்பாங்க எனும் அவங்களுடைய நம்பிக்கையை நமக்குள்ளும் விதிக்கப்படுது. “ உன் மனைவி சொன்னதை கேட்காதேடா!! பெத்தவங்க மட்டும்தான் உன் நல்லது கெட்டது யோசிப்போம். பொண்டாட்டி அப்படி இல்ல” என சொல்லக்கேட்ட ஆண் தன் மனைவிகிட்ட அன்பா இருப்பது எப்படி? மருமகளுக்கும் மாமியாருக்கும் ஒத்துக்கொள்ளாமல் போவதற்கும் இதெல்லாமும் தான் காரணம். ஒரு இயல்பா இருக்க முடியாம நல்லதா இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருக்காது. நம்மை பெத்தவங்க தப்பா சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை எனும் நம்முடைய ஆணித்தரமான நம்பிக்கைதான் காரணம்.


ரொம்ப சிலருக்குதான் உன்/என் வாழ்க்கை வேறு அப்படிங்கற தெளிவு இருக்கும். அப்பா, அம்மா சண்டை போட்டுக்கொள்வதை பார்த்து வளர்ந்த குழந்தை திருமண பந்தத்தையே வெறுக்க காரணம் நாளைக்கு திருமணம் நடந்தா தன் நிலையையும் இப்படித்தான் இருக்குமோ எனும் நினைப்புதான். சிலர் தான் பெற்றோர்களிடமிருந்து முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கையை தனக்கு அமைக்க விரும்புவாங்க. அமைச்சும் காட்டுவாங்க. இந்த மாதிரி நிறைய்ய நம்பிக்கைகள். ஆங்கிலத்தில் beliefs of the parents அப்படின்னு சொல்வாங்க.

எங்கப்பா ஒரு கதை சொல்வாங்க. குருகுலத்துல படிக்கும் மாணவர்களுக்கு தினமும் வேப்பெண்ணையோ/விளக்கெண்ணயோ ஊற்றிதான் சாப்பாடு தருவாரம் குருபத்னி. என்றைக்கு மாணவனுக்கு ருசி வித்தியாசம் தெரியுதோ அன்றைக்கு இதுக்குமேல உன்னால கற்க முடியாது நீ கிளம்பலாம்னு சொல்வாங்களாம். அதாவது நாக்கு ருசி கண்டுட்டா படிப்புல ருசி இருக்காதுன்னு சொல்ல இந்த கதையை சொல்வாரு. என் பிள்ளைகளை வளர்க்கும்போது அவங்களுக்கு சமச்சீரான உணவு கொடுக்கணும், அது ருசியா இருந்தாதான் அவங்க சாப்பிட முடியும்னு புரிஞ்சு அந்த மாதிரி செஞ்சு கொடுப்பேன். ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான வளர்ச்சி!!! உணவு சுவை கண்டா படிப்பு வராது எனும் நம்பிக்கை எனக்கு முரணா தெரிஞ்சது. அதை நான் ஏற்கலை. இது மாதிரி நாம பல சமயம் முரண்படுவோம். ஆனா பெத்தவங்களுக்கு பிடிக்காததை செய்யக்கூடாது, அது பண்பாகாதுன்னு அவங்க சொல்லுக்கு கீழ்படிஞ்சு நடந்திருப்போம்.

இதுல அவங்க தப்பு ஏதுமில்லை. காலம் காலமாக பெரியவங்க வழிவழியா சொல்லிக்கொடுப்பதை தான் அவங்க அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்கறாங்க. அதுல எது நல்லது கெட்டதுன்னு யோசிச்சு, தெளிஞ்சு , புரிஞ்சு பெரியவங்களுக்கு சொல்ல முடிஞ்சா நல்லது.  தப்பு செஞ்சா சோறுபோடக்கூடாதுன்னு கண்டிப்பு சில வீட்டுல இருக்கும். பசியோட இருந்தா மூளை எப்படி வேலை செய்யும். சாப்பிட கொடுத்து பசியாறினதும் அமைதி அடைஞ்சிருக்கும் பிள்ளையிடம் பேசி புரியவைக்கலாமே!

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சொன்னாங்கன்னு கண்ணுமண்ணு தெரியாம பிள்ளைகளை அடிக்கும் பெத்தவங்க உண்டு. அப்பா அடிச்ச இடத்துக்கு அம்மா மஞ்ச பத்து போட்டு காயம் ஆத்துவது பலருக்கும் கண்ணுமுன்னாடி வந்து போகும். உண்மையில் அடிக்காமலேயே பிள்ளைகளை வளர்க்கலாம். அவங்ககிட்ட பக்குவுமா பேசணும். இப்ப ஒரு சில புது பெற்றோர்கள் கண்டிப்பும் இல்லாம அன்பு காட்டுவதும் இல்லாத ஓவர் செல்லமாத்தான் பிள்ளை வளர்ப்பு செய்யறாங்க. கடைசியில் “பெத்தவங்க பேச்சை கேட்டு வளர்ந்த கடைசி ஜெனரேஷனும் நாமதான், இப்ப பிள்ளைங்க பேச்சை கேட்கும் முதல் ஜெனரேஷனும் நாமதான்னு” ஸ்டேடஸ் போடுவாங்க.

அந்த தலைமுறை மாதிரி அடிச்சு ஓவர் கண்டிப்பும் வேணாம், இப்ப சிலர் இருப்பது போல ஓவர் செல்லமும் வேணாம். தப்பு செய்யும்போது கண்டிச்சு, அரவணைக்கும் போது அரவணைச்சு ஒரு நல்ல பெற்றோரா இருக்கலாம். இவ்வளவு விவரமா சொல்லக்காரணம் எந்த மாதிரி பெத்தவர்களின் நம்பிக்கை நமக்கு வந்திருக்கலாம்னு சொல்லத்தான்.

இந்த நம்பிக்கைகளின் வெளிப்பாடா நமது செயல்களோ நம்முடைய வாழ்க்கை முறையோ இருக்கலாம். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதனால் நம் ஆழ்மனதுக்குள் அது பதிஞ்சு அதன் வெளிப்பாடா நம் வாழ்க்கை ஆகிடுது.

உனக்கும் வாய்க்கும் புகுந்த வீடு நல்லதான் இருக்கும். அங்கு இருக்கும் உன் உறவினர்கள் உன்னை நல்லாதான் வெச்சுப்பாங்க அப்படின்னு அம்மா மகளுக்கு சொன்னா அதுவே நடந்திருமே!!

உன் மனைவி நல்லவள் , உன் மனைவியின் பிறந்தவீட்டினரும் உன் பெற்றோர் போலத்தான்னு சொல்வதை கேட்ட ஆண்மகனும் அதையே விரும்பி வாழ்க்கை அப்படியே ஆகிடுமே.

எண்ணங்கள் தான் வாழ்க்கை எனும் போது நமது தவறான புரிதலை, நம்பிக்கையை நம் பிள்ளைகளுக்கோ நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கோ தந்துவிடக்கூடாது. அதுவும் அவர்களின் எதிர்மறையான எண்ணத்துக்கு வாழ்வுக்கு ஒரு காரணம் ஆகிடும். நாம் கற்று கொண்ட பாடம் இது.


6 comments:

அபயாஅருணா said...

நமது தவறான புரிதலை, நம்பிக்கையை நம் பிள்ளைகளுக்கோ நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கோ தந்துவிடக்கூடாது.
பாதி குடும்பங்களில் சச்சரவு வர இதுவே காரணம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடம்...

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான, யோசிக்க வைக்கும் எண்ணங்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அபயா அருணா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸ்ரீராம்.

நமக்கு தெரியாத வித்தியாசமான கோணங்கள் இருக்கு. அதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பலருக்கு கிடைக்காம போயிடுது. எனக்கு கிடைத்த வாய்ப்பை இங்கே பகிர்ந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி