Saturday, March 02, 2019

நல்லூரை நோக்கி - 1

1999 என நினைக்கிறேன். நான் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போகிறேன் என அயித்தான் சொல்ல எங்கே போக என கேட்டேன். இலங்கை போகவேண்டியது இருக்கலாம் என சொல்ல. எனக்கு மேலும் ஷாக். நாந்தானே அங்கே போகவேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன் என்ற உடன் உனக்கு அங்கே யார் இருக்கிறார்கள்? ஏன் அங்கே போக ஆசை என்றார்.

நல்லூரானையும் கதிர்காமனையும் தரிசிக்க வேண்டும் என்றேன். இந்த இடங்களை பத்தி யார் சொன்னது அடுத்த கேள்வி. அப்பா அம்மாவின் திருமணத்திற்கு ஒரு அழகான வாழ்த்தை அப்பாவின் நண்பர் ஒருவர் கொடுத்திருந்தார். அழகு தவழும் முகத்துடன் வள்ளி தெய்வயானை சமேத முருகன் படம், கீழே நல்லூர் யாழ்ப்பாணம் கந்தன் என்றிருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்த முருகன் படம் அது. சகலமும் அவனிடம் தான் சொல்வது. அந்த படத்தின் கீழ் நின்று பேசிவிட்டு சென்றால் துணைக்கு அவன் வருவது போல இருக்கும். என்றாவது ஒரு நாள் உன்னை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என்பது அன்றாட கோரிக்கை. இந்த உள்ளகிடக்கையை அவரிடம் சொன்ன பொழுது ஒரு வேளை இது நடப்பதற்காகத்தான் எனக்கு இந்த பயண வாய்ப்பு அமைந்திருக்கிறதோ என்றார்.

45 நாள் ஏரியா ஸ்டடி என்று சென்றவர் அப்படியே ஒரு வருடத்திற்குமேல் இருக்க நேர்ந்தது. அவர் 2001 பிப்ரவரியில் பயணிக்க மகனுக்கு விடுமுறை விட்டதும் ஏப்ரலில் என் முதல் விமான பயணம், வெளிநாட்டிற்கான பயணம், இரு  சின்னக் குழந்தைகளுடன் என அத்தனை சிறப்புகளுடன் கூடிய பயணம் இலங்கைக்கு. ஒரு மாத காலம் இருந்தேன். கதிர்காமனை தரிசித்தேன். மனம் மகிழ்ந்தேன்.

நல்லூரானை பார்க்க முடியவில்லை. பெயர் எதுவானால் என்ன கதிர்காமனையாவது பார்த்தோமே என்று மனம் ஆனந்த கூத்தாடியது.
உன் சித்தம் அதுவாக இருந்தால் உன்னை மீண்டும் தரிசிக்கும் பாக்கியம் கொடு என்று கேட்டு வந்தேன். வா மகளே! என அழைத்து ஆண்டு தோறும் அவனை தரிசிக்கும் பாக்கியத்தை தந்தான். ஆறுவருடங்கள் . ஆனந்தமான ஆறுவருடங்கள்.

அங்கிருந்து இந்தியா கிளம்பும் முன் கதிர்காமனை தரிசிக்க முடியவில்லை. நல்லூர் போக ரொம்ப கஷ்டம். நீ அழைக்கும் போது வருகிறேன் என்று சொல்லி வந்துவிட்டேன். 2009ல் கதிர்காமனை தரிசித்து வந்தோம்.
2014ல் இலங்கை பயணம் போனபோது கதிர்காமம், நல்லூர் தரிசினம் முடியவில்லை. என்னை எப்போது அழைக்கிறாயோ அப்போது வருகிறேன். என சொல்லிக்கொண்டேன்.

தொடரும்.....

No comments: